வெள்ளி, 3 ஏப்ரல், 2009

குப்பைக் கோழியார்கண்தர வந்த காம ஒள் எரி
என்புஉற நலியினும், அவரோடு பேணிச்
சென்று நாம் முயங்கற்கு அருங்காட்சியமே
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே
உய்த்தனர் விடார் பிரித்து இடை களையார்
குப்பைக் கோழித் தனிப்போர் போல
களைவோர் இலை- யான் உற்ற நோயே.
(குறுந்தொகை-305)


காப்பு மிகுதிக்கண் தோழி அறத்தோடு நிற்பாளாக தனது ஆற்றாமை தோன்ற தலைமகள் தன்னுள்ளே கூறியது

கண்ணால் இந்த காமமாகிய ஒள்ளிய தீ பற்றிக் கொண்டது.அது உள்ளத்தளவில் நில்லாது என்பு வரை சென்று அகத்தையும் நலிவடையச் செய்தது. எனத் தலைவி தனக்கு வந்த காமநோயைச் சுட்டுகிறாள்.
தன் நிலை உணர்ந்து தலைவனும் வரைவு மேற்கொள்பவனாக இல்லை. தோழி அறத்தொடு நின்று தன் துயர் போக்குபவளாகவும் இல்லை என்ற வருத்தம் தலைவியின் கூற்றில் உள்ளது.
தலைவி தன் நிலையை குப்பைக் கோழியின் போருடன் ஒப்புமைப்படுத்திக் கூறுகிறாள்.

“குப்பைக் கோழிகள் சண்டையிட்டுக் கொண்டால் அதனைக் காண்பார் மகிழ்ச்சியும் துயருமின்றி அயன்மையுடனேயே நோக்குவர். அது போல, தலைவியும் காமநோயும் நிகழ்த்தும் போரினைத் தோழி கூடத் தொடர்பில்லாதவள் போல பார்க்கிறாளே என நொந்துகொள்கிறாள் தலைவி.
சேரிக்கோழிகளின் சண்டையைக் கூட பார்ப்பவர்கள் விலக்கி அவற்றைக் காக்க முற்படுவர்.ஆனால் குப்பையில் வாழும் கோழிகளின் போரைக் கண்டு அவற்றைக் காப்பவர்கள் யார் உளர் என கையற்றுப் புலம்புகிறாள் தலைவி. குப்பைக் கோழிகள் தம்முள்ளே போரிட்டு அழிந்து போகும் அதுபோல தன் உயிரும் அழியும் என்பது தலைவியின் மனத் துயராகும்.

இப்பாடலில் தலைவியின் மனநிலையைக் குப்பைக் கோழியின் போருடன் ஒப்பிட்டு போரைச் சிறப்பித்துப் பாடியமையால் இப்புலவர் குப்பைக் கோழியார் எனப் பெயர்பெற்றார்.

4 கருத்துகள்:

 1. குப்பை கோழிகளின் சண்டையினை இப்படி ஒரு பார்வையா.

  இன்னும் புதைந்து கிடக்கும் இலக்கியங்களை வெளிகொனறுங்கள்

  பதிலளிநீக்கு
 2. பொதுவாக இலக்கியம் என்றாலே ஏதோ ஒரு பயம் ந்ம்மவர்களிட்ம் உள்ளது.உங்களின் வலைப்பூவை பார்த்தபின் மிகவும் மகிச்சியாக உள்ளது.வேறு ஒரு வலைப்பூவில்
  தங்களின் வலைப்பூவைப்பற்றி குறிப்பிட்டு இருந்தார்கள்.திறந்து பார்த்தவுடன் மகிழ்சியின் எல்லைக்கே சென்றேன். பதிவும் செய்துவிட்டேன்
  மிக்க நன்றி. மேலும் இது போன்ற த்ள்ங்களை பள்ளி மாணவர்களுக்கு
  அறிமுகப்படுத்தவேண்டும்.
  அன்புடன்
  மதியழகன்.

  பதிலளிநீக்கு