வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 15 நவம்பர், 2011

கொட்டாவி விட்ட காக்கை!

 அஃறிணை உயிரினங்களை அதிகமாக உற்றுநோக்குபவர்கள் கவிஞர்கள் தான் என்பது என் கருத்து.


இதோ ஒரு கவிஞனின் ஒப்பீட்டைப் பாருங்களேன்..

அழகியதொரு கடற்கரைச் சோலை..
ஆங்கே வலிமையான காற்று வீசுகிறது..
அதனால்..
கண்டல் மரத்திலிருந்து பசுமையான காய்கள் நேராகக் கீழிருக்கும் நீர்நிலையில் வளர்ந்திருக்கும் ஆம்பல் மலர்களின் மீது வீழ்கின்றன...
அதனால் ஆம்பலின் அரும்பு சாய்ந்து சிறிய வெண்ணிறக் காக்கை கொட்டாவி விட்டது போல வெண்ணிறமாய் மலர்ந்து நிற்கும்.

என்கிறார்....

இப்பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

பாடல் இதுதான்..

“கானற் கண்டல் கழன்று உகு பைங்காய்
நீர் நிற இருங்கழி  உட்பட வீழந்தென
உறுகால் தூக்க தூங்கி ஆம்பல்
சிறு வெண் காக்கை ஆவித்தன்ன
வெளிய விரியும் துறைவ! என்றும்
அளிய பெரிய கேண்மை நும்போல்
சால்பு எதிர் கொண்ட செம்மையோரும்
தேறா நெஞ்சம் கையறுபு வாட
நீடின்று விரும்பார் ஆயின்
வாழ்தல் மற்று எவனோ? தேய்கமா தெளிவே!

நற்றிணை 345
நம்பிகுட்டுவனார்

கூற்று தெளிவிடை விலங்கியது

சூழல்...


பிரிவிடை ஆற்றாது வருந்திய தலைவியிடம் தலைவன் “விரைவில் மணம் புரிவேன்“ என்று அவள் மனதைத் தெளிவிக்க வருகிறான். 


அப்போது தோழி தலைவனிடம்..
தலைவ! நீ தலைவியைத் தெளிவுறுத்தியது போதும்!
விரைவில் மணம் முடிக்கும் வழியைப் பார் என்கிறாள்.

தலைவனின் மனம் நோகமாலும், தலைவியின் சூழ்நிலையையும் தோழி எடுத்தியம்பும் பாங்கு பாராட்டுதலுக்குரியது.

தோழியின் உரையாடல் நுட்பம்.

தலைவா..
நீ அருளுடையவன்!
பெரிய நட்புடையவன்!
சான்றோர் ஒத்த பண்படையவன்!
உன் பிரிவால் வாடும் தலைவிக்கு உடனடித்தேவை உனது ஆறுதல் மொழியல்ல..
நீ விரைந்து அவளை மணமுடிக்கவேண்டும்! என்பதே..
அதை நீ முதலில் உணர்வாயாக என்கிறாள்.


பாடல் வழியே..

 1. ஆம்பலின் அரும்பு அவிழ்தலை வெண்காக்கை கொட்டாவி விட்டதுபோல என்று பாடிய புலவரின் உவமை நயம் மிகவும் நுட்பமுடையதாகவுள்ளது.
 2. “தெளிவிடை விலங்கியது“ என்னும் அகத்துறை அழகாக விளக்கப்பட்டுள்ளது.
 3. தலைமக்கள் மீது மிகுந்த அன்புடைய தோழி இருவருக்கும் ஏற்பட்ட மனப்போராட்டத்தைப் போக்கி நல்லதொரு திருமண வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்தும் பாங்கு நட்பின் சிறந்த அடையாளமாக உள்ளது.
 4. தலைமக்களின் காதலை அலர் (புறம்பேசும்) தூற்றும் ஊர்மக்களின் பழிமொழியால் நாணம் கருதி அமைதிகாக்கும் தலைவி தற்போது வாய்விட்டுப் புலம்புகிறாள் என்னும் அகவாழ்வியலை...
   பருவம் அல்லாத காலத்து ஆம்பல் சூழல் காரணமாக    
   வருந்தி மலரும் என்ற உள்ளுறை வழியே புலவர்  
   புலப்படுத்திய பாங்கு உளம் கொள்ளத்தக்கதாகவுள்ளது.

