வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 26 ஜூலை, 2020

சடாயு உயிர் நீத்த படலம் விளக்கம்

சடாயு உயிர் நீத்த படலம்

மாரீச மானால் வஞ்சித்து சீதையை இராவணன் எடுத்துச் சென்றபொழுது கழுகரசனாகிய சடாயு அவனைத் தடுத்துப் போரிட்டு வலிமையைச் சிதைத்து, இறுதியில் அவனது சந்திரகாசமெனும் தெய்வ வாளால் சிறகு அறுபட்டு விழுந்தான்.

 அவன் அப்போது    இறக்கவில்லை. இராம இலக்குவருக்குச் செய்தி அறிவிக்க உயிர் தாங்கி இருந்தான். இச் செய்தியை அவன் இராம இலக்குவருக்குக் கூறிய பின்னர்த் தன் உயிரை விட்டான். தந்தையின் நண்பனுக்குத் தசரத ராமன் மாளாத சோகப் புலம்பலுடன் நீர்க் கடன் செய்தான் என்ற செய்திகள் இப்படலம் கூறுவதால், இது சடாயு உயிர் நீத்த படலம் என்று பெயர் பெற்றது. "சடாயு மோட்சப் படலம்" "சடாயு வதைப்படலம்" என்றும் குறிப்பிடுவதுண்டு.

 இராவணன் சீதையைத் தூக்கிச் செல்லும்போது அவள் இரக்கமில் அரக்கர்க்கு குற்றம் எது, பழிதான் எது என்று கலங்கினாள். அவ்வபயச் சொல் கேட்ட சடாயு "எங்கடா போவது எங்கே" என எதிர் வந்து இராவணனைத் தடுத்தான். இருவருக்கும் போர் மூண்டது சடாயு இராவணனது கொடி, குண்டலம், திருமுடி, கவசம், வில் முதலியவற்றையும் தேரையும், தேர்ப்பாகனையும் சிதைத்து அழித்தான். சினம் கொண்ட இராவணன் மாற்றருந் தெய்வ வாளால் சடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்தினான். சீதை அது கண்டு புலம்பித் துன்புற்றாள். அரக்கன் சீதையை இலங்கைக்குக் கொண்டு சென்று தொடற்கரும் அரக்கியர் காவல் நடுவே வைத்தான்.      'பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும் நிற்றியோ இளையோய்' என வைதேகி வைத வார்த்தையை மனத்தில் தேக்கி, இலக்குவன் இராமபிரானைத் தேடிச் சென்றான். தமையனைக் கண்டு தான் வந்த காரணத்தைச் சொன்னான். இருவரும் சீதை இருந்த பர்ண சாலை நோக்கி விரைந்து வந்தனர். உடல் இருக்க உயிர் பிரிந்தது போல் பர்ணசாலை இருந்த இடத்தையும் சானகி இல்லாமையையும் கண்டனர். இருவரும் அவளைத் தேடிச் சென்றனர். அவ்வழியில் கொடி, வில், கவசம் முதலியன விழுந்து கிடத்தல் கண்டு, அதைத் தொடர்ந்து சென்று இறுதியில் சடாயு விழுந்து கிடந்த இடம் வந்தனர். இராமன் பலவாறு புலம்புதலைக் கேட்ட குற்றுயிராகக் கிடந்த சடாயு நடந்ததையெல்லாம் ஒருவாறு கூறி உயிர் நீத்தான். இராமன் சோகம் மிகக்கொண்டு புலம்பினான். அவனை இலக்குவன் தேற்றினான். இறுதியில் இராமன் சடாயுவுக்கு நீர்க்கடன் செய்து முடித்த போது சூரியன் மறைந்தது. இவையே இப்படலத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் ஆகும்.

                         சடாயு தடுத்தது 

என்னும் அவ் வேலையின்கண், 'எங்கு அடா போவது?' என்னா,

'நில் நில்' என்று, இடித்த சொல்லன், நெருப்பு இடைப் பரப்பும் கண்ணன்

மின் என விளங்கும் வீரத் துண்டத்தன்; மேரு என்னும்

பொன் நெடுங் குன்றம் வானில் வருவதே பொருவும் மெய்யான்; 3503

தன்னைக் கவர்ந்து செல்லும் இராவணனிடம் சீதை பழித்துரைத்துக்கொண்டிருந்தபோது, சடாயு தோன்றி,

நீ எங்கேயடா செல்கிறாய்? நில்! நில்! என இடி இடித்தது போன்ற சொற்களையுடையவனாக, கோபத் தீப்பொறிகளுக்கிடையில் விரித்த கண்களையுடையவனாக, மின்னலைப் போன்ற ஒளியுடன் விளங்கும் வீரமிக்க அலகுடையவனாக மேரு மலை வான்வழியே வருவது போல விண்ணில் பறந்து வரும் பொன்போன்ற உடம்பையுடையவனாக,

பாழி வன் கிரிகள் எல்லாம் பறித்து, எழுந்து, ஒன்றோடு ஒன்று

பூழியின் உதிர, விண்ணில் புடைத்து, உறக் கிளர்ந்து பொங்கி,

ஆழியும் உலகும் ஒன்றாய் அழிதர, முழுதும் வீசும்

ஊழி வெங் காற்று இது என்ன, இரு சிறை ஊதை மோத. 3504

பெரிய வலிமையான மலைகள் எல்லாம் புழுதிபோலத் துகளாய் உதிருமாறு விண்ணில் ஒன்றோடு ஒன்று தாக்கவும், கடலும் மேலெழுந்து பொங்கிக் கடலும் உலகமும் ஒன்றாகி அழியவும், உலக முழுவதும் வீசுகின்ற ஊழிக் காலத்துக் கடுங்காற்று இது என்று சொல்லுமாறு தன் இரு சிறுகுகளின் காற்று மோதியது.

சாகை வன் தலையொடு மரமும் தாழ, மேல்

மேகமும் விண்ணின் மீச்செல்ல, 'மீமிசை

மாக வெங் கலுழன் ஆம் வருகின்றான்' என,

நாகமும் படம் ஒளித்து ஒதுங்கி நையவே. - 3505

  சடாயுவின் சிறகில் இருந்து வரும் பெருங்காற்றால் மரங்கள் கிளைகளோடும் விழவும், வானத்தில் செல்லும்  மேகம் மேலும் மேலே செல்லவும், கருடன் வருகின்றான் எனப்பாம்புகள் படத்தை ஒடுக்கிக்கொண்டு வருந்தின.

யானையும், யாளியும், முதல யாவையும்,

கான் நெடு மரத்தொடு தூறு கல் இவை

மேல் நிமிர்ந்து இரு சிறை விசையின் ஏறலால்,

வானமும் கானமும் மாறு கொள்ளவே. 3506

யானை யாளி முதலிய மிருகங்களும் காட்டில் உள்ள மரங்களும், புதர்களும், கற்களும் சடாயுவின் இரு சிறகுகள் வீசும்காற்றின் வேகத்தால் நிலை கெட்டு ஆகாயமும் காடுகளும் ஒன்றொடு ஒன்று மாறு கொண்டு நின்றன. 

'உத்தமன் தேவியை, உலகொடு ஓங்கு தேர்

வைத்தனை! ஏகுவது எங்கு? வானினோடு

இத்தனை திசையையும் மறைப்பென், ஈண்டு' எனா,

பத்திரச் சிறைகளை விரிக்கும் பண்பினான்; 3507

       'உத்தமன் தேவியை உலகொடு பெயர்த்துக் கொண்டு தேரில்வைத்து நீ போவது எங்கே' என்று கூறி, தான் வானையும் திசைகளையும் இப்போதே மறைப்பவன் போலத் தன் பாதுகாப்பான சிறகுகளை விரித்தபடி சடாயு வந்தான்.

வந்தனன்-எருவையின் மன்னன்; மாண்பு இலான்

எந்திரத் தேர் செலவு ஒழிக்கும் எண்ணினான்;

சிந்துரக் கால், சிரம், செக்கர் சூடிய

கந்தரக் கயிலையை நிகர்க்கும் காட்சியான். - 3508

     சடாயு இராவணனின்  இயந்திரத் தேர் செல்லுதலைத் தடுக்கும் எண்ணத்துடன் சிவந்த கால்களோடும் தலையோடும் செவ்வானத்தின் நிறத்தைக் கொண்ட கழுத்தினையும் உடையவனாகி கைலாய மலையை போன்ற தோற்றத்தோடும் இராவணன் எதிரில் வந்தனன்

ஆண்டு உற்ற அவ் அணங்கினை, 'அஞ்சல்' எனா,

தீண்டுற்றிலன் என்று உணர் சிந்தையினான்,

மூண்டுற்று எழு வெங் கதம் முற்றிலனாய்,

மீண்டுற்று உரையாடலை மேயினனால்; - 3509

   சீதையிடம் 'அஞ்சவேண்டாம்' என அபயம் கூறிய சடாயு, இராவணன் அவளைத் தீண்டவில்லை என்பதை உணர்ந்து சினத்தை அடக்கிக் கொண்டு அவனை நோக்கிப் பேசத் தொடங்கினான்.

சடாயுவின் அறிவுரை

'கெட்டாய் கிளையோடும்; நின் வாழ்வை எலாம்

சுட்டாய்; இது என்னை தொடங்கினை? நீ

பட்டாய் எனவே கொடு பத்தினியை

விட்டு ஏகுதியால், விளிகின்றிலையால். 3510

       உன் இனத்தோடு உன் செல்வ வாழ்வையெல்லாம் சுட்டொழித்தாய்! இத்தகைய தீச்செயலை ஏன் செய்யத் தொடங்கினாய்? கற்புடைய சீதையை விட்டுச்செல். அவ்வாறு விட்டால் அழிய மாட்டாய்..

'பேதாய்! பிழை செய்தனை; பேர் உலகின்

மாதா அனையாளை மனக்கொடு, நீ

யாது ஆக நினைத்தனை? எண்ணம் இலாய்?

ஆதாரம் நினக்கு இனி யார் உளரோ? - 3511

   அறிவற்றவனே பிழை செய்துவிட்டாய்! பொிய உலகினுக்குத் தாய் போன்றவளாகிய சீதையை மனதில் கொண்டு நீ இந்த இழிந்த நிலையை நினைத்தாய்? சிந்தனையில்லாதவனே, இனி உனக்குப் பற்றுக்கோடாய் நின்று காப்பாற்றுபவர்கள் யாரும் இல்லை.

'உய்யாமல் மலைந்து, உமர் ஆர் உயிரை

மெய்யாக இராமன் விருந்திடவே,

கை ஆர முகந்து கொடு, அந்தகனார்,

ஐயா! புதிது உண்டது அறிந்திலையோ? 3512

       உம் இனத்தவராகிய கரதூடணர் முதலோர் ஒருவரும் பிழைக்காதவாறு, இராமன் போர் செய்துஅவர்களின் அரிய உயிரை மெய்யாகவே விருந்துணவாக அளிக்க எமன் வாரிக்கொண்டு புதிதாக உண்ட செய்தியை அவர்கள் தலைவனான நீ அறியவில்லையோ

சாடாயு உரையாடல்

'கொடு வெங் கரி கொல்லிய வந்ததன்மேல்

விடும் உண்டை கடாவ விரும்பினையே?

அடும் என்பது உணர்ந்திலை ஆயினும், வன்

கடு உண்டு, உயிரின் நிலை காணுதியால்! - 3513

உன் செயல் சினம் கொண்டு கொல்ல வரும் யானையின் மீது மண்ணுருண்டையை வீசுவது போலவும், வலிமையான கொல்லும் தன்மை உள்ள நஞ்சு கொல்லும் என்பதை உணராமல் அதை உண்டு உயிர் பிழைக்கலாம் என எண்ணுவது போலவும் உள்ளது

'எல்லா உலகங்களும், இந்திரனும்,

அல்லாதவர் மூவரும், அந்தகனும்,

புல்வாய் புலி கண்டதுபோல்வர் அலால்;

வில்லாளனை வெல்லும் மிடுக்கு உளரோ? - 3514

      மூன்று உலகத்தில் உள்ளவர்களனைவரும், அவர்களுக்குத் தலைவனான இந்திரனும், அவனல்லாத அயன், அரி, அரன் என்ற மூவரும் எமனும் இராமனையும், இலக்குவனையும் கண்டால் புல் தின்னும் மான் புலியைக் கண்டு அஞ்சுவது போல அஞ்சுவார்களே அல்லாமல் அந்த வில்வீரனான இராமனை வெல்லும் வல்லமை உடையவரோ.

'இம்மைக்கு, உறவோடும் இறந்தழியும்

வெம்மைத் தொழில், இங்கு, இதன்மேல் இலையால்;

அம்மைக்கு, அரு மா நரகம் தருமால்;

எம்மைக்கு இதம் ஆக இது எண்ணினை, நீ? - 3515

   இப்பிறவியில் உறவினருடன் இறந்துபடவும் மறுமையில் பொறுத்தற்கரிய நரகினை அடையவும் உரிய பிறர் மனை நயத்தலாகிய இத் தீச் செயலை எப்பிறவிக்கு நன்மை தரும் எனக் கருதி நீ செய்தாய்? 

'முத் தேவரின் மூல முதற் பொருள் ஆம்

அத் தேவர் இம் மானிடர்; ஆதலினால்,

எத் தேவரோடு எண்ணுவது? எண்ணம் இலாய்!

பித்தேறினை ஆதல் பிழைத்தனையால். - 3516

   இம்மானிடர் முத்தேவருக்கும் மூலமுதலானவர். ஆதலால் இவரை எத் தேவரொடு எண்ணுவது. நீ பித்தேறினை ஆதலால் இக்குற்றம் செய்தாய்.

'புரம் பற்றிய போர் விடையோன் அருளால்

வரம் பெற்றவும், மற்று உள விஞ்சைகளும்,

உரம் பெற்றன ஆவன-உண்மையினோன்

சரம் பற்றிய சாபம் விடும் தனையே. - 3517

      திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளின் அருளால் நீ பெற்றுள்ள வரமும் மற்றும் உன்னிடம் உள்ள மாயப் போர் ஆற்றலும் உண்மையினோன் வில்லில் அம்பு கோத்து விடும் அளவே நிற்கும்,

'வான் ஆள்பவன் மைந்தன், வளைத்த விலான்,

தானே வரின், நின்று தடுப்பு அரிதால்;

நானே அவண் உய்ப்பென், இந் நன்னுதலை;

போ, நீ கடிது' என்று புகன்றிடலும். -3518

விண்ணுலகில் சிறப்புடன் வாழும் தசரதன் மைந்தன் இராமன் வந்தால் நீ தப்ப முடியாது எனவே இப்பொழுதே சீதையை என்னிடம் விட்டு விட்டு, நீ போய் விடு; நான் அவளை முன்பு இருந்த இடத்திலேயே சேர்த்து விடுகிறேன் என இராவணனிடம் சடாயு கூறினான்.

இராவணன் மறுப்புரை

கேட்டான் நிருதர்க்கு இறை, கேழ் கிளர் தன்

வாள் தாரை நெருப்பு உக, வாய் மடியா,

'ஓட்டாய்; இனி நீ உரை செய்குநரைக்

காட்டாய் கடிது' என்று, கனன்று உரையா. -3519

      சடாயுவின் சொல் கேட்ட இராவணன் கண்கள் சிவந்து வாய் மடித்து, 'இனி மேல் பேச வேண்டாம். நீ கூறிவர்களைக் காட்டு' என்று சினந்து சொன்னான். 

'வரும் புண்டரம்! வாளி உன் மார்பு உருவிப்

பெரும் புண் திறவாவகை பேருதி நீ;

இரும்பு உண்ட நீர் மீளினும், என்னுழையின்

கரும்பு உண்ட சொல் மீள்கிலள்; காணுதியால்'. -3520

என்னை எதிர்த்து வரும் கழுகே உன் மார்பினை என் அம்பு ஊடுருவிப் பெரும் புண்ணை உண்டாக்குவதற்கு முன்பே நீ வேறோர் இடம் செல்க. நெருப்பில் காய்ந்த இரும்பு உட்கொண்ட நீர் மீண்டு வெளிப்பட்டாலும், கரும்பு போன்ற இனிய சொல்லுடைய இவள் என்னிடமிருந்து மீண்டுவர மாட்டாள் என நீ அறிவாயாக.

அஞ்சிய சீதையிடம் சடாயு அஞ்சவேண்டாம் என்றான்

என்னும் அளவில், பயம் முன்னின் இரட்டி எய்த,

அன்னம் அயர்கின்றது நோக்கி, 'அரக்கன் ஆக்கை

சின்னம் உறும் இப்பொழுதே; 'சிலை ஏந்தி, நங்கள்

மன்னன் மகன் வந்திலன்' என்று, வருந்தல்; அன்னை! -3521

     இராவணன் விடேன் என்று கூறியதைக் கேட்ட சீதை முன்பைவிட இரு மடங்கு வருந்துவதைப் பார்த்த சடாயு. இப்பொழுதே அரக்கன் உடல் துண்டுகள் ஆகும். மன்னன் மகன் வில்லேந்திக்காக்க வரவில்லையே என்று வருந்தாதே என ஆறுதல் கூறினான்.

'முத்து உக்கனபோல் முகத்து ஆலி முலைக்கண் வீழ,

தத்துற்று, அயரேல்; தலை, தால பலத்தின் ஏலும்

கொத்து ஒப்பன கொண்டு, இவன் கொண்டன என்ற ஆசை

பத்திற்கும் இன்றே பலி ஈவது பார்த்தி' என்றான். - 3522

      சீதை அழுது கணணீர் விடுதல் கண்ட சடாயு, 'நீ மனந்தளராதே பனம்பழக் கொத்துப் போல் உள்ள இராவணனின் பத்துத் தலைகளையும் அவன் வெற்றி பெற்றதாகக் கூறப்படுகின்ற பத்துத் திசைகளுக்கும் நான் பலியாகக் கொடுக்கப் போவதைப் பார்ப்பாயாக' என ஆறுதல்கூறினான். 

சடாயு - இராவணன் போர்

இடிப்பு ஒத்த முழக்கின், இருஞ் சிறை வீசி எற்றி,

முடிப் பத்திகளைப் படி இட்டு, முழங்கு துண்டம்

கடிப்பக் கடிது உற்றவன், காண்தகும் நீண்ட வீணைக்

கொடிப் பற்றி ஒடித்து, உயர் வானவர் ஆசி கொண்டான். - 3523

     சடாயு இடியோசை போன்ற முழக்கத்துடன் பெரிய சிறகுகளை வீசி மோதி, இராவணனின் தலையில் அணிந்த முடிவரிசைகளை நிலத்தில் தள்ளவிட்டு முழக்கம் செய்து அலகால் கொத்த விரைந்தான். அவனது வீணைக் கொடியை ஒடித்து வானவர் ஆசி கொண்டான் சடாயு.

அக் காலை, அரக்கன், அரக்கு உருக்கு அன்ன கண்ணன்,

எக் காலமும், இன்னது ஓர் ஈடு அழிவுற்றிலாதான்

நக்கான், உலகு ஏழும் நடுங்கிட, நாகம் அன்ன

கைக் கார் முகத்தோடு கடைப் புருவம் குனித்தான். - 3524

   இதற்கு முன் எப்போதும் இது போல் தன் பெருமை கெடாத இராவணன் கோபம் கொண்டு சிரித்துத் தன் வில்லையும் புருவத்தையும் வளைத்தான்.

சண்டப் பிறை வாள் எயிற்றான் சர தாரை மாரி

மண்ட, சிறகால் அடித்தான் சில; வள் உகீரால்

கண்டப்படுத்தான் சில; காலனும் காண உட்கும்

துண்டப் படையால், சிலை துண்ட துண்டங்கள் கண்டான். - 3525

     பிறை நிலவு போன்ற பற்களை உடைய இராவணன் தன்மீது பொழிந்த அம்பு மழையைச் சடாயு சிறகாலும், கூர்மையான கால்நகத்தாலும்,இராவணனது வில்லைத் தன் மூக்காலும் துண்டுதுண்டுகளாக ஆக்கினான்.

மீட்டும் அணுகா,-நெடு வெங் கண் அனந்த நாகம்

வாட்டும் கலுழன் என, வன் தலை பத்தின் மீதும்

நீட்டும் நெடு மூக்கு எனும் நேமியன் - சேம வில் கால்

கோட்டும் அளவில், மணிக் குண்டலம் கொண்டு எழுந்தான். -3526

பாம்புகளை வாட்டும் கருடன் போல் வந்து இராவணனது தலையைத் தரையில் உருட்டத் தன் நெடு மூக்கு எனும் சக்கரப்படையை நீட்டிய சடாயு,அவன் சேம வில்லை வளைப்பதற்குள் விரைந்து வந்து அவன் காதில் உள்ள குண்டலங்களைப் பறித்துச்சென்றான்

எழுந்தான் தட மார்பினில், ஏழினொடு ஏழு வாளி

அழுந்தாது கழன்றிடப் பெய்து, எடுத்து ஆர்த்து, அரக்கன்

பொழிந்தான், புகர் வாளிகள் மீளவும்; 'போர்ச் சடாயு

விழுந்தான்' என, அஞ்சினர்,விண்ணவர் வெய்து உயிர்த்தார். 3527

       தன் குண்டலங்களைப் பறித்து எழுந்த சடாயுவின் மார்பில் பதினான்கு அம்புகளை எய்தான் இராவணன், அந்த அம்புகள் சடாயுவின் மார்பைத் துளைக்காமல் கழன்று வீழ்ந்தன. மேலும் அம்புகளைச் சடாயு மீது சொரிந்ததைக் கண்டு சடாயு விழுந்தான் என எண்ணித் தேவர்கள் பெருமூச்சு விட்டனர்.

புண்ணின் புது நீர் பொழியப் பொலி புள்ளின் வேந்தன்,

மண்ணில், கரனே முதலோர் உதிரத்தின் வாரிக்-

கண்ணில் கடல் என்று கவர்ந்தது கான்று, மீள

விண்ணில் பொலிகின்றது ஓர் வெண் நிற மேகம் ஒத்தான். -3528

புண்ணிலிருந்து புதிய இரத்தம் வழிய கழுகின் வேந்தனான சடாயு, தரையில் கரன் முதலிய அரக்கரின் இரத்த வெள்ளத்தைக் கடல் என விரும்பி உண்டதுபோல காட்சியளித்தான். ஒரு வெண்ணிற மேகம் போலக் காட்சியளித்தான் சடாயு.

ஒத்தான் உடனே உயிர்த்தான்; உருத்தான்; அவன் தோள்

பத்தோடு பத்தின் நெடும் பத்தியில் தத்தி, மூக்கால்

கொத்தா, நகத்தால் குடையா, சிறையால் புடையா,

முத்து ஆர மார்பில் கவசத்தையும் மூட்டு அறுத்தான். -3529

அம்புபட்ட சடாயு, உயிர்த்து, உருத்து, இருபது தோள்களில் ஏறி,கொத்திக் குடைந்து புடைத்து அவனது மார்பில் விளங்குகிற கவசத்தின் மூட்டுவாய் அறும்படி செய்தான் என்க.

அறுத்தானை, அரக்கனும், ஐம்பதொடு ஐம்பது அம்பு

செறித்தான் தட மார்பில்; செறித்தலும், தேவர் அஞ்சி

வெறித்தார்; வெறியாமுன், இராவணன் வில்லைப் பல்லால்

பறித்தான் பறவைக்கு இறை,விண்ணவர் பண்ணை ஆர்ப்ப. -3530

   தன் கவசத்தைப் பிளந்த சடாயுவின் மீது இராவணன் நூறு அம்புகளை எய்தான். அது கண்டு வானவர் திகைத்தனர். உடனே சடாயு பாய்ந்து தேவர்கள் மகிழ்ச்சிப் பேரொலி செய்ய அவனது வில்லைப் பறித்தான்.

எல் இட்ட வெள்ளிக் கயிலைப் பொருப்பு, ஈசனோடும்,

மல் இட்ட தோளால் எடுத்தான் சிலை வாயின் வாங்கி,

வில் இட்டு உயர்ந்த நெடு மேகம் எனப் பொலிந்தான் -

சொல் இட்டு அவன் தோள்வலி, யார்உளர் சொல்லவல்லார்?-3531

      வெள்ளியங்கிரியினை விடையின் பாகனோடு அள்ளிய தோள்வலி உடைய இராவணனது வில்லைப் பறித்து வாயில் கவ்விக்கொண்டு வானில் நீண்ட மேகம் போல் விளங்கிய சடாயுவின் தோளாற்றலைச் சொற்களால் யாரால் சொல்ல முடியும்? முடியாது.

மீளா நிறத்து ஆயிரங் கண்ணவன் விண்ணின் ஓட,

வாளால் ஒறுத்தான் சிலை வாயிடை நின்றும் வாங்கி,

தாளால் இறுத்தான் - தழல் வண்ணன் தடக் கை வில்லைத்

தோளால் இறுத்தான் துணைத் தாதைதன் அன்பின் தோழன். -3532

     இராவணனது வில்லை அலகால் கௌவிப் பிடுங்கிய சடாயு அதைத் தன் தாளால் இறுத்தான் என்க. சிவன் வில்லைக் கையால் ஒடித்தவனாகிய இராமனுக்குத் துணைவனும், தசரதன் தோழனும் ஆகிய சடாயு இராவணன் வில்லைக் காலால் ஒடித்தான் 

போர் - தொடர்ச்சி

ஞாலம் படுப்பான், தனது ஆற்றலுக்கு ஏற்ற நல் வில்

மூலம் ஒடிப்புண்டது கண்டு, முனிந்த நெஞ்சன்,

ஆலம் மிடற்றான் புரம் அட்டது ஓர் அம்பு போலும்

சூலம் எடுத்து ஆர்த்து எறிந்தான், மறம் தோற்றிலாதான். -3533

     இராவணன் தனது வலிய வில் சடாயுவால் ஒடிக்கப்பட்டது. கண்டு முனிவு கொண்டு, நீலகண்டன் முப்புரம் எரிக்கக் கைக்கொண்ட திருமாலாகிய அம்பு போன்ற சூலத்தை எடுத்துச் சடாயுவின் மீது எறிந்தான். 

'ஆற்றான் இவன் என்று உணராது, எனது ஆற்றல் காண்' என்று

ஏற்றான் எருவைக்கு இறை, முத்தலை எஃகம், மார்பில்;

மேல் தான் இது செய்பவர் யார்?' என, விண்ணுளோர்கள்

தோற்றாது நின்றார், தம் தோள்புடை கொட்டி ஆர்த்தார். -3534

சடாயு இராவணனை நோக்கி 'இவன் நம் சூலத்துக்கு ஆற்றான்' என எண்ணாதே என் வலிமையைக் காண்பாயாக என்று சொல்லி அவன் வீசிய முத்தலைச் சூலத்தை மார்பில் ஏற்றுக் கொண்டான். அது கண்டு இவ்வீரச் செயல் செய்பவர் யாருளர் எனத் தேவர்கள் மகிழ்ந்து தோள் கொட்டிப் பேரொலி செய்தனர். 

பொன் நோக்கியர்தம் புலன் நோக்கிய புன்கணோரும்

இன் நோக்கியர் இல் வழி எய்திய நல் விருந்தும்,

தன் நோக்கிய நெஞ்சுடை யோகியர் தம்மைச் சார்ந்த

மென் நோக்கியர் நோக்கமும், ஆம் என மீண்டது அவ் வேல். - 3535

        பொருளை நோக்கி அன்பு செலுத்துகின்ற பொருட் பெண்களிடம் ஐம்புல இன்பத்தைத் துய்க்கக் கருதிச் சென்ற வறியவரும், இனிய பார்வையுடைய கணவன் மனைவியர் இல்லாத வீட்டிற்குச் சென்ற நல்ல விருந்தினரும், இறைவனையே நோக்கிய உள்ளத்துடைய யோகியரைச் சார்ந்த மெல்லிய நோக்கமுடைய பெண்களின் காதல் நோக்கமும் உவமையாகச் சொல்லுமாறு அச்சூலவேல் சடாயுவின் மார்பில் நுழையும் வலிமையின்றித் திரும்பியது.

வேகமுடன், வேல இழந்தான் படை வேறு எடாமுன்,

மாகம் மறையும்படி நீண்ட வயங்கு மான் தேர்ப்

பாகம் தலையைப் பறித்து, படர் கற்பினாள்பால்

மோகம் படைத்தான் உளைவு எய்த, முகத்து எறிந்தான். -3536

          வேலை வெறுமனே போக்கிய இராவணன் வேறு படை  எடுக்கும் முன் சடாயு பாய்ந்து தாக்கித் தேர்ப்பாகனது தலையைக் கொய்து அதை அவன் முகத்தில் வீசினான். 

எறிந்தான் தனை நோக்கி, இராவணன், நெஞ்சின் ஆற்றல்

அறிந்தான்; முனிந்து, ஆண்டது ஓர் ஆடகத் தண்டு வாங்கி,

பொறிந்தாங்கு எரியின் சிகை பொங்கி எழ, புடைத்தான்;

மறிந்தான் எருவைக்கு இறை, மால் வரை போல மண்மேல். 3537

       தேர்ப்பாகனது தலையைப் பறித்துத் தன் முகத்தின் மீது எறிந்த
சடாயுவினது மன வலிமையை இராவணன் அறிந்து சினந்து பொன்னால்
 ஆகிய பெரிய கதையைக் கையில் கொண்டு நெருப்புப்பொறி பறக்க அடித்தான். அதனால் சடாயு பெரிய மலை போல் மண்மீது விழுந்தான்.

மண்மேல் விழுந்தான் விழலோடும், வயங்கு மான் தேர்

கண்மேல் ஒளியும் தொடராவகை, தான் கடாவி,

விண்மேல் எழுந்தான்; எழ மெல்லியலாளும், வெந் தீ

புண்மேல் நுழையத் துடிக்கின்றனள்போல், புரண்டாள். 3538

இராவணனிடம் அடி வாங்கிய சடாயு நிலத்தில் விழுந்தவுடன் அவன் தன் தேரை விரைவாக வானத்தில் செலுத்திக் கொண்டு இலங்கையை நோக்கிப் போகப் புறப்பட்டான். அது கண்டு சீதைபுண்ணில் தீ நுழைந்தது போல் துன்புற்று வருந்திப் புரண்டாள்.

கொழுந்தே அனையாள் குழைந்து ஏங்கிய கொள்கை கண்டான்;

'அழுந்தேல் அவலத்திடை; அஞ்சலை அன்னம்!' என்னா,

எழுந்தான்; உயிர்த்தான்; 'அட! எங்கு இனிப் போவது?' என்னா,

விழுந்தான் அவன் தேர் மிசை, விண்ணவர் பண்ணை ஆர்ப்ப. -3539

     மென்மைத் தன்மை உடைய கொழுந்து போன்ற சீதை வருந்துதலைக் கண்ட சடாயு 'அன்னம், அஞ்சி வருந்தாதே' என ஆறுதல் கூறி இராவணனைப் பார்த்து 'அடே நீ எங்கே தப்பிச்செல்வது' என்று கூறி, விண்ணவர் பண்ணை ஆர்ப்பத் தேர்மீது பாய்ந்தான். 

பாய்ந்தான்; அவன் பல் மணித் தண்டு பறித்து எறிந்தான்;

எய்ந்து ஆர் கதித் தேர்ப் பரி எட்டினொடு எட்டும் எஞ்சித்

தீய்ந்து ஆசு அற வீசி, அத் திண் திறல் துண்ட வாளால்

காய்ந்தான்; கவர்ந்தான் உயிர்; காலனும் கைவிதிர்த்தான். -3540

    இராவணன் மேல் பாய்ந்த சடாயு தன்னைத் தாக்கிய தண்டாயுதத்தைப் பறித்து எறிந்து, மிக்க சினத்துடன் இராவணனது தேரில் பூட்டப்பட்டிருந்த பதினாறு குதிரைகளையும் அலகு என்ற வாளால் அழித்தான். அது கண்டு எமனும் அச்சத்தால் நடுங்கினான்.

திண் தேர் அழித்து, ஆங்கு அவன் திண் புறம் சேர்ந்த தூணி

விண்தான் மறைப்பச் செறிகின்றன, வில் இலாமை,

மண்டு ஆர் அமர்தான் வழங்காமையின், வச்சைமாக்கள்

பண்டாரம் ஒக்கின்றன, வள் உகிரால் பறித்தான். -3541

       சடாயு இராவணனது தேரை அழித்து, அவனது முதுகுப் புறத்தில் கட்டியுள்ள அம்பாறத் தூணியையும் பறித்து எறிந்தான். கொடைக் குணமற்ற உலோபிகளின் கருவூலத்தில் பணம் இருந்தும் பிறர்க்குப் பயன்படாதவாறு போல இராவணன் கையில் வில் இலாமையால் அவனது அம்பறாத் தூணியில் அம்பு இருந்தும் அது பயன்படவில்லை

மாச் சிச்சிரல் பாய்ந்தென, மார்பினும் தோள்கள்மேலும்

ஓச்சி, சிறகால் புடைத்தான்; உலையா விழுந்து

மூச்சித்த இராவணனும் முடி சாய்ந்து இருந்தான்;

'போச்சு; இத்தனை போலும் நின் ஆற்றல்?' எனப் புகன்றான். -3542

          மாச்சிரல் பாய்வது போல் பாய்ந்து சடாயு இராவணனது மார்பிலும் தோளிலும் தன் சிறகால் ஓங்கிப் புடைத்தான். அதனால் இராவணன் மூச்சற்றுத் தலை சாய்த்து மயங்கினான்; அது கண்ட சடாயு 'இது தானா உன் வலிமை' என இகழ்ந்து கூறினான். 

சடாயு வீழ்தல்

அவ் வேலையினே முனிந்தான்; முனிந்து ஆற்றலன்; அவ்

வெவ் வேல் அரக்கன் விடல் ஆம் படை வேறு காணான்;

'இவ் வேலையினே, இவன் இன் உயிர் உண்பென்' என்னா,

செவ்வே, பிழையா நெடு வாள் உறை தீர்த்து, எறிந்தான். -3543

        அப்போது அந்தக் கொடிய வேலைத் தாங்கியிருந்த இராவணன், சடாயு சொன்ன சொல்லைத் தாங்கமாட்டாதவனாக கோபம்கொண்டான். அப்போது சடாயுவைத் தாக்குவதற்கு வேறு ஆயுதங்கள் இல்லாததால் தப்பாமல் தாக்கக்கூடிய நீண்ட வாளை உறையிலிருந்து எடுத்து இக்கணத்திலே இவனுடைய இனிய உயிரை உண்பேன் என்று சடாயுவுக்கு நேராக வீசினானன். சந்திரகாசம் என்ற வாள் கைலாயத்தைத்தூக்க முயன்ற சிவன் வழங்கியது.

வலியின் தலை தோற்றிலன்; மாற்ற அருந் தெய்வ வாளால்

நலியும் தலை என்றது அன்றியும், வாழ்க்கை நாளும்

மெலியும் கடை சென்றுளது; ஆகலின், விண்ணின் வேந்தன்

குலிசம் எறியச் சிறை அற்றது ஓர் குன்றின், வீழ்ந்தான். - 3544

        சடாயு தன் வலிமையில் இராவணனுக்குத் தோற்றுவிடவில்லை. யாராலும் மாற்ற இயலாத தெய்வத்தன்மை வாய்ந்த சிவன் வாளால் எத்தகு வலிமையுடையவரும் அழிவர். சடாயுவை அழித்தது வாளின் சிறப்பே அன்றி இராவணனின் வலிமை அல்ல. மேலும் சடாயுவின் வயது எண்ணரும் பருவங்கள் கடந்து முதிர்ந்து முடியும் காலம் நெருங்கி விட்டதாலும், விண்ணுலகத்திற்கு வேந்தனான இந்திரன் வச்சிரப்படை வீசச் சிறகுகள் அற்ற ஒரு மலைபோல் வீழ்ந்தான்.

2 கருத்துகள்:

  1. இறகு வெட்டப்பட்ட இடம்

    பதிலளிநீக்கு
  2. https://solvanam.com/2017/12/26/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/

    பதிலளிநீக்கு