வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 3 ஜனவரி, 2013

திருமண அழைப்பிதழ் மாதிரி


தமிழில் வடிவமைக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் மாதிரிகளை இந்த வலையில் பதிவு செய்து வருகிறேன்..








பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன..

நோயற்ற வாழ்வு

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். நோயின்றி வாழ என்ன செய்யலாம்..?

மருத்துவர் சொல்லும் அறிவுரைகளைவிட வள்ளுவர் சொல்லும் அறிவுரை மிகவும் ஏற்புடையதாக உள்ளது..



புதன், 2 ஜனவரி, 2013

அன்று இதே நாளில் (03-01-1760)

"வரி, வட்டி, திறை, கித்தி...
 எங்களோடு வயலுக்கு வந்தாயா? 
ஏற்றமிறைத்தாயா? 
நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? 
அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? 
மாமனா? அல்லது மச்சானா? யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி".


என்று சாக்சன் துரையோடு வீரபாண்டிய கட்டபொம்மன் நிகழ்த்திய உரையாடலை நாம் நன்கறிவோம். திறை கட்டாமை குறித்து வீரபாண்டியனைக் குற்றம் சுமத்திய சாக்சன் துரையை நோக்கி வீரபாண்டியன் கூறியது.
ஆங்கில மோகத்தால் தமிழர் மரபுகளையும், பண்பாட்டையும் மறந்துபோன இன்றைய குழந்தைகளுக்கு, இவரைத் தெரியுமா?

ஒரு சிறுவன் மாறுவேடப்போட்டிக்கு வழிமுறைகேட்டுவந்தான். நீ எந்த வேடம் ஏற்கிறாய்? என்று கேட்டேன்..

தாங்களே கூறுங்கள் என்றான்..

நானும்.
வீரபாண்டிய கட்டபொம்மன் வேடம் ஏற்கிறாயா? என்று கேட்டேன்.

கதை என்ன என்று கேட்டான். முழுவதும் கேட்டவன் சரி ஏற்கிறேன் என்றான். ஆனால் சாக்சன் துரை பாத்திரம்தான் ஏற்பேன் என்றான். ஏன் என்று கேட்டால்,அவன் சொல்கிறான்.

இதில் கட்டபொம்மன் கடைசியில் இறந்துவிடுகிறான். மேலும் இவரது உடையைவிட சாக்சன் துரையின் உடை அழகாக இருக்கிறது என்கிறான்.

இந்தச் சிறுவனுக்கு என்னசொல்லிப் புரியவைப்பது.. ??

அதனால் இன்று வீரபாண்டியகட்டபொம்மன் பிறந்தநாள் என்பதை நாம் நினைவில் கொண்டு அவரது பெருமைகளை நம் குழந்தைகளுக்கு எடுத்துரைப்போம்.


(03-01-1760) அன்று இதே நாளில் நம் மண்ணுக்காகப் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தார். இந்த நாளில் அம்மாமனிதரை நினைவுபடுத்தவே இவ்விடுகை..

எனக்குப் பிடித்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின்
கவிதை ஒன்றை இன்று பதிவுசெய்கிறேன்..

வீரபாண்டியக் கட்டபொம்மன்

மீசை முறுக்கிநின்று வெள்ளையரே உங்களுக்கோர்
காசும் தாரோமென்று கர்ஜித்த - கேசரியாம்
பாஞ்சைப் பதிவீர பாண்டியனை நெஞ்சமே
வாஞ்சையொடு பாடுவோம் வா.
செந்தில் முருகன் சேவடியைத்
     
தினமும் போற்றித் தொழுதிடுவோன்;
சந்தக் கவிகேட் டுளமகிழ்ந்து
     
தரளம் வாரி அளித்திடுவோன்
வந்த பொல்லா வெள்ளையரை
மதியா வீர பாண்டியனைச்
சிந்தை மறவா தோவியத்தில்
சிலையில் கண்டு போற்றுவமே.
தஞ்சம் என்று வந்தவரைத்
     
தாங்கும் இனிய குணசீலன்;
பஞ்சம் அறியாப் பழம்பதியாம்
     
பாஞ்சைப் பதியில் அரசாண்ட
விஞ்சு புகழ்சேர் வீராதி
     
வீரன் கட்ட பொம்மன்பேர்
நெஞ்சில் எழுதி வைத்தன்பால்
     
நித்தம் நித்தம் போற்றுவமே.
'தானம் வேண்டில் தருகின்றேன்;
     
தருமம் வேண்டில் தருகின்றேன்;
வானம் இடிந்து விழுந்திடினும்
     
வரிதந் தும்மை வணங்கேன்' என்று
ஏனை வெள்ளைக் கம்பெனியர்க்கு
     
எடுத்துக் கூறித் தென்னாட்டின்
மானம் காத்த பாண்டியனை
     
மறவா தென்றும் போற்றுவமே.
'தானம் வேண்டில் தருகின்றேன்;
     
தருமம் வேண்டில் தருகின்றேன்;
வானம் மழையைப் பொழியுதையா!
     
மண்ணில் பயிரும் வளருதையா!
யான்இங் குமக்கு வரியிறுப்ப
     
தேனோ?' என்று வெள்ளையர்முன்
மானம் காத்த பாண்டியனை
     
மறவா தென்றும் போற்றுவமே.
சீமை வெள்ளைக் காரர்படை
     
சிதறி ஓட முறியடித்தோன்
ஊமைத் துரையென் றுலகுபுகழ்
     
ஒப்பில் விஜயன் முன்வந்த
வீமன் வீர பாண்டியனின்
வெற்றி முரசு முழக்கியிந்தப்
பூமி மீதெந் நாளுமவன்
புகழைப் பாடிப் போற்றுவமே.
காய்ந்து போரில் வெள்ளையரைக்
     
கறங்கச் செய்த ஆண்சிங்கம்;
ஆய்ந்து வினைகள் செய்துநிதம்
     
அறங்கள் காத்த அறிவுடையோன்;
பாய்ந்து நாயை முயல்விரட்டும்
     
பாஞ்சை ஆண்ட பாண்டியனுக்கு
ஏய்ந்த புகழை இனியதமிழ்
     
இசையிற் பாடிப் போற்றுவமே.
மான முற்றும் விலைகொடுத்து
     
மண்ணை வாங்கி அரசாளும்
ஈன வாழ்வை உள்ளத்தில்
     
எள்ளத் தனையும் எண்ணாதோன்;
ஊன உடலை வெறுத்துதறி
     
உலகி லழியாய்ப் புகழ்நாட்டி
வானம் சென்ற வீரனைநாம்
     
மறவா தென்றும் போற்றுவமே.
கட்ட மொம்மன் சீமையிலே
     
காகம் பறவா தெனுமாறு
சட்ட திட்டம் செய்துகுடி
     
தாங்கி நின்ற ஜகவீரன்;
துட்டர் அஞ்சும் துரைராஜன்
     
துணிந்த வீரன் என்றுலகில்
எட்டுத் திசையும் புகழ் பெற்றோன்
     
எங்கள் வீர பாண்டியனே.
கட்டமொம்மன் சீமையிலே
     
காகம் பறவா தெனுமாறு
சட்ட திட்டம் செய்துகுடி
     
தாங்கி நின்ற ஜகவீரன்;
துட்டர் கண்டன் சூராதி
     
சூரன் என்றிவ் வுலகெங்கும்
பட்டம் பெற்ற பாண்டியனைப்
     
பாடிப் பாடிப் போற்றுவமே.
அன்ன சாலை அமைத்திடுவோம்;
     
ஆல யங்கள் கட்டிடுவோம்;
பன்னற் கரிய கலைகளெல்லாம்
     
பயிலக் கழகம் கண்டிடுவோம்;
தென்னர் போற்றும் பாஞ்சையினைத்
     
திருத்தி அளகை யாக்கிடுவோம்;
மன்னர் வீர பாண்டியன்பேர்
     
வையத் தென்றும் வழங்கிடவே.
கெஞ்சி வாழும் வாழ்க்கையினைக்
     
கிஞ்சித் தேனும் விரும்பாத
செஞ்சி யாண்ட தேசிங்கத்
     
திறலோன் அனைய போர்வீரன்;
வஞ்சர் இழைத்த தீவினையால்
     
மாண்ட கட்டபொம்மான்பேர்
விஞ்சும் ஆண்மை பெறுவதற்கு
     
வீரர் போற்றும் மந்திரமே.


வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்த தமிழ்விக்கிப்பீடியா பதிவு

ஆயிரம் பொ(போ)ய் சொல்லித் திருமணம்.


ஆயிரம் பொய் சொல்லியும் திருமணம் செய்யலாம் என்றொரு பழமொழி வழக்கில் உள்ளது. இதன் காரணம் இன்றைய தலைமுறைக்குத் தெரிந்திருக்கிறதா? என்று பார்க்கலாம் என்று என் மாணவர்களிடம் கேட்டேன். இதன் பொருள் உங்களுக்குத் தெரியுமா? என்று ஒரு மாணவர் எழுந்து சொன்னார். ஐயா எனக்குத் தெரியும் என்று..

நானும் மகிழ்வோடு சொல்லுங்கள் என்றேன். அவர் சொன்னார்.

ஐயா உண்மையைச் சொன்னால் யாருக்கும் கல்யாணம் நடக்காது அதுதான் நம் முன்னோர் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என்று..

இப்படியொரு பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் அவரது நகைச்சுவையுணர்வைப் பாராட்டிவிட்டு அதன் பொருளை இவ்வாறு கூறினேன்.

“ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்பதே உண்மையான பழமொழி.. காலப்போக்கில் “போய் சொல்லி” என்ற வார்த்தை “பொய் சொல்லி” என மாற்றப்பட்டு விட்டது.

அதனால் ஆயிரம் முறை நம் உறவுகளுக்கும் சுற்றத்தினருக்கும் போய் சொல்லி அனைவரது அன்புநிறைந்த வாழ்த்துகளோடும் செய்துகொள்வதே திருமணம் என்று சொன்னேன்.







திருமணம் தோன்றிய சூழல்.

செவ்வாய், 1 ஜனவரி, 2013

மகிழ்ச்சி இருக்கும் இடம் - UPSC EXAM TAMIL - புறநானூறு -195



        
ஒரு மரத்தில் அணில் ஒன்று தாவி விளையாடிக் கொண்டிருக்கும் போது தவறி கீழே நின்ற ஒநாயின் மீது விழுந்தது. ஓநாய்  அதைத் தன் வாயில் கவ்வி சாப்பிட முயற்சிக்கும்போது, தன்னை விட்டு விடுமாறு அணில் கேட்டது. அப்போது ஓநாய் ,''நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலை சொன்னால் உன்னை விட்டு விடுகிறேன்,''என்றது.
அணிலும்,''உன் பிடியில் நான் இருந்தால் எப்படி பதில் சொல்ல முடியும்?''என்று கேட்கவே ஓநாயும்  பிடியைத் தளர்த்தியது.உடனே மரத்தில் தாவி ஏறிய அணில், 
''இப்போது உன் கேள்வியைக் கேள்,''என்றது. 
ஓநாய் கேட்டது,''உன்னை விட நான் பலசாலி. ஆனால் என்னைவிட மகிழ்ச்சியாக மரத்தில் எப்போதும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கிறாயே! இது எப்படி சாத்தியம்?''
அணில் சொன்னது,''நீ எப்போதும் கொடிய செயல்களையே செய்கிறாய். அதுவே உன் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது அதனால் உன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. ஆனால் நான்  எப்போதும் யாருக்கும் எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை. மரங்களில் தானாகப் பழுத்த பழங்களை  மட்டுமே சாப்பிடுகிறேன். அதனால் என் மனதில் எப்போதும் கவலையில்லை.'' என்றது.

     இந்தக் கதையில் அணில் ஓநாயிடம்,  "உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை; உபத்திரவம் பண்ணாதே' என்று சொல்கிறது. இதே அறிவுரையை யாராவது உங்களிடம் சொல்லியிருப்பார்கள், இல்லாவிட்டால் நீங்களாவது யாரிடமாவது கூறியிருப்பீர்கள். இந்த சிந்தனை இன்று நேற்று தோன்றியதல்ல. சங்ககாலத்திலேயே இப்படியொரு பாடல் உண்டு.

“பல்சான்றீரே! பல்சான்றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
பயனில் மூப்பின் பல் சான்றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவீர் மாதோ
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே''
புறநானூறு -195
நரிவெரூஉத்தலையார்

மீன் முள்ளைப்போல் வெள்ளை நிற நரை முடியையும் அலை அலையாய் சுருக்கங்கள் விழுந்த கன்னங்களையும் உடைய சான்றோர்களே!

அதுவும் பயனுள்ள செயல் எதுவும் செய்யாமல் மூப்பெய்தியுள்ள சான்றோர்களே! கையிலே கூர்மையான மழுவாயுதத்தைக்கொண்ட எமன் உங்களைப் பாசக் கயிற்றால் பிணித்து இழுத்துச் செல்லும் போதுதான் வருந்துவீர்கள்!

உங்களால் நல்லது செய்ய முடியாமல் போனாலும் பரவாயில்லை; கெடுதல் செய்யாமல் இருக்கும் குணத்தையாவது பாதுகாத்திடுவீர்கள். அந்தச் செயல்தான் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருவது. அதுமட்டுமல்ல, உங்களை நல்வழிப்படுத்துவதும் அதுவாகவே இருக்கும் என்று அறிவுரை கூறுகிறார்.
 னப
நாம் எல்லோரும் மகிழ்வாக இருக்கவேண்டும் என்று விரும்புவோம். அதற்கு யாருக்கும் நல்லது செய்யவேண்டும் என்பதுகூட இல்லை, தீமை செய்யாமல் இருந்தாலே போதும் என்ற உயர்ந்த வாழ்வியல் அறத்தை எடுத்துரைக்கும் இந்த சங்கப்பாடல் சங்கத்தமிழரின் செம்மையான வாழ்வுக்குத் தக்க சான்றாகும்.


எமன் இருக்கிறாரா? இல்லையா? சொர்க்கம் உண்டா? இல்லையா? என்று ஆராய்வதை விட, நாம் மகிழ்வாக வாழ்ந்தால் சொர்க்கம், துன்பத்துடன் வாழ்ந்தால் அது நரகம் என்பதைப் புரிந்துகொண்டு, எமன் என்றசிந்தனை நம்மை அச்சுறுத்து நல்வழிப்படுத்தும் முயற்சி என்பதைப் புரிந்துகொண்டு,  இயன்றவரை நன்மை செய்துவாழவேண்டும் என்ற எண்ணத்தை நம்மனதில் விதைத்துச் செல்வதே இப்புலவரின் சிறந்த நோக்கம் என்பதைப் புரிந்துகொள்வோம்.