Friday, June 10, 2011

இலவசங்கள் வேண்டாம் !!இலவசம் என்ற சொல்லைக் கேட்டாலே இப்போதெல்லாம் கோபம் தான் வருகிறது. பத்து ரூபாய் மதிப்புள்ள ஒருபொருளை ஒருவர் நமக்கு இலவசமாகத் தருகிறார் என்றால் அதில் அவருக்கு எவ்வளவு இலாபம் இருக்கிறது என்றே இப்பொதெல்லாம் மனம் கணக்குப்பார்க்கிறது.

அரிசி இலவசம்
குடிதண்ணீர் 30 ரூபாய்!

தொலைக்காட்சி இலவசம்
மின்சாரம் 3 மணிநேரம் வராது!

மடிகணினி இலவசம்
இணைய இணைப்பு 1000 ரூபாய்!

இப்படி இன்னும் இன்னும் பலநூறு நகைச்சுவைகள் நாளுக்கு நாள் நடைமுறைக்கு வருகின்றன.

உடல் ஊனமுற்றவர்களைக் கூட இப்போதெல்லாம் அப்படிக் கூறாமல் மாற்றுத்திறனாளிகள் என்று அழைத்துவரும் இக்காலத்தில் ஏன் அரசு இலவசம் என்ற பெயரில் மக்களை ஊனமாமுற்றவர்களாக்குகிறது என்று தான் தோன்றுகிறது.

ஒரு அரசு இலவசமாகக் கொடுக்கவேண்டியது கல்வியும், மருத்துவமும் தான்.

கல்வியை விலைக்கு வாங்கிய ஒருவன் அதனை சொந்தநாட்டில் மட்டும் தான் விற்பனை செய்யவேண்டும் என்று சொல்ல அந்த அரசுக்கு எப்படித் தகுதி இருக்கமுடியும்..?

இங்கு படித்தான் வெளிநாட்டுக்குப் போய் உழைத்துக்கொட்டுகிறான் என்று புலம்புவதில் ஏதாவது பொருளிருக்கிறதா?

மருத்துவக் கல்வியை பணம் கொட்டிப்படித்தவரால் எப்படி இலவசமருத்துவம் பார்க்க முடியும்.

சிந்தித்தால் கல்வியை மட்டும் இலவசமாகக் கொடுத்தால் போதும்.
கல்வியை இலவசமாகக் கொடுக்கமுடியுமா..?

அரிசியிலிருந்து...... ஏதேதோ இலவசமாக் கொடுக்கமுடிந்த அரசால் ஏன் கல்வியை மட்டும் இலவசமாகக் கொடுக்கமுடியாது..?

“பசியோடு இருப்பவனுக்கு மீனை உணவாகக் கொடுப்பதைவிட
மீன் பிடிப்பது எப்படி என்று சொல்லிக்கொடுப்பதே சிறந்தது“
என்பது சீனப்பழமொழி.

எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம் !!
கல்வியை மட்டும் இலவசமாகக் கொடுங்கள் எங்கள் தேவைகளை நாங்களே நிறைவு செய்துகொள்கிறோம் என்பதே மக்களின் நிலைப்பாடாக இருக்கிறது.

கல்வியையே விலைகொடுத்து வாங்கும் இன்றைய சூழலில்,
வேலையை எப்படி கல்வித்தகுதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கொடுக்கமுடியும்?
இன்றைய நிலையென்ன..?
பணம் கொடுத்தால்தான் வேலை, அரசியல்வாதிகளின் பரிந்துரையிருந்தால் தான் வேலை!

“வேலை வாய்ப்பு அலுவலகங்கள்“ என்ற பெயர்ப்பலகையைப் பார்த்தால் என் கண்ணுக்கு “வேலை ஏய்ப்பு அலுவலகங்கள்“ என்றே தெரிகிறது.

இலவசங்கள் எல்லாவற்றையும் நிறுத்தினால் மக்கள் மீது சுமத்தப்படும் வரி பாதிக்குப் பாதி குறையும்.


இன்று நேற்றல்ல சங்ககாலம் முதலாகவே இந்தச் சிக்கல் இருந்துவந்திருக்கிறது.

சங்கப்புறப்பாடல் ஒன்று...


முதியவர்கள் இறந்தபின்னர் வழிவழியாக வந்த அரசபதவிஏற்ற மன்னன் அதிகமான வரியை மக்கள் மீது சுமத்துவது என்பது மக்களிடம் பிச்சையெடுப்பதற்கு இணையானது!
அத்தகைய சிறப்பில்லாத ஆட்சியைச் சிறுமையோன் பெறின் அதில் பெருமையில்லை.
துணிந்து போரிடும் வலிமையும் முயற்சியும் உடையவன் பெறுவானேயானால் தாழ்ந்த நீரையுடைய வற்றிய குளத்தில் சிறிய தண்டாகிய வெண்ணிற நெட்டி கோடையில் உலர்ந்து சுள்ளி போல் மிகவும் நொய்மையுடையதாம். குற்றமற்ற வானில் ஓங்கிய வெண்கொற்றக்குடையையும் முரசையும் உடைய அரசரது ஆட்சியைப் பொருந்திய செல்வம் அதுவே. என்கிறது இப்புறப்பாடல். பாடல் இதோ..

மூத்தோர் மூத்தோர்க் கூற்ற முய்த்தெனப்
பாறர வந்த பழவிறற் றாயம்
எய்தின மாயி னெய்தினஞ் சிறப்பெனக்
குடிபுர விரக்குங் கூரி லாண்மைச்
5 சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே
மண்டமர்ப் பரிக்கு மதனுடை நோன்றாள்
விழுமியோன் பெறுகுவ னாயி னாழ்நீர்
அறுகய மருங்கிற் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல நன்றும்
10 நொய்தா லம்ம தானே மையற்று
விசும்புற வோங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்த ரரசுகெழு திருவே. (75)
புறநானூறு
75. சோழன் நலங்கிள்ளி
திணை: அது. துறை: பொதுமொழிக்காஞ்சி. சோழன் நலங்கிள்ளி
பாட்டு.

பாடல் வழியே..

• மகிழச்சி நிறைந்த மக்களைக் கொண்டதாக ஒருநாடு இருக்கவேண்டுமென்றால் வரிச்சுமையிருக்கக்கூடாது என்ற கருத்து எடுத்துரைக்கப்படுகிறது.
• மக்களிடம் அதிகமாக வரியை வசூலிப்பது என்பது பிச்சையெடுப்பதற்கு இணையானது என்ற கருத்து சுட்டப்பட்டுள்ளது.
( சோழன் நலங்கிள்ளி, காரியாற்றுத் துஞ்சிய நெடுங் கிள்ளியிடமிருந்து
உறையூரைத் தான் பெற்றுத் தான் அங்கே இருந்து அரசு புரிந்து வந்தான்.
வருகையில், ஒரு நாள் சான்றோர் சூழ விருக்கையில், அரசு முறையின்
இயல்புபற்றிப் பேச்சுண்டாயிற்று. மலர்தலை யுலகம் மன்னனை உயிராகக்
கொண்டிருத்தலை யுணர்ந்து அதற் கூறுண்டாகா வண்ணம் காத்தற்கண்
வரும் இடுக்கண் பலவற்றையும் நோக்க, அரசு முறை யென்பது எளிதன்று
என்பவர் பலராயினர். அக்காலை நலங்கிள்ளி, “அரசு முறை மூத்தோர்க்குப்
பின் அவர் வழிவரும் இளையோர் பால் முறைப்படி வரும் தாயமுறையினை
யுடைத்து. அதனை யெய்தினோன் இவ்வுலகிற் பெருஞ் சிறப்பெய்தி
விட்டதாகக் கருதி அளவிறந்த இறையினை விதித்துக் குடிகளை யிரந்து
பொருளீட்டக் கருதினானாயின், அவற்கு அரசுமுறை பொறுத்தற் கரிய
சுமையாய்ச் சிறப்புடைத்தன்றாம்; வலியுடைய விழுமியோன் பெறுகுவனாயின்,
அவற்கு உலர்ந்த நெட்டித் தக்கை போல நொய்தாம்” என்றான். இங்ஙனம்
சீரிய கருத்தமைந்த சொல்லை அவன் இப் பாட்டு வடிவில் தந்துள்ளான்.)
சோழன் நலங்கிள்ளி என்னும் அரசனே அரசின் கடமை பற்றி இவ்வாறு கூறியிருப்பது இன்றைய நிலையிலும் நிகழ்காலச் சமூக நிலையை ஒப்பிட்டு சிந்திக்கத்தக்கதாக உள்ளது.

19 comments:

 1. இலவசங்கள் கொடுத்து நாட்டை இனி என்ன செய்ய போகிறார்களோ...

  ReplyDelete
 2. புறநானூற்றுப்படலும் அதன் விளக்கமும் அருமை....

  ReplyDelete
 3. கோடி கோடியாய் ஊழல் செய்ததை விட கேவலமானது, மக்களை இலவசங்களுக்கு அடிமையாக்கியது.

  ReplyDelete
 4. நல்ல பதிவு தான்.
  எப்போது
  காலம் மாறுமோ
  ஏற்புடைய
  தீர்வு கிடைக்குமோ?

  ReplyDelete
 5. அருமையான புறநானூற்று மேற்கோள்!இதையெல்லாம் எந்த அரசு உணரப் போகிறது?

  ReplyDelete
 6. இலவசம் ஒழிந்தால் தான் இல்லம் சிறக்கும்

  ReplyDelete
 7. ///
  Blogger # கவிதை வீதி # சௌந்தர் said...

  இலவசங்கள் கொடுத்து நாட்டை இனி என்ன செய்ய போகிறார்களோ...
  ///

  ஒழிக்க போறாங்க

  ReplyDelete
 8. மிக மிக அருமையான விளக்கம் முனைவர் அவர்களே .....

  ReplyDelete
 9. “பசியோடு இருப்பவனுக்கு மீனை உணவாகக் கொடுப்பதைவிட
  மீன் பிடிப்பது எப்படி என்று சொல்லிக்கொடுப்பதே சிறந்தது“
  என்பது சீனப்பழமொழி.
  ஒரு அரசு இலவசமாகக் கொடுக்கவேண்டியது கல்வியும், மருத்துவமும் தான்.
  இதைவிட சொல்ல என்ன இருக்கிறது !
  முனைவர்.இரா.குணசீலன் சித்தனை அருமை . திருமணம் ஆன பின் அழகு கூடி விட்டது

  ReplyDelete
 10. "கல்வியை மட்டும் இலவசமாக கொடுங்கள் எங்கள் தேவைகளை நாங்களே..!நிறைவு செய்து கொள்கிறோம்" என நாம் கேட்பது மகாபாரதப்போரில் கர்ணன் உள்ளிட்ட கௌரவர்களிடம் எனக்கு அந்த ஒரு குறுவாளை மட்டும் கொடுங்கள் மீண்டும் உங்களிடம் போர்புரிகிறேன் என நிராயுதபாணியாய் நிற்கையில் அபிமன்யு கேட்டதைப்போல தான் உள்ளது அதற்க்கு அன்று ஆட்சியில் இருந்த அரசு(கௌரவர்கள்) செய்ததுதான் உலகம் அறியுமே..!!!

  ReplyDelete
 11. “பசியோடு இருப்பவனுக்கு மீனை உணவாகக் கொடுப்பதைவிட
  மீன் பிடிப்பது எப்படி என்று சொல்லிக்கொடுப்பதே சிறந்தது“

  சிறப்பான கருத்துக்கள்......

  இலவசத்தைக்காட்டி உழைப்பாளியின் கரங்களை ஊனமாக்கியதே மிச்சம்

  ReplyDelete
 12. மனிதனே மனிதனுக்கு எதிரி.வேறு என்ன சொல்லமுடியும்..

  ReplyDelete
 13. கால‌ங்க‌ள் மாறினாலும் அதிகார‌வ‌ர்க்க‌த்தின‌ரின் ம‌ன‌ப்பான்மை மாற‌ மாட்டேன் என்கிற‌தே...

  ReplyDelete
 14. /கல்வியை விலைக்கு வாங்கிய ஒருவன் அதனை சொந்த நாட்டில் மட்டும் தான் விற்பனை.../

  சாட்டையடி... நல்ல பதிவு...

  ReplyDelete
 15. நல்ல பதிவு...
  புறநானூறு விளக்கம் அருமை.

  ReplyDelete
 16. இலவசம் இலஞ்சம் ஒன்றாகும்-பலர்
  எண்ணிப் பாரா ஒன்றாகும்
  வளமுற வாழ்ந்து அரசாள-திட்டம்
  வகுத்தார் சுயநல வாதிகளே
  நலமுற உரைத்தீர் தம்பீநீர்
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 17. எல்லாம் இலவசமானதும்
  உலகம் கனமானது..

  ஆக்கப்பூர்வமான பதிவு..வாழ்த்துகள்..

  ReplyDelete
 18. அருமையான பதிவு இலவசம் அவர்கள் துட்டு தருகிற மாதிரி அவர்களுக்கு நினைப்பு நம்ம கிட்ட வரி வாங்கிடு நம்ம பைசவே நமக்கு திருப்பி தருனுங்க இதுக்கு பெயரு இலவசமா

  ReplyDelete