வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 11 ஜூலை, 2021

செங்காற் பல்லி - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 16

Kurunthogai 16
ஊருக்கே குறிசொல்லுமாம் பல்லி கழுநீர் பானையில் விழுமாம் 
துள்ளி என்று ஒரு பழமொழி உண்டு.  நற்றிணையில் தினைக் கதிர்களை உண்ணச் சென்ற காட்டுப் பன்றி 

தவறான திசையிலிருந்து பல்லி கத்தியதால் தனக்குத் துன்பம் வரும் என்று எண்ணி திரும்பியதாக ஒரு குறிப்பு உள்ளது. 

இயல்பாக பல்லி கத்துவது என்பது தன் துணையை அழைப்பதற்காகத் தான் என்பதை நாம் அறிவோம். 

பாலை நிலத்தில், பல்லி தன் துணையை அழைக்கும் ஒலியைக் கேட்கும் தலைவனுக்குத் தான் பிரிந்து வந்த தலைவியின் நினைவு வராதா எனத் தோழி கேட்பதாக இப்பாடல் அமைகிறது.

பாலைத் திணை என்பதால் பிரிவும் பிரிவின் நிமித்தமும் 

உரிப்பொருளாகிறது.

பாலை

உள்ளார் கொல்லோ-தோழி! கள்வர்

பொன்புனை பகழி செப்பம் கொண்மார்,

உகிர்நுதி புரட்டும் ஓசை போல,

செங்காற் பல்லி தன் துணை பயிரும்

அம்காற் கள்ளிஅம் காடு இறந்தோரே?

குறுந்தொகை - 16. 

தோழி கூற்று

பாலைபாடிய பெருங்கடுங்கோ பாடல்

பொருள்வயிற் பிரிந்தவிடத்துத் தலைமகள் ஆற்றாமை கண்டு, தோழி கூறியது.


தோழி தலைவர் சென்ற பாலை வழியில் ஆறலைக் கள்வர்கள், 

வழிச்செல்வோரை எய்தமையால் கூர் மழுங்கிய அம்புகளை 

கூர்மைப்படுத்திக்கொள்வர்.

அவ்வாறு கூர்மைப்படுத்தும் போது தம் விரல் நகங்களால் அந்த அம்புகளைப் புரட்டுவர். 

அவ்வாறு புரட்டும்போது தோன்றும் ஓசை போல அந்த நிலத்தில் வாழும் ஆண்பல்லி, தன்  பெண் பல்லியை அழைக்கும். 

அத்தகைய நிலம் அழகிய அடிகளைக் கொண்ட கள்ளிச் செடிகளால் நிறைந்திருக்கும். அப்பாலை வழியில் சென்ற தலைவர் நம்மை நினைக்கமாட்டாரா எனத் தோழி தலைவியிடம் கேட்கிறாள்.

ஆண் பல்லி தன் பெண் பல்லியை அழைப்தைப் பார்த்தோ, கேட்டோ 

தலைவனுக்குத் தலைவியின் நினைவு வரும் எனவும் அவன் விரைந்து வருவான் 

எனவும் தோழி தலைவிக்கு ஆறுதல் தெரிவிப்பதாக இப்பாடல் அமைகிறது.


சொற்பொருள் விளக்கம்


உள்ளுதல் - நினைத்தல்

பொன் - இரும்பு

பகழி - அம்பு

செப்பம் - கூர்மை

உகிர் - நகம்

பயிர்தல் - அழைத்தல்

இறத்தல் - நீங்குதல்


தொடர்புடைய இடுகை


சகுனம் பார்த்த பன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக