வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 8 மே, 2011

இல்லோர் பெருநகை.




கடவுளின் பெயரால் நடத்தப்படும் நாடகங்களுக்கு நம் நாட்டில் குறைவே இல்லை.
கடவுளின் தூதுவன் என்றும்..
நான் தான் கடவுள் என்றும்..
காலந்தோறும் சொல்பவர்களை மக்கள் நம்பித்தான் வந்திருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் பார்த்தால் விவரம் தெரிந்த பலருக்குச் சிரிப்புத்தான் வரும்.
இது இன்றுநேற்றல்ல பல்லாயிரம் ஆண்டுகளாகவே தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கிறது.

சங்ககாலக் காட்சி ஒன்று..


தலைவனின் பிரிவுகாரணமாகத் தலைவியின் உடல் மெலிவடைகிறது. இது ஏதோ சாமிகுத்தம் தான் என எண்ணிய செவிலி வெறியாட்டு எடுக்கிறாள். தலைவியின் மெலிவுக்குக் காரணம் தலைவன் தான் என்ற உண்மையை அறிந்தவர்கள் தலைவன்,தலைவி, தோழி, ஆகிய மூவரும் தான்.அதனால் வீட்டில் உள்ளோர் எடுக்கும் வெறியாட்டு பெரு நகைப்பிற்கு இடமளிப்பதாக இவர்களுக்கு அமைகிறது. பாடல் இதோ..


மென்தோள் நெகிழ்த்த செல்லல், வேலன்
வென்றி நெடுவேள் என்னும் அன்னையும்
அது என உணரும் ஆயின் ஆயிடைக்
கூழை இரும்பிடிக் கைகரந்தன்ன
கேழ்இருந் துறுகல் கெழுமலை நாடன்
வல்லே வருக – தோழி – நம்
இல்லோர் பெருநகை காணிய சிறிதே!

தீன்மதிநாகன்
குறுந்தொகை -111
குறிஞ்சி.

(வரைவு நீட்டித்தவழித் தலைமகள் வேறுபாடு கண்டு, வெறியாட்டு எடுப்பக் கருதிய தாயது நிலைமை தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைவன் சிறைப்புறமாகத் தோழி கூறியது.)

தலைவியின் உடல்மெலிவு அறிந்து, செவிலி, வேலனை அழைத்து வெறியாட்டு எடுத்தாள். அப்போது தலைவியின் உடல் மெலிவு முருகக்கடவுளால் வந்தது என்று வெறியாடும் வேலன் வெறியாடி உரைப்பான். தலைவியின் நிலைமையை சிறைப்புறமாக இருக்கும் தலைவனுக்குத் தோழி புரியவைப்பதாக இப்பாடல் அமைகிறது.

முருகக் கடவுளுக்கான வேலைக் கையில் ஏந்தி ஆவேசமுற்று ஆடுபவன் வேலன். இவனைப் படிமத்தான் என்றும் கூறுவர். தலைவியின் நோய் முருகனால் நேர்ந்தது என்று சொல்லும் வேலனின் சொல்லுக்குத் தாய் உடன்படுவாள். தலைவியின் நோயின் காரணம் அறிந்தவன் தலைவன், தலைவி, தோழி ஆகிய மூவருமே ஆவர். அதனