வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 3 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 79. நட்பு


 செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு. - 781

கேடுவராமல் காக்கும் நல்ல நட்பைப் பெறுவதே அரிய செயல்     

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்நீர பேதையார் நட்பு. - 782

சான்றோர் நட்பு வளர்பிறை! கீழோர் நட்போ தேய்பிறை!       

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு. - 783

நல்ல நூலிலும், நல்ல நண்பர்களிடமும் நாளும் பல கற்கலாம்  

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்செனறு இடித்தற் பொருட்டு. - 784

சிரிப்பதற்காக அல்ல நட்பு, தவறை அறிந்து உடன் கண்டிப்பதற்கே 

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாங் கிழமை தரும்.- 785

தொடர்பும், பழக்கத்தையும்விட ஒத்த  மன உணர்வே போதுமானது  

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு. - 786

முகத்தால் சிரிப்பது நட்பல்ல! நெஞ்சத்தால் சிரிப்பதே நட்பு            

அழிவி னவைநீக்கி ஆறுய்தது அழிவின்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு.- 787

அழிவிலிருந்து நீக்கி நல்லவழி நடத்துவதே நட்பு                    

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு. -788

மானத்தைக் காக்கும் கைபோல, துன்பத்தில் துடித்தெழுவதே நட்பு 

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி            

ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. - 789

இயன்றபோதெல்லாம் துணை நிற்பதே நட்பு                         

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று

புனையினும் புல்லென்னும் நட்பு.- 790

இவர் எமக்கு இத்தன்மையர் என விவரிக்க இயலாததே நட்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக