Sunday, November 20, 2011

தென்கச்சியார் நகைச்சுவை.

நான் மதிக்கும் நகைச்சுவைப் பேச்சாளர்களுள் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுக்கு என்றுமே சிறப்பிடம் உண்டு. எனது சிறு வயது முதலாகவே வானொலிகளில் இவரது சிந்தனைகளை விரும்பிக் கேட்டுவந்திருக்கிறேன். இவரது உருவத்தை பார்க்காமலேயே குரலைமட்டுமே வைத்து இவர் இப்படித்தான் இருப்பார். இவர் நகைச்சுவைசொல்லும்போது இவர் முகம் இப்படித்தான் இருக்கும் என்று கற்பனை செய்து வைத்திருந்தேன்..

முதல் முதலில் இவரை காணொளியில் பார்த்தபோது நம்பவே முடியவில்லை..

இவர்தானா அவர்??
என்ற எண்ணம் தான் வந்தது.

சிரிக்கச் சிரிக்கப் பேசிய இவர்
சிரித்துக்கொண்டு நகைச்சுவை சொல்லி நான் பார்த்தில்லை..

முதலில் பார்க்கும் போது..

என்ன இவர் உணர்ச்சியே இல்லாமல் பேசுகிறார் என்றுதான் தோன்றியது
ஆழ்ந்து நோக்கியபின்னர் தான் புரிந்தது.

ஆரவாரமற்ற அந்தப் பேச்சுக்குள் எல்லா உணர்ச்சிகளும் அடங்கியிருக்கிறது என்று பின்னர் தான் நான் உணர்ந்துகொண்டேன்.

சரி அவருடைய சிந்தனைகளுள் நான் விரும்பிய சிந்தனை ஒன்றை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.


இதோ தென்கச்சியார் பேசுகிறார்..

ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்?
என்பதற்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான விளக்கத்தைக் கொடுத்திருக்காங்க.
ஆனா கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குடுக்கற விளக்கம் என்ன தெரியுமா?

நகைச்சுவை அடுத்தவங்களுக்குத் துன்பம் குடுக்காம இருக்கனும்.அடுத்தவங்க மனசைப் புண்படுத்தப்படாது. அதுதான் சிறந்த நகைச்சுவைங்கிறார். அதுக்கு அவர் ஒரு உதாரணமும் கொடுக்கிறார்.

ஓர் ஏரி ஓரமா ரெண்டு பையன்கள் நடந்து போய்கிட்டிருக்காங்க. அதுல ஒருத்தன் பணக்காரவீட்டுப் பையன். இன்னொருத்தன் ஏழை. இவங்க ரெண்டு பேரும் போய்கிட்டிருக்காங்க....
வழியில ஓர் இடத்துலே ஒரு சோடி செருப்பு இவங்க கண்ணுலே பட்டுது.

ஒரு விவசாயி அந்தச் செருப்பை அங்கே விட்டுட்டு பக்கத்துலே இருந்த ஏரியிலே கை- கால் கழுவிக்கிட்டிருந்தார்.

உடனே அந்தப் பணக்காரப் பையனுக்கு ஒரு யோசனை!

அவன் சொன்னான்.
டேய்! இப்ப ஒரு வேடிக்கை செய்யலாம்... அந்தச் செருப்பு இரண்டையும் தூக்கி எட்டத்துலே வீசி எறிஞ்சிடுவோம். அந்த ஆளு வந்து பார்த்துட்டு செருப்பைத் தேடி அல்லாடுவான்... அங்கேயும் இங்கேயும் ஓடுவான். திருதிருவென முழிப்பான். அதை நாம இரசிக்கலாம். நல்லா தமாசா இருக்கும்! அப்படின்னான்.

இப்படிச் சொல்லிப்புட்டு அந்தச் செருப்புகளைத் தூக்கப் போனான்.

“கொஞ்சம் பொறு“ ன்னான் அந்த ஏழைப் பையன்.
ஏன்? ன்னு கேட்டான் இவன். இப்ப அந்த ஏழைப்பையன் சொன்னான்...

நீ சொல்றது ஒண்ணும் வேடிக்கை இல்லே. உன்னோட செருப்புத் தெலைஞ்சா உன் அப்பா உடனே உனக்கு வேறே செருப்பு வாங்கிக்கொடுத்துடுவார்! ஆனா அந்த ஆளுக்கு இந்தச் செருப்பு தொலைஞ்சா வேறே புதுசா வாங்குறதுக்கு வாயையும், வயத்தையும் கட்டி பணத்தைச் சேர்க்கவேண்டியிருக்கும்!

அதனால நான் ஒரு வேடிக்கை சொல்றேன். அது மாதிரிச் செய்! அது இன்னும் தமாசா இருக்கும்.. அப்படின்னான்.

சரி! சொல்லுன்னான் இவன்.

“செருப்பு இரண்டும் அது இருக்கிற இடத்துலேயே இருக்கட்டும். உன் சட்டைப் பையிலேயிருந்து ஒரே ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அந்தச் செருப்பு மேலே அதோட குதிப் பகுதியிலே வை. வச்சுட்டு நாம ரெண்டு போரும் அந்த மரத்துக்குப் பின்னாடி மறைஞ்சி நின்னுக்குவோம்.“ அப்புறம் பார் வேடிக்கையைன்னான்.

அதே மாதிரி ஒரு ரூபாய் காசை செருப்பு மேலே வச்சிட்டு இவங்க மறைஞ்சு நின்னுக்கிட்டாங்க.

கொஞ்ச நேரத்துல அந்த விவசாயி வந்தார்.

கால்லே உள்ள மண்ணைத் தட்டிப்புட்டு செருப்பை மாட்டறதுக்குப் போனார். அங்கே இருந்த காசு கண்ணுல பட்டுது! அவருக்கு ஆச்சிரியமா போச்சு. அதை கையிலே எடுத்துப் பார்க்கிறார். நாலுபக்கமும் திரும்பி திரும்பிப் பார்க்கிறார். கடைசியிலே ஆகாயத்தைப் பார்க்கிறார்.

ஆண்டவா! இது உன்னோட கருணைதான்..
நீதான் யாரோ புண்ணியவான் மனசுல தருமம் பண்ணற எண்ணத்த உண்டாக்கியிருக்க! அந்தப் புண்ணியவான் நல்லாயிருக்கனும்! ன்னு வாழ்த்தி அந்தக் காசைக் கண்ணுல ஒத்திக்கிட்டார்.

மறைஞ்சிருந்து பார்த்திட்டிருந்த ஏழைப் பையன் இப்பச் சொன்னான்...

பார்த்தியா..? உன்னைப் புண்ணியவான்னு வாழ்த்திட்டுப் போறார் அந்த ஆள்! அவருக்கும் சந்தோசம். உனக்கும் சந்தோசம். உனக்கு ஒரு ரூபாய்ங்கறது பெரிசில்ல. அதனால நமக்குக் கிடைச்சிருக்கிற மகிழ்ச்சி ரொம்ப உயர்வானது! அப்படின்னான்.

வேடிக்கையும் கிண்டலும் இது மாதிரி அடுத்தவங்களுக்கு இடைஞ்சலா இல்லாம இருக்கனும் என்கிறார் கலைவாணர்.

ஆனா பாருங்க.. அவருக்கே இடைஞ்சலா வர்ற விசயங்களைக் கூட அவரு வேடிக்கையாத்தான் எடுத்துக்கறார்.

ஒரு தடவை ஒருத்தர் கலைவாணர்க்கிட்டே வந்து...
ஐயா... என் குழந்தை செத்துப் போச்சு! ன்னு சொல்லி அழுதார். உடனே இவரு அவருக்கு நூறு ரூபாய் பணம் கொடுத்து “இந்தாங்க... அடக்கம் செய்யுங்க!ன்னு சொல்லி அனுப்பிவைச்சார்.

ஒரு வருசம் கழிச்சு மறுபடியும் அதே ஆள் வந்தார். இவறு மறந்திருப்பார்ங்கற நினைப்பிலே “ அண்ணே...
என் குழந்தை இறந்து போச்சண்ணே! ன்னார் இவரு மறுபடியும் நூறு ரூபாய் கொடுத்து ஆறுதல் சொல்லி அனுப்பினார்.

ஏழெட்டு மாசம் கழிச்சு மறுபடியும் அதே ஆள் வந்தார். அவரு வாயைத் திறக்கறதுக்க முன்னாடியே இவரு நூறு ரூபாயை அவரு கையில வெச்சு

“போன ரெண்டு தடவைதான் குழந்தை செத்துப்போச்சு“ 


இந்தத் தடவையாவது சாகாமக் காப்பாத்திடுங்க! ன்னார்.

அதுக்கப்பறம் அந்த ஆள் வர்றதே இல்லையாம்.


தொடர்புடைய இடுகை

33 comments:

 1. தகவல் சொல்ல ஆரம்பிக்கும் போதும் அதை முடிக்கும் போதும் அவருடைய நகைச்சுவை உணர்வு மேலோங்கும்...

  காலை 6.45 மணிக்கு அவருடைய கனீர் குரளில் இன்று ஒரு தகவல் கேட்டப்பிறகுதான் படுக்கையை விட்டே எழுந்திருப்பேன்.

