வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 10 ஜூலை, 2021

நாலூர் கோசர் நன்மொழி போல - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 15

 

குறுந்தொகை 15

தலைவி பெற்றோரைப் பிரிந்து தலைவனுடன் சென்றாள். 

அதைத் தோழி  செவிலிக்கும் செவிலி  நற்றாய்க்கும் அக்காதலைச் சொல்வதாக இப்பாடல் அமைகிறது. 

இவ்வாறு  சொல்வதும் சங்ககால மரபு. இதனை அறத்தொடு நிற்றல் என்று அழைப்பதுண்டு.

பாலை என்பதால் பிரிவும் பிரிவின் நிமித்தமும் உரிப்பொருளானது. இங்கு தலைவி தன் பெற்றோரைவிட்டுப் பிரிந்து தலைவனுடன் சென்றமை பேசப்படுகிறது.

பாலை

பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு

தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய

நால் ஊர்க் கோசர் நன்மொழி போல

வாயா கின்றே தோழி ஆய்கழல் 

சேயிலை வெள்வேல் விடலையொடு

தொகுவளை முன்கை மடந்தை நட்பே.

 

குறுந்தொகை - 15

பாடியவர் - ஓளவையார்.  

துறை - உடன்போயின பின்றை, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றாள். நிற்ப செவிலித்தாய், நற்றாய்க்கு அறத்தொடு நின்றது.

தோழி! அழகிய வீரக் கழலையும் செம்மையாகிய இலையை உடைய வெள்ளிய வேலையும் கொண்ட தலைவனோடு 

பல வளையல்களை அணிந்த நின்மகள் செய்த நட்பானது 

மிகப்பழைய ஆல மரத்தடியில் பொதுவிடத்தில் தங்கும் நான்கு ஊரில் உள்ள கோசரது நன்மையை உடைய மொழி உண்மையாவதைப் போல

முரசு முழங்கவும் சங்கு ஒலிக்கவும் மணம் செய்தலால் உண்மை ஆகியது என்று தலைவி தலைவனுடன் சென்றான் எனத் தோழி தன்னிடம் உரைத்ததை செவிலி நற்றாயிடம் உரைக்கிறாள்.

பறையும் சங்கும் மங்கல நாளில் முழங்குவன. பலர் கூடும் மன்றங்களும்,  

நாலூர் கோசர் நல்மொழி போல என்று குறிப்பிடுவதால் தலைவியைத் தலைவன் திருமணம் செய்துகொண்டான் என அறியமுடிகிறது.


தோழி என்பவள் செவிலியின் மகள் என்பதை நினைவில் கொள்வோம்.

சொற்பொருள் விளக்கம்

பணிலம் - சங்கு

பட - ஒலிக்க

இறைகொள்பு - தங்குதல்

தொன் மூதாலத்து - பழைய ஆலமரத்தில்

பொதியில் - பொது இடத்தில், அம்பலம்

நாலூர் கோசர் - நான்கு ஊர்களிலும் வாழ்ந்த கோசர் என்னும் பிரிவினர், ஒன்று மொழிக்கோசர், வாய்மொழிக்கோசர், எனவும் இவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். இதன் வழி இவர்கள் சொல் மாறாதது என்று உணரலாம்

விடலை - மறவன், பாலை நிலத் தலைவன்


தொடர்புடய இடுகை


அறத்தொடு நிற்றல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக