வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 16 செப்டம்பர், 2010

முரசு கட்டிலில் தூங்கியவர்.

இரும்பொறையின் அரண்மனையிடத்து முரசு வைக்கும் கட்டிலில் 

மோசிகீரனார் அறியாது ஏறி வழிநடந்த களைப்பால் அயர்ந்தார்.

முரசு கட்டிலில் ஏறியது தவறு என்று தண்டிக்காது ,  

அவர் துயில் நீங்கும் வரை கவரி வீசினான் அரசன்.

மோசிகீரனாரின் தமிழ்ப்புலமையைப் போற்றுமாறு இச்செயல் அமைந்தது.

நின் வீரமுரசு குற்றம் தீர இறுகப் பிணித்துக் கட்டப்பட்ட வாரையுடையது

கரிய மரத்தால் அமைந்ததால் கருமை படர்ந்த பக்ககங்களையுடையது.

மயிலின் தழைத்து நீண்ட தோகைகளால் ஒளிபொருந்திய புள்ளியையுடைய நீலமணிபேன்ற மாலையாகக் கொண்டு சூடப்பபெற்றது.
அதனுடன் உழிஞையின் பொன் போன்ற தளிர்களும் அழகு பெறச் சூட்டப்பபெற்றது.

இத்தகைய பொலிவுன் குருதியைப் பலி கொள்ளும் வேட்கையுடையதாய அச்சம் தருவதாயும் நின்முரசு விளங்கும்.
அந்த முரசினை நீராட்டிக் கொண்டுவரும் முன் எண்ணை நுரையை முகந்து பரப்பியது போல மென்மையான மலர்களைக் கொண்ட கட்டிலில், அரசு முரசு கட்டில் என அறியாது கிடந்து உறங்கினேன்.

ஆயினும் சினத்துடன் இரு கூறாக்கும் உன் வாளின் வாயால் என்னைக் கொல்லாது விடுத்தாய்.
நீ நல்ல தமிழின் இனிமை முழுவதும் உணர்ந்தவன் ஆகையால் அச்செயல் உனக்கே உரியது.

அது மட்டுமன்று என்னருகே வந்து கவரி வீசவும் செய்தாய்

இந்த அகன்ற உலகில் பரந்த புகழுடையாக்கு அல்லாது பிறர்க்கு உயர்நிலை உலகமாகிய அங்கு தங்குதல் இயலாது என நன்கு கேட்டிருந்த தன்மையாலோ நீ அருளுடன் எனக்குக் கவரி வீசினாய்?
வெற்றியையுடைய தலைவ நீ செய்தது எதனாலோ? கூறுவாய்?

பாடல் இதோ...


மாசற விசித்த வார்புஉறு வள்பின்

மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்,
பொலங்குழை உழிஞையொடு, பொலியச் சூட்டிக்,
குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும், நற் றமிழ்முழுது அறிதல்;
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித், தண்ணென
வீசி யோயே; வியலிடம் கமழ,
இவன்இசை உடையோர்க்கு அல்லது, அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்:
வலம்படு குருசில்! நீ ஈங்குஇது செயலே?

புறநானூறு - 50

பாடியவர்: மோசிகீரனார்.

பாடப்பட்டோன்: சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.

திணை:பாடாண்.

துறை: இயன் மொழி.

குறிப்பு: அறியாது முரசுகட்டிலில் ஏறியவரைத் தண்டம் செய்யாது துயில் எழுந் துணையும் கவரிகொண்டு வீசினன் சேரமான்

 


பாடலின் வழி..

² சங்க காலத்தில் புலவருக்கும் புரவலருக்குமான உறவுநிலையை அறியமுடிகிறது.
² தமிழ் மீது மன்னன் கொண்ட பற்றுதல் புலப்படுத்தப்படுகிறது.


7 கருத்துகள்:

 1. தமிழுக்கு மரியாதை கொடுத்த அரசன் மேல் மதிப்பு கூடுகிறது. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. பாடல் படித்தடில்லை... ஆனால் கதை படித்திருக்கிறேன்.
  நல்ல குணம் கொண்ட மன்னன். அருமையான இலக்கிய விருந்து.

  பதிலளிநீக்கு
 3. என்னே தமிழ் மூதாதையரின் மனம் என்னே தமிழின் சுவை...குமார் அவர்கள் சொன்னது போல தமிழ் விருந்து...சரித்திரம் அறிந்தது போலவும் ஆச்சு

  பதிலளிநீக்கு
 4. ஸ்கூல்ல படிச்ச கதை. மீண்டும் படித்ததில் சந்தோஷம். தொடருங்கள் அண்ணா!!

  பதிலளிநீக்கு
 5. நன்றி முனைவர் குணா.
  உள்ளம் நெகிழ்கிறது.

  முல்லைக்குத் தேர் தந்த பாரியை வள்ளல் என்கிறோம்.
  தமிழுக்குக் கட்டில் தந்து கவரி வீசிய இரும்பொறை பாரியை விடப் பெரும்வள்ளல் அன்றோ?

  கீரனார் - நக்கீரனார் - இன்னும் எத்தனையோ இனிய புலவர்கள் - தமிழால் உயிர் பிழைத்தனர் அன்று. இன்று இறந்தும் வாழ்கின்றனர் தமிழால். ஆக தமிழ் அமுதம் தானே?

  பதிலளிநீக்கு