வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 6 ஜூலை, 2021

நெஞ்சே எழு - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 11

குறுந்தொகை - 11


திருமணத்துக்கு இடைப்பட்ட நாளில் தலைவியைப் பிரிந்தான் தலைவன். அவன் நினைவால் வருந்திய தலைவி தன் நெஞ்சிடம் பேசுவதாக இப்பாடல் அமைகிறது. பாலைத் திணை என்பதால் பிரிவும் பிரிவின் நிமித்தமும் உரிப்பொருளாகிறது.

நெஞ்சே அவர் பிரிவால் வாடியது போதும் அவரை நாடிச் செல்வோம். 

அவர் எங்கிருந்தாலும் செல்வோம்.. 

அவர் வேறு மொழி பேசும் நாட்டுக்குச் சென்றாலும் அங்கும் 

செல்வோம் எனத் தன் நெஞ்சை எழு.. அழைக்கிறாள்.

பாலை

கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்

பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி,

ஈங்கு இவண் உறைதலும் உய்குவம்; ஆங்கே

எழு, இனி-வாழி, என் நெஞ்சே!-முனாது,

குல்லைக் கண்ணி வடுகர் முனையது

வல் வேற் கட்டி நல் நாட்டு உம்பர்

மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்,

வழிபடல் சூழ்ந்திசின், அவருடை நாட்டே.

குறுந்தொகை - 11 

தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லுவாளாய்த் தோழி கேட்பச் சொல்லியது

பாடியவர் - மாமூலனார் பாடல்

தலைவி  தன் நெஞ்சோடு பேசிக்கொள்கிறாள்.

சங்கில் அறுத்த வளையல் என்  நழுவுகிகின்றன. 

நாள்தோறும் கண்கள் தூங்காமல் கண்ணீர் வடித்துப் புலம்புகின்றன. 

இப்படி இங்கு உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 

நெஞ்சே வா.. ஆங்கே செல்வோம். 

அவர் சென்ற நாட்டுக்கே செல்வோம். 

கட்டி அரசன் ஆளும் வடுகர் வேற்றுமொழி பேசும் நாடாயினும் செல்வோம்.

நெஞ்சே, வாழி, இனி எழுக..

தலைவனை நாடிச் செல்லும் உன்னைத் தொடர்ந்து நான் வரத் துணிந்துள்ளேன்.

சொற்பொருள் விளக்கம்

கோடு - சங்கு

புலம்பி - தனிமைத் துயரால் வருந்தி

குல்லை - கஞ்சங்குல்லை என்ற செடி

மொழி பெயர் தேயம் - வேற்று மொழி வழங்கும் நாடு

வடுகர் – குல்லை என்னும் பூவைக் குடியின் அடையாளப் பூவாகச் சூடிக்கொள்பவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக