வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 20 ஜூலை, 2021

எழு குளிறு மிதித்த ஒரு பழம் - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 24

 

குறுந்தொகை 24

வேப்பம்பூ பூத்துவிட்டது. 

தலைவன் வருவதாகச் சொல்லிச் சென்ற பருவம் வந்தும் 

தலைவியிடம் வரவில்லை. 

ஊர் பழி தூற்றுகிறது.

அவர் இல்லாமலும் இந்த வேனில் காலம் கழிந்து போய்விடுமோ? 

என்று வருந்துகிறாள் தலைவி, 

முல்லைத் திணை என்பதால் அதன் உரிப்பொருள் இருத்தலும் 

இருத்தல் நிமித்தமும் அல்லவா, 

அவர் வந்துவிடுவார் என்று தலைவி ஆற்றியிருக்கிறாள், 

முல்லை

கருங் கால் வேம்பின் ஒண் பூ யாணர்

என்னை இன்றியும் கழிவதுகொல்லோ?

ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து

எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக்

குழைய, கொடியோர் நாவே,

காதலர் அகல, கல்லென்றவ்வே.

குறுந்தொகை - 24 

பரணர் 

பருவம் கண்டு ஆற்றாளாகிய கிழத்தி உரைத்தது


கரிய தாளை உடைய வேப்ப மரத்தின் ஒள்ளிய பூவின் புதுவருவாயானது என்னுடைய தலைவன் இல்லாமலும் செல்வதுவோ? 

அயலாராகிய கொடிய மகளிருடைய நாக்குகள் என் காதலர் என்னை நீங்கிச் செல்ல,

ஆற்றங்கரையில் முளைத்து வளர்ந்த வெள்ளிய கொம்புகளை உடைய அத்தி மரத்தினது பழத்தை உண்ண விரும்பிய ஏழு நண்டுகளால் 

மிதிக்கப்பட்ட ஒற்றைப் பழமானது குழைவது போல நான் வருந்தும்படி அலர்கூறிக் கல்லென்று முழங்கின.

வேம்பு பூக்கும் இளவேனில் பருவம் தலைவன் வினைமுடிந்து வருவதாகச் சொல்லிச் சென்ற பருவமாகும்

அப்பருவம் வந்தும் தலைவன் வரவில்லை என்று  தலைவி வருந்தினாள்.

பிரிவுத் துயரால் மெலிந்தமையோடு ஏழு நண்டுகள் மிதித்த ஒரு பழம் போலக் கொடிய ஊரார் நாவினால் கூறும் அலர் மொழிகளால் தலைவி மேலும் வருந்தினாள்.

பழத்தின் அழகு சிதைய பல நண்டுகள் மிதித்தது போல தலைவனும் தலைவியின் நலம் சிதைய நீங்கினான் என்பது பாடலின் பொருளாகும்.

சொற்பொருள் விளக்கம்

அதவம் - அத்தி மரம்

குளிர் - நண்டு

கல் - ஒலிக்குறிப்பு

கொல் - இரக்கக் குறிப்பு


2 கருத்துகள்: