வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 25 நவம்பர், 2011

எழில் ஓவியம்!

ஒலி மாசுபாடு என்பது இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது.

அதிலும் தனிமனித அத்துமீறல்கள் அளவுக்கு அதிகமாகவே உள்ளது.

அதிக ஒலியோடு அலைபேசியின் அழைப்பின் ஒலியை வைத்துக்கொள்தல்!
பொது இடங்களிலும் ஊருக்கே கேட்பதுபோல சத்தமாக அலைபேசியில் பேசுதல்.
அடுத்தவறுக்கு இடையூறாக அதிக ஒலியோடு பாடல் கேட்டல்.
வாகனங்களில் பேரொலிதரும் காற்று ஒலிப்பான்களைப் பயன்படுத்துதல்..

என வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம்..

சங்ககாலத்தில் இரண்டு சூழல்கள்..

1. வினை முடிந்து மீளும் தலைவன் புறப்படுமுன் தேர் மணியினது நாக்கு ஒலிக்காதபடி அதைக் கட்டுகிறான்.ஏனென்றால், 
வண்டுகள் தம் துணையுடன் கூடி மகிழும் போது, 
தேர் மணி ஓசை அவைகளுக்கு அச்சத்தைக் கொடுத்துப் பிரித்து விடக் கூடாது என்பற்காகவே அவ்வாறு செய்தான்
இதனை..

பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த 
தாதுஉண் பறவை பேதுறல் அஞ்சி 
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன் 
(அகநானூறு - 4 : 10-12)


என்ற பாடல் அடிகள் விளக்கும்.

2.பணி நிமித்தம் தலைவியை நீங்கிச் சென்ற தலைவன் தன் வேலை முடிந்து  குதிரைகள் இழுத்துச் செல்லும் தேரில் வருகிறான்.
 தம் தேரின் ஓசை அந்நிலத்தில் கூடியிருக்கும் மான் இனங்களுக்கு எவ்விதத்திலும் தடையாக இருக்கக்கூடாது என்று எண்ணுகிறான்  அதனால் தன் தேர்ப்பாகனிடம் “தேரை ஒலியின்றிச் செலுத்துக! என்று சொல்கிறான்.

என்ன ஒரு சிந்தனை..!!

யர்திணைகளைக்கூட மதிக்காத இன்றைய உலகில்
ஃறிணை உயிர்களையும் மதித்துப் போற்றிய சங்கத்தமிழனின் மாண்பு பெருமிதம் கொள்ளச் செய்வதாக உள்ளது.

இதோ..
எழில் மிக்க ஓவியமாக முல்லைநிலமும் - அதில்
அதை விட அழகான தலைவனின் அன்புள்ளமும் காட்சிப்படுத்தப்படுகிறது.

தலைவன் பாகனிடம் சொல்கிறான்...

பாகனே..

வாழையின் பெரிய பூவினது மடல்கள் முறையாக மலர்ந்து உதிர..
எஞ்சிய குவிந்த மொட்டும் வீழ்ந்துவிட்ட குலையைப் போன்ற முறுக்குடைய கொம்புகளைக் கொண்ட ஆண்மான்களோடு, பெண்மான்கள் இந்நடுநாளில் விரும்பிக் கூடியிருக்கும்.

விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டிய தேரின் ஓசையால் மான்கள் மகிழ்ச்சி நீடிக்காதல்லவா...?

நிறைந்த சூலையுடைய கரிய மேகங்கள் கார்காலத்தைத் தோற்றுவித்தன. வானம் பொய்க்காது மழையைப் பொழிந்தமையால் கானம் செழிப்புற்று அழகு பெற்றது.

நீலமணிபோன்ற காயா மலரின் அழகிய மலர்களின் இடையிடையே..
சிவந்த முதுகினையுடைய இந்திரகோபப் பூச்சிகள் பரவி ஊர்ந்த திரிந்தன.

முல்லைக் கொடிகளிலிருந்து நிறைய மலர்கள் பரவலாக உதிர்ந்து கிடந்தன.
ஆதலால் சிறந்த நிலமாகிய முல்லை நிலப்பரப்பு ஓவியம் வல்லோனால் தீட்டப்பட்ட எழில் ஓவியம் போலக் காட்சி தந்தது.

அத்தகைய முல்லை நிலத்தே, தாள நடை விளங்குமாறு தாவிச் செல்லும் நடையையுடைய செருக்குடைய குதிரைகளின் தாவும் இணையொத்த கால்கள் மெல்ல நடக்கும்படி தாற்றுக்கோலால் இடித்தலை மறந்து செலுத்துவாயக என்று தேர்ப்பாகனிடம் அன்புடன் சொல்கிறான் தலைவன்.வானம் வாய்ப்பக் கவினி, கானம்
கமஞ்சூல் மாமழை கார்பயந்து இறுத்தென,
மணிமருள் பூவை அணிமலர் இடைஇடை
செம்புற மூதாய் பரத்தலின், நன்பகல்
முல்லை வீகழல் தாஅய் வல்லோன்
செய்கை அன்ன செந்நிலப் புறவின்
வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத்
தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க
இடிமறந்து ஏமதி -வலவ! குவிமுகை
வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு
கணைக்கால் அம்பிணைக் காமர் புணர்நிலை
கடுமான் தேர்ஒலி கேட்பின் 
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே

சீத்தலைச் சாத்தனார்
அகநானூறு -134

வினைமுற்றி மீண்ட தலைவன் பாகற்கு உரைத்தது.

பாடல் வழியே..

1. ஒலிமாசுபாடு உயிர்களின் இன்பத்துக்குத் தடையாக இருக்கும் என்ற தலைவனின் சிந்தனை அஃறிணை உயிர்கள் மீதும் அன்புகொண்ட பழந்தமிழரின் மாண்பை எடுத்துரைப்பதாக உள்ளது.


2. முல்லை நிலத்தின் காட்சியானது அழகான ஓவியத்தைக் கண்டு மகிழ்ந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

தொடர்புடைய இடுகைகள்

26 கருத்துகள்:

 1. பாடம் அருமையாக இருந்தது முனைவரே... முதல் பாடலை சிறு வயதில் படித்த நினைவு.. அப்பொழுது சரியாக நினைவுகளில் அமர வில்லை.. இன்று புரிந்ததால் அருமையாக மனதில் குடி கொண்டு விட்டது

  பதிலளிநீக்கு
 2. நல்ல தகவல்களை அறிந்து கொண்டேன் ..
  சங்க இலக்கியம் மிக எளிமையாய் கூறியது சிறப்பு

  பதிலளிநீக்கு
 3. மற்ற உயிரிணங்களையும் தன் உயிர் போல் எண்ணுவதின் உச்சநிலைதான், ஒரு பசு தொடுத்த வழக்குக்காக தன் மகனையும் தேர்சக்கரத்தில் கிடத்தி அவன் மேல் தேரைச் செலுத்திய மனுநீதிச் சோலனின் செயல்...

  இன்று சக மனிதன் விபத்துக்குள்ளானால் சற்றும் எந்த ஒரு சலனமும் இல்லாமல் பார்த்துவிட்டு, நமக்கு ஏம்பா வம்பு... அப்புறம் கோர்ட்டு, கேசுனு உன்னால அலையமுடியுமா? என்று கேட்டு உதவ வருபவனையும் தடுக்கும் உயரியபண்புடையவர்களாக மாறிவிட்டார்கள். [சிலரை நான் குறைக்கூறவில்லை... அவர்களின் பண்பை மதிக்கிறேன்...] -ஆனால் பலர் இப்படிதான் இருக்கிறார்கள்...

  பதிலளிநீக்கு
 4. நல்ல தகவல்கள்... என்ன ஒரு நல்லெண்ணம் இருந்தது மக்களிடம் அக்காலத்தில்....

  பதிலளிநீக்கு
 5. அருமையான பதிவு சார் ..
  மீண்டும் ஒரு சங்க இலக்கியத்தை எங்களுக்கு அறிமுக படுத்தினீர்கள் நன்றி

  பதிலளிநீக்கு
 6. எழிலான இலக்கியப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 7. தனிமனித அத்துமீறல்கள் மிக அதிகமாகிக் கொண்டிருக்கிற நேரத்தில்
  தேவையான பதிவு முனைவரே..
  அன்றைய மனிதர்கள் எப்படி அடுத்தவர்களின் செயலுக்கும் மனநிலைக்கும் மரியாதை கொடுத்தார்கள் என்று அருமையாக விளக்கியமைக்கு
  நன்றிகள் பல முனைவரே...

  பதிலளிநீக்கு
 8. சங்க காலத்தில் இரண்டு சூழல்கள் அருமை..

  பதிலளிநீக்கு
 9. உண்மை தான்...

  சங்கத் தமிழன் அஃறிணையையும் மதித்தான்..
  இன்றைய தங்கத் தமிழன்---??

  பதிலளிநீக்கு