வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 16 ஜூலை, 2021

அவர் பொய் சொல்ல மாட்டார் - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 21

குறுந்தொகை 21

ஆயிரம் பேருக்குப் போய் சொல்லித் திருமணம் செய்யவேண்டும் என்பதையே ஆயிரம் பொய் சொல்லித் திருமணம் செய்யவேண்டும் என மாற்றி வழங்கி வருகிறோம்.

அந்த அளவுக்குப் பொய்சொல்வதற்கு நாம் பல காரணங்களை 

உருவாக்கி வைத்திருக்கிறோம்.

காதலிக்கும் போது, அவள் பேசுவாள் அவன் கேட்பான்

திருமணத்திற்குப் பிறகு அவன் பேசுவான் அவள் கேட்பாள்

சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும் பேசுவார்கள் ஊரே 

கேட்கும் என நகைச்சுவையாகச் சொல்வதுண்டு.

பேசுவது என்பதும் கேட்பது என்பதும் 

உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம்.

ஒருவர் உடன் இருக்கும்போதே இதை அறியமுடியாது, 

ஒருவர் உடன் இல்லாதபோதும் அவர் வார்த்தைகளை மதிக்கிறோம், 

என்றால் அதுதான் உண்மையான நம்பிக்கையாகும்.

கார்காலத்தில்  திரும்பிவிடுவேன் என்று தலைவன் கூறிவிட்டுச் 

சென்றான். 

தலைவி அதனை உறுதியாக நம்பினாள். 

உண்மையான கார்காலம் வருகிறது. 

தோழி கார்காலம் வந்தும் அவர் திரும்பவில்லையே என்று சொல்லிக் 

கவலைப்படுகிறாள்.

தலைவியோ இது கார்காலம் அல்ல. இதுகார்காலமாக இருந்தால் 

அவர் வந்திருப்பார். 

அவர் பொய்சொல்ல மாட்டார் என்று சொல்கிறாள். 

தலைவனின் வார்த்தைகள் மீது தலைவி கொண்ட நம்பிக்கையை 

வெளிப்படுத்துவதாக இப்பாடல் அமைகிறது

மருதம்

வண்டு படத் ததைந்த கொடி இணர் இடையிடுபு,

பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்

கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக்

கானம், ''கார்'' எனக் கூறினும்,

யானோ தேறேன்; அவர் பொய் வழங்கலரே.

குறுந்தொகை 21

ஓதலாந்தையார் 

(தன் வரவுக்குரிய காலமாகத் தலைவன் குறித்துச் சென்ற கார்ப் பருவத்தைக் கண்டு தலைவி வருந்துவாள் என்று எண்ணிய தோழியை நோக்கித் தலைவி, “தலைவர் மெய்ம்யை உடையோராதலின், அவர் கூறிய பருவம் இஃதன்று” என்று கூறித்தான் ஆற்றி இருத்தலைப் புலப்படுத்தியது.)


கொன்றைப்பூ பூத்திருக்கிறது. வண்டுகள் மொய்க்கின்றன.

அது மகளிர் கூந்தலில் வைத்து ஒப்பனை செய்திருக்கும் பொன்னால் 

செய்யப்பட்ட அணிகலன் போலக் காணப்படுகிறது.

தோழி, நீ இதனைக் கார்காலம் எனக் கூறினாலும் நான் 

நம்பமாட்டேன். 

ஏனென்றால், அவர் பொய் சொல்லமாட்டார். 

இது கார்காலம் ஆயின் அவர் வந்திருப்பார் அல்லவா?

சொற்பொருள் விளக்கம்

பட - ஒலிக்க

ததைந்த - செறிந்த

இணர் - பூங்கொத்து

இழை - அணிகலன்

அவர் - தலைவர்

தேறேன்  - தெளியமாட்டேன்


தொடர்புடைய இடுகை 

திருமணம் தோன்றிய சூழல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக