Friday, November 18, 2011

வரம் பெற்று வந்தவர்கள்..

தூக்கமும் ஒருவகையான பசிதானே..

வயிற்றுக்காக வாழும் வாழ்க்கையில் தூக்கத்தை கூட மாத்திரையாக விலைகொடுத்துத்தான் வாங்கும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

பசித்து உண்பவர்களும்..
படுத்தவுடன் உறங்குபவர்களும் “வரம் பெற்று வந்தவர்கள்தான்!  என்ன தவம் செய்து இந்த வரம் வாங்கிவந்தார்களோ என்று தான் எனக்குத் தோன்றும்.

பசியைக் கூட தண்ணீர் குடித்துத் தள்ளிப் போடலாம்..
தூக்கத்தை...
வந்தாலும் தள்ளிப்போட முடியாது!
வராவிட்டாலும் கயிறு கட்டி இழுக்கமுடியாது!

பசி உடல் சோர்வைத் தரும்!
தூக்கமின்மை மனச் சோர்வைத் தரும்!

உடல் சோர்வைப் போக்க இயல்பான உணவுமுறைகள் பலவற்றையும் நாமறிவோம்!

மனச்சோர்வைத் தீர்க்கும் தூக்கத்தைத் தரும் இயல்பான வழிமுறைகளை நாம் எந்த அளவுக்கு அறிவோம்...?


தூக்கத்தோடு ஒரு போராட்டம்..

சில நாட்கள் படுத்தவுடன் உறங்கிப் போகிறேன்..
சில நாட்கள் தூக்கம் கண்களை விட்டு வெகுதூரம் போய்விடுகிறது..

நானும் நிம்மதியாகத் தூங்க பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றிப் பார்த்திருக்கிறேன்..

1. தூங்குவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பாகவே கணினியையும்,  தொலைக்காட்சியையும் காண்பதை நிறுத்திவிடுகிறேன்..
2. அலைபேசியைக் கூட ஒலியவித்துத் தூரத்தில் வைத்துவிடுகிறேன்.
3. குளித்துவிட்டு உறங்கப் போகிறேன்.
4. புத்தகம் படித்துப் பார்க்கிறேன்.
5. மெல்லிசை கேட்டுப் பார்க்கிறேன்.

இப்படி ரும்பாடுபட்டு வரவழைத்த தூக்கத்தை...


எங்கோ செல்லும் தொடர்வண்டியின் ஒலி..
அடுத்த தெருவில் குரைக்கும் நாயின் ஒலி..
வீட்டுக்குள் எங்கோ குழாயிலிருந்து வீழும் நீர்த்துளி..
கடிகாரத்தின் தளர் நடை..
செல்லமாக கொசுக்கள் தரும் முத்தம்..
குளிர்சாதனப் பெட்டியின் மெல்லிய சத்தம்..

என ஏதேதோ வந்து பறித்துச் செல்கின்றன..!!

ன்ன கொடுமை இது...


மன அழுத்தம் காரணமாகவோ, 
பணிச்சுமை காரணமாகவோ, 
இடமாறுபாடு,
மின்சாரம் இல்லாமை என தூக்கத்துடன் போராடும் ஒவ்வொருவருக்கும் காரணங்கள் பலவாக இருக்கலாம்..

இருந்தாலும் போராட்டம் ஒன்றுதானே..

சரி நம் போராட்டம்தான் பெரிதா...
நம்மைவிட தூக்கத்துடன் போராடுவோர் வேறு யாருமே கிடையாதா..?

என்று கூட சில நேரங்களில் தோன்றும்...

தோ ஒரு சங்ககாலப்பெண் சொல்கிறாள்..

“என்னைவிடவா தூக்கத்துடன் நீங்க போராடறீங்க“ என்று...

பாடல் இதோ...

சிறைபனி உடைத்த சேயரி மழைக்கண்
பொறைஅரு நோயொடு புலம்பு அலைக் கலங்கி
பிறரும் கேட்குநர் உளர்கொல்? - உறைசிறந்து
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே

குறுந்தொகை -86
வெண்கொற்றன்
(ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு கிழத்தி சொல்லியது)

காலமோ கூதிர் காலம்
வாடைக் காற்றோ மிகுதியான மழைத்துளிகளுடன் வீசுகிறது.


பொழுதோ நல்ல இரவு..
யாவரும் நன்கு தூங்கிவிட்டனர்..
என் உயிர்த்தோழிகூட நன்றாக உறங்கிப்போனாள்..


நானோ தூக்கம் வராது தவித்துக்கொண்டிருக்கிறேன்..


இவ்வேளையில் வீட்டின் அருகே கட்டப்பட்ட பசுவைச் 
சுற்றிச் சுற்றி வந்து மாட்டு ஈ ஒலி எழுப்பி்கொண்டிருக்கிறது..
அதனால் ஈ ஒலிக்கும்போதெல்லாம் பசு தலையை ஆட்டிக்கொண்டிருக்கிறது..
அவ்வாறு பசு ஒவ்வொரு முறை தலையை அசைக்கும் போதெல்லாம்..
அதன் கழுத்தில் கட்டப்பட்ட மணி ஒலித்துக்கொண்டே இருக்கிறது..


தூக்கம் வராது, தலைவனைப் பிரிந்த துயரோடு இருக்கும் எனக்கு இந்த சின்னச்சின்ன ஒலிகூட மிகப் பெரிய ஒலியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறதே..


இதுவரை என் இமைகளால் தடுத்துவைக்கப்பட கண்ணீர் இமைகளைக் கடந்து துளித்துளியாக வீழ்கிறதே..


என் கண்களெல்லாம் தூக்கமின்மையால் செம்மையான கோடுகள் தோன்றக் காட்சியளிக்கிறதே..


இவ்வளவு துன்பத்திலும் என்னை விட்டுவிட்டு..
கார் பருவத்தில் வருவதாகச் சொல்லிச் சென்ற தலைவனோ இன்னும் வரவில்லையே என்று புலம்கிறாள் இந்தத் தலைவி..


இப்போ சொல்லுங்க நண்பர்களே இந்தத் தலைவியைவிடவா நாம் தூக்கத்துக்காகப் போராடுகிறோம்..

தமிழ்ச்சொல் அறிவோம்..

1. உறை - மழைத்துளி
2. ஊதை - வாடைக் காற்று
3. நுளம்பு - ஈ
4. உலம்புதல் - ஒலித்தல்
5. உளம்பும் - அசையும்
6. சிறைபனி - இமைகளால் தடுக்கப்பட்ட கண்ணீர்
7. நல்கூர் குரல் - பொருள் வறிதான குரல்.


தொடர்புடைய இடுகைகள்26 comments:

 1. இரவில் தூக்கம் வராது கிடக்கிறவர்களுக்கு
  மிகச் சிறிய சப்தம் கூட அலறலைப் போல்த்தான் இருக்கும்
  இதனை அழகாகச் சொல்லிச் செல்லுகிற பாடலை
  மிக அருமையான விளக்கத்தோடு பதிவாக்கித்
  தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
  த.ம 1

  ReplyDelete
 2. சில நேரங்களில் சுமை ஏற்றி செல்லும் லாரிகளில் மூட்டை மீது படுத்து செல்லும் தொழிலாளியை பார்த்திருக்கிறீர்களா? கரடு முரடான மூட்டை மேல் கொளுத்தும் வெயிலில் அனாயசமாக தூங்கி கொண்டு செல்வான்... எனக்கு அவன் மீது பொறாமை.. சில நேரம் வேலை, சிந்தனை, கேட்ட கேள்விகளுக்கு கிடைக்காத பதில்கள், பதில் தேடி அலையும் வினா நம்மை உறங்க விடாது.. ஆனால் என்றாவது ஒரு நாள் அயர்ந்து தூங்குவோம்.. சிந்தனை செய்பவர்களுக்கு தூக்கம் அவ்வளவு எளிதில் வராது தோழர்

  ReplyDelete
 3. துக்கம் தூக்கம் இரண்டுக்கும் ஒரு மாத்திரைதான் வேறுபாடு. இனடும் ஒன்றையொன்று தொட்டுத் தொடர்வது. அழகான பாடலும் விளக்கமும். நலமா இருக்கீங்களா குணா?

  ReplyDelete
 4. வாழ்வை இன்னும் ரசிக்கவேண்டும் .

  ReplyDelete
 5. Indiyavil kosu endu split atha Sri Lanka Vila nulampu endu soluvanka.sanka ilakkiyam e ia nulampu endu solluthu mm thamililum niraya vithiyasam

  ReplyDelete
 6. தூக்கமும் ஒரு கொடுப்பனவுதான் !

  ReplyDelete
 7. சிறந்த படைப்பாக்கம் ...
  அனைவருக்கும் கிட்டாத எட்டாக்கனி தூக்கம் ...
  பகிர்தலுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் முனைவரே

  ReplyDelete
 8. பல தெரியாத தமிழ் சொற்களை தெரிந்து கொண்டேன்.
  பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 9. @Ramani தங்கள் தொடர் வருகைக்கும் தமிழ் சுவைத்தலுக்கும் நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 10. gud eve sir i'm surendhar 2nd physics student. I want kesavan's kavithai

  ReplyDelete
 11. @suryajeeva ஆழமான புரிதல்.. மதிப்புமிக்க கருத்துரை..

  நன்றி நண்பா.

  ReplyDelete
 12. @ஆதிரா நான் நலமே.. தாங்களும் நலமாகவே இருப்பீர்கள் என நம்புகிறேன்..

  அழகான மதிப்பீடு..

  நன்றி ஆதிரா..

  ReplyDelete
 13. @நண்டு @நொரண்டு -ஈரோடு இந்த எண்ணம் வந்துவிட்டாலே வாழ்க்கையின் சுவை அதிகமாகிவிடும் நண்பரே..

  ReplyDelete
 14. @கவி அழகன் தங்கள் நாட்டு வழக்குத்தமிழை ஒப்பிட்டு அறிமுகம் செய்தமைக்கு நன்றி கவிஞரே.

  ReplyDelete
 15. வயிற்றுக்காக வாழும் வாழ்க்கையில் தூக்கத்தை கூட மாத்திரையாக விலைகொடுத்துத்தான் வாங்கும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
  உண்மை தான்
  அருமையான பதிவு

  ReplyDelete
 16. குளித்தீர்கள், தொலை பேசியவித்தீர்கள். ஆனால் ஒன்றே ஒன்று இடையில் தேகப்பயிற்சி செய்தீர்களா? பெரிதாக ஓடவேண்டாம். வீட்டுள்ளே பாடசாலையில் செய்யும் தலை,கழுத்து, இடை கை, கால் எனச் செய்யும் பயிற்சிகள் கூடப் போதும். ஆனால் செய்யும் எண்ணிக்கைகள் கூடவாக இருக்க வேண்டும். நித்திராதேவி தன்னாலே அணைப்பாள், நீங்கள் வேண்டாம் என்றாலும் கூட. எனது மந்திரம் இது தான். நல்ல இடுகை பாராட்டுகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 17. நல்லதொரு உடல்நலக்குறிப்பினைச் சொன்னீர்கள் திலகம்..

  நன்றி.

  ReplyDelete