வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

இதுவல்லவா சுதந்திரம்!



பறவைக்கு இருக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறதா?
காற்றுக்கு இருக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறதா?


கூண்டுக் கிளிக்கும்
சிறகில்லாத மனிதனுக்கும்

ஒன்றும் பெரிய வேறுபாடு எனக்குத் தெரியவில்லை!

அடிமை மண்ணில் பிறந்தவர்களுக்குத்தான் தெரியும்
சுதந்திரத்தின் பொருள்!

சுதந்திர மண்ணில் பிறந்த மாணவனிடம் கேளுங்கள்...
சுதந்திரம் என்றால் என்ன? என்று..

பள்ளி மாணவன் சொல்வான் அதிலென்ன சந்தேகம்
பள்ளி விடுமுறைதான் சுதந்திரம் என்று!

சரி பள்ளி இருந்தால் எது சுதந்திரம்? என்று கேட்டால்...

மாணவன் சொல்வான் நிச்சயமாக வகுப்பு எடுக்காமல் இருப்பதுதான் என்று!

சரி வகுப்பு எடுத்தால் எது சுதந்திரம்..? என்றால்..

மாணவன் சொல்வான்...
தேர்வு வைக்கக்கூடாது! கேள்வி கேட்கக்கூடாது அப்படிக் கேட்டாலும் என்னைக் கேட்க்கூடாது அதுதான் சுதந்திரம் என்பான்!

இதோ சில நிகழ்காலச் சமூகத்தில் சுதந்திரம்....

சாலைவிதிகளை மீறுவதா சுதந்திரம்?
அவரிடம் கையூட்டு பெறுவதல்லவா சுதந்திரம்!

இலவசம் பெற்று ஓட்டளிப்பதா சுதந்திரம்?
ஆட்சிக்கு வந்து விலைவாசியை உயர்த்துவதல்லவா சுதந்திரம்!

அலுவலகத்தில் கடமையை செய்யாதிருப்பதா சுதந்திரம்?
போட்டிபோட்டு குறட்டைவிடுவதல்லவா சுதந்திரம்!

தாய் மொழி பேசுவதா சுதந்திரம்?
வயிற்றுக்காக ஆங்கிலம் பேசுவதல்லவா சுதந்திரம்!

பிறந்த நாட்டில் பணிபுரிவதா சுதந்திரம்?
வெளிநாட்டில் கூலி வேலை பார்ப்பதல்லவா சுதந்திரம்!

விடுமுறை எடுத்துத் திரைப்படம் பார்ப்பதா சுதந்திரம்?
கிரிக்கெட்டுக்காக விடுமுறை எடுப்பதல்லவா சுதந்திரம்!

விளம்பரங்கள் வழி மூளைச்சலவை செய்வதா சுதந்திரம்?
ஆளும் கட்சியின் அடிவருடுவதல்லவா ஊடக சுதந்திரம!

சாலை நடுவே குடித்து ஆட்டம் போடுவதா சுதந்திரம்?
மதுக்கடைகளை அரசே நடத்துவதல்லவா சுதந்திரம்!

நம்முள் நாமே அடிமைப்பட்டுக்கிடப்பதா சுதந்திரம்?
அன்று வெள்ளையன்! இன்று கொள்ளையன்!

கொடியேற்றுதாலோ! மிட்டாய் கொடுப்பதாலோ!
சுதந்திரம் வந்துவிடுவதில்லை!
இந்தியா ஒளிர்வதில்லை!


லித்துவேனியா நாட்டு மேயர் யாருக்கும் அஞ்சாமல்
சாலையோர ஆக்கிரமிப்புகளைத் தானே அகற்றி
ஒருநாள் தன் கடமையைச் செய்தார் என்று
உலகமே அவரைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது!

நம் நாட்டில் இப்படியொரு நல்ல செயல் செய்தால்
அடுத்த நாளே அந்த மனிதரை வேறு
ஊருக்கு பணிஇடமாற்றம் செய்துவிடுவோமே..

இதுவல்லவா உண்மைச் சுதந்திரம்..?

இந்தியத் திருநாட்டில் வாழும் ஒவ்வொரு மக்களும் சுதந்திரக் காற்றை அளவுக்கு அதிகமாகவே சுவாசிக்கிறோம். அதிலும் அரசு அலுவலகத்தில் வாழும் அலுவலர்கள்....

ஒரு முறை ஏதோ ஒரு சான்றிதழ் பெற உள்ளே சென்று வந்தால் தெரியும் சுதந்திரக் காற்றை நம்மைவிட இவர்கள் தான் அதிகமாக சுவாசிக்கிறார்கள் என்று..

அறிஞர்.அண்ணா, பெருந்தலைவர் காமராசர் போன்ற பல தலைவர்களும் தன்னலமற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். இன்றைய அரசியல்வாதிகள் அவர் பெயரைச் சொல்லியே ஓட்டு வாங்கி பட்டை நாமம் சாத்துகிறார்கள். என்று அடுத்தவரைக் குறை கூறும் அதே நேரத்தில் நம்மையும் நாம் திருத்திக் கொள்ள முயல்வோம்!

சுதந்திரத்துக்காகப் போராடிய எத்தனையோ அன்பு நெஞ்சங்களை எண்ணிப்பார்ப்போம்!

தொ(ல்)லைக் காட்சி பார்த்து சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதை விட கீழ்க்காணும் உறுதிமொழிகளில் ஏதோ ஒன்றிரண்டையாவது வாழ்க்கையில் கடைபிடிக்க முயல்வோம்........

• “உணவு, உடை,உறைவிடம் என்னும் அடிப்படைத் தேவைகளை முதலில் நிறைவு செய்வோம்“
• “தரமான கல்வியை, தன்னம்பிக்கையளிக்கும் கல்வியை மாணவர்களுக்குத் தரமுயல்வோம்.“
•“நம் கடமையை செய்வோம்“
• “சுயநலமின்றி இருக்க நாமொன்றும் இயந்திரங்கள் அல்ல. பொதுநலம் கலந்த சுயநலம் கொண்டவர்களாக இருப்போம்“
• “பிறந்த நாட்டின் மீது பற்று வைப்போம்“
• “தாய் மொழியையே பேச முயல்வோம்“
• “நம் நாடு உயர நம் துறை சார்ந்து ஏதோ ஒரு வழியில் துணை நிற்போம்“
• “நாட்டின் பண்பாடுகளை மதிப்போம், போற்றுவோம்“
• “நம் நாட்டில் விளையும் விளைபொருள்களுக்கும், உற்பத்திப் பொருள்களுக்கும் முன்னுரிமை அளிப்போம்“
• “எல்லோருக்கும் அரசு வேலைவாய்ப்பளித்தல் இயலாத ஒன்று. (6000 அரசு பணியிடம் இருந்தால் பத்து இலட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள்) அதனால் சுயவேலை வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வோம்“


நம் நாட்டில் எத்தனையோ நிறைகள் உண்டு!
நிறைகளை சொல்ல நிறையபோர் இருக்கிறார்கள்!
நான் மேற்கண்ட இடுகையில் குறைகளையே அடிக்கோடிட்டு இருக்கிறேன். குறைகளைத் திருத்திக் கொள்வதே வளர்ச்சியின் அடையாளமாக இருக்கும் என்பது எனது கருத்து.

அனைவருக்கும் இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள்!

21 கருத்துகள்:

  1. பாலுக்காக அழும் குழந்தை ,
    கல்விக்காக ஏங்கும் சிறுவன் .
    வேலைக்காக அலையும் இளைஞ்சன் ,
    வறுமையில் வாடும் தாய் ,
    இவர்கள் இல்லாத இந்தியாவே
    உண்மையான சுந்தந்திர இந்தியா.

    - மாவீரன் பகத் சிங்க்

    பதிலளிநீக்கு
  2. //நம்முள் நாமே அடிமைப்பட்டுக்கிடப்பதா சுதந்திரம்?
    அன்று வெள்ளையன்! இன்று கொள்ளையன்! //

    குணா,

    சொற்களால் பின்னிய சாட்டை.

    திருத்திக் கொள்வதே மிகப்பெரிய முன்னேற்றம் தான்.

    அடிமைத்தனத்தை எதிர்த்த நமது மூதாதையர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்ளலாம்.

    ஆனால், இந்த நாளைக் கொண்டாடும் நிலையில் நானில்லை. இதோ நம் சகோதரர்களின் கருணை மனு நிராகரிக்கப் பட்டிருக்கிறதாம். நாமென்ன காந்தி தேசத்தவர்கள்? நாம் எங்கே சுதந்திரம் அடைந்து விட்டோம்?

    பதிலளிநீக்கு
  3. தம்பீ!
    பதிவு முழுவதும்
    அருமையான கருத்துக்கள்.தரம்மிகுந்த
    கேள்விகள்!
    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் கூறிய உறுதிமொழிகளில் முடிந்தவரை ஒருசிலவற்றையேனும் சிரமேற்போம்
    இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. சுகந்திர தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  7. வெகு சிறப்பான பதிவு .எது சுதந்திரம் என்பது குறித்து அழகாய்ப் பதிவு செய்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  8. முனைவரே உங்களை எப்படி பாராட்டுவது என்பதே எதேரியவில்லை
    அவ்வளவு அட்டஹசமான பதிவு இந்த பதிவு தமிழ் வாசிக்கத்தெரிந்த அத்தனை
    தமிழ் மக்களையும் சேரவேண்டும் என்பதே என் ஆசை

    எழுப்பிய கேள்விகள் குடிமக்களுக்கான சாட்டையடி
    இவைகளில் இருந்து தான் ஒரு குடிமகன் சுதந்திரமாக வேண்டும்
    அப்போதுதான் உண்மையான சுதந்திரத்தை உணரமுடியும்

    அறை நூற்றாண்டு காலமாக மார்தட்டிக் கொள்கிறார்கள்
    நாங்கள் சுதந்திரம் பெற்று விட்டோம் என்று
    இந்த வரிகள் படித்தாவது சுதந்திர நினைத்தை கொண்டாடுபவர்கள் வெட்கப்படட்டும்

    நான் வாசித்த பதிவுகளில் மிகவும் என்னை கவர்ந்த பதிவு

    தோழருக்கு என் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
    நான் உணராத சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. உண்மையான சுதந்திரத்தை தொலைத்து காலங்கள் பலவாகி விட்டது.எனினும் இனிய சுதந்திரம் பெற்ற அந்த நன்னாளினை நினைத்து கொண்டாடுவோம்!

    பதிலளிநீக்கு
  10. இன்று பலரின் கருத்தின் பிரதிபலிப்பு. திரு.சத்திரியன் கருத்தை வ்ழி மொழிகிறேன்.நல்ல பதிவு.நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வெள்ளை காரர்களிடமிருந்து,
    நாட்டை மீட்டு கொள்ளைக் காரர்களிடம்,
    கொடுத்ததா, சுதந்திரம்?

    பதிலளிநீக்கு
  12. தங்களின் ஆதங்கம் புரிகிறது...

    மாற்றம் வரும் ஒரு நாள் எல்லாம் சரியாகும் நம்பிக்கையோடு பயணிப்போம்...

    சுதந்திரதின வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  13. நம் நாட்டில் இப்படியொரு நல்ல செயல் செய்தால்
    அடுத்த நாளே அந்த மனிதரை வேறு
    ஊருக்கு பணிஇடமாற்றம் செய்துவிடுவோமே..


    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. சுகந்திர தின வாழ்த்து

    இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
    http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

    பதிலளிநீக்கு
  15. குறைகளைத் திருத்திக் கொள்வதே வளர்ச்சியின் அடையாளமாக இருக்கும் என்பது எனது கருத்து.
    ***********************

    நிச்சயமாக....
    சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. சுதந்திரக் காற்றை முழுமையாகச் சுவாசித்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு