வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 22 செப்டம்பர், 2010

செல்வத்துப் பயனே ஈதல் - UPSC EXAM TAMIL - புறநானூறு -189



செல்வந்தர் ஒருவர் நாள்தோறும் அதிகாலையில் கையில் பணமுடிப்போடு ஊருக்குள் செல்வாராம். 
முன்பின் அறியாத யாரோ ஒருவரிடம் அவர் முகத்தைக் கூடப் பார்க்காமல் பணமுடிப்பைக் கொடுத்துவிட்டுத் திரும்பிவிடுவாராம்.  

ஒருநாள் இப்படி யாரோ ஒரு ஆணிடம் கொடுத்துவிட்டு வந்தாராம். மறுநாள் காலையில் 
ஊர் மக்கள்….. யாரோ ஒருவர் திருடனிடம் பணமுடிப்பைத் தானே சென்று கொடுத்துவிட்டாராம் என்று பேசிக்கொண்டார்கள். 

வருந்திய செல்வந்தர் இன்று வேறு யாரிடமாவது கொடுக்கலாம் என்று அதிகாலையில் இன்னொரு ஆணிடம் கொடுத்துவந்தாராம்.

மறுநாள் காலையில் மக்கள்… 
யாரோ ஒருவர் பெரிய கஞ்சனிடம் பணமுடிப்பைக் கொடுத்துச் சென்றாராம் என்று பேசிக் கொண்டார்கள்.  

சரி இன்றாவது வறுமையில் வாடக்கூடிய யாருக்காவது தம் பணம் போய்ச்சேரட்டும் என்ற நல்ல மனதில் அதிகாலையில் ஒரு பெண்ணிடம் பணமுடிப்பைக் கொடுத்தாராம். 

மறுநாள் காலையில் மக்கள்… 
யாரோ ஒருவர் விலைமகளிடம் பணத்தைக் கொடுத்தாராம் என்று பேசிக்கொண்டார்கள். 

மனம் வாடிய செல்வந்தர் என்ன இது? 
நாம் நல்ல மனதுடன் தானே கொடுக்கிறோம்? 
 ஏன் இப்படி நடக்கிறது? 
என மனம் வருந்தியிருந்தபோது மறுநாள் காலையில் மக்கள்…. 

யாரோ ஒருவர் தினமும் பணமுடிப்பைக் கொடுத்துச் சென்றாரல்லவா… 

அந்தத் திருடன் தன் திருட்டுத் தொழிலை விட்டுத் திருந்தி வாழக் கற்றுக்கொண்டான்.. 

பெரிய கஞ்சன் மனம் மாறித் தானும் ஏழை எளியவருக்கு உதவிசெய்ய ஆரம்பித்துவிட்டான். 

விலைமகள் தம் நேர்வழியில் வாழ ஆரம்பித்தாள்… 
எனப் பேசிக்கொண்டார்கள். 

என்று ஒரு ஒரு கதை படித்திருக்கிறேன்.. 
நல்ல மனதுடன் செய்யப்படும் கொடை நல்ல வாழ்க்கைக்கு அடித்தளமாகும் என்பதற்கு இக்கதையைச் சிறந்த சான்றாகக் கூறலாம். 

கொடுத்துக் கொண்டே இருந்தால் நம்மை ஏமாளி என்றல்லவா கூறுவார்கள்! 

கொடுத்துக் கொடுத்தே அடுத்தவர்களை நாமே சோம்பேறியாக்கலாமா? என்றெல்லாம் நாம் சிந்திக்கும் வேளையில், எல்லோருக்கும் அடிப்படையானது உணவு, உடை, உறைவிடம்….

போதும் என்று மனிதன் சொல்வது உணவுக்கு மட்டுமே! 
மானம் காக்கவே ஆடை அணிகிறோம்! 
இந்த செயல்கள் பணக்காரனுக்கும் ஏழைக்கும் பொதுவானது என்ற சிந்தித்தால் மண் பயனடையும். 

 நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும்.. அதற்கு ஈதலே சிறந்த வழி. 

கொடுத்து வாழ்பவரின் வாழ்க்கை பல்லாயிரமாண்டுகள்! 
இவ்வரிய கருத்தைக் கூறும் சங்கப்பாடல்... 

உண்பது, உடுப்பது ஆகிய செயல்கள் இரண்டும் அரசனுக்கும், ஆண்டிக்கும் பொதுவானது.

பெற்ற செல்வத்தைக் அடுத்தவருக்குக் கொடுப்பதே சிறந்த அறமாகும்.
என்பதை….

"தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே;
அதனால் செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே'' 

                                                                    (புறநானூறு - 189)


பாடியவர் - மதுரை கணக்காயர் மகனார் நக்கீரனார்.

தெளிந்த நீரால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் பிற வேந்தர்க்குப் பொதுவாதலன்றித் தமக்கே உரித்தாக ஆட்சி செய்து, வெண்கொற்றக் குடையால் நிழல் செய்த அரசர்க்கும்,


இடையாமத்தும், நண்பகலும் துயிலாது, விரைந்த வேகத்தைக்கொண்ட விலங்குகளை வேட்டையாடித்திரியும் கல்வியில்லாத ஒருவனுக்கும் (வறியவனுக்கு) உண்ணப்படும் பொருள் நாழியளவு தானியமே!

உடுக்கப்படுபவை அரை ஆடை, மேலாடை என இரண்டே!
இவை போல பிற உடல், உள்ளத் தேவைகளும் ஒன்றாகவே இருக்கும்.

ஆதலால் செல்வத்துப் பயனே ஈதலாகும்!

செல்வத்தின் பயனை தாமே நுகர்வோம் என்று கருதினால் அறம், பொருள், இன்பம் பெறமுடியாது. ஈதலால் மட்டுமே இதனைப் பெறமுடியும்.

இதே கருத்தை வள்ளுவர்..


"அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்,
என்பும் உரியர் பிறர்க்கு'' (குறள் - 72)

"ஈதல் இசைபட வாழ்தல்; அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு'' (குறள் - 231)

என்றுரைப்பர்.

பாடல் வழி…

கொடுத்து வாழ்வோர் இறப்புக்குப் பின்னரும் வாழலாம் என்ற கருத்தை இப்பாடல் பதிவு செய்கிறது. ( செல்வத்துப் பயனே ஈதல்)

உயிர்கள் யாவுக்கும் உணர்வுகள் பொதுவானது (உண்பது நாழி; உடுப்பவை இரண்டே)

எல்லாத் திணைகளுக்கும் பொதுவான இலக்கணங்களைக் கூறும் "பொதுவியல்" திணையாகவும், தெளிந்த பொருளை எடுத்துச் சொல்லும் - உயிர்க்கு உறுதி தரும் பொருள்களை எடுத்துரைக்கும் பொருண்மொழிக் காஞ்சித் துறையாகவும் இப்பாடல் பாகுபாடு பெற்றுள்ளது.

சனி, 18 செப்டம்பர், 2010

கணினி செயல்பாடுகளை வீடியோவாக்க..


இன்றைய சூழலில் நம் கணினியில் பயன்டுத்தும் பலவிதமான கோப்புகளை நாம் விரும்பும் வெவ்வேறு வடிவங்களாக மாற்றிக்கொள்வதற்கெனப் பல தொழில்நுட்ப வசதிகள் நாளுக்கு நாள் வந்துகொண்டே இருக்கின்றன.

பவர் பாயின்ட் கோப்பினை வீடியோவாக்கும் வசதிக்குப் பின்னர் நானறிந்து வியந்த தொழில்நுட்பம்..

கணினி செயல்பாட்டை வீடியோவாக்கும் தொழில்நுட்பமாகும்.
இந்த இலவச மென்பொருளைப் இங்கு பதிவிறக்கிக் கொள்ளலாம்..


கணினியின் செயல்பாடுகளை வீடியோவாக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி..

1. கணினியில் ஒரு செயல்பாட்டை அடுத்தவருக்கு ஒலி ஒளி வசதியுடன் தெளிவாக விளக்கலாம்.
2. எந்தத் துறையாக இருந்தாலும் நம் கருத்துக்களை இதுவரை வேர்டு, பவர்பாயின்ட், ஒலி, ஒளி என வெவ்வேறு தொழில்நுட்பங்களின் துணைகொண்டு கொடுத்திருப்போம்…

இந்த முறை அதற்கு ஒரு மாற்றாகவும் புதிய அனுபவமாகவும் அமையும்.


கூகுளில் சென்று ப்ரீ ஸ்கீரீன் ரெக்கார்டர் என்னும் குறிச்சொல்லைக் கொடுத்துத் தேடினால் நிறைய மென்பொருள்கள் கிடைக்கின்றன. அதில் இலவசமாகவும் நல்ல தொழில்நுட்ப வசதியும் கொண்டதாக இந்த மென்பொருள் விளங்குகிறது.

கணினி செயல்பாட்டை இலவசமாக ரெக்கார்டு செய்யம் வசதி விண்டோசின் ஏழாவது பதிப்பில் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வசதி இல்லாதவர்கள் இந்த மென்பொருளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மென்பொருள் விண்டோசின் எச்பியில் நன்றாகப் பணிபுரிகிறது.

வியாழன், 16 செப்டம்பர், 2010

முரசு கட்டிலில் தூங்கியவர்.

இரும்பொறையின் அரண்மனையிடத்து முரசு வைக்கும் கட்டிலில் 

மோசிகீரனார் அறியாது ஏறி வழிநடந்த களைப்பால் அயர்ந்தார்.

முரசு கட்டிலில் ஏறியது தவறு என்று தண்டிக்காது ,  

அவர் துயில் நீங்கும் வரை கவரி வீசினான் அரசன்.

மோசிகீரனாரின் தமிழ்ப்புலமையைப் போற்றுமாறு இச்செயல் அமைந்தது.

நின் வீரமுரசு குற்றம் தீர இறுகப் பிணித்துக் கட்டப்பட்ட வாரையுடையது

கரிய மரத்தால் அமைந்ததால் கருமை படர்ந்த பக்ககங்களையுடையது.

மயிலின் தழைத்து நீண்ட தோகைகளால் ஒளிபொருந்திய புள்ளியையுடைய நீலமணிபேன்ற மாலையாகக் கொண்டு சூடப்பபெற்றது.
அதனுடன் உழிஞையின் பொன் போன்ற தளிர்களும் அழகு பெறச் சூட்டப்பபெற்றது.

புதன், 15 செப்டம்பர், 2010

வேடிக்கை மனிதர்கள்!


மனிதர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்…

இந்த விடுமுறைநாளில் ஊருக்குச் சென்றேன். 3 நாள் விடுமுறையதனால் இரவு 12க்குக் கூட மக்கள் கூட்டம் அலைமோதியது. பேருந்தில் இடம்பிடிக்க ஒவ்வொருவரும் செய்யும் வீரதீர செயல்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது.

² பேருந்தின் சன்னல் வழியே ஏதோ ஒரு பொருளைப் போட்டு இடம்பிடிப்பவர்களைப் பார்த்திருக்கிறேன்……
அந்தப் பொருளுக்குப் பதில் தன் குழந்தையை வைத்து இடம்பிடிப்பவர்களைப் பார்த்து வியந்துபோனேன்!!

² பேருந்து நிற்கும் முன்னர் ஏறுபவர்களையும் இறங்குபவர்களையும் பார்த்திருக்கிறேன்…..
ஒருவர் பேருந்து நிற்கும் முன்னர் படிவழியே ஏறமுடியாத அளவுக்குக் கூட்டமானதால்……….
மெதுவாக வந்த பேருந்தின் வலதுபுறம் வந்து பின்புற சக்கரத்தில் கால் வைத்து சன்னல் வழியே ஏறி அமர்ந்து தன்னைத்தானே வியந்துகொண்டு பெருமிதத்துடன் மற்றவர்களைப் பார்த்தார்…!!

v பேருந்துகளில் செல்லத்தக்க கூட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்தில் காத்திருந்தது. நானும் அந்தக் கூட்டத்தில் ஒருவனாக இருந்தேன்.

ஒரு பேருந்து வந்தது…. நிலையத்தின் முகப்பிலேயே இருந்தநான் வழியிலேயே ஏறி அமர்ந்துகொண்டேன். ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்கொண்டு ஏறி ஒருவழியாக பேருந்து நிற்கும் முன்னரே அமர்ந்துகொண்டார்கள்…

ஆனால் அந்தப்பேருந்து 30 நிமிடங்களுக்குப் பின்னர்தான் செல்லும் என்று சொல்லிவிட்டு நடத்துனரும், ஓட்டுநரும் எங்கோ சென்றுவிட்டனர். வெறுப்படைந்த மக்கள் அரசுமுதல் பணியாளர்கள் வரை யார் யாரையோ திட்டினார்கள். மக்களை மேலும் வெறுப்பேற்றும் விதமாக….

அந்த 30 நிமிடத்தில் 5 பேருந்துகள் வந்து மக்களை ஏற்றிக்கொண்டு உடனேயே சென்றுவிட்டன.

இறங்கி அந்தப் பேருந்துகளி்ல் ஏறிச்சென்றவர்கள் சிலர். (சரியான நேரத்தில் சரியான முடிவெடுப்பவர்கள்!)

நேரமானாலும் பரவாயில்லை இதே பேருந்தில் சென்றுவி்டலாம் என்றிருந்தனர் சிலர் (தெளிவாக முடிவெடுப்பர்கள்)

இறங்கி ஏறுவோமா?
வேண்டாமா? என்று சிந்தித்துக்கொண்டே பேசாமல் (பேசிக்கொண்டே) இருந்துவிட்டவர்கள் பலர்
(இவர்களுக்கு முடிவெடுக்கத்தெரியாது. காலம் தான் இவர்களுக்கு வழிசொல்லும்)

எதைப் பற்றியும் கவலைப் படாமல் தூங்கி அருகில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் உரிமையுடன் தோளில் சாய்ந்துகொண்டவர்கள் சிலர்!!(எங்கிருந்துதான் இவர்களுக்கு இப்படித் தூக்கம் வருகிறதோ!)


நள்ளிரவு என்றும் பாராமல் பலவித உணவுப்பொருள்களை தன் குடும்பத்துடன் பெரும் சத்தத்துடன் வயிற்றில் அள்ளிப் போட்டுக்கொண்டிருந்தனர் சிலர்!! ( பாவம் அவர்களுக்கு என்ன பசியோ!)

அந்தப் பேருந்தில் நடக்கும் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து, கேட்டுக் கொண்டே நேரமானாலும் பரவாயில்லை இதே பேருந்தில் சென்றுவிடலாம் என்று காத்திருந்தேன்..

மக்கள் கோபத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்கள். எங்கடா நடத்துனரையும், ஓட்டுநரையும் காணோம்….

நேரமாகும்னா வண்டியை ஏன்டா பேருந்து நிலையத்துக்குக் கொண்டுவரீங்க? என்றார் ஒருவர்

பேருந்தில் ஏன்டா பெயர்ப்பலகை போட்டீங்க? வண்டியை எடுக்கும் போது வெச்சிக்க வேண்டியதுதானடா என்றார் ஒருவர்?


ஆளாளுக்குப் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒருவழியாக ஓட்டுநரும், நடத்துனரும் உள்ளே வந்தார்கள்..

எல்லோரின் கோபமும் நடத்துனர் மீது திரும்பியது. பலரும் திட்டிக்கொண்டிருக்க ஒருவர் நடத்துனரைப் பார்த்து….

ஏன்யா என்னயா நினைச்சிட்டிருக்கீங்க?
நீங்க பாட்டுக்க எனக்கென்னன்னு வண்டிய நிறுத்திட்டுப் போய்டீங்க?
பெயர்பலகை வைக்காவிட்டால் நாங்க ஏறியிருப்போமா? வேறு பேருந்தில் போயிருப்போம்ல. வண்டி போயிடுச்சு?

என்று வாய்மூடாமல் பேசிக்கொண்டிருந்தார்…..

அதானே நல்லா கேளுங்க என்று பிறரும் அவரை உசுப்பேத்திவிட்டனர்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த நடத்துனர்….

அமைதியாக….

நான் தூங்கி 3 நாளாச்சுங்க..
அரசுப் பேருந்து அதனால் நடத்துனர் பற்றாக்குறை..
காலைல 12 மணிக்குச் சாப்பிட்டதுங்க..
இரவு 12 மணியாச்சு பசிதாங்கமுடியாம சாப்பிட்டு வந்தேங்க….

அவ்வளவு தான் வண்டிய எடுத்தாச்சு என்றார்..

அதற்கு மேல் யாரும் ஒருவார்த்தை கூட பேசவில்லை. பேருந்து அமைதியாகச் செல்ல ஆரம்பித்தது.

மக்கள் கோபமாகப் பேசும் போது நடத்துனரும் கோபமா….

உங்கள யாருய்யா ஏறச் சொன்னது?
நான்தான் அப்பவே சொன்னேன்லயா 30 நிமிடம் ஆகும்னு?

என்று ஏதாவது பதில் பேசியிருந்தால் வார்த்தை வளரும், கோபம் அதிகரிக்கும்.

இந்தச் சூழலை மிக அழகாகக் கையாண்ட நடத்துனரின் பண்பு வியப்பிற்குரியாதாக இருந்தது.

வியாழன், 9 செப்டம்பர், 2010

விஸ்டா சைடுபார் நுட்பங்கள்.



ஒவ்வொரு இயங்குதளங்களும் ஒவ்வொரு வகையில் தனிச்சிறப்புடையனவாக விளங்குகின்றன. விஸ்டாவில் என்னைக் கவர்ந்த சில…..



² ஸ்விட்ச் பிட்வின் விண்டோ என்ற கருவி எனக்கு மிகவும் பிடித்ததாகும். நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் விண்டோக்களை பிரிவியுவாக பார்ப்பதற்கு இவ்வசதி பயன்படுகிறது. இவ்வசதி விண்டோவின் பிற இயங்குதளங்களில் இருந்தாலும் விஸ்டாவிலிருக்கும் மேம்பட்ட வடிவாக்கம் என்னைக் கவர்வதாக இருந்துவருகிறது.

² சைடுபார் வசதி

◊ இதற்கு முன் சில ஆண்டுகளாக எக்ஸ்பி பயன்படுத்தி வந்த நான் விஸ்டாவிற்கு மாறியபின்னர் இவ்வசதி என்னை மிகவும் கவர்வதாக இருந்தது.
◊ (கன்ட்ரோல் பேனலில் சைடுபார் என்னும் பிரிவைச் சொடுக்கி இதனை விஸ்டா பயனாளர்கள் பெறலாம்.)

1. பீட் - இவ்வசதியை நம் முகப்பில் சேமிக்கும் போது வலைத்தளத்தில் பீட் முகவரியை (தளஓடை) இதில் சேர்த்தால் இணைய இணைப்பு இல்லாத போதும் அவ்வலைத்தளத்தின் இடுகைகளை, செய்திகளை நாம் படித்து மகிழலாம். நம் விருப்பப்படி 25,50,75,100 என இடுகைகளை வகைப்படுத்திக் கொண்டு கேட்கெட்டாகப் பயன்படுத்தமுடியும்.
2. நாட்காட்டி , கடிகாரம் இரண்டையும் நம் விருப்த்திற்கேற்ப அமைத்துக்கொள்ளலாம்.
3. ஸ்லைடு சோ வில் நாம் விரும்பும் படங்களை வரிசைப்படுத்தி நம் விரும்பும் விதத்தில், விரும்பும் கால இடைவெளியில் தோன்றச் செய்யலாம்.
4. மேலும் ஆன்லைனில் நமக்கு விருப்பமான கேட்கட்களைத் தேடியும் பெற முடியும்.
5. விண்டோஸ் விஸ்டாவின் இந்த சைடுபார் வசதியை, நம் கணினியின் வலது புறத்திலோ, இடதுபுறத்திலோ வைத்துக்கொள்ளலாம். மேலும் நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் சைடுபார் கேட்கட்டின் மீது வலதுபுறம் சொடுக்கினால் Detach From Sidebar என்னும் வசதியைப் பயன்படுத்தி நம் கேட்கட்டினை எந்த முகப்புப்பகக்கத்தில் எவ்விடத்தில் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.