  தவலின் இறுதியில் கலந்துவரும் நகைச்சுவை துணுக்கு இந்த நடே அடிமை...

  ReplyDelete
 2. அவரைப்பற்றிய நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி முனைவரே...

  ReplyDelete
 3. சிறு வயதில் ஏதோ ஒரு வார இதழில் (பெயர் மறந்துவிட்டது) "தென்கச்சி பக்கம்" என்ற பெயரில் தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் நகைச்சுவையை நிறைய படித்திருக்கிறேன். நல்ல கருத்துக்களை நகைச்சுவையுடன் எழுதுவார். அவரின் அமைதியான குரலும் ரொம்ப பிடிக்கும். தங்களின் இந்த பதிவால் அந்த இனிய நினைவுகள் மீண்டும் வந்தது. பகிர்வுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 4. தென்கச்சியாரின் நகைச்சுவை சிரிக்கவும் வைக்கும், அதே நேரத்தில் சிந்திக்கவும் வைக்கும். நன்றி.

  ReplyDelete
 5. இன்று ஒரு தகவல், இன்று எவர் சொன்னாலும் அவருக்கு ஈடாகாது.. காரணம், அந்த எளிய பாமரனின் பேச்சு... ரொம்ப கடினமான தமிழை போட்டு குழப்பாமல் மக்களுக்கான தமிழில் அருமையாக செய்யப் பட்ட நிரல் அது...

  ReplyDelete
 6. மனம் விட்டுச் சிரிக்க வைக்கும் நகைச்சுவையைச் சொல்லும் தென்கச்சியார் ஏன் சிரிப்பதில்லை என்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட போது அவர் சொன்னார்: ‘‘பொடி போடுகிறவன்தான் தும்ம வேண்டும். பொடிமட்டை தும்மாது...’’ என்று. அவர் சொன்ன கதை அருமை முனைவரையா. நல்லதொரு மனிதரை நினைவு‌கூர வாய்ப்பளித்ததற்கு நன்றி.

  ReplyDelete
 7. //நகைச்சுவை அடுத்தவங்களுக்குத் துன்பம் குடுக்காம இருக்கனும்.அடுத்தவங்க மனசைப் புண்படுத்தப்படாது. அதுதான் சிறந்த நகைச்சுவை// எத்தனை உண்மையான வார்த்தைகள்....

  ReplyDelete
 8. ஆரவாரமற்ற அந்தப் பேச்சுக்குள் எல்லா உணர்ச்சிகளும் அடங்கியிருக்கிறது என்று பின்னர் தான் நான் உணர்ந்துகொண்டேன்.

  பாராட்டுக்கள்..

  ReplyDelete
 9. இவரின் தகவல்களை காதால் கேட்டுவிட்டு முதன்முதலில் தொலைக்காட்சியில் இவரின் நிகழ்ச்சியை பார்த்தபோது இவர்தானா அவர் என்று நம்பமுடியவில்லை... அந்த 15நிமிடம் முழுக்க முழுக்க சிரிப்பு எவ்வளவு முக்கியம் என்று சிரிப்பை பற்றியே பேசினார்... அவர் முகத்தி சிரிப்பே இல்லை... எனக்கு மிகுந்த ஆச்சரியம் ஏன் இவர் இப்படி என்று... பிறகு புரிந்தது...

  அவரின் நினைவை சிந்திக்கவைத்த தங்களுக்கு நன்றி... நண்பரே...

  ReplyDelete
 10. அருமை நண்பரே

  ReplyDelete
 11. தென்கச்சியார் பற்றிய எனது நினைப்பும் அப்படி தான் இருந்தது!!
  மனிதர் எப்படி தான் சிரிக்காமல் அவ்வளவு நகைச்சுவையாக பேசினாரோ!

  கலைவாணர் நகைச்சுவை ரொம்ப அருமை

  ReplyDelete
 12. தென்கச்சியாரை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி முனைவரே!

  சூர்யஜீவா சொன்னமாதிரி.. இன்று ஒரு தகவலை வேறொருவர் நிச்சயமாக அவரைப்போல சொல்லமுடியாது..

  இன்று ஒரு தகவல்களின் ஒலித் தொகுப்பு யாருக்காவது இணையத்தில் கிடைத்தால் சுட்டியை இங்கு பதிவு செய்யுங்கள்..

  ReplyDelete
 13. சிந்தனையும் சிரிப்பும்

  ReplyDelete
 14. ஆரம்பத்தில் காலை 7.25க்கு, பின் 7.40க்கு ஒலிபரப்பு.
  இரவு 11.00க்கு மறுஒலிபரப்பு. புதுச்சேரி வானொலியில் பல ஆண்டுகளுக்குப் பின் மறுஒலிபரப்பானது.

  ReplyDelete
 15. @Abdul Bashith, அந்த பத்திரிகை கல்கண்டு.

  ReplyDelete
 16. தென்கச்சியார் பேசியதில் என்னை கவர்ந்தது
  நம் அனைவருக்கும் உள்முகவரி ஒன்று தான் என்ற வார்த்தைகளை மறக்க முடியாது

  ReplyDelete
 17. நல்லபதிவு வாழ்த்துக்கள் கவால்துறை என்கிற பெயரில் ஒரு கயமை துறை!,ஈழத்திலே தன் உறவுகளை இழந்து, தன் சொத்துக்களை இழந்து, நாட்டை இழந்து தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகம் வந்தால் அவர்களை மீன்பிடிக்க கூடாது என்று க்யூபிராஞ்ச் போலீஸ்காரன் மிரட்டுகிறான்.கேடுகெட்ட காவல்துறை குற்றவாளியை பிடிக்க முடியாமல் ஜோதிடரை அணுகி உள்ளது,இது காவல் துறை இல்லை கயமை துறை! காவல்துறை என்கிற பெயரில் ஒரு பயங்கரவாத படை இயங்குகிறது. இந்த படைக்கு மனிதாபிமானம், மனித நேயம், ஒழுக்கம், நேர்மை, நீதி, நியாயம் என்று ஒன்றுமே தெரியாது. காவல்துறை என்கிற பெயரில் ஒரு ரவுடி கூட்டம் செயல்படுகிறது please go to visit this link. thank you.

  ReplyDelete
 18. நல்லதோர் நகைச்சுவையாளர் தென்கச்சி.கோ.சுவாமிநாதன் அவர்களைப் பற்றிய நினைவுகளையும், அவர் மூலமாக கலைவாணர் அவர்களைப் பற்றிய நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டதற்கு மிகவும் நன்றி. பிறர் மனம் புண்படாமல் அவர் வழங்கும் நகைச்சுவைச் செய்திகளை ரசிக்காதவர் எவர்?

  ReplyDelete
 19. அருமையான அறிமுகம்
  அருமையான இரண்டு செய்திகள்
  ரசித்துப் படித்தேன்
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 11

  ReplyDelete
 20. அருமை முனைவரே!
  நல்லவர் அடையாளம் காட்டப் பட்டார்

  த ம ஓ 12

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 21. @NIZAMUDEEN

  நன்றி சகோ.! இப்பொழுது நினைவிற்கு வருகிறது.

  ReplyDelete
 22. நான் தென்கச்சியின் ரசிகன்.. நன்றி

  ReplyDelete
 23. பாமர பேச்சு.. எளிய தமிழ் என்றென்றும் மறவோம்..

  ReplyDelete
 24. தென்கச்சியாரின் தகவலின் இறுதியில் கலந்துவரும் நகைச்சுவை துணுக்கு அசத்தலாக இருக்கும்.

  ReplyDelete
 25. நல்ல நகைச்சுவை. இவருடையது வேறு சிலவும் கேட்டிருக்கின்றேன்.

  ReplyDelete
 26. இன்று ஒரு தகவல்,வாரம் ஒரு தகவல் என சிரிக்க சிரிக்க அழகு தமிழில் பேசுவார் தென்கச்சி ஐயா அவர்கள்::)

  ReplyDelete
 27. சிறுவயதில் வானொலி கேட்கையில்
  தென்கச்சி அவர்களின் இன்று ஒரு தகவல் கேட்டு
  மனதில் பதித்து அசைபோட்ட காலம் கண்முன் நிற்கிறது முனைவரே..
  அந்த குரலில் தான் எத்தனை காந்த சக்தி ..
  செய்திகளின் ஊடே நகைச்சுவையை அழகாக பதப்படுத்தி தருவதில்
  அவருக்கு இணை அவர்தான்...

  ReplyDelete
 28. நானும் தென்கச்சி கோ சுவாமிநாதனின் ரசிகன்தான். அவரது கருத்துக்கள் அற்புதம். அதிலும் அவற்றை நகைச்சுவையாக முடிக்கும் பாணி அவருக்கேயுரியது.

  ReplyDelete
 29. பதிவு அருமை. நான் தென்கச்சியாரின் பக்கத்து ஊர்க்காரன் என்பதில் எனக்கு கொஞ்சம் பெருமை

  ReplyDelete
 30. வருகைதந்து மறுமொழி வழங்கிய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்

  ReplyDelete