வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 5 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 81. பழைமை

 


பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்

கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. - 801

நண்பர் உரிமையுடன் செய்வதை எந்நிலையிலும் ஏற்பதே பழைமை 

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு

உப்பாதல் சான்றோர் கடன்.- 802

உரிமைச் செயலே நட்புக்கு அழகு. அதை ஏற்பது சான்றோரின் கடன் 

பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை

செய்தாங்கு அமையாக் கடை. - 803

உரிமையுடன் செய்யாவிட்டால் நெடுநாள் நட்பில் பயனில்லை 

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்

கேளாது நட்டார் செயின். - 804

கேட்காமல் செய்யும் நண்பரின் செயலையும் விருப்புடன் ஏற்றுக்கொள்

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க

நோதக்க நட்டார் செயின். - 805

அறியாமையாலும், உரிமையாலும் நண்பர் எது செய்தாலும் வருந்தாதீர்

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்துத்

தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. - 806

நெடுநாள் நட்பை போற்றுவோர் அவர் செய்த தவறுக்காக  நீங்கார்     

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்

வழிவந்த கேண்மை யவர். - 807

அன்புடன் பழகியோர் பெருந்தீங்கு செய்தாலும் பொறுத்திருங்கள்

கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு

நாளிழுக்கம் நட்டார் செயின். - 808

தன் தவறை விட்டுக்கொடுக்காத நண்பர் தவறு செய்யும் நாள் நன்னாள்

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை

விடாஅர் விழையும் உலகு. - 809

நெடுநாள் நட்பை கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும். 

விழையார் விழையப் படுப பழையார்கண்

பண்பின் தலைப்பிரியா தார். - 810

பழைய நட்பை விடாதவர்களை பகைவரும் விரும்புவர்

புதன், 4 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 80. நட்பாராய்தல்

 


நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு. -791

நண்பரை தேர்ந்தபின் பிரிய இயலாது அதனால் ஆராய்ந்து நட்பு கொள்

ஆய்ந்தாய்த்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை   

தான்சாம் துயரம் தரும். - 792

ஆராயாமல் கொள்ளம் நட்பு அழிவிற்கே அடித்தளமாகும்           

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா

இனனும் அறிந்துயாக்க நட்பு. - 793

குணம், குடி, குற்றம், சுற்றம் ஆகியன ஆராய்ந்து நட்பு கொள்

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்

கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. - 794

நற்குடிப் பிறந்து பழிக்கு அஞ்சுவோரை எதைக் கொடுத்தும் நண்பராக்கு

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய

வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.- 795

அழவைத்தோ, அடித்தோ நல்வழி நடத்துவோரை நண்பராகக் கொள்க

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்.- 796

துன்பமே நண்பரையும், நட்பின் ஆழத்தையும் அளக்கும் நற்கருவி   

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்

கேண்மை ஒரீஇ விடல். - 797

ஒருவருக்கு ஊதியம் என்பது அறிவில்லாதாரின் நட்பை விடுவதே   

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க

அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.- 798

ஊக்கம் நீக்கும் செயல்களையும், துன்பத்தில் நீங்கும் நட்பையும் விடுக

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

உள்ளினும் உள்ளஞ் சுடும்.- 799

துன்பத்தில் உதவாத நட்பு சாகின்ற காலத்திலும் துன்பம் தரும்      

மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்

ஒருவுக ஒப்பிலார் நட்பு.- 800

நல்லார் நட்பை நீங்காதே, தீயோர் நட்பை ஒன்று கொடுத்தும் நீக்குக

 

செவ்வாய், 3 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 79. நட்பு


 செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு. - 781

கேடுவராமல் காக்கும் நல்ல நட்பைப் பெறுவதே அரிய செயல்     

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்நீர பேதையார் நட்பு. - 782

சான்றோர் நட்பு வளர்பிறை! கீழோர் நட்போ தேய்பிறை!       

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு. - 783

நல்ல நூலிலும், நல்ல நண்பர்களிடமும் நாளும் பல கற்கலாம்  

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்செனறு இடித்தற் பொருட்டு. - 784

சிரிப்பதற்காக அல்ல நட்பு, தவறை அறிந்து உடன் கண்டிப்பதற்கே 

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாங் கிழமை தரும்.- 785

தொடர்பும், பழக்கத்தையும்விட ஒத்த  மன உணர்வே போதுமானது  

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு. - 786

முகத்தால் சிரிப்பது நட்பல்ல! நெஞ்சத்தால் சிரிப்பதே நட்பு            

அழிவி னவைநீக்கி ஆறுய்தது அழிவின்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு.- 787

அழிவிலிருந்து நீக்கி நல்லவழி நடத்துவதே நட்பு                    

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு. -788

மானத்தைக் காக்கும் கைபோல, துன்பத்தில் துடித்தெழுவதே நட்பு 

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி            

ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. - 789

இயன்றபோதெல்லாம் துணை நிற்பதே நட்பு                         

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று

புனையினும் புல்லென்னும் நட்பு.- 790

இவர் எமக்கு இத்தன்மையர் என விவரிக்க இயலாததே நட்பு 

திங்கள், 2 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 78. படைச் செருக்கு

 


என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை

முன்நின்று கல்நின் றவர். -771

நடுகற்களாக  நிற்கவிரும்பினால் எம் தலைவன் முன் நில்லுங்கள்   

கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது. - 772

முயலை எய்த அம்பைவிட, யானையைத் தவறவிட்ட வேல் சிறந்தது

பேராண்மை என்ப தறுகண்உன் றுற்றக்கால்

ஊராண்மை மற்றதன் எஃகு. - 773

பகைவரானாலும் அவரின் துன்பத்தில் உதவுவதே பேராண்மை

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா நகும். - 774

தன் மேல் தைத்த வேல் கண்டு வருந்தாமல் மகிழ்பவனே வீரன்

விழித்தகண் வேல்கொண்டா டெறிய அழித்திமைப்பின்

ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. - 775

வேல் எறிந்தாலும் கண் இமைக்காமல் சினந்து நோக்குவதே வீரம்

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்

வைக்கும்தன் நாளை எடுத்து.- 776

போரில் விழுப்புண்பெறாத நாட்களை வீணாகக் கருதுபவனே வீரன்  

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்

சுழல்யாப்புக் காரிகை நீர்த்து. - 777

உயிரைவிட புகழே பெரிது என, கழலைக் காலில் அணிபவனே வீரன் 

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்

செறினும் சீர் குன்றல் இலர். - 778

அரசன் தடுத்தாலும் வீரத்தில் தளராதவரே சிறந்த வீரர்  

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே

பிழைத்தது ஒறுக்கிற் பவர். - 779

சத்தியம் செய்தபடி துணிந்து போராடும் வீரரை கண்டிப்பார் யார்?  

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு

இரந்துகோள் தக்கது உடைத்து.                   780

அரசனே கண்ணீர் வீடும் அளவு பெறும் மரணமே வீரமரணம்

ஞாயிறு, 1 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் -77. படைமாட்சி


 

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்

வெறுக்கையுள் எல்லாம் தலை. - 761

நால்வகைப் படைகளைவிட சிறந்த செல்வங்கள் வேறு இல்லை

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்

தொல்படைக் கல்லால் அரிது. - 762

அஞ்சாமல், மனவுறுதியுடன் போரிடுதல் பழம்பெரும்படைக்கு அணி   

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை   

நாகம் உயிர்ப்பக் கெடும். - 763

கடல்போல எலிகள் கூட்டமிருந்தாலும் நாகத்தின் முன் நிற்கமுடியுமா

அழிவின்று அறைபோகா தாகி வழிவந்த

வன்க ணதுவே படை. - 764

எதிரிகளின் சதிக்குப் இரையாகமல், அஞ்சாமையுடையதே படை      

கூற்றடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்

ஆற்ற லதுவே படை. - 765

எமன் வந்தாலும் கூடிநின்று எதிர்க்கும் ஆற்றல் பெற்றதே படை

மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு. - 766

வீரம், மானம், நடத்தை, நம்பிக்கை ஆகியன படைக்குப் பாதுகாப்பு

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த

போர்தாங்கும் தன்மை அறிந்து. -767

போரில் தடைகளைக் கடந்து முன்னேறுவதே சிறந்த படை

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை

படைத்தகையால் பாடு பெறும். - 768

வீரத்தையும், ஆற்றலையும் வெளிப்படுத்துவதே படை அணிவகுப்பு    

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்

இல்லாயின் வெல்லும் படை.- 769

சிறுமை, வெறுப்பு, வறுமை இல்லாததே நல்ல படை 

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை

தலைமக்கள் இல்வழி இல். -770

சிறந்த படையானாலும் அதன் வலிமை தலைமையாலே சிறப்படையும்