வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 19 ஜூலை, 2013

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.

(கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு)
முன்னுரை
காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
புதுக்கவிதைக்கான இலக்கணம்
·         புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’ எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்
·         பழையன கழிதலும் புதியன புகுதலும்
        வழுவல கால வகையினானே  என்று உரைத்தார் நன்னூலார்

இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவை எதுவுமில்லாத
கருத்துக்கள் தம்மைத் தாமே
ஆளக் கற்றுக்கொண்ட புதிய
மக்களாட்சி முறையே புதுக்கவிதை
எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைப்பார் கவிஞர் மு.மேத்தா.
புதுக்கவிதையின் தோற்றம்
­        புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படைக் காரணங்களாகும்.
·         ஆங்கிலப் புதுக்கவிஞர் எஸ்ரா பவுண்டு ‘புதிதாக்கு’ (Make It New) என ஒரு கட்டளைச் சொற்றொடரைப் பிறப்பித்தார்.
·         “சுவை புதிது பொருள்புதிது வளம்புதிது சொல்புதிது சோதிமிக்க நவகவிதை” என்றார் பாரதி.
Free Verse என்ற கவிதை அமைப்பும் ஆங்கிலத்தில் இருந்தது. பிரான்சின் போதலேர், ரிம்போ, மல்லார்மே, ஜெர்மனியின் ரில்கே, அமெரிக்காவின் வால்ட் விட்மன், இங்கிலாந்தின் எஸ்ரா பவுண்டு, T.S. எலியட் போன்றோரின் முயற்சிகளால் புதுக்கவிதை பிறந்தது. தமிழில் இம்முயற்சிகள் தொடங்கப்பட்ட போது முதலில் ‘வசன கவிதை’ என்றும் பின்னர் ‘சுயேச்சா கவிதை’ ‘லகு கவிதை’ ‘விடுநிலைப்பா’ என்றும், “கட்டிலடங்காக் கவிதை“ என்றும் அதன் பின்னர்ப் புதுக்கவிதை என்றும் வழங்கப்பட்டன.

புதுக்கவிதையின் வளர்ச்சி
வால்ட் விட்மனின் “புல்லின் இதழ்கள்” என்ற புதுக்கவிதையைப் படித்திருந்த பாரதி அதைப் போலத் தமிழிலும் புதுமை படைக்கவேண்டும் என்ற ஆர்வத்தால் காட்சிகள் என்ற தலைப்பில் புதுக்கவிதை எழுதினார்.  அதற்கு அவர் இட்ட பெயர் “வசன கவிதை“ என்பதாகும். பாரதி வழியில் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபலன்,வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன், போன்றோர் புதுக்கவிதைகளைப் படைத்து தமிழ்ப்புதுக்கவிதைகளை வளர்த்தனர்.

புதுக்கவிதை வளர்ந்த மூன்று காலகட்டங்கள்
1.        மணிக் கொடிக் காலம்
2.        எழுத்துக் காலம்
3.        வானம்பாடிக் காலம் ஆகிய காலகட்டங்களில் தோன்றிய தமிழ் இதழ்கள் புதுக்கவிதைத் துறைக்குப் பொலிவூட்டின

1.மணிக்கொடிக் காலம்
மணிக் கொடிக் காலத்தில் மணிக்கொடி என்ற இதழ் மட்டுமன்றி, சூறாவளி, காலமோகினி, கிராமஊழியன், சிவாஜிமலர், நவசக்தி, ஜெயபாரதி ஆகிய இதழ்கள் புதுக்கவிதைகளை வெளியிட்டுவந்தன.  இவற்றுள் மணிக்கொடி இதழ் முதலில் தோன்றியதால் இக்காலத்தை மணிக்கொடிக் காலம் என்று அழைத்தனர். இக்காலத்தில், புதுக்கவிதை முன்னோடிகளான ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபாலன், க.நாசுப்பிரமணியன், புதுமைப்பித்தன் போன்றோர் மணிக்கொடிகாலத்துக் கதாநாயகர்களாக விளங்கினர்.

 2.. எழுத்துக் காலம்
எழுத்து, சரஸ்வதி, இலக்கிய வட்டம், நடை, தாமரை, கசடதபற, போன்ற இதழ்கள் இக்காலகட்டத்தில் புதுக்கவிதையை வளர்த்தன.ந.பிச்சமூர்த்தி ஆரம்பித்து வைத்த புதுக்கவிதை இயக்கம், எழுத்து இதழில் தொடர்ந்தது. மயன், சிட்டி, வல்லிக்கண்ணன், ஆகியோர் ஒன்றுசேர்ந்து சிசுசெல்லப்பா,  க.நாசுப்பிரமணியன் போன்றோர் இக்காலத்துக்கு சிறப்பு சேர்த்தனர்

3.வானம்பாடிக் காலம்
வானம்பாடி,தீபம், கணையாழி, சதங்கை முதலிய இதழ்கள் இக்காலத்தில் புதுக்கவிதைக்கு முன்னுரிமை தந்து வெளியிட்டன. புவியரசு, ஞானி, முல்லைஆதவன், அக்கினிபுத்திரன், சிற்பி, கங்கை கொங்காண்டான், தமிழ்நாடன், சக்தி கனல், மு.மேத்தா, தமிழன்பன்,  ரவீந்திரன் முதலியோர் வானம்பாடிக் கவிஞர்களாவர்
                                   

        சில புதுக்கவிதைச் சான்றுகள்

  நல்ல காலம் வருகுது                                                               உன் கையிலா கடிகாரம்?
   நல்ல காலம் வருகுது                                                                 கடிகாரத்தின் கையில்
  தெருவிலே  நிற்கிறான்                                                                            நீ!
குடுகுடுப்பைக் காரன்!                                           


முடிவுரை
 மாறும் உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்குத் தக்க சான்றாக புதுக்கவிதை வளர்ச்சியைக் கூறலாம். மேற்கண்ட கட்டுரையின் வழியாக தமிழில் புதுக்கவிதையின் தோற்றத்தையும், அதன் வளர்ச்சியையும் நன்கு உணரலாம்.
மாதிரி வினாக்கள்

இரண்டு மதிப்பெண் வினா
1.        பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல எனக்கூறும் இலக்கண நூல் எது?
2.        புல்லின் இதழ்கள் என்ற கவிதைத் தொகுப்பை எழுதியவர் யார்?
ஐந்து மதிப்பெண் வினாக்கள்
3.        புதுக்கவிதைக்கான இலக்கண மரபுகள் யாவை?
4.        வானம்பாடிக் காலம் குறித்து எழுதுக.
பத்து மதிப்பெண் வினாக்கள்
5.        தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றம் வளர்ச்சி குறித்து ஒரு கட்டுரை வரைக.
6.        புதுக்கவிதையை வளர்த்த இதழ்களின் பணிகுறித்து எழுதுக.



தொடர்புடைய இடுகைகள்

வியாழன், 18 ஜூலை, 2013

மாணவர் படைப்பு


                       ஓவியம் வரைந்தவர் ச.பிரியா 
(கணினி அறிவியல் மூன்றாமாண்டு
கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு.)

திங்கள், 15 ஜூலை, 2013

இன்று மறைமலையடிகள் பிறந்தநாள்.

இன்று மறைமலையடிகள் பிறந்த நாளாகும். நான் கல்லூரியில் பயின்ற  காலத்தில் வேதாசலம் என்ற தன் பெயர் வடமொழிப் பெயர் என்பதால் அதனைத் தமிழில் மறைமலையடிகள் என்று மாற்றிக்கொண்டனர் என்ற செய்தி என்னைப் பெரிதும் கவர்ந்தது. மறைமலையடிகள் படைப்புகளை மேலும் படிக்கப் படிக்கத் தமிழ்மொழி மீது மேலும் காதல் பிறந்தது.

மறைமலை அடிகள் (ஜூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள். குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுட்பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர்.

பிறப்பு

மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம். இவர் 1876 சூலை 15 ஆம் நாள் மாலை 6.35க்குப் திருக்கழுக்குன்றத்திலே பிறந்தார். இவர் தந்தையார் சொக்கநாதர், தாயார் சின்னம்மையார். தந்தையார் நாகப்பட்டினத்தில் அறுவை மருத்துவராய் பணியாற்றி வந்தார். பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் சிவன் வேதாசலரையும் , அம்மை சொக்கம்மையையும் வேண்டி நோன்பிருந்து பிள்ளைப்பேறு பெற்றதால், தம் பிள்ளைக்கு வேதாசலம் என்று பெயரிட்டார். பின்னர்த் தனித்தமிழ்ப்பற்று காரணமாக 1916-ல் தம் பெயரை மறைமலை (வேதம் = மறை, அசலம் = மலை) என்று மாற்றிக்கொண்டார். அவர் தம்முடை பிள்ளைகள் திருநாவுக்கரசு,நீலாம்பிகை தவிர மற்றவர்களின் வடமொழிப்பெயர்களைத், திருஞான சம்பந்தம்: அறிவுத்தொடர்பு, மாணிக்க வாசகம் : மணிமொழி, சுந்தரமூர்த்தி: அழகுரு, , திரிபுரசுந்தரி : முந்நகரழகி எனத் தனித்தமிழாக்கினார்.

மறைமலைஅடிகள், நாகையில் வெசுலியன் தொண்டு நிறுவனக் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளியில் நான்காம் படிவம் வரை படித்தார். அவருடைய தந்தையாரின் மறைவு காரணமாக அவரால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை. ஆனால்,நாகையில் புத்தகக் கடை வைத்திருந்த தமிழ்ப்புலமை மிகுந்த நாராயணசாமிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். 'சைவ சித்தாந்த சண்டமாருதம்' என்று புகழ் பெற்றிருந்த சோமசுந்தர நாயக்கர் அவர்களிடம் சைவ சித்தாந்தம் கற்றார்.
சென்னைக்கு வந்த பின்னர்க் கிறித்தவக் கல்லூரியில் வீ.கோ.சூரியநாராயண சாத்திரியாருடன் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.1905 இல் சைவ சித்தாந்த மகா சமாசம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் மாநாட்டுத் தலைமையையும் ஏற்றார். பல ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியபின், பல்லாவரத்தில் இராமலிங்க வள்ளலாரின் கொள்கைப்படி22.04.1911-இல் “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” தொடங்கினார். பின்னர் தனித்தமிழ் ஈடுபாட்டால் அதனைப் “பொதுநிலைக் கழகம் “ எனப் பெயர் மாற்றினார். திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திப் பல நூல்களை வெளியிட்டார்.மணிமொழி நூல்நிலையம் என்னும் நூல்நிலையத்தை உருவாக்கினார்.
இவர் காலத்தில் பல புகழ் பெற்ற தமிழறிஞர்கள் வாழ்ந்தனர். மனோன்மணீயம் இயற்றிய சுந்தரனார், பெரும்புலவர் கதிரைவேலர், திரு. வி. கலியாணசுந்தரனார், நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், ‘தமிழ் தாத்தா’ உ. வே. சாமிநாதையர், தணிகைமணி வ.சு.செங்கல்வராயர், ரசிகமணி டி. கே. சிதம்பரநாதர், பேராசிரியர் ச. வையபுரியார், கோவை இராமலிங்கம், சுப்பிரமணிய பாரதியார், மீனாட்சி சுந்தரனார், பொத்தக வணிகரும் மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரனாரின் ஆசிரியரும் ஆன நாராயணசாமி, 'சைவசித்தாந்த சண்டமாருதம்' என்று புகழப்பட்ட சோமசுந்தர நாயகர், என்று பலர் வாழ்ந்த காலம்.

தனித்தமிழ் ஆர்வம்

  • சமயத்தொண்டுகள்
  • இந்தி எதிர்ப்பு

படைத்த நூல்கள்

  • பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் (1921)
  • மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை, இரு தொகுதிகள் (1933)
  • மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி (1927)
  • யோக நித்திரை: அறிதுயில் (1922)
  • தொலைவில் உணர்தல் (1935)
  • மரணத்தின்பின் மனிதர் நிலை (1911)
  • சாகுந்தல நாடகம் (சமசுகிருதத்தில் இருந்து மொழி பெயர்த்தது) (1907)
  • சாகுந்தல நாடக ஆராய்ச்சி (1934)
  • ஞானசாகரம் மாதிகை (1902)
  • Oriental Mystic Myna Bimonthly (1908-1909)
  • Ocean of wisdom, Bimonthly(1935)
  • Ancient and Modern Tamil Poets (1937)
  • முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் (1936)
  • முல்லைப்பாட்டு- ஆராய்ச்சியுரை (1903)
  • பட்டினப்பாலை-ஆராய்ச்சியுரை (1906)
  • சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் (1911)
  • முதற்குறள் வாத நிராகரணம் (1898)
  • திருக்குறள் ஆராய்ச்சி (1951)
  • முனிமொழிப்ப்ரகாசிகை (1899)
  • மறைமலையடிகள் பாமணிக் கோவை (பாடல்கள்) (1977)
  • அம்பிகாபதி அமராவதி (நாடகம்) (1954)
  • கோகிலாம்பாள் கடிதங்கள் (புதினம்) (1921)
  • குமுதவல்லி: அல்லது நாகநாட்டரசி (புதினம்) (1911)
  • மறைமலை அடிகள் கடிதங்கள் (1957)
  • அறிவுரைக் கொத்து (1921)
  • அறிவுரைக் கோவை (1971)
  • உரைமணிக் கோவை (1972)
  • கருத்தோவியம் (1976)
  • சிந்தனைக் கட்டுரைகள் (1908)
  • சிறுவற்கான செந்தமிழ் (1934)
  • இளைஞர்க்கான இன்றமிழ் (1957)
  • திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை (1900)
  • மாணிக்க வாசகர் மாட்சி (1935)
  • மாணிக்க வாசகர் வரலாறும் காலமும் (இரு தொகுதி) (1930)
  • மாணிக்க வாசகர் வரலாறு (1952)
  • சோமசுந்தரக் காஞ்சியாக்கம் (1901)
  • சோமசுந்தர நாயகர் வரலாறு (1957)
  • கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா (1968)
  • திருவாசக விரிவுரை (1940)
  • சித்தாந்த ஞான போதம், சதமணிக்கோவை குறிப்புரை (1898)
  • துகளறு போதம், உரை (1898)
  • வேதாந்த மத விசாரம் (1899)
  • வேத சிவாகமப் பிராமண்யம் (1900)
  • Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge (1940)
  • சைவ சித்தாந்த ஞானபோதம் (1906)
  • சிவஞான போத ஆராய்ச்சி (1958)
  • Can Hindi be a lingua Franca of India? (1969)
  • இந்தி பொது மொழியா ? (1937)
  • Tamilian and Aryan form of Marriage (1936)
  • தமிழ் நாட்டவரும், மேல்நாட்டவரும் (1936)
  • பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் (1958)
  • வேளாளர் நாகரிகம் (1923)
  • தமிழர் மதம் (1941)
  • பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் (1906)
ஆகிய 54 நூல்களை எழுதியுள்ளார்.


(தரவுகள் பெற்ற இடம் - தமிழ் விக்கிப்பீடியா (நன்றி))

ஞாயிறு, 7 ஜூலை, 2013

விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுவோர்?

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகென்று பெயருமிட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும் என்ற கண்ணதாசன் பாடல்தான் நினைவுக்கு வருகிறது..


விலை ஏற்றம் சில நன்மைகள்