வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

நாழிகைக் கணக்கர்.



பழமழையால் பதம் கெட்ட எள்ளின்காய், சின்மழையால் இனிதாக விளங்கினார்போல, களவுக்காலத்துத் தலைவன் இரவினும் பகலினும் பலரறிய வருதலால் ஊரில் அலர் எழ வருந்திய தலைவி, சில நாள் வருதலால் இனிமை பெற்றனள்.

சேற்றிலே நிற்றலை வெறுத்த சிவந்த கண்களையுடைய எருமை இருள் செறிந்த நடுஇரவில் “ஐ“ என்ற ஒலியுடன் சேற்றைவிட்டு வெளியே வரவோ, தம் துணையை எண்ணியோ கரையும். அவ்வொலி தலைவியின் தனிமைத் துயரை மிகுவி்ப்பதாக அமையும்.

(எருமை சேற்றைவிட்டு வெளியே வர எண்ணுவதுபோலத் தலைவியும் இற்செறிப்பிலிருந்து விடுதலை பெற்று தலைவனுடன் உடன்போக்கில் செல்ல எண்ணினாள்.)

இத்தகைய அச்சத்தைத் தரும் கூதிர்ப்பருவத்தும் என்னுடைய நெஞ்சு வருந்திப் புண்பட்ட துன்பம் காரணமாக, ஊர்க்காப்பாளர் இரவில் துயிலாது நாழிகையை எண்ணிக் கொண்டிருப்பதுபோல என் கண்கள் துயிலாவாயின என்று தோழியிடம் சொல்கிறாள் தலைவி.

பாடல் இதோ…



குறிஞ்சி - தலைவி கூற்று

பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய
சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயற் கடைநாள்
சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
நள்ளென் யாமத் தையெனக் கரையும்
அஞ்சுவரு பொழுதி னானு மென்கண்
துஞ்சா வாழி தோழி காவலர்
கணக்காய் வகையின் வருந்தியென்
நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் தானே.

குறுந்தொகை -261
-கழார்க் கீரனெயிற்றியார்.

(இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தலைமகள் தோழிக்குச் சொல்லவாளாய் சொல்லியது.)


நுண்பொருள் விளக்கம்.


பழமழை
- கார் காலத்தில் தோன்றும் முதல் மழை, புதுப்பெயல் எனவும்,இளமழை எனவும் அழைக்கப்படும். அக்காலத்தில் தொடர்ந்து பெய்யும் மழை “பழமழை“ எனப்படும்.

சிதட்டுக்காய்
- எள்ளிற்கு அதிக மழை பெய்தால் காய்கள் பதனிழந்து உள்ளீடற்றுப்போகும். உள்ளீடற்ற காய்களைச் சிதட்டுக்காய் என்பர்.

அலர்
- தலைமக்களின் காதலையறிந்த ஊரார் பேசும் மொழி.

இற்செறி்த்தல் - தலைவியின் காதலையறிந்த பெற்றோர் அவளை வீட்டுக்காவலில் வைத்திருத்தல்.


உடன்போக்கு
- பெற்றோருக்குத் தெரியாமல் தலைவி தலைவனுடன் வீட்டை நீங்கிச் செல்லுதல்.

பாடல் வழி…


² இப்பாடலில்,
அக வாழ்வியில் அழகாக இயம்பப்படுவதுடன்,
நாழிகைக் கணக்கர் பற்றிய குறிப்பும் வருகிறது.

² காவலர்
கணக்காய் வகையின் வருந்தியென்
நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் தானே.

என்னும் அடிகளில் உறங்காது நேரத்தைக் கணக்கிடும் நாழிகைக் கணக்கர்களைப் போலத் தம் கண்ணும் கண் மூடி உறங்க மறுக்கிறது என்கிறாள் தலைவி.

இக்கூற்று அக்காலத்தில் நாழிகைக் கணக்கிடுதற்கு என்று கணக்காளர்கள் இருந்த மரபை அறிவுறுத்துவதாகவுள்ளது.

8 கருத்துகள்:

  1. சங்க காலத்தை பற்றி தெரிந்து கொள்வது, சுவாரசியமாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. எப்போதும்போல இலக்கியச் சுவை.அருமை குணா.

    பதிலளிநீக்கு
  3. உங்களது பதிவுகளை எல்லாமேதமிழ்.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் EllameyTamil.Com

    இப்படிக்கு
    EllameyTamil.Com

    பதிலளிநீக்கு
  4. எப்போதும்போல இலக்கியச் சுவை.

    அருமை.

    பதிலளிநீக்கு
  5. சுவாரஸ்யம் மேலும் மேலும் கூடிகிறது நண்பா அசத்துங்க

    பதிலளிநீக்கு