வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 22 செப்டம்பர், 2010

செல்வத்துப் பயனே ஈதல் - UPSC EXAM TAMIL - புறநானூறு -189



செல்வந்தர் ஒருவர் நாள்தோறும் அதிகாலையில் கையில் பணமுடிப்போடு ஊருக்குள் செல்வாராம். 
முன்பின் அறியாத யாரோ ஒருவரிடம் அவர் முகத்தைக் கூடப் பார்க்காமல் பணமுடிப்பைக் கொடுத்துவிட்டுத் திரும்பிவிடுவாராம்.  

ஒருநாள் இப்படி யாரோ ஒரு ஆணிடம் கொடுத்துவிட்டு வந்தாராம். மறுநாள் காலையில் 
ஊர் மக்கள்….. யாரோ ஒருவர் திருடனிடம் பணமுடிப்பைத் தானே சென்று கொடுத்துவிட்டாராம் என்று பேசிக்கொண்டார்கள். 

வருந்திய செல்வந்தர் இன்று வேறு யாரிடமாவது கொடுக்கலாம் என்று அதிகாலையில் இன்னொரு ஆணிடம் கொடுத்துவந்தாராம்.

மறுநாள் காலையில் மக்கள்… 
யாரோ ஒருவர் பெரிய கஞ்சனிடம் பணமுடிப்பைக் கொடுத்துச் சென்றாராம் என்று பேசிக் கொண்டார்கள்.  

சரி இன்றாவது வறுமையில் வாடக்கூடிய யாருக்காவது தம் பணம் போய்ச்சேரட்டும் என்ற நல்ல மனதில் அதிகாலையில் ஒரு பெண்ணிடம் பணமுடிப்பைக் கொடுத்தாராம். 

மறுநாள் காலையில் மக்கள்… 
யாரோ ஒருவர் விலைமகளிடம் பணத்தைக் கொடுத்தாராம் என்று பேசிக்கொண்டார்கள். 

மனம் வாடிய செல்வந்தர் என்ன இது? 
நாம் நல்ல மனதுடன் தானே கொடுக்கிறோம்? 
 ஏன் இப்படி நடக்கிறது? 
என மனம் வருந்தியிருந்தபோது மறுநாள் காலையில் மக்கள்…. 

யாரோ ஒருவர் தினமும் பணமுடிப்பைக் கொடுத்துச் சென்றாரல்லவா… 

அந்தத் திருடன் தன் திருட்டுத் தொழிலை விட்டுத் திருந்தி வாழக் கற்றுக்கொண்டான்.. 

பெரிய கஞ்சன் மனம் மாறித் தானும் ஏழை எளியவருக்கு உதவிசெய்ய ஆரம்பித்துவிட்டான். 

விலைமகள் தம் நேர்வழியில் வாழ ஆரம்பித்தாள்… 
எனப் பேசிக்கொண்டார்கள். 

என்று ஒரு ஒரு கதை படித்திருக்கிறேன்.. 
நல்ல மனதுடன் செய்யப்படும் கொடை நல்ல வாழ்க்கைக்கு அடித்தளமாகும் என்பதற்கு இக்கதையைச் சிறந்த சான்றாகக் கூறலாம். 

கொடுத்துக் கொண்டே இருந்தால் நம்மை ஏமாளி என்றல்லவா கூறுவார்கள்! 

கொடுத்துக் கொடுத்தே அடுத்தவர்களை நாமே சோம்பேறியாக்கலாமா? என்றெல்லாம் நாம் சிந்திக்கும் வேளையில், எல்லோருக்கும் அடிப்படையானது உணவு, உடை, உறைவிடம்….

போதும் என்று மனிதன் சொல்வது உணவுக்கு மட்டுமே! 
மானம் காக்கவே ஆடை அணிகிறோம்! 
இந்த செயல்கள் பணக்காரனுக்கும் ஏழைக்கும் பொதுவானது என்ற சிந்தித்தால் மண் பயனடையும். 

 நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும்.. அதற்கு ஈதலே சிறந்த வழி. 

கொடுத்து வாழ்பவரின் வாழ்க்கை பல்லாயிரமாண்டுகள்! 
இவ்வரிய கருத்தைக் கூறும் சங்கப்பாடல்... 

உண்பது, உடுப்பது ஆகிய செயல்கள் இரண்டும் அரசனுக்கும், ஆண்டிக்கும் பொதுவானது.

பெற்ற செல்வத்தைக் அடுத்தவருக்குக் கொடுப்பதே சிறந்த அறமாகும்.
என்பதை….

"தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே;
அதனால் செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே'' 

                                                                    (புறநானூறு - 189)


பாடியவர் - மதுரை கணக்காயர் மகனார் நக்கீரனார்.

தெளிந்த நீரால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் பிற வேந்தர்க்குப் பொதுவாதலன்றித் தமக்கே உரித்தாக ஆட்சி செய்து, வெண்கொற்றக் குடையால் நிழல் செய்த அரசர்க்கும்,


இடையாமத்தும், நண்பகலும் துயிலாது, விரைந்த வேகத்தைக்கொண்ட விலங்குகளை வேட்டையாடித்திரியும் கல்வியில்லாத ஒருவனுக்கும் (வறியவனுக்கு) உண்ணப்படும் பொருள் நாழியளவு தானியமே!

உடுக்கப்படுபவை அரை ஆடை, மேலாடை என இரண்டே!
இவை போல பிற உடல், உள்ளத் தேவைகளும் ஒன்றாகவே இருக்கும்.

ஆதலால் செல்வத்துப் பயனே ஈதலாகும்!

செல்வத்தின் பயனை தாமே நுகர்வோம் என்று கருதினால் அறம், பொருள், இன்பம் பெறமுடியாது. ஈதலால் மட்டுமே இதனைப் பெறமுடியும்.

இதே கருத்தை வள்ளுவர்..


"அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்,
என்பும் உரியர் பிறர்க்கு'' (குறள் - 72)

"ஈதல் இசைபட வாழ்தல்; அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு'' (குறள் - 231)

என்றுரைப்பர்.

பாடல் வழி…

கொடுத்து வாழ்வோர் இறப்புக்குப் பின்னரும் வாழலாம் என்ற கருத்தை இப்பாடல் பதிவு செய்கிறது. ( செல்வத்துப் பயனே ஈதல்)

உயிர்கள் யாவுக்கும் உணர்வுகள் பொதுவானது (உண்பது நாழி; உடுப்பவை இரண்டே)

எல்லாத் திணைகளுக்கும் பொதுவான இலக்கணங்களைக் கூறும் "பொதுவியல்" திணையாகவும், தெளிந்த பொருளை எடுத்துச் சொல்லும் - உயிர்க்கு உறுதி தரும் பொருள்களை எடுத்துரைக்கும் பொருண்மொழிக் காஞ்சித் துறையாகவும் இப்பாடல் பாகுபாடு பெற்றுள்ளது.

19 கருத்துகள்:

  1. பாடல் வழி சொல்லப்பட்டு இருக்கும் கருத்துக்கள், பொன்மொழிகள்!

    பதிலளிநீக்கு
  2. இறந்த பின்னும் உயிர் வாழ மருந்துதான் கண்டுபிடிச்சிட்டிங்களோன்னு வந்தேன்.

    பதிலளிநீக்கு
  3. அருமை கதை மிக அருமை நண்பா வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. அருமை யான கருத்துக்கள். திருக்குறளும், புற நானூரும் என்றும் தெவிட்டாத தெள்ளமுதமாச்சே.....தொடருங்கள்.....வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. பாடல் வழி சொல்லப்பட்டு இருக்கும் கருத்துக்கள், பொன்மொழிகள்!

    Arumai... nalla irukku...
    vazhthukkal.

    பதிலளிநீக்கு
  6. குணா எங்கள் இல்லத்தில் ஒருஐயா இருந்தார்கள்

    உண்பது நாழி; உடுப்பவை இரண்டே//

    அவர்கள் சொல்வார்கள் .. ஒரு ஆழாக்கு சோறு .. ஒரு முழம் துணி போதும் என்று..

    அதற்கு சரியான பாடலைப் பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. @ஜெகதீஸ்வரன். இதுவும் மருந்து தான் நண்பரே நம் முன்னோர் கண்டது

    பதிலளிநீக்கு
  8. @சே.குமார் தொடர்ந்த வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  9. உண்பது நாழி உடுப்பது இரண்டு என்ற பதம் அடிக்கடி கேட்டதுண்டு .சரியான பாடலைத் தேர்ந்தெடுத்து விளக்கி உள்ளீர்கள்.நன்றி.இடை இடையே சில ஆங்கில எழுத்துக்கள் தனியாக விழித்து நிற்கின்றன.எதுவும் தொழில் நுட்ப பிரச்சினையா என்று பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  10. தேடிப் பெற்றதோர் செல்வந்தண் ணீரென
    ஓடும் நின்றிடா(து) ஓரிடம் என்பதால்
    வாடி நிற்கும் வறியவர்க் கேப்பொருள்
    நாடி ஈவதே நல்லவர் செய்கையாம்.


    நேரல்லார் பெருஞ்செல்வம் நிலைக்காதே உடற்புண்ணில்
    கூரான விரல்நகத்தால் குறுதியுறத் தேய்ப்பதற்கே
    நேராகும்; நல்வழியின் நீங்காதார் சேர்பொருளோ
    ஊரார்க்கும் உதவிடுமே உண்மையின்பம் தாந்தருமே!

    [இப்படி நல் வழியில் சேர்த்தப் பொருள் கண்டிப்பாக நற்பலனைத்தரும்.]

    பதிலளிநீக்கு
  11. உங்களின் வழி, இளமை (youthful) விகடனை (vikatan) யும் தொட்டிருக்கிறது,

    http://youthful.vikatan.com/youth/NYouth/Blogs.asp

    வாழ்த்துகள் தொடருங்கள் உங்கள் பயணத்தை

    பதிலளிநீக்கு
  12. அன்பின் குணா - கொடுப்பதில் உள்ள இன்பம் எதிலும் கிடைக்காது. நலல் சிந்தனை - நல்லவர்களாகப் பார்த்துக் கொடுக்க வேண்டும். நல்வாழ்த்துகள் குணா -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  13. அன்பின் குணா - கொடுப்பதில் உள்ள இன்பம் எதிலும் கிடைக்காது. நலல் சிந்தனை - நல்லவர்களாகப் பார்த்துக் கொடுக்க வேண்டும். நல்வாழ்த்துகள் குணா -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  14. நாழி அளவு என்பதன் பொருள் யாதோ ?

    பதிலளிநீக்கு