வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 3 மே, 2011

மனம் என்னும் இயங்குதளம்.



மனம் இருப்பதாலேயே நாமெல்லாம் மனிதரானோம்.
மனிதனை மாதிரியாகக் கொண்டே கணினியின் ஒவ்வொரு பகுதிகளும் உருவாக்கப்பட்டன. நாளுக்கு நாள் கணினி புதிய புதிய தொழில்நுட்பங்களுடன் வந்துகொண்டிருக்கிறது. இருந்தாலும்...
மனிதனுக்கு இணையான, மனிதனை விட அதிக கொள்திறனும், செயல்திறனும் கொண்ட கணினியை இனி வரும் காலங்களிலும் கூட உருவாக்க இயலாது என்பது என் கருத்து.

மனமானது இயங்குதளம் (ஆப்ரேட்டிங் சிசுடம்) போன்றது. இயங்குதளம் என்றதும் ஒவ்வொருவருக்கும் தாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இயங்குதளங்கள் நினைவுக்கு வரும்.
லினெக்சு, விண்டோசு என ஒவ்வொரு மனிதக் கணினிகளும் ஒவ்வொரு இயங்குதளங்களைக் கொண்டு இயங்குகின்றன.

சில இயங்குதளங்கள் சில மென்பொருள்களை ஏற்றுக்கொள்ளாது.
சில இயங்குளங்கள் புதிய தொழில்நுட்பங்களுக்கு உடன்படாது.


என இந்த இயங்குதளங்களைப் போலவே..

மனித மனங்களும் சில புதிய மரபுகளையும், நாகரீகங்களையும் ஏற்றுக்கொள்வதில்லை.
புதிய தலைமுறையின் எண்ணங்களுடன் உடன்பாடாது நிற்கின்றன.
எதிர்பாராத சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்வதில் வேறுபட்டுநிற்கின்றன.

கண்ணுக்குத் தெரியும் கணினி என்னும் வன்பொருள் கண்ணுக்குத் தெரியாத இயங்குதளத்தோடு ஒத்து செயல்பாட்டால் தான் கணினி நன்கு செயல்படும்.

அதுபோல கண்ணுக்குத் தெரியாத மனம் என்னும் இயங்குதளம் மனித உடல் என்னும் கணினியுடன் (வன்பொருளுடன்) இணைந்து செயல்பட்டால்தான் மனிதன் மனிதன் என்னும் பெயர் பெறமுடியும்.


ஒரு நகைச்சுவை..

 குழந்தையைத் தூக்கிக் கொண்டே இருந்தால் கை நோகிறது.
இறக்கி விட்டாலோ மனம் நோகிறது.

இதோ இந்த இயங்குதளம் இயங்குவதில் மனித வன்பொருளோடு வேறுபட்டு நிற்கிறது.

கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதால் பலநேரங்களில் நாம் இயங்குதளங்கள் இருப்பதையே மறந்துபோவோம்.


பழைய கணினி – பழங்கால மனிதன் – செயல்திறன்
புதிய கணினி – இக்கால மனிதன் – செயல்திறன்

என ஒப்பிட்டு நோக்கினால் ஒரு உண்மை புரியும்.
ஆம் மனம் என்னும் இயங்குதளம் பெற்றதாலேயே விலங்குகளிலிருந்து நாம் இன்று வரை வேறுபட்டு வாழ்கிறோம்.
இந்த உண்மை, இதனை,

இரண்டு துறவிகள் ஒரு கொடியைப்பற்றி விவாதம் புரிந்தனர்.ஒருவர் கூறினார்,''கொடி அசைந்து கொண்டிருக்கிறது..''அடுத்த துறவி சொன்னார்,''காற்று அசைந்து கொண்டிருக்கிறது.''அப்போது அந்தப்பக்கம் ஒரு ஞான குரு வந்து கொண்டிருந்தார்.அவர் கூறினார்,''கொடியுமல்ல,காற்றுமல்ல, உங்கள் மனம் அசைந்து கொண்டிருக்கிறது.''

இந்தக் காட்சி அறிவுறுத்தும். இங்கு மனம் – இயங்குதளத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது.

சங்கக் காட்சி ஒன்று....

தலைவியை உடன்போக்கில் அழைத்துச் செல்ல எண்ணினான் தலைவன். ஆனால் பாலைநிலத்தின் கொடுமை தலைவி அதனைத் தாங்க மாட்டாள் என்பதை அறிவுறுத்தியது. அதனால் வழியருமை கூறித் தலைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்ல மறுத்தான்.

உன்னை நீங்கித் தலைவி தனித்து இருந்து படும் துன்பத்தைவிட பாலை நிலம் அத்தகைய கொடுமையானதன்று என்பதைத் தலைவனுக்குப் புரியவைக்கிறாள் தோழி....

தலைவ!!

உன்னுடன் வந்தால் கொடிய பாலை வழி கூட தலைவிக்கு இனிமையுடையதாகும். அவளும் விழாக் கோலம் கொண்டவளாக மகிழ்ந்திருப்பாள்.

ஆனால் உன்னை நீங்கி அவள் தனித்திருந்தால்,

உமணர்கள் தங்கி்ச சென்ற பாழ்பட்ட ஊர்போலக் காட்சியளிப்பாள்.

(தங்கள் பொருள்களுடன் கூட்டம் கூட்டமாகப் பல ஊர்களுக்கு இடம்பெயர்ந்து செல்வர். உப்பு வண்டிகளைத் தாம் தங்கும் .இடத்தில் நிறுத்துவர். எருதுகளைத் தறிகளில் கட்டுவர். இரவு தங்கி உணவு உண்டு மகிழ்ந்து பிற இடங்களை நாடிச் செல்வர். அவர்கள் நீங்கிச் சென்ற பின் அவர்கள் தங்கிய இடமானது, பாழ்பட்ட ஊர்போலக் காட்சிதரும்.)

பாடல் இதோ..

உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின், அகன்தலை
ஊர் பாழ்த்தன்ன ஓமைஅம் பெருங்காடு
இன்னா என்றிர் ஆயின்,
இனியவோ – பெரும – தமியர்க்கு மனையே!

124 குறுந்தொகை (பாலை)
பாலை பாடிய பெருங்கடுங்கோ.

புணர்ந்துடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.

(தலைவியை உடன்போக்கில் அழைத்துச் செல்ல எண்ணிய தலைவன் பாலைநிலத்தின் கொடுமை எண்ணி அஞ்சிய சூழலில், தோழி சொல்லியது.)


பாடலின் நுட்பம்

 இங்கு கொடிய பாலை நிலம் இனிமையுடையதாகவும்.
இனிய வீடு கொடிய பாலை நிலத்தின் தன்மைகொண்டதாகவும்.
உணர்ந்துகொள்ளப்படுகிறது.
 மனம் என்னும் இயங்குதளம் இங்கு சூழல் என்னும் மென்பொருளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மாற்றிப்புரிந்துகொள்கிறது.
இயங்குதளத்தோடு ஒவ்வாத மென்பொருள்களை நாம் கணினியில் நிறுவக்கூடாது அதுபோல மனதுக்கு ஒவ்வாத செயல்களை நாம் செய்யக் கூடாது. சில நேரங்களில் நாம் மனம் சொல்வதைக் கேட்டுத்தான் ஆகவேண்டும்.

இங்கு உண்மை என்னவென்றால் பாலை கொடுமையானது.
வீடு இனிமையானது என்பதுதான்.
ஆனால் மனமோ (இயங்குதளம்) தனித்து வீட்டில் இருப்பது தான் கொடுமையானது பாலை இனிமையானது என்று சொல்கிறது.

இங்கு மனம் என்னும் இயங்குதளம் சொல்லும்படி கேட்டால்தான் உடல் என்னும் வன்பொருள் செயல்படமுடியும். இல்லாவிட்டால் இவ்வியங்குதளம் வன்பொருளை (உடல்) முடக்கிவிடும்.

பாடல் வழியே..

 மனம் – இயங்குதளம் ஆகியன ஒப்புநோக்கியரைக்கப்பட்டுள்ளன.
 உடன்போக்கு – தலைவன் தலைவியை பெற்றோர் அறியாது கூட்டிச் செல்வது என்னும் அகத்துறை விளக்கப்பட்டுள்ளது.
 உமணர்களின் பழக்கவழக்கம் உரைக்கப்பட்டுள்ளது.
 பாலை நிலத்தின் கொடுமை சொல்லப்பட்டுள்ளது.
 ஆழ்மனதின் நுட்பமான நிலைகள் இயம்பப்பட்டுள்ளன.
தமிழ்சசொல் அறிவோம்

உமணர் – உப்பு வணிகர்
கழிந்த – நீங்கிய.
தமியர் – தனித்திருப்போர்.

10 கருத்துகள்:

  1. கணினியையும் இயங்கு தளத்தையும் மனித உடலோடும் மனதோடும் ஒப்பிட்டு,குறுந்தொகைப்பாடலையும் இணத்து நீங்கள் தந்திருக்கும் இந்தப் பதிவுக்காகவே உங்களுக்கு இன்னொரு முனைவர் பட்டம் கொடுக்கலாம்!

    பதிலளிநீக்கு
  2. மனிதனை கணினியோடு ஒப்பிட்டு அழாகாக பதிவிட்டு உள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான காலத்திற்கு ஏற்ற ஒப்பீடு.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. கணினியையும் மனிதனையும் இணைத்தவிதம் அழகு...
    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  5. @சென்னை பித்தன் என் மீது கொண்ட அன்பினாலும், தமிழின் மீதுகொண்ட பற்றினாலும் தாங்கள் இவ்வாறு உயர்வாகக் கூறியிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன் அன்பரே..
    மகிழ்ச்சி..

    ஏதோ என் சங்கஇலக்கிய ஆர்வத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறேன் அவ்வளவுதான்..

    பதிலளிநீக்கு
  6. @அன்புடன் மலிக்கா தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மல்லிக்கா

    பதிலளிநீக்கு
  7. உங்கள் ரசனையை நான் மெச்சுகிறேன்

    பதிலளிநீக்கு
  8. ஆஹா எப்படி முனைவரே தங்களால் மட்டும் இப்படி யோசிக்க முடிகிறது.
    அருமையான ஒப்பிட்டு பதிவு ஐயா.

    பதிலளிநீக்கு