தமிழ்ச் சொல் அறிவோம்.

 1. உகுதல் உதிர்தல்
 2. ஆவித்தல் கொட்டாவி விடுதல்
 3. தேய்க  தீர்க
 4. நீடின்று நெடுங்காலம்24 கருத்துகள்:

 1. கவிஞரின் கற்பனை மிகவும் ரசிக்கத் தக்கதாய் உள்ளது
  அறியாத பாடலை அழகான பதிவாக்கி அறியத்
  தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
  த.ம 2

  பதிலளிநீக்கு
 2. இந்த தமிழ் சொல் அறியும் பகுதி பயனுள்ளதாகவும், போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும் நிலையிலும் இருக்கிறது..

  பகிர்வுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 3. தமிழ்ச்சொல் பிரயோசனமாக இருக்கிறது.தலைப்பு அருமை !

  பதிலளிநீக்கு
 4. வெண்ணிற ஆம்பல் அரும்பு விரிந்ததற்குக் காரணமும் கூறி அந்தக் காட்சி தரும் அழகுக்கு உவமையையும் கூறி அதன் மூலம் சொல்லவந்தக் கருத்தைத் தலைவன் மனத்தில் பதியும்வண்ணம் எடுத்துரைத்து.... பாடல் புனைந்த புலமையை என்னவென்பது? பிளந்த அரும்பை காக்கை கரைவதற்கும் உவமை கூறியிருக்கலாம். ஆனால் சத்தமின்றிப் பிளந்த வாயைக் கொட்டாவி விட்டதற்குச் சமமாய் சொல்லியிருப்பது வியப்பிலும் வியப்பு. சங்க கால இலக்கியங்களில் சொல்லப்படும் சூழலுக்கேற்ற உவமைகளைப் பாடலில் புகுத்தியிருப்பது என்றும் ரசிக்கத்தக்கதாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி முனைவரே.

  பதிலளிநீக்கு
 5. தங்களின் பதிவைப்பற்றி வலைசரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன் நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

  பதிலளிநீக்கு
 6. அருமையான கவிதை. எளிமையாய் புரிந்து ரசிக்கும்படி வழங்கியுளளீர்கள் முனைவரையா... வெண்ணிறக் காக்கை? அப்படியொன்று இருந்ததா என்ன..?

  பதிலளிநீக்கு
 7. படத்தில் இருக்கும் மலரின் பெயர்தான் ஆம்பல் மலரா?இந்த பெயர் புதிது எனக்கு.நல்ல பகிர்வு இரண்டும்.

  பதிலளிநீக்கு
 8. 3.தேய்க – நீடின்று
  4.நீடின்று – நெடுங்காலம்
  நீடின்று எனில் தேய்க,நெடுங்காலம் இரண்டு பொருளா?

  பதிலளிநீக்கு
 9. @சென்னை பித்தன் தங்கள் தமிழ்த்தேடலுக்கு நன்றி ஐயா..

  இது (உள்)பொருள் உவமை தான் ஐயா..

  பதிலளிநீக்கு
 10. @கீதா தங்கள் சங்க இலக்கியத்தேடல் வியப்பளிப்பதாக உள்ளது..

  இவ்வளவு ஆழமான புரிதல் என்னை மேலும் மேலும் நுட்பமாக எழுதச் செய்வதாக அமைகிறது..

  நன்றி கீதா..

  பதிலளிநீக்கு
 11. @கணேஷ் மகிழ்ச்சி நண்பரே..

  கடல்கரைப் பகுதிகளில் வாழும் வெண்ணிறமுடைய நீர்க்காக்கைத் தான் இலக்கியங்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றன அன்பரே.

  பதிலளிநீக்கு
 12. @thirumathi bs sridhar எழுத்துப்பிழை யை அறியத் தந்தமைக்கு மகிழச்சி தோழி..

  பதிலளிநீக்கு
 13. பதிவு நல்லாருக்கு, எதுக்கு கமெண்ட்ஸை மறைக்கறீங்க?

  பதிலளிநீக்கு
 14. நன்றி செந்தில்.
  பக்கம் விரைவாகத் திறக்கவே அப்படி செய்தேன் ந்ணபா.

  பதிலளிநீக்கு