வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 5 ஜூலை, 2021

இன்னா செய்தவனுக்கும் இனிய செய்தவள் - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 10

 

Kurunthogai -10

தலைவனின் பெருமைக்கும், மகிழ்ச்சிக்கும் காரணமானவள் தலைவி. இருந்தாலும் தலைவன் தலைவி வருந்துமாறு அவளைப் பிரிந்து பரத்தையரிடம் சென்று அவர்கள் செய்த அடையாளங்களுடன் வீடு திரும்புகிறான். இச்செயல் காஞ்சி ஊரன் கொடுமை என சுட்டப்படுகிறது. தலைவனின் இச்செயலை பிறருக்குத் தெரியாதவாறு மறைத்த தலைவி, தலைவனே தன் செயலுக்கு வெட்கப்படுமாறு தானே முன்சென்று அவனை வரவேற்கிறாள். கொடுமையை மறைத்தலும், மறத்தலும் தாயின் செயல் என்பதால் தலைவியின் இச்செயலைக் கண்ட தோழி தலைவியைத் தாய் என்று பாராட்டுகிறாள்.

இன்னா செய்த தலைவனுக்கும் இனிய செய்த தலைவியின் பண்பை இன்று நோக்கும்போது இது ஆணாதிக்கம் என்றோ, பெண்ணடிமைத்தனம் என்றோ தோன்றலாம். 

என்றாலும் இப்பாடல் அக்கால மக்களின் பண்பட்ட வாழ்வியலைப் புலப்படுத்துகிறது. 

யாயா கியளே விழவுமுத லாட்டி

பயறுபோ லிணர பைந்தாது படீஇயர்

உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்

காஞ்சி யூரன் கொடுமை

கரந்தன ளாகலின் நாணிய வருமே.

- குறுந்தொகை - 10

துறை - தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது.

- ஓரம்போகியார்.  

தலைவியே தலைவன் செல்வம் பெற்று விழாக்கோலத்துடன் மகிழ்ந்து வாழக் காரணமானவள்.

மணம்வீசும் மலர்களைக்கொண்ட காஞ்சி மரத்தின் பயிற்றங்காய் போன்ற  பூங்கொத்துகளில் உள்ள மகரந்தத் துகள்கள் உழவர்கள் மீதும் அவர்கள் ஓட்டும் பகட்டின் மீதும் விழும். இத்தகைய வளம்பொருந்திய மருத நிலத் தலைவனுடைய கொடுமையை நாம் அறியாதவாறு மறைத்தாள் தலைவி. மேலும் தலைவன் தன் தவறை உணருமாறு தானே எதிர்சென்று அவனை எதிர்கொண்டாள்.

பாடல்வழியாக,

உழவர்களின் மீது காஞ்சியின் துகள் படிந்திருப்பதுபோல தலைவன் பரத்தையரிடமிருந்து மீண்டுவந்தமை அவனது உடலில் தோன்றும் அடையாளங்கள் காட்டும்

உள்ளுறை

உழவன் - தலைவன்

உழுபகடு - பாணன்

உழுநிலம் - சேரி

காஞ்சி மரம் - பரத்தை

உழுதொழில் - பரத்தையருடன் இன்பம் நுகர்தல்

தாது- பரத்தையர் செய்த குறி

உழவர் பகட்டுடன் வீடு திரும்புதல் - தலைவன் பாணனுடன் வீடு திரும்புதல்

சொற்பொருள் விளக்கம்

பயறு - பயிற்றங்காய்

இணர -  பூங்கொத்துகள்

ஊரன் - மருதநிலத் தலைவன்

நாணிய - வெட்கப்பட

முதலாட்டி - முதன்மையானவள்

தாது - மகரந்தத் துகள்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக