
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
என்பர் வள்ளுவப் பெருந்தகை.
(வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.)
நாடு கொடுக்கும் வள்ளல்களைக் கொண்டிருப்பது சிறப்புதான்!
அதைவிட..
இரவலர் இல்லாத நாடாக அந்நாடு இருத்தல் மிகவும் சிறந்தது!
நாடு மக்களைத் தொழிலாளிகளாக மாற்றலாம்!
சோம்பேறிகளாக மாற்றக் கூடாது!
கொடை (இலவசம்) அளவு கடந்து போனால் மக்கள் தம் கடமை மறந்து போவார்கள்!
இதோ ஒரு கொடை வள்ளலும்.
கடமை மறந்தவர்களும்...
நள்ளி! வாழியோ நள்ளி! நள்ளென்
மாலை மருதம் பண்ணி காலை
கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி
வரவு எமர் மறந்தனர் – அது நீ
புரவுக் கடன் பூண்ட வண்மையானே
புறநானூறு -149
திணை – பாடாண்
துறை – இயன்மொழி
கண்டீரக் கோப்பெருநள்ளியை வன்பரணர் பாடியது.
காலையில் மருதப்பண்ணும்
மாலையில் செவ்வழிப்பண்ணும் பாடுதல் பாணர் வாழ்வியலாகும்.
பாணருக்கு வறுமை தோன்றாத வண்ணம் “நள்ளி“ கொடை கொடுத்தலால் அவர்கள் தம் கடமையை மறந்து...
மாலையில் மருதப்பண்ணும்
காலையில் செவ்வழிப்பண்ணும் வாசித்தனர். இசைநூல் முறைமையை மறந்தனர்.
பாணர்கள் இவ்வாறு தம் கடமையை மறந்ததற்குக் காரணம் நீதான் எனப் புலவர் நள்ளியைச் சுட்டுகிறார்.
நேரடியாகப் பார்த்தல் நள்ளியைக் குறை கூறுவது போல இருந்தாலும், நள்ளியின் கொடைத் தன்மையின் சிறப்பைப் போற்றுவதாகவே உள்ளது.
பாடல் வழியே
சங்ககாலத்தில் பாணர்கள் காலையில் மருதப்பண்ணும்
மாலையில் செவ்வழிப்பண்ணும் பாடுவர் என்ற மரபு புலனாகிறது.
மக்களின் உடல் உழைப்பை மன்னன் கொடை என்ற பெயரால் மறக்கச் செய்தான் என்ற கருத்தும் உற்றுநோக்கி அறியமுடிகிறது.




