வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 15 ஜூலை, 2013

இன்று மறைமலையடிகள் பிறந்தநாள்.

இன்று மறைமலையடிகள் பிறந்த நாளாகும். நான் கல்லூரியில் பயின்ற  காலத்தில் வேதாசலம் என்ற தன் பெயர் வடமொழிப் பெயர் என்பதால் அதனைத் தமிழில் மறைமலையடிகள் என்று மாற்றிக்கொண்டனர் என்ற செய்தி என்னைப் பெரிதும் கவர்ந்தது. மறைமலையடிகள் படைப்புகளை மேலும் படிக்கப் படிக்கத் தமிழ்மொழி மீது மேலும் காதல் பிறந்தது.

மறைமலை அடிகள் (ஜூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள். குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுட்பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர்.

பிறப்பு

மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம். இவர் 1876 சூலை 15 ஆம் நாள் மாலை 6.35க்குப் திருக்கழுக்குன்றத்திலே பிறந்தார். இவர் தந்தையார் சொக்கநாதர், தாயார் சின்னம்மையார். தந்தையார் நாகப்பட்டினத்தில் அறுவை மருத்துவராய் பணியாற்றி வந்தார். பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் சிவன் வேதாசலரையும் , அம்மை சொக்கம்மையையும் வேண்டி நோன்பிருந்து பிள்ளைப்பேறு பெற்றதால், தம் பிள்ளைக்கு வேதாசலம் என்று பெயரிட்டார். பின்னர்த் தனித்தமிழ்ப்பற்று காரணமாக 1916-ல் தம் பெயரை மறைமலை (வேதம் = மறை, அசலம் = மலை) என்று மாற்றிக்கொண்டார். அவர் தம்முடை பிள்ளைகள் திருநாவுக்கரசு,நீலாம்பிகை தவிர மற்றவர்களின் வடமொழிப்பெயர்களைத், திருஞான சம்பந்தம்: அறிவுத்தொடர்பு, மாணிக்க வாசகம் : மணிமொழி, சுந்தரமூர்த்தி: அழகுரு, , திரிபுரசுந்தரி : முந்நகரழகி எனத் தனித்தமிழாக்கினார்.

மறைமலைஅடிகள், நாகையில் வெசுலியன் தொண்டு நிறுவனக் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளியில் நான்காம் படிவம் வரை படித்தார். அவருடைய தந்தையாரின் மறைவு காரணமாக அவரால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை. ஆனால்,நாகையில் புத்தகக் கடை வைத்திருந்த தமிழ்ப்புலமை மிகுந்த நாராயணசாமிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். 'சைவ சித்தாந்த சண்டமாருதம்' என்று புகழ் பெற்றிருந்த சோமசுந்தர நாயக்கர் அவர்களிடம் சைவ சித்தாந்தம் கற்றார்.
சென்னைக்கு வந்த பின்னர்க் கிறித்தவக் கல்லூரியில் வீ.கோ.சூரியநாராயண சாத்திரியாருடன் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.1905 இல் சைவ சித்தாந்த மகா சமாசம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் மாநாட்டுத் தலைமையையும் ஏற்றார். பல ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியபின், பல்லாவரத்தில் இராமலிங்க வள்ளலாரின் கொள்கைப்படி22.04.1911-இல் “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” தொடங்கினார். பின்னர் தனித்தமிழ் ஈடுபாட்டால் அதனைப் “பொதுநிலைக் கழகம் “ எனப் பெயர் மாற்றினார். திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திப் பல நூல்களை வெளியிட்டார்.மணிமொழி நூல்நிலையம் என்னும் நூல்நிலையத்தை உருவாக்கினார்.
இவர் காலத்தில் பல புகழ் பெற்ற தமிழறிஞர்கள் வாழ்ந்தனர். மனோன்மணீயம் இயற்றிய சுந்தரனார், பெரும்புலவர் கதிரைவேலர், திரு. வி. கலியாணசுந்தரனார், நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், ‘தமிழ் தாத்தா’ உ. வே. சாமிநாதையர், தணிகைமணி வ.சு.செங்கல்வராயர், ரசிகமணி டி. கே. சிதம்பரநாதர், பேராசிரியர் ச. வையபுரியார், கோவை இராமலிங்கம், சுப்பிரமணிய பாரதியார், மீனாட்சி சுந்தரனார், பொத்தக வணிகரும் மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரனாரின் ஆசிரியரும் ஆன நாராயணசாமி, 'சைவசித்தாந்த சண்டமாருதம்' என்று புகழப்பட்ட சோமசுந்தர நாயகர், என்று பலர் வாழ்ந்த காலம்.

தனித்தமிழ் ஆர்வம்

  • சமயத்தொண்டுகள்
  • இந்தி எதிர்ப்பு

படைத்த நூல்கள்

  • பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் (1921)
  • மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை, இரு தொகுதிகள் (1933)
  • மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி (1927)
  • யோக நித்திரை: அறிதுயில் (1922)
  • தொலைவில் உணர்தல் (1935)
  • மரணத்தின்பின் மனிதர் நிலை (1911)
  • சாகுந்தல நாடகம் (சமசுகிருதத்தில் இருந்து மொழி பெயர்த்தது) (1907)
  • சாகுந்தல நாடக ஆராய்ச்சி (1934)
  • ஞானசாகரம் மாதிகை (1902)
  • Oriental Mystic Myna Bimonthly (1908-1909)
  • Ocean of wisdom, Bimonthly(1935)
  • Ancient and Modern Tamil Poets (1937)
  • முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் (1936)
  • முல்லைப்பாட்டு- ஆராய்ச்சியுரை (1903)
  • பட்டினப்பாலை-ஆராய்ச்சியுரை (1906)
  • சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் (1911)
  • முதற்குறள் வாத நிராகரணம் (1898)
  • திருக்குறள் ஆராய்ச்சி (1951)
  • முனிமொழிப்ப்ரகாசிகை (1899)
  • மறைமலையடிகள் பாமணிக் கோவை (பாடல்கள்) (1977)
  • அம்பிகாபதி அமராவதி (நாடகம்) (1954)
  • கோகிலாம்பாள் கடிதங்கள் (புதினம்) (1921)
  • குமுதவல்லி: அல்லது நாகநாட்டரசி (புதினம்) (1911)
  • மறைமலை அடிகள் கடிதங்கள் (1957)
  • அறிவுரைக் கொத்து (1921)
  • அறிவுரைக் கோவை (1971)
  • உரைமணிக் கோவை (1972)
  • கருத்தோவியம் (1976)
  • சிந்தனைக் கட்டுரைகள் (1908)
  • சிறுவற்கான செந்தமிழ் (1934)
  • இளைஞர்க்கான இன்றமிழ் (1957)
  • திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை (1900)
  • மாணிக்க வாசகர் மாட்சி (1935)
  • மாணிக்க வாசகர் வரலாறும் காலமும் (இரு தொகுதி) (1930)
  • மாணிக்க வாசகர் வரலாறு (1952)
  • சோமசுந்தரக் காஞ்சியாக்கம் (1901)
  • சோமசுந்தர நாயகர் வரலாறு (1957)
  • கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா (1968)
  • திருவாசக விரிவுரை (1940)
  • சித்தாந்த ஞான போதம், சதமணிக்கோவை குறிப்புரை (1898)
  • துகளறு போதம், உரை (1898)
  • வேதாந்த மத விசாரம் (1899)
  • வேத சிவாகமப் பிராமண்யம் (1900)
  • Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge (1940)
  • சைவ சித்தாந்த ஞானபோதம் (1906)
  • சிவஞான போத ஆராய்ச்சி (1958)
  • Can Hindi be a lingua Franca of India? (1969)
  • இந்தி பொது மொழியா ? (1937)
  • Tamilian and Aryan form of Marriage (1936)
  • தமிழ் நாட்டவரும், மேல்நாட்டவரும் (1936)
  • பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் (1958)
  • வேளாளர் நாகரிகம் (1923)
  • தமிழர் மதம் (1941)
  • பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் (1906)
ஆகிய 54 நூல்களை எழுதியுள்ளார்.


(தரவுகள் பெற்ற இடம் - தமிழ் விக்கிப்பீடியா (நன்றி))

ஞாயிறு, 7 ஜூலை, 2013

விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுவோர்?

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகென்று பெயருமிட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும் என்ற கண்ணதாசன் பாடல்தான் நினைவுக்கு வருகிறது..


விலை ஏற்றம் சில நன்மைகள்

செவ்வாய், 18 ஜூன், 2013

சங்கஇலக்கியக் காட்சிப்பதிவு -பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்



சங்கஇலக்கியப் பாடல்களைப் படிக்கும்போது அக்கால மக்களின் வாழ்வியல், சுற்றுச்சூழல் ஆகியன மனக்கண்முன் நிற்கும். அக்காட்சிகள் என்றும் நினைவில் நிற்கும் அளவுக்கு, பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் அவர்கள் தமிழரின் பெருமைகளை சின்னச்சின்ன ஓவியங்களாக வரைந்து சிறுவிளக்கங்களுடன் மிக அழகாக விளக்கியுள்ளார். இதன் வழியாக,


சங்ககாலக் கட்டிடக்கலை மரபு
சங்ககால சிற்பக்கலை
போர்மரபு
இசைமரபு
தாவரவியல் அறிவு
போன்ற பல்வேறு செய்திகள் மனதில் பதியுமாறு விளக்கப்பட்டுள்ளன.

திங்கள், 17 ஜூன், 2013

தமிழர் பெருமைகள் (பெருந்தச்சன் தென்னன் மெய்மன்)

பழந்தமிழ் இலக்கியங்கள் தமிழரின் வரலாற்று ஆவணங்களாகத் திகழ்கின்றன. பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் அவர்கள் பழந்தமிழ்இலக்கியங்களில் காணக்கிடைக்கும் பல அரியசெய்திகளை ஓவியங்களாகவும் சிறுசிறு விளக்கங்களாகவும் வழங்கிவருகிறார். இவர்தரும் செய்திகளைப் பார்க்கும்போது நாம் தமிழ் என்னும் நம் மொழியை மட்டும் தொலைக்கவில்லை, நமது மிகப்பெரிய வரலாறையும்,நமது பெருமைகளையும் தொலைத்திருக்கிறோம் என்ற எண்ணமே தோன்றுகிறது.


வெள்ளி, 14 ஜூன், 2013

உலகின் தலைசிறந்த ஏழு மருத்துவர்கள்


  1. தண்ணீர்
  2. காற்று
  3. அளவான உணவு
  4. பரிதியின் ஒளி (சூரியஒளி)
  5. உடற்பயிற்சி
  6. ஓய்வு
  7. நல்ல நண்பர்கள்

இன்றைய அறிவியல் உலகில், அன்றாட வாழ்வியல் கூறுகள் பல மாறிவிட்ட சூழலில் இந்த ஏழு மருத்துவர்களையும் நாம் இழந்துவிட்டோமோ என்றுதான் தோன்றுகிறது.

தண்ணீர் – நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும், பருவமழை தவறியதாலும் இன்றைய சூழலில் தண்ணீரும் தனியார் மருத்துவமனைகளைப் போல விலைமதிப்புமிக்கதாகிவிட்டது.

காற்று – காடுகளை அழித்ததாலும், விவசாயத்தை மறந்ததாலும் காற்றும் கூட இன்று மின்விசிறி, குளிரூட்டி என பெயர் மாற்றிக்கொண்டது. எதிர்காலத்தில் குழந்தைகளிடம் காற்று எங்கிருந்து வரும் என்று கேட்டால் குழந்தைகள் கண்களை மூடிக்கொண்டு காற்று மின்விசிறியில் இருந்து வரும் என்றுதான் கூறுவார்கள்.

அளவான உணவு– வேலைக்குச் செல்லும் அவசரத்தில் இன்று என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று கூட பலர் நினைவு வைத்திருப்பதில்லை. இச்சூழலில் அளவான உணவு என்பது அளவில்லாத ஆசை என்றுதான் தோன்றுகிறது.

பரிதியின் ஒளி – ஓசோன் படலம் முழுவதும் இல்லாமல் போய்விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு பரிதியின் ஒளி, உயிர்களை வாட்டி வதைக்கிறது. எதிர்காலத்தில் ஓசோன் படலம் போல செயற்கையாக ஏதாவது படலத்தை உருவாக்கினால்தான் பூமியில் வாழமுடியுமோ என்று தோன்றுகிறது.

உடற்பயிற்சி – வீடு விற்பனைக்கு என்ற பெயரில் விளைநிலங்களைக் கூட பட்டா போட்டு விற்றுவருகிறார்கள். அதனால் விளையாட்டுத் திடல்களெல்லாம், வீடுகளாக மாறிவருகின்றன. எதிர்காலத்தில் பள்ளிக்கூடங்களில் எல்லாம் விளையாட்டுப் பாடவேளை என்பது கணினிக்கூடங்களில் விளையாடும் விளையாட்டுதான் என்று மாறிப்போகலாம்,

ஓய்வு  – ஏறிவரும் விலைவாசி உயர்வுக்குத் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஏழை, நடுத்தர மக்கள் கூடுதலாக உழைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஓய்வு என்பது மரணம் மட்டுமே என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நல்ல நண்பர்கள்  – பகக்கத்தில் இருக்கும் நண்பர்களைவிட முகநூலிலேயே நண்பர்களைத் தேடும் இந்தக் காலத்தில் நல்ல நண்பர் யார் என்பதற்கான இலக்கணமே மாறிவிட்டது. இன்றைய தலைமுறையினர் இன்பதுன்பங்களை அக்கம்பக்கத்து நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வதைவிட சமூகதளங்களில் பகிர்ந்துகொள்வதையே பெரிதும் விரும்புகின்றனர்.

இவ்வாறு மாறிப்போன காலச்சூழலில் இந்த தலைசிறந்த ஏழு மருத்துவர்களையும் நம் குழந்தைகளுக்கு நாம் அடையாளம் காட்டவேண்டும்.

ஏனென்றால் இன்றைய சூழலிலில் “ மருத்துவத்துறை நோய்வாய்ப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கு மருத்துவம் பார்க்கத்தான் மருத்தவர்கள் இல்லை.”

அதனால்,

  • தண்ணீர் குடித்தால் தலைவலி, வயிற்றுவலி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தீரும்..
  • நல்ல காற்று நலமான வாழ்வுக்கு அடிப்படையானது
  • அளவான உணவே நோயற்ற வாழ்வு
  • அதிகாலைப் பரிதியின் ஒளி உடலுக்கு நல்லது.
  • நம் மனம் நினைப்பதை உடல் செய்ய உடற்பயிற்சி தேவை!
  • ஓய்வு மனித இயந்திரத்தை புத்துணர்வுடன் செயல்படவைக்கும்.
  • கூகுளில் தேடினாலும் கிடைக்காத நண்பர்கள் நம் அருகே இருக்கிறார்கள்.

என்னும் உண்மைகளை  இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்வோம் நண்பர்களே..

தொடர்புடைய இடுகைகள்

காற்று ஆணா? பெண்ணா?
இயற்கைக்கும் மனிதனுக்குமான 20/20