வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 31 ஜனவரி, 2013

மாமலையும் ஓர் கடுகாம் !


கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்   என்பார் கவிஞர் பாரதிதாசன்.

மாமலைகூட ஓர் கடுகாகத் தெரியும் இந்தக் காதலர்களுக்கு, பெற்றோரிடம் அனுமதி பெறுவது என்பது மாமலையைத் தூக்குவது போல கடினமாகத் தெரிவதுதான் காதலின் விந்தை! 

தன் காதலைப் பெற்றோருக்குப் புரியவைத்து அவர்களின் அனுமதியோடு திருமணம் செய்துகொள்பவர்களுக்கு தம் வாழ்வில் எதிர்கொள்ளும் மலையளவு துன்பங்கள் கூட கடுகளவாகத் தெரியும்!

வாழ்க்கையிலிருந்து வந்ததுதான் இலக்கியம் என்றாலும்
இலக்கியத்துக்கும் வாழ்க்கைக்குமான இடைவெளி
மிகவும் பெரிது.

இலக்கியத்தையும் - வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த உண்மை புலப்படும்.

ஒரு காதலர் புலம்புகிறார்..
கைபேசியில்  துவங்கிய 
நம்  காதல் - உன் அண்ணன் 
கை பேசியதால் 
முறிந்தது .

#
என்னா அடி ???? என்று...
இன்னொரு காதலர் புலம்புகிறார்..
அருகம்புல் போல நாம் வளர்த்த காதலை
உங்க அப்பன் ஆடு மாடு போல மேய்த்து விட்டான் என்று...
காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை. அதனால் காதலர்களுக்கும் பெற்றோருக்குமான போராட்டங்களும் மாறுவதில்லை..
தம் பிள்ளைகளைப் பெற்றெடுத்துப் பார்த்துப் பார்த்து வளர்த்து ஆளாக்குவது மட்டும் பெற்றோரின் கடமையல்ல, இன்றைய பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு விலைமதிப்பு மிக்க அரிய பல பொருள்களைக் கூட எளிதாக வாங்கித் தந்துவிடுகிறார்கள். பெற்றோர்களால் காலந்தோறும் தம்பிள்ளைகளுக்குத் தரமுடியாத அரியது ஒன்று உள்ளது...
ஆம் நேரம் தான் அது. சிறிது நேரம் ஒதுக்கி அவர்களுக்குக் காதுகொடுத்தால் அவர்கள் நம்மிடம் வழிமுறை கேட்பார்கள். அவர்களிடம் நாம் நேரம் ஒதுக்கிக் காதுகொடுக்காவிட்டால்..
அவர்களுக்கு 20 வருடம் அன்பை ஊட்டி வளர்த்த பெற்றோரைவிட 20 நாட்கள் பார்த்துப் பழகிய காதலர் பெரிதாகத் தெரிவார் இதுதான் மனித மனங்களின் இயற்கை.

இதோ ஒரு சங்ககால காதல் இணையரைப் பாருங்கள்..
தலைமக்கள் பெற்றோருக்குத் தெரியாமல் உடன்போக்கில் சென்றனர். நீண்டதூரம் சென்றதால் தலைவி வருத்தமடைந்தாள் என்பதை உணர்ந்த தலைவன்,
“அன்பே மேகம் முதல் மழையைப் பொழிந்ததால் இந்த அழகிய காட்டில் தம்பலப் பூச்சிகள் (பட்டுப் பூச்சிகள்) எங்கும் பரவின. அவற்றைப் பார்த்தும், பிடித்தும் நீ சிறிது நேரம் விளையாடிக்கொண்டிரு. நான் இளைய யானைகள் தம் உடலைத் தேய்த்துக்கொள்ளும் பருத்த அடியுடைய வேங்கை மரத்தின் பின்புறத்தில் அமர்ந்திருக்கிறேன். அப்போது வழிப்பறி செய்வோர் வந்தால் அவர்களுடன் அஞ்சாது போரிட்டு அவர்களை ஓடச் செய்து உன்னைக் காப்பேன். ஒருவேளை உன்னைத் தேடி உன் உறவினர் வந்தால் நீ வருந்தாமலிருக்க அவருடன் போரிடாது மறைந்துகொள்வேன்“
என்கிறான் தலைவன். பாடல் இதோ..

வினையமை பாவையின் இயலி நுந்தை
மனைவரை இறந்து வந்தனை யாயின்
தலைநாட் கெதிரிய தண்பெயல் எழிலி
அணிமிகு கானத்து அகன்புறம் பரந்த
கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும்
நீவிளை யாடுக சிறிதே யானே
மழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி
அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென்
நுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே.

நற்றிணை -362. மதுரை மருதனிள நாகனார்

இப்படி பெற்றோருக்கு அஞ்சி வாழ்வதால் தான் இந்தக் காதலை நம் தமிழர்கள் களவு என்றார்கள். இந்தப் பாடலைப் படிக்கும்போது காட்சிகள் கண்முன் விரிகின்றன.
கொடிய கள்வர்களுக்குக் கூட அஞ்சாத காதலன், தலைவியின் உறவினர்களுக்கு அஞ்சுவேன் என்று கூறும் பாங்கு நடைமுறை வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
கள்வர்களைவிட வலிமையுடையவர்களா காதலியின் பெற்றோர்?
இல்லை..
இந்தக் காதலி பிறக்கும்போதே இப்படிப் பிறந்துவிடவில்லை. இவளும் குழந்தையாகத்தான் பிறந்தாள். இவளைப் பார்த்துப் பார்த்து வளர்த்த பெற்றோருக்குத் தெரியாமல் இவளை கூட்டிவந்தது எவ்வளவு பெரிய தவறு?
அவர்களின் மனது என்ன பாடுபடும்!
இவளை எப்படியெல்லாம் வளர்த்திருப்பார்கள்?
எப்படியெல்லாம் திருமணம் செய்து பார்க்கவேண்டும் என்று கனவுகண்டிருப்பார்கள்?

என்று பெற்றோரின் மனநிலையை எண்ணிப் பார்க்கும் போது தலைவனால் காதலியின் பெற்றோருக்குமுன் நிற்கமுடியவில்லை.
இந்த நிலை நாளை நமக்கும் வரலாம்..
நம் குழந்தை இப்படி நம்மை மதிக்காமல் ஓடிச் சென்றால் நாம் என்ன பாடுபடுவோம் என்று காதலன் எண்ணிப் பார்ப்பதால் காதலியின் பெற்றோருக்கு முன் அவனால் நிற்கமுடியவில்லை.
என்ன செய்வது......
எது சரி? எது தவறு?
எப்படி வாழவேண்டும்? எப்படி வாழக்கூடாது?
என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும்.
ஆனால்
அப்படி வாழ்வதுதான் எல்லோராலும் முடியாது!
அதனால் பிள்ளைகளைப் பாதுகாப்பாது பெற்றோரின் கடமை!
அதற்குமேல் அதை மதிக்காமல் ஓடிப்போவது பிள்ளைகளின் திறமை!
                     
ஒன்றை மட்டும் காலம் இவர்களுக்கு உணர்த்தும்..

முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்பதுதான் அது.

தொடர்புடைய இடுகைகள்



புதன், 30 ஜனவரி, 2013

உங்கள் பள்ளிக்கால நிழற்படம்!


அன்பு நண்பர்களே ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் உலவியபோது உங்கள் பள்ளிக்கால நிழற்படத்தைக் காணவேண்டுமா? என்றொரு அறிவிப்பு

நானும் ஆர்வத்தில் ஆமாம் என்று அந்த முகவரிக்குச் சென்றேன்.

எந்த நாடு?
எந்த ஊர்?
எந்த பள்ளி?
எந்த ஆண்டு?

எனப் பல வினாக்களைச் சரியாக நிறைவு செய்தேன். தேடுதல் முடிவுகளும் வந்தன.

நீங்கள் கொடுத்த தகவலின் படி தங்களுக்கு இரண்டு நிழற்படங்கள் வந்துள்ளன.

ஒன்று குழுபடம், இன்னொன்று தனிநபர் நிழற்படம் என்று அறிவிப்பு வந்தது.

மிக ஆவலோடு பார்த்தேன்.

நிழற்படங்களைப் பார்த்தவுடன் சிரிப்புதான் வந்தது.?

உங்கள் நிழற்படங்களைப் பார்த்து உங்களுக்கு அழுகை வந்தால் கோபம் வந்தால் இந்த இணைய முகவரியை உங்கள் நண்பரிடம் கொடுத்து உங்கள் மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள் என்று ஆறுதல் சொன்னர்கள்.

அந்த இணையதள முகவரி இன்று எதிர்பாராதவிதமாகக் கண்ணில் பட்டது.

நீங்களும் சிரிக்கவேண்டும் என்பதற்காக அந்த முகவரியைப் பரிந்துரைசெய்கிறேன்.

செவ்வாய், 29 ஜனவரி, 2013

அரும்பாகி மொட்டாகிப் பூவாகி..



காலை அரும்பி பகலெல்லாம் போதாகி 
மாலை மலரும் இந்நோய்


திருக்குறள் -  1227

என்ற குறளைச் சொல்லிக்கொடுத்துவிட்டு தேர்வில் கேள்விகேட்டால் 

இன்றைய மாணவர்கள், போதாகி என்ற சொல்லைப் போதையாகி என்று எழுதுகிறார்கள். 

காரணம், போது என்ற சொல் இவர்களுக்குத் தெரியவில்லை.

எவ்வளவு இனிமையான குறள் இது. இதனை மனப்பாடம் செய்வதால் இன்றைய தலைமுறையினருக்கு மதிப்பெண் மட்டுமே கிடைக்கிறது.


காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்.

என்ற இந்தக் குறள் பல திரைப்படப் பாடல்களுக்குக் கருவாக இருந்தது என்பது பலருக்குத் தெரியாது..

1.அரும்பாகி மொட்டாகிப் பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி

தொடுத்த மாலை எடுத்து வாரேன்
கழுத்தைக் காட்டு..
கையிரண்டு சேர்த்து...


என்றொரு பாடல் எங்க ஊருக் காவக்காரன் என்ற படத்தில் இடம்பெற்ற பாடல்.

2. காலை அரும்பி பகலெல்லாம் போதாகி 
மாலை மலரும் இந்நோய்
மூளை திருகும் மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் 
இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பென்டுலம் ஆடும்
மூளை திருகும் மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் 
இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பென்டுலம் ஆடும்
ஆடும்... ஆடும்.. ஆடும்....
வாய் மட்டும் பேசாது உடம்பெல்லாம் பேசும் 
வாய் மட்டும் பேசாது உடம்பெல்லாம் பேசும் 
இது மோசமான நோய் ரொம்ப பாசமான நோய்
இது மோசமான நோய் ரொம்ப பாசமான நோய்

னாக் கண்டேன் திரைப்படத்தில் பாடலாசிரியர் வைரமுத்து எழுதிய கவிதை இது..


இவ்வாறு பல திரையிசைப்பாடல்களுக்கு தமிழ் இலக்கியங்கள் அடிப்படைகளாக இருந்திருக்கின்றன.

தொடர்புடைய இடுகை

ஊதைக் காற்று

மாலைப் பொழுதின் மயக்கத்திலே

திங்கள், 28 ஜனவரி, 2013

தைத் திங்கள் முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு


தைத் திங்கள் முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு என்பதற்கான சான்றுகளை ஓவியங்களுடன் விளக்கியவர் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்  ஆவார். இவர் சுட்டிக்காட்டும் சங்கஇலக்கிய பாடலடிகளும் அதற்கான ஓவியங்களும் தமிழரின் பழம்மரபுகளை எண்ணிப் பெருமிதம் கொள்ளத்தக்கனவாகவுள்ளன.

திங்கள், 21 ஜனவரி, 2013

எதிர்காலத்தில் கையெழுத்தும் – தலையெழுத்தும்!



“கையெழுத்து நல்லாயிருந்தா தலையெழுத்து நல்லாயிருக்காது“ என்று காலகாலமாகவே சொல்லிவருகின்றனர்.
அதிவேகத்தில் செல்லும் பேருந்தில் நின்றுகொண்டே தன் விவரக்குறிப்புகளை அழகான கையெழுத்தில் எழுதும் நடத்துனரையும்..
குளிர்சாதன அறையில் அமர்ந்துகொண்டு கோழி கிண்டியதுபோல கையெழுத்தில் எழுதும் மருத்துவரையும் பார்க்கும்போது இவர்கள் சொன்னது உண்மைதான் என்று தோன்கிறது.
ஓலைச் சுவடி, மெய்கீர்த்தி, கல்வெட்டு, செப்புப்பட்டையம் என்று கைவிரல்களால் எழுதிவந்த நாம் கணினி வந்தபிறகு நிறையவே மாறிப்போனோம். கையால் எழுதுவது நிறையவே குறைந்துவிட்டது. தட்டச்சுசெய்ததும் போதும் என்று, குரல் ஒலியை எழுத்தாக்கும் தொழில்நுட்பம் வரை வந்துவிட்டோம்.

இந்தக் காலத்திலும் தான் சொல்கிறார்கள் கையெழுத்து நல்லாயிருந்தா தலையெழுத்து நல்லாயிருக்காது“ என்று..
எதிர்காலத்தில் இப்படியொரு பழமொழிக்குப் பொருள்கூடத் தெரியாது.
கையில் எழுதும் வழக்கம்கூட ஒழிந்துபோகலாம், மறைந்துபோகலாம்...
எங்கும் கணினி! எதிலும் கணினி! என்ற காலமாற்றத்தில் இதுகூட நடக்கலாம்.
·         அன்று படிக்காதவர்கள் மட்டும்தான் கைநாட்டு வைத்தார்கள். இன்று படித்தவர்களும் கூட, பல நிறுவனங்களில் கையெழுத்துப்போடுவதற்குப் பதிலாகத் தன் கைரேகையை வருகைப்பதிவுக் கருவியில் வைத்துச்செல்வதைப் பார்க்கமுடிகிறது..

·         அன்று உணவகங்களுக்குச் சென்றால் பணியாளர் வந்து ஐயா என்ன வேண்டும் என்றுகேட்பார். நாமும் என்ன இருக்கிறது என்று கேட்போம். அவர் உணவுப்பட்டியலை மூச்சிறைக்கச் சொல்வார். பிறகு நாம் சொல்வதைக் குறித்துக்கொள்வார். இன்று மதிப்புமிக்க உணவகங்களில் ஒவ்வொரு மேசையிலும் டேப்ளட் பிசி இருக்கிறதாம் அதில் படங்களுடன் தங்கள் உணவுகளையும் விலைப்படியலையும் பார்த்து அதிலேயே நாம் நம் தேவைகளை பதிவுசெய்யலாமாம். பணியாளர் உணவுகளைக் கொண்டுவருகிறாராம்.

·         தமிழக அரசும் மாணவர்களுக்கு மடிகணினி கொடுத்த கையோடு.மின்னூல் (இபுக்) தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுவருகிறது. எதிர்கால மாணவர்கள் தாளில்லாக் கல்வி பெறவும் வாய்ப்பிருக்கிது.
இப்படி எதிர்காலத்தில் கையெழுத்து என்றால் என்ன? என்றுகேட்கும் நிலைகூட வரலாம்.
கையெழுத்து எல்லோருக்கும் தெரியும் தலையெழுத்து யாருக்குத் தெரியும். சோதிடரா? அவருக்கு அவர் தலையெழுத்தே தெரியாமல் தான் உங்களிடம் கையேந்தி நிற்கிறார்.
இதுவரை சொல்லப்பட்ட தலையெழுத்து என்பது ஏதோ விதி என்று புரிந்துகொண்டோம்.
எதிர்காலத்தில் தலையெழுத்து என்பது, பெற்றோம் தம் குழந்தை எப்படியிருக்கவேண்டும் என்ன திறமைகள் இருக்கவேண்டும் என்பது குறித்து நம் மூளையில் கணினியின் உதவியோடு எழுதிய நிரல் குறியீடுகளாக இருக்கலாம்.

தொடர்புடைய இடுகைகள்

எதிர்காலத் தொழில்நுட்பம்
இப்படியொரு இணையம் இருந்தால்..

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

மொழிகளை வாழவைப்போம்..

நாம் எந்த மொழியையும் வளர்க்கவேண்டாம்..
அழிக்காமல் இருந்தால் போதும்..

எந்தமொழி பேசினாலும் அதோடு பிறமொழி கலவாமல் பேச முயல்வோம்..

இதுவே நாம் அந்த மொழிக்குச் செய்யும் பெரிய தொண்டு!



வியாழன், 17 ஜனவரி, 2013

திருமண அழைப்பிதழ் மாதிரி


அழைப்பிதழை மின்னஞ்சல் வழியாக அனுப்பிய நண்பர் சங்கர்அவர்களுக்கு நன்றிகளையும் & அழைப்பிதழை அழகாக வடிவமைத்த மணமகன் ஆனந்த் அவர்களுக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


வெள்ளி, 11 ஜனவரி, 2013

அன்று இதே நாளில் (கொடிகாத்த குமரன்)


11.01.1932 அன்று இதே நாளில் தான் திருப்பூர் குமரன் அவர்கள் நாட்டுக்காகத் தன் இன்னுயிரைத் தந்து கொடிகாத்த குமரனாக நம் மனதில் நிறைந்தார்.

எல்லோரும் புதைக்கப்படுவதில்லை சிலர் விதைக்கப்படுகிறார்கள் என்றொரு பொன்மொழி உண்டு. அதுபோல இவர் உடல் மறைந்தாலும் விடுதலைப் போராட்டகாலத்தில் இவருடைய மரணம் பலர் மனதில் விடுதலைப்போராட்ட வேட்கையை விதைத்துச் சென்றது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் (04.10.1904) பிறந்தார். சட்டமறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கியபோது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவியது. திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் நடத்திய மறியல் போராட்டத்தில் தீவிரமாகக் கலந்துகொண்டு கையில் தேசியக் கொடியை ஏந்தி தொண்டர் படைக்கு தலைமையேற்றுச் சென்றார் குமரன். அன்று (11.01.1932) இதே நாளில் காவலர்களால் தாக்கப்பட்டு தலையில் தடியடிபட்டு இந்திய தேசியக் கொடியைக் கையில் ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் உயிர்துறந்தார். தன் உயிர் தன் உடலைவிட்டுப் பிரியும் வரை கொடியை துறக்காததால் இவரைக் கொடிகாத்த குமரன் என்று நாம் அழைத்துவருகிறோம்.

இன்று பலருக்குக் கிரிக்கெட் பார்க்கும்போது மட்டும்தான் 
நாட்டுப்பற்று வெளிப்படுகிறது..
திரைப்படங்கள் பார்த்து, நடிகர்களிடம் பேட்டிகண்டு தான் சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

நம் குழந்தைகளிடம் சொல்வோம்...
திருப்பூர் குமரன் ஒரு விடுதலைப் போராட்ட தியாகி. நம்நாடு அன்று அடிமைப்பட்டுக் கிடந்தது இவரைப்போல பல தியாகிகளால்தான் நாம் இன்று சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறோம் என்று.

இந்த நாளில் அவரின் பெருமைகளை எண்ணிப்பார்ப்போம்..
எடுத்துச்சொல்வோம்.. அவரது தியாகத்தைப் போற்றுவோம்..



புதன், 9 ஜனவரி, 2013

முகத்தின் அழகு நிறத்தில் இல்லை..

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றார்கள் அன்று. இன்று பலருக்கு 

முகத்தின் அழகு சிவப்பழகுப் பசைகளில்தான் தெரிகிறது..



சிவப்பழகுப் பசைகளை நம் முகத்தில் பூசிக்கொண்டு நாம் சிவப்பாக 

இருக்கிறோம் என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு ஊரையும் 

ஏமாற்றுவதைவிட இயல்பான நம் நிறங்களுடனேயே அழகான நம் 

பண்புகளால் நம் அகத்தின் அழகை முகத்துக்குத் தருவோம்..

காதலின் எடையை அறிந்துகொள்ள...


 காதல் வாழ்வின் பொருளை உணரச் செய்கிறது!                                

காதல் இல்லாத வாழ்க்கை துடுப்பில்லாத ஓடம் !!
காதல் பற்றிப் பாடாத கவிஞர்களே இல்லை. பெரும்பாலும் காதலின் உயரத்தையும்,அகலத்தையும், ஆழத்தையும் திருமணத்துக்கு முந்தைய காலப்பகுதியிலேயே அதிகமாகப் பாடியுள்ளனர். 

காதலித்தல் என்பது திருமணத்துக்கு முந்தைய வாழ்க்கை என்றே பலரும் வாழ்ந்து வருகிறோம். இதனையே கவிஞர் கண்ணதாசனும்...


காதல் என்பது எதுவரை? 
கல்யாண காலம் வரும் வரை 
கல்யாணம் என்பது எதுவரை? 
கழுத்தினில் தாலி விழும் வரை 
பெண்ணுக்கு இளமை எது வரை? 
பிள்ளைகள் பிறந்து வரும் வரை

கழுத்தினில் தாலி விழுந்த பின்னும் தன் மனைவியைக் காதலிப்பவர்கள் உலகில் எத்தனைபேர்?
பெண்ணின் இளமையை பிள்ளைகள் பிறந்து வளர்ந்த பின்னும் விரும்புபவர்கள் எத்தனை போ்..?
திருமணத்துக்கு முந்தைய காதல் : திருமணத்துக்குப் பின்வரும் காதல் ஆகிய இரண்டினுள் சிறந்தது எது? என்ற கேள்வியே காதலை எடைபோடவல்ல சிறந்த வழியாகும்.

இன்றைய காதல்,

“எனக்காக தாஜ்மகால் கட்டுகிறேன் என்றான்
ஒரு தாலி மட்டும் கட்டு என்றேன்
ஷாஜகானைக் காணவில்லை!
என்றொரு புதுக்கவிதை உண்டு. இன்றைய காதல் இப்படித்தான் இருக்கிறது.

உடல் சார்ந்த காதலுக்கு, ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் தான் இருக்கும். ஆனால் உள்ளம் சார்ந்த காதலுக்கு ஆசை அறுபது ஆண்டுகள், மோகம் முப்பது ஆண்டுகள் இருக்கும்.
இன்றைய தலைமுறையினர் திரைப்படங்களைப் பார்த்துவிட்டு இதுதான் காதல் என்று நம்பும் அப்பாவிகளாக உள்ளனர். இவர்கள் வள்ளுவரின்,

மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார். (-குறள் எண்:1289) என்ற குறளின் நயம் உணராதவர்கள்.

சங்கப் பாடல் ஒன்று..
தலைவனுடன் தலைவியை உடன்போக்கில் அனுப்புகிறாள் தோழி அப்போது அவனிடம் கூறும் அறிவுரையாக இப் பாடல் இடம்பெற்றுள்ளது.

தலைவனே மலைப்பகுதியில் மேயும் மரையா (மலை ஆடு) அம்மலையில் தமக்குத் தேவையில்லாத பல செடிகொடிகள் இருந்தாலும் தனக்குத் தேவையான இலைகளைத் தேடிவிரும்பி உண்டு அங்கே தங்கும். அதுபோல நீ இவள் (தலைவி) மீது அன்புடையவனாக இருப்பாயாக. இவள் இப்போது இளமைத்தன்மையுடையவளாக உனக்கு எல்லா இன்பங்களும் தரும் தகுதியுடையவளாக இருக்கிறாள். அதனால் இவள் மீது நீ இப்போது அன்புடனிருப்பது அரிய பெரிய செயலல்ல!
அவள் குழந்தைகள் பெற்ற பின்னரும், அவளிடம் ஏதும் குறைகளிருப்பினும் அந்த மரையா போல அதனை மறந்து அவளிடம் உள்ள நிறைகளைத் தேடி அவளிடம் அன்பு செலுத்துபவனாக நீ இருக்கவேண்டும். அவளை மறக்கவோ வெறுக்கவோ நீ காரணம் தேடாமல், அவளை இன்னும் அதிகமாக விரும்புவதற்குக் காரணம் தேடு. ஏனென்றால் இவளுக்கு இனி நீதான் எல்லாமே. இவளுக்கென்று இனி யாரும் இல்லை என்பதை மனதில் வைத்துக்கொள் என்பதே தலைவனுக்குத் தோழி சொன்ன அறிவுரை. பாடல் இதோ..
பெருநன் றாற்றிற் பேணாரு முளரே
ஒருநன் றுடைய ளாயினும் புரிமாண்டு
புலவி தீர வாளிமதி யிலைகவர்
பாடமை யொழுகிய தண்ணறுஞ் சாரல்
மென்னடை மரையா துஞ்சும்
நன்மலை நாட நின்னல திலளே.

குறுந்தொகை -115
கபிலர்.
 (தலைவனுடன் போகும்படி தலைவியை உய்க்கும் தோழி, “இவளை எக்காலத்தும் அன்பு வைத்துப் பாதுகாப்பாயாகஎன்று அவனுக்குக் கூறியது.)

அசைகின்ற மூங்கில்கள் நீண்டு வளர்ந்த, குளிர்ந்த நறுமணம் உடைய மலைப் பக்கத்தில் தளர்ந்த நடையையுடைய மரையா, இலைகளை விரும்பி உண்டு, உறங்கும் நல்ல மலை நாட்டையுடைய தலைவனே,
பிறர் தாம் விரும்பிய பெரிய நன்மை யொன்றை ஒருவர் நமக்குச் செய்தால்,
அவ்வாறு செய்தவரைப் போற்றாதாரும் இவ்வுலகில் உள்ளாரோ? யாவரும் போற்றுவர்.
அது போல, இவள் சிறிதளவு நன்மையை, உடையளாக இருந்தாலும்,
இத்தலைவி குழந்தை பெற்றவளாக இருக்கும் காலத்திலும்,
அவளோடு அன்புடையவனாக நீ இவளைப் பாதுகாக்கவேண்டும்.
இவள் உன்னையன்றி வேறு பற்றுக்கோடு இல்லாதவள் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

நிறைவாக..
 உடல் சார்ந்த காதல் போதை தரும், 
உள்ளம் சார்ந்த காதலே இன்பம் தரும்.
உடல் சார்ந்த காதலுக்கு, ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் தான் இருக்கும். ஆனால் உள்ளம் சார்ந்த காதலுக்கு ஆசை அறுபது ஆண்டுகள், மோகம் முப்பது ஆண்டுகள் இருக்கும்.
    
      உண்மையான காதல் உடல் அழகைப் பார்க்காது, உள்ளத்தின் அழகையே இரசிக்கும்.  தலைவா நீ தலைவியின் குறைகளைப் பார்க்காமல் நிறைகளை மட்டும் பார்த்து இவளிடம் பெற்ற இன்பங்களை மனதில் நினைத்து நன்றியோடு முதுமைப்பருவத்திலும் அன்புடையவனாக இருப்பாயாக என்ற தோழியின் அறிவுரை காதலின் எடையை அளக்கும் சரியான அளவுகோலாக உள்ளது.

      நாமும் நம் வாழ்க்கைத் துணையின் மீது முதுமைப் பருவத்திலும் அன்புடையவர்களாக இருந்து காதலின் எடையை அறிந்துகொள்வோம்.

அன்பை மட்டும் கடனாகக் கொடுங்கள்
அதுதான் வட்டியோடு திரும்பக் கிடைக்கும்
என்றொரு பொன்மொழி உண்டு நாம் நம் வாழ்க்கைத்துணையிடம் தரும் அன்பு நமக்கு இருமடங்காகக் கிடைக்கும் என்பதே இப்பாடல் நமக்களிக்கும் அறிவுரை.




தொடர்புடைய இடுகை

காதல் என்பது எதுவரை?
இரு பேராண்மைகள்

சனி, 5 ஜனவரி, 2013

அகவிழியர்


“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
” (திருக்குறள் 393)
என்பார் வள்ளுவர்.

சாலையின் நடுவே கிடக்கும் கல்லைக் கண்தெரிந்தவர்கள் கண்டும் காணாமல் செல்லும்போது..
கண்தெரியாத ஒருவர் தட்டித்தடுமாறி அந்தக் கல்லை தடவி எடுத்து ஓரமாகப் போட்டுச்செல்வதைக் காணும்போதும்..

சாலையில் அடிபட்டுக்கிடப்பவரைக் கண்டும்காணமல் நாம் செல்லும்போதும்..
குற்றம்செய்தவர் இவர்தான் என்று தெரிந்தும் வாய்திறக்காமல் இருக்கும்போதும்.

கண்களிருந்தும் எழுத, படிக்கத் தெரியாதவர்களைக் காணும்போதும்..

மனது கேட்கிறது நமக்கெல்லாம் கண்ணிருந்தால் என்ன?
இல்லாவிட்டால் என்னஎன்று..

உடல் திறன்குறைபாடு உடையவர்களை,

செவிடர், முடவர், நொண்டி, உடல் ஊனமுற்றவர், என்றெல்லாம் ஒருகாலத்தில் சொல்லிவந்தோம் இப்போதெல்லாம் ஊடகங்களும், பொதுமக்களும் கூட இவர்களை, Physically challenged person, மாற்றுத் திறனாளிகள் என்றுதான் அழைக்கின்றனர்.

எனக்கு நீண்ட நாட்களாகவே கண்பார்வையற்றோரையும் இவ்வாறு நேர்மறையான வார்த்தையில் அழைக்கலாமே என்ற எண்ணம் இருந்துவந்தது.

குருடர், கண் பார்வையற்றோர், விழியிழந்தோர், கண் தெரியாதவர்கள் போன்ற சொற்களை இன்றைய சூழலில் பலரும் பயன்படுத்தி வருகிறோம்.

இவர்களை நாம் ஏன் அகவிழியர், அகவிழியுடையோர் என்று அழைக்ககூடாது?

இப்போதெல்லாம் கண்பார்வையற்றவர்களும் தம் நாவினால் பார்க்கலாம் என்றெல்லாம் அறிவியல் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அதனால் தமிழ் உறவுகளே...
ஊடகங்களே....
 இனிமேல் கண்பார்வையற்றவர்களை அகவிழியர், அகவிழியுடையோர் என்று அழைக்கலாமே......