வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 8 செப்டம்பர், 2010

கர்வம் அழிந்தது.



நான் மறையைக் கற்றவனல்ல ஞானி!
நான் மறையக் கற்றவனே ஞானி!

என்பது முதுமொழி.

நான் என்னும் அகந்தையையின்றி வாழ்வது எல்லோராலும் இயலாதவொன்றாகும். இருந்தாலும் அவ்வாறு இருக்க முயல்பவர்கள் தங்களை ஞானிகள் என்று சொல்லிக்கொள்ளக் கூடத்தேவையில்லை. எல்லோரும் அவர்களை ஞானி என்றுதான் உணர்வார்கள்.கதை ஒன்று…………



அறிஞன் ஒருவன் இருந்தான் அவனுக்கு தான் மிகவும் அறிவாளி என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. யாராக இருந்தாலும் அவர்களை கேள்வி கேட்டே மடக்கிவிடமுடியும் என்று தன்மீது மிகுந்த கர்வம் கொண்டிருந்தான்.

இவன் கர்வத்தை அழிப்பதற்காகவே காலம் ஒரு சூழலை உருவாக்கித்தந்தது.

ஒருநாள் கிராமத்தின் வழியே சென்றுகொண்டிருந்த அறிஞன், அவ்வழியில் மாடுமேய்த்துக் கொண்டிருந்த இளைஞனைப் பார்த்தான். நல்ல அறிவாளிகளே நான் கேள்வி கேட்கிறேன் என்றால் பேரச்சம் கொள்வார்கள். இவன் படிப்பறிவில்லாதவன் இவன் தன்கேள்விகளுக்கு அஞ்சுவதைப் பார்த்து இரசிக்கவேண்டும் என்று விரும்பினான்.

அறிஞன் : உன்னிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன்.

மாடு மேய்க்கும் இளைஞன் : (தயக்கமே இன்றி) கேளுங்கள்……..


அறிஞன் : (என்னடா இது அறிஞர்களே அஞ்சும் தன்னிடம் இவன் எந்த அச்சமுமின்றி கேள்வி கேளுங்கள் என்கிறானே! என்ற கேள்வியுடன்…)

1. “உலகில் உள்ள ஒளிகளில் சிறந்த ஒளி எது?

மாடு மேய்க்கும் இளைஞன் : சூரிய ஒளி! அதற்கு மேற்பட்ட ஒளியே இல்லையே!

அறிஞன் : 2.உலகின் சிறந்த நீர் எது?

மாடு மேய்க்கும் இளைஞன் : கங்கை நீர்! சிவன் தலையிலிருந்தும். விட்ணுவின் பாதத்திலிருந்தும் வந்து அதில் மூழ்கியவர்களுக்கு வீடுபேறளிக்கும கங்கை நீரைவிட சிறந்த நீர் வேறென்ன இருக்கமுடியும்?

அறிஞன் : 3. உலகின் சிறந்த மலர் எது?

மாடு மேய்க்கும் இளைஞன் : தாமரை மலர்! தேவதேவியரும் வீற்றிருக்கும் மலரை விட சிறந்த மலர் வேறேது? என்றான்..


அறிஞன் : ( இவனை படிப்பறிவில்லாதவன் வெறுங்குடம் என்றல்லவா எண்ணினேன். இவன் நிறைகுடம் என்று தெளிந்தான் அறிஞன்… ) உன் அறிவை மெச்சுகிறேன் இந்தா என்னுடைய விலையுயர்ந்த முத்துமாலை என்று பரிசளித்தான்…..

மாடு மேய்க்கும் இளைஞன் : (அறிஞனின் மிச்சம் மீதியிருக்கும் கர்வத்தையும் சம்மட்டியால் அடித்து நீக்க எண்ணி…) ஐயா நான் இந்தப் பரிசுக்குத் தகுதியல்லாதவன் அதனால் வேண்டாம். ……….

ஏனென்றால் நான் சொன்ன பதில்கள் மூன்றும் தவறானது..

அறிஞன் : (திகைத்து நின்ற அறிஞன் பேச்சின்றி விழித்தான்) என்னப்பா சொல்கிறாய் இதற்கு மேலும் இந்தக் கேள்விக்கு வேறு பதிலே இல்லையே!

மாடு மேய்க்கும் இளைஞன் : ஐயா…

2. சூரிய ஒளி சிறந்தது தான் இருந்தாலும் அந்த ஒளியைப் பார்ப்பதற்குக்கூட நம் கண்ணில் ஒளி வேண்டும்.. அதனால் கண்ணொளி சூரிய ஒளியைவிட உயர்வானது.
3. கங்கை நீர் புனிதமானது தான்.. இருந்தாலும் அதனை எல்லா நாட்டினரும், சமயத்தாரும் ஏற்பார்களா? அதனால்…..
தாகத்தோடு இருக்கும் ஒருவனுக்கு…..

கிடைக்காத கங்கை நீர் - கிடைத்த சிறிதளவு நீர்

என ஒப்பிட்டு நோக்கினால் கங்கை நீரை உயர்வானது எனக் கருதமுடியாது.

4. தாமரை மலருக்குப் பல சிறப்புகள் இருந்தாலும். நீரைவிட்டு வெளியே எடுத்தால் தாமரை வாடிவிடும்.. உண்மையில் மலர்களில் சிறந்தது பருத்திமலர்தான். அதிலிருந்து கிடைக்கும் நூலில் நெய்யப்படும் ஆடைகள் மக்களின் மானத்தையல்லவா நாள்தோறும் காக்கிறது. பருத்திமலரை விடத் தாமரை எந்த விதத்தில் மக்களுக்குப் பயன்டும் சிறந்த மலராகமுடியும்?


அறிஞன் : (தன் கர்வம் முற்றிலும் அழிந்த நிலையில் தலை தாழ்த்தி உண்மையை ஏற்றுக்கொண்டு விடைபெற்றான்)


இந்தக் கதையில் கேட்ட கேள்விக்கான பதில்கள் சரி - தவறு என்று நாம் சிநத்திப்பதைவிட….

அந்த அறிஞனின் கர்வத்தை அழிக்கும் ஆயுதமாக இந்த பதில்கள் அமைந்தன என்று சிந்திப்பது மிகவும் சரியான புரிதாலாக இருக்கும்.

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

நாழிகைக் கணக்கர்.



பழமழையால் பதம் கெட்ட எள்ளின்காய், சின்மழையால் இனிதாக விளங்கினார்போல, களவுக்காலத்துத் தலைவன் இரவினும் பகலினும் பலரறிய வருதலால் ஊரில் அலர் எழ வருந்திய தலைவி, சில நாள் வருதலால் இனிமை பெற்றனள்.

சேற்றிலே நிற்றலை வெறுத்த சிவந்த கண்களையுடைய எருமை இருள் செறிந்த நடுஇரவில் “ஐ“ என்ற ஒலியுடன் சேற்றைவிட்டு வெளியே வரவோ, தம் துணையை எண்ணியோ கரையும். அவ்வொலி தலைவியின் தனிமைத் துயரை மிகுவி்ப்பதாக அமையும்.

(எருமை சேற்றைவிட்டு வெளியே வர எண்ணுவதுபோலத் தலைவியும் இற்செறிப்பிலிருந்து விடுதலை பெற்று தலைவனுடன் உடன்போக்கில் செல்ல எண்ணினாள்.)

இத்தகைய அச்சத்தைத் தரும் கூதிர்ப்பருவத்தும் என்னுடைய நெஞ்சு வருந்திப் புண்பட்ட துன்பம் காரணமாக, ஊர்க்காப்பாளர் இரவில் துயிலாது நாழிகையை எண்ணிக் கொண்டிருப்பதுபோல என் கண்கள் துயிலாவாயின என்று தோழியிடம் சொல்கிறாள் தலைவி.

பாடல் இதோ…



குறிஞ்சி - தலைவி கூற்று

பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய
சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயற் கடைநாள்
சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
நள்ளென் யாமத் தையெனக் கரையும்
அஞ்சுவரு பொழுதி னானு மென்கண்
துஞ்சா வாழி தோழி காவலர்
கணக்காய் வகையின் வருந்தியென்
நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் தானே.

குறுந்தொகை -261
-கழார்க் கீரனெயிற்றியார்.

(இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தலைமகள் தோழிக்குச் சொல்லவாளாய் சொல்லியது.)


நுண்பொருள் விளக்கம்.


பழமழை
- கார் காலத்தில் தோன்றும் முதல் மழை, புதுப்பெயல் எனவும்,இளமழை எனவும் அழைக்கப்படும். அக்காலத்தில் தொடர்ந்து பெய்யும் மழை “பழமழை“ எனப்படும்.

சிதட்டுக்காய்
- எள்ளிற்கு அதிக மழை பெய்தால் காய்கள் பதனிழந்து உள்ளீடற்றுப்போகும். உள்ளீடற்ற காய்களைச் சிதட்டுக்காய் என்பர்.

அலர்
- தலைமக்களின் காதலையறிந்த ஊரார் பேசும் மொழி.

இற்செறி்த்தல் - தலைவியின் காதலையறிந்த பெற்றோர் அவளை வீட்டுக்காவலில் வைத்திருத்தல்.


உடன்போக்கு
- பெற்றோருக்குத் தெரியாமல் தலைவி தலைவனுடன் வீட்டை நீங்கிச் செல்லுதல்.

பாடல் வழி…


² இப்பாடலில்,
அக வாழ்வியில் அழகாக இயம்பப்படுவதுடன்,
நாழிகைக் கணக்கர் பற்றிய குறிப்பும் வருகிறது.

² காவலர்
கணக்காய் வகையின் வருந்தியென்
நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் தானே.

என்னும் அடிகளில் உறங்காது நேரத்தைக் கணக்கிடும் நாழிகைக் கணக்கர்களைப் போலத் தம் கண்ணும் கண் மூடி உறங்க மறுக்கிறது என்கிறாள் தலைவி.

இக்கூற்று அக்காலத்தில் நாழிகைக் கணக்கிடுதற்கு என்று கணக்காளர்கள் இருந்த மரபை அறிவுறுத்துவதாகவுள்ளது.

திங்கள், 6 செப்டம்பர், 2010

தெரியவேண்டிய தமிழர்பண்பாடு.


திருச்செங்கோடு அருகே உள்ள பள்ளியிலிருந்து 10 பேர் கொண்ட மாணவியர் குழு ஜப்பான் சென்று வந்தது. அவர்களின் கல்விமுறை, பண்பாடுகளைத் தெரிந்து கொள்வதற்காக இவர்கள் அங்கு சென்றனர். திரும்பிய மாணவிகளின் ஒருவர் பேட்டி ஒன்றில் சொல்கிறார்….

ஜப்பானியர்களின் மொழிப்பற்று, நாட்டுப்பற்று, அவர்களின் பண்பாடுகளில் அவர்கள் கொண்ட ஆர்வம், கல்வி முறை ஆகியன வியப்படையச் செய்வதாக இருந்தது என்று!

தம் தாய் மொழியையே விரும்பிப் பேசும் அவர்கள் ஆங்கிலம் பேசுவதை அவ்வளவு விரும்பவில்லை. தகவல் தொடர்பின் தேவைகருதியே ஆங்கிலம் பேசுகிறார்கள். அவர்கள் பண்பாடுகளை எங்களிடம் சொல்லுவதில் அவர்களுக்கிருந்த ஆர்வம். நம் பண்பாடுகள் மீது நாம் இன்னும் பற்றுவைக்கவேண்டும் என்பதை அறிவுறுத்துவதாக இருந்தது. மேலும் அவர்களின் கல்விமுறை…..

காலை முழுதும் தியரி வகுப்பும் மாலை முழுக்க செயல்முறை வகுப்புகளுமே இருந்தது.

என்று குறிப்பிடுகிறார்..


நாம் நம் பண்பாட்டை, மொழியை எந்த அளவுக்குத்,
தெரிந்து வைத்திருக்கிறோம்?
நேசிக்கிறோம்?
அடுத்தவருக்குச் சொல்வதில் பெருமைகொள்கிறோம்?

என்னும் பல கேள்விகளைத் தொடுப்பதாக இம்மாணவியின் கூற்று அமைகிறது..


சரி தமிழர் பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்றை இன்று காண்போம்….

“விருந்தோம்பால்“ நம் தொன்மையான பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்றாகும்.

அன்றைய காலத்தில் விருந்தோம்பல் வாழ்வியல் கடமைகளுள் ஒன்றாகப் போற்றப்பட்டது. அதன் எச்சமாகவே வீடுகளுக்கு வெளியே திண்ணைகள் இருந்தன…

ஆனால் இன்று திண்ணை வைத்த வீடுகளையே பார்ப்பது அரிதாகவுள்ளது!

அகப்பாடல் ஒன்று…..


முன்பு ஒரு காலத்தில் பொருள் தேடி மீண்ட தலைவன் மீண்டும் பொருள்தேடவேண்டும் என்று எண்ணினான். அப்போது அவன் தென் நெஞ்சிற்குச் சொல்லியதாக இப்பாடல் அமைகிறது.


நெஞ்சே வாழிய! பொருள் ஈட்டும் முயற்சியை மேற்கொண்டு இனி நாம் தலைவியைப் பிரிந்து போதலும் கூடுமோ?
அவ்வாறு பிரிவதாயினும் நான் கூறுவதனைக் கேட்பாயாக!!

நாள்தோறும் நாம் உறக்கத்தில் கனவு காணும்போது அக்கனவில் தோன்றும் பொருள்கள் யாவும் கனவு கலைந்தவுடன் மறைந்துபோகும் தன்மையன. அதேபோல, நனவிலும் இளமையது செலவும், முதுமையது வரவும் கிடைத்தற்கரிய சிறப்பினையுடைய காமவின்பத்தின் தன்மையும் ஆய இவையும் தோன்றி விரைந்து மறையும் பொய்களேயாம்.

இவ்வுண்மைகளை நீ அறியாய் போலும்!!

வெம்மையான கோடைக்காற்றானது செந்நிற மூங்கிலின் அசையும் தண்டினைத் தாக்கி, ஞெமை மரத்தின் இலைகளை உதிர்த்தது. அவ்விடத்தே, களர் நிலத்துப்பிறந்த புழுதியை வாரி எடுத்துச் சுழன்று அடித்தது.

அத்தகைய வேனில் நிலைபெற்ற வெஞ்சுரத்துக் காட்டினிலே, தளர்ந்த நடையினையுடைய இளைய பெண் மானுடன் கூடியிருந்த புள்ளிகளையும், அறல்பட்ட கொம்பினையும் உடைய ஆண்மான், நீர் பருகும் வேட்கையுடன் தழை உண்பதை கைவிட்டு, அருகிலிருக்கும் நீரற்ற குளம் நோக்கிச் சென்று உண்ணுநீர் பெறாது மெலிந்து தளர, நிழல் அற்ற மரங்கள் கொண்ட பாலை நிலத்து நெடுவழியை நாம் கடந்து செல்ல வேண்டும்.

நாள்தோறும் தொடர்ந்து வரும் விருந்தினரைப் பேணுதற்கு இல்லத்தின் முன்னர் இடப்பட்ட பந்தரின்கண் வறுமையுற்று வாடி வருவோரைப் பாதுகாத்து, தழைத்த கூந்தலில் தாழை மடல் சேர்த்து , பின்னி அழகுறுத்தி மகிழ்ச்சியுடன் புன்னகைத்து, பள்ளியறையில் பணிவான மொழிகள், கூறும் பொலிவுற்ற கூந்தலையும் பேரழகு கலன்களையும் உடைய நம் தலைவியின் பண்புகளைக் காட்டிடைச் செல்லும் நீ நினைந்து மயங்குவாய் அல்லவா?


கனவிலே பொருள்கள் தோன்றிக் கழிவது போல நனவிலும் நாட்கள் பிறந்து விரைந்து கழியும் தன்மையன என்றான். விருந்தோம்பியும் வறியார்க்கு அவர் வேண்டியதொன்றை வழங்கியும் இல்லறம் நடத்தும் நம் தலைிவியின் பண்புகளும் பள்ளியறைப் படுக்கயைில் நம்முடன் பேசும் குழலும் யாழும் அமிழ்தும் குழைதத்த மழலைக் கிளவியின் இனிமையும் பேரின்பம் தருவனவாதலின்,
ஆறலைப்போரும் ஊறுசெய் விலங்குகளும் துன்பம் தரும் கொடிய காட்டிடையே செல்கின்ற பொழுது அவ்வின்பத்தை நினைத்து நீ மீண்டு வரஎண்ணுவாய்.

நெஞ்சே தேடும பொருளைத் தேடி முடித்தோம். எனவே மீண்டு வருதல் அரிய இளமையும் இருதலையும் ஒத்த காமத்தையும் சேரப் பெற்ற யாம் எம் நெஞ்சு கலந்தொழுகும் அன்புடையாளைக் கைவிட்டுப் பொருளிடத்தே வேட்கை கொண்டு இனிப் செல்லம் எண்ணம் இல்லை எனத் தன் நெஞ்சை நோக்கிக் கூறினான் என்க.

பாடல் இதோ..



ஆள்வினைப் பிரிதலும் உண்டோ? பிரியினும்,
கேள், இனி வாழிய, நெஞ்சே! நாளும்
கனவுக் கழிந்தனையவாகி, நனவின்,
நாளது செலவும், மூப்பினது வரவும்,
5 அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும்,
இந் நிலை அறியாய்ஆயினும், செந் நிலை
அமை ஆடு அம் கழை தீண்டி, கல்லென
ஞெமை இலை உதிர்த்த எரி வாய்க் கோடை
நெடு வெண் களரி நீறு முகந்து சுழல,
10 கடு வெயில் திருகிய வேனில் வெங் காட்டு,
உயங்கு நடை மடப் பிணை தழீஇய, வயங்கு பொறி,
அறு கோட்டு, எழிற் கலை அறுகயம் நோக்கி,
தெண் நீர் வேட்ட சிறுமையின், தழை மறந்து,
உண்நீர் இன்மையின், ஒல்குவன தளர,
15 மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து,
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய
விருந்து ஒழிவு அறியாப் பெருந் தண் பந்தர்,
வருந்தி வருநர் ஓம்பி, தண்ணெனத்
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல்
20 வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி,
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை,
நம்மொடு நன் மொழி நவிலும்
பொம்மல் ஓதிப் புனையிழை குணனே?
மதுரை அளக்கரிஞாழார் மகனார் மள்ளனார்

அகநானூறு -353 (பாலை)




* “இல்லறக் கடமைகளில் தலைவனுக்கு உரிய பங்கு தலைவிக்கும் உண்டு. அவைனவிட மிகுதியான பொறுப்பும் உண்டு விருந்தோம்வுவது தலைவியின் கடமை என்றே கூறத்தக்கது. என்று தம் “ஓவச்செய்தி“ என்ற நூலில் மு. வரதராசனார் குறிப்பிடுவர்.

¯ இவ்வகப்பாடலில் விருந்தோம்பலின் சிறப்பு….


“விருந்து ஒழிவு அறியாப் பெருந் தண் பந்தர்,
வருந்தி வருநர் ஓம்பி, தண்ணெனத்
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல்“ என்னும் அடிகள் வழியாக...

நாள்தோறும் தொடர்ந்து வரும் விருந்தினரைப் பேணுதற்கு இல்லத்தின் முன்னர் இடப்பட்ட பந்தரின்கண் வறுமையுற்று வாடி வருவோரைப் பாதுகாத்து, தழைத்த கூந்தலில் தாழை மடல் சேர்த்து , பின்னி அழகுறுத்தி மகிழ்ச்சியுடன் புன்னகைத்து, பள்ளியறையில் பணிவான மொழிகள், கூறும் பொலிவுற்ற கூந்தலையும் பேரழகு கலன்களையும் உடைய நம் தலைவியின் பண்புகளைக் காட்டிடைச் செல்லும் நீ நினைந்து மயங்குவாய் அல்லவா?

என்னும் கருத்து எடுத்துரைக்கப்படுகிறது.

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

குரு வணக்கம்.










“ஆசிரியர்களிடம் மாணவர்கள் படிக்கிறார்கள்
ஆசிரியர்கள் மாணவர்களைப் படிக்கிறார்கள்“

“பெற்றோர்கள் குழந்தைகளை மட்டுமே உலகத்துக்குத் தருகி்ன்றனர்.
ஆனால் குருவோ உலகத்தையே குழந்தைகளுக்குத் தருகிறார்.“

Þ ஆசிரியர் நாள் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

→
இவர்….

(செப்டம்பர் மாதம் 5,ஆம் தேதி 1888ஆண்டில் - பிறந்தார்) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார்.
திருத்தணியில் பிறந்த ராதாகிருஷ்ணன், தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர். இவர், தன் இளமைக்காலத்தை திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். இவர் ஆசிரியராக பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவர் 42 டாக்டர் பட்டங்களைப் பெற்றவராவார். ஓர் ஆசிரியரான அவர், தனது நண்பர்களும் மாணாக்கரும் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என விரும்பியபோது, அந்நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.



Ø ஒரு ஆசிரியர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாகத் தம்பணியை நேசித்து அர்பணிப்பு உணர்வுடன் வாழ்ந்துகாட்டிய டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களை இவ்வேளையில் ஒப்புநோக்கி தம் பணியை சீர்தூக்கிப்ப பார்ப்பது ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும்.

Ø தமது வாழ்க்கையை வடிவமைத்த, வடிவமைக்கும் ஆசிரியர்களை நன்றியுடன் எண்ணிப்பார்ப்பது மாணாக்கர்களின் கடமையாகும்.


-------------/\--/\-------------------/\--/\--------------------/\--/\--