வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 6 ஆகஸ்ட், 2014

வீட்டுக்கொரு பிச்சைப் பாத்திரம்!

உலகமயமாக்கல் என்ற புயலில் சிக்கி நம் நாடு சிதைவுக்குள்ளாகியுள்ளது.
மக்கள் தாய்மொழி உணர்வை இழந்துவிட்டனர்!
ஆங்கிலம் மட்டுமே மொழி என்று பலரும் நம்புகின்றனர்!
ஆட்டு மந்தைகளாகத்தான் வாழ்கின்றனர்!
குழந்தைகளின் பெயரில் தாய்மொழி அடையாளமே இல்லை!
மண் உயிரற்றதாகிவிட்டது!
தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்கும் நிலைவந்துவிட்டது!
நம் ஆடை மரபுகளை மறந்துவிட்டோம்!
பழந்தமிழர் விளையாட்டுகளை, கலைகளை யாரும் மதிப்பதில்லை! 
தமிழர் இசை என்னவென்றே தெரியவில்லை!
இந்தக் கல்வி முறை,
 வேலை வாங்குவதே பெரிய இலக்கு என்று மூளைச் சலவை செய்கிறது!
நாட்டைப் பற்றி இவ்வாறு எண்ணிக்கொண்டே ஈரோடு புத்தகத் திருவிழாவுக்குச் சென்றேன். அங்கு சுகிசிவம் அவர்கள் பேசும்போது தான் படித்த, ஒரு சிந்தனையை முன்வைத்தார்.
“இன்று நம் எல்லோர் வீடுகளிலும் ஒரு அலுமினியப் பிச்சைப் பாத்திரம் உள்ளது! அது வேறெங்கும் இல்லை நம் வீட்டின் மாடியில் உள்ள டிடிஎச் ஆண்டனா தான்! அதில் தான் நாம் உலகெங்கிலுமிருந்து கலாச்சாரக் குப்பைகளை இரவல் பெறுகிறோம் என்றார்.
எனக்கும் உண்மை என்றுதான் தோன்றியது. வசதியானவர்கள் தனியாக வைத்திருக்கிறார்கள். இயலாதவர்கள் கேபிள் டிவி என அதையும் இரவல் வாங்குகிறார்கள்.

அவர் சொன்தும் என் நினைவுக்கு வந்தது 
கவிஞர் மு.மேத்தா அவர்களின் கவிதைதான். 

தேசப்பிதாவிற்கு தெருப்பாடகனின் அஞ்சலி
உன்னுடைய படங்கள்
ஊர்வலம் போகின்றன
நீயேன்
தலைகுனிந்தபடி
நடுத்தெருவில்
நிற்கிறாய்?
வெளுத்துப் போய்விட்ட
தேசப்படத்துக்குப்
புதுச்சாயம் பூசும்
புண்ணிய தினத்தில்
புத்திர தேசத்துக்காக நீ
புலம்புவது
என் காதில் விழுகிறது!

எங்கள் தேசசப் பிதாவே!
அமைதி கொலுவிருக்கும்
உன் சிலைகளைப்
பார்க்கும் போதெல்லாம்
நான்
அழுதுவிடுகிறேன்!

கண்ணீரின்
வெப்பத்தால்
என் கவிதை
முழுமை பெறாமலே
முடிந்து விடுகிறது...

தேசப் படத்திலுள்ள
கோடுகள்
விடுதலைக்குப் போராடிய
வீரத் தியாகிகளின்
விலா எலும்புக் கூடுகள்!

அழிக்கமுடியாத
கல்லெறிபடாத
அந்த நினைவுச்சின்னத்தின்
மூலமே
அவர்களுக்கு நாங்கள்
அஞ்சலி செலுத்திவிடுகிறோம்!

கண்ணீர்க் கடலில்
கலங்கள் மூழ்கியபிறகு
அடைக்கலம் தேடிய 
ஆபுத்திரனே!

அமுதசுரபியைத்தான்
நீ தந்து சென்றாய்
இப்போது
எங்கள் கைகளில் இருப்பதோ
பிச்சைப் பாத்திரம் !
இந்த மாற்றத்தை
நிகழ்த்திய
மந்திரவாதிகள் யார்?
நிழலுக்குள் மறைந்திருக்கும்
நிழலை
யார் அம்பலப்படுத்துவது?

சரித்திர மாளிகையில்
அகிம்சைப் பேரொளியில்
பகத்சிங்குகள்
மறைக்கப்பட்டதால் தானா
சுதந்திர மாளிகையை
எலிகள்
சுரண்டுகின்றன?

மயிலுக்கு போர்வை தந்தவனின்
மரபிலே வந்தவர்கள்
எங்கள் மேனியில் கிடக்கும்
கந்தல் சட்டைகளையும்
கழற்றிக் கொண்டு போகிறார்கள்
ஆடுகளை
உனக்காக வளர்த்தோம்
நாளடைவில் நாங்களே
மந்தை ஆடுகளாய்
மாறிப் போனோம் !
எங்கள்
வயிற்றைப் புறக்கணித்துவிட்டு
காம்புகளை நேசிக்கிறார்கள் !
எங்களுக்குத்
தீவனம் கிடைக்காவிட்டாலும்
மேய்ப்பவர்களுக்கு மட்டும்
எப்படியோ
இனாம் கிடைத்து விடுகிறது !

கண்ணீரின் வெப்பத்தால்
 என் கவிதை
முழுமைபெறாமலேயே
முடிந்துவிடுகிறது!

சட்டக்கட்டிடங்களில்
ஓட்டைகள் விழுந்துவிட்டன
வயதாகிப் போனதால்
தர்ம தூபிகள்
தள்ளாடுகின்றன

எங்கள் வாழ்க்கை
இருட்டோடு
இல்லறம் நடத்துகிறது!
பாவத்தைத்
தனித்தனியே செய்துவிட்டு
மொத்தமாகத் தீ்ர்த்துக்கொள்ளப்
போதுமான அளவு
புண்ணிய தலங்கள் இருப்பதால்
எங்கள்
பாரத புத்திரர்கள்
தூசுபடாமல்
தூய்மையாகவே இருக்கிறார்கள்!

இராசதானியில்
மலர்கிரீடங்கள்
சூட்டப்படுகின்றபோது
சேரிக் குழந்தைகளின்
சின்ன விழிச்செடியில்
உப்பு மலர்கள்
உதிர்ந்து விழுகின்றன...

நீ கண்டுபிடித்த
சுதேசி ஆயுதமாம்
கைராட்டையை சுற்றிய சிலர்
தங்கநூல் நூற்கிறார்களாம் !
எங்களுக்கோ
வெள்ளியும் தங்கமும்
விழாக்களின் பெயர்களில்தான்
வருகின்றன
ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்
இந்த நாட்டுமக்கள்
உன்னை
அப்படியே பின்பற்றுகிறார்கள்
அரைகுறையாகத்தான்
உடுத்துகிறார்கள்.

தேசம் போகிற
போக்கைப் பார்த்தால்
பிறந்தநாள் உடையே
எங்கள்
தேசிய உடையாகிவிடும் போல்
இருக்கிறது.

எங்கள் தலைவர்கள்
வறுமையை எப்படியாவது
வெளியேற்றிவிட வேண்டுமென்று தான்
மேடையில் மைக்கின் முன்னால்
பேச்சுத்தவம் செய்கிறார்கள்!

இருபத்தைந் தாண்டுகளில்
தேசத்தில் 
மாற்றமே  நிகழவில்லையென்று
யார் சொன்னது?

கண்ணீர்க்கடலில்
கலங்கள் மூழ்கிய பிறகு
அடைக்கலம் தேடிய
ஆபுத்திரனே!

அமுதசுரபியைத்தான்
நீ தந்து சென்றாய்
இப்போது
எங்கள் கைகளில் இருப்பதோ
பிச்சைப் பாத்திரம் !

அணைக்கட்டுகளில்
திறக்கப்படும் தண்ணீர்
பள்ளங்களை ஏமாற்றிவிட்டு
மேட்டை நோக்கியே
பாய்கிறது.

சேரிகளில் மட்டுமே நீ
யாத்திரை செய்வாய்
என்பதைத்
தெரிந்துகொண்டதால்
உன்னை நேசித்தவர்கள்
தேசத்தையே
சேரியாக மாற்றிவிட்டார்கள்!

இந்த மாற்றங்களை நிகழ்த்திய
மந்திரவாதிகளின் கழுத்துக்கு
நாங்கள்
மாலை சூட்டுகிறோம்!

உன்னுடை படங்கள்
ஊர்வலம் போகின்றன...
நீயேன்
தலைகுனிந்தபடி
நடுத்தெருவில் நிற்கிறாய்?

புத்திர தேசத்துக்காக நீ 
புலம்புவது
என் காதில் விழுகிறது.

அமைதி கொலுவிருக்கும்
உன் சிலைகளைப்
பார்க்கும்போதெல்லாம்
நான் அழுதுவிடுகிறேன்!

கண்ணீரின் வெப்பத்தால்
என் கவிதை
முழுமைபெறாமலே
முடிந்துவிடுகிறது..... 
- மு. மேத்தா

2 கருத்துகள்:

  1. கவிஞர் மேதாவின் கவிதையினை பல ஆண்டுகளுக்கு முன் படித்த நினைவுகள் வருகின்றன நண்பரே

    பதிலளிநீக்கு
  2. சுகி .சிவம் சொன்ன பாத்திரத்திற்கும் .கவிஞர் மேத்தா சொன்ன பாத்திரத்திற்கும் நல்ல பொருத்தம் உள்ளதே !
    த ம 8

    பதிலளிநீக்கு