வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 4 ஜூன், 2011

வலி தீர்த்த இசை.

பொருள் காரணமாக நீங்கிச் சென்ற தலைவன் மீண்டு வந்தான். அதனை அறிந்த தோழி, தலைவியிடம் “குன்றம் கடந்த நம் தலைவர் வந்தார்“ என்று மகிழ்வுடன் தெரிவிக்கிறாள். இதுவே பாடலின் சூழல்.


இசை மருத்துவம்


பார்வை ஒன்றுபட வேடன் வலையை அமைத்தான். அந்த வலையைக் கண்ட நெடிய காலைக் கொண்ட கணந்துள் என்னும் பறவை அச்சமுற்றுக் கத்தும். அப்பறவையின் தனித்த குரலிலான தெளிந்த ஒலியானது, யாழிசையுடன் சேர்ந்து பாலை நிலைவழியே செல்லும் கூத்தர்களின் வழிச் செல்லும் துயரை நீக்குவதாக இசைக்கும்.

பாலை வழி


இத்தகைய வழியில் கடுமையாய் ஒலிக்கும் பம்பையுடன் சினமுடைய நாயை உடைய வடுகர் கூட்டம் தங்கும் நெடுங்குன்றம் உள்ளது. அக்குன்றத்தையும் கடந்து நம் தலைவர் வந்தார் என்கிறாள் தோழி.

தலைவனும் புதல்வனும்


தலைவியின் கையில் அணியப்பட்ட செம்பொன்னாலான அணிகலன்கள் உடல்மெலிவால் கழன்று விழும். அதனைக் கண்டு புதல்வன் நம்மை அணைத்துக்கொண்டு அழுவான். அவனுடைய இனிய குரலைக் கேட்கும் போதெல்லாம் தலைவனைக் காணவேண்டும் என்ற ஆவல் நமக்குத் தோன்றும். நம் ஆவலை நிறைவுசெய்யும் விதமாக தலைவரும் நம்மிடம் வந்து சேர்ந்தார் என்று உவந்து தலைவியிடம் சொல்கிறாள் தோழி.

பாடல் இதோ..

“பார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ
நெடுங்காற் கணந்துள் புலம்பு கொடெள்விளி
சுரஞ்செல் கோடியர் கதுமெனவிசைக்கு
நரம்பொடு கொள்ளுமத்தத் தாங்கட்
கடுங்குரற் பம்பைக் கதநாய்வடுகர்
நெடும் பெருங்குன்ற நீந்தி நம்வயின்
வந்தனர் வாழிதோழிகையதை
செம்பொற் கழறொடிநோக்கு மாமகான்
கவவுக்கொளின் குரல் கேட்டொறும்
அவவுக்கொண் மனத்தேமாகிய நமக்கே”

வரவு கேட்ட தோழி தலை மகட்குச் சொல்லியது
நற்றிணை - 212.
பாலை- குடவாயிற் கீரத்தனார்


பாடல் வழியே

1.நடந்துசெல்லும் வலியையும், மனச்சுமையையும் நீக்குவதாக இங்கு யாழிசையுடன், பறவையின் ஒலியும் இருந்தது என்ற செய்தி இசைமருத்துவக்கூறாக அறியமுடிகிறது.

2.காட்டில் குரங்கு, மயில் ஆகியன தீங்குகளை அறிவுறுத்தும் உயிரினங்களாகும். இவைபோல இந்த கணந்துளும் அறிவுத்தியது என்ற செய்தி சங்ககால மக்களின் விலங்குசார் வாழ்வியல் குறித்த தெளிந்த அறிவுக்குச் சான்றாகவுள்ளது.

3.கணந்துள் பறவையின் ஓசை யாழோசையுடன் சேர்ந்து இசைக்கும் என்றது, தலைவி தலைவனுடன் கூடி இசைபட வாழ்வாள் என்பதைச் உள்ளுறையாக உரைப்பதாகவுள்ளது.

4.தலைவி புதல்வனைக் காணும்போதெல்லாம் தலைவனின் நினைவு வருகிறது என்ற செய்தி உளவியல் அடிப்படையிலான பெண்களின் மனநிலையைப் படம்பிடித்துக்காட்டுவதாகவுள்ளது.

4 கருத்துகள்:

 1. நல்ல அருமையான விளக்கங்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 2. தமிழின் சுவை சுவைத்தேன் !

  பதிலளிநீக்கு
 3. அகம் ..புறம் ,,முழுவதையும் இவ்வாறு இடுகைஎற்றி விட்டு தேர்வு வைத்துப் பாருங்கள் நண்பரே ...!!முதல் மதிப்பெண் நானாகத்தான் இருப்பேன் ...!!

  பதிலளிநீக்கு
 4. அழகிய தமிழ்ப் பாடல்! தலைவன் கடந்துவரும் வழி படமாய் மனக்கண்ணில் விரிகிறது. அற்புதம் முனைவரையா!

  பதிலளிநீக்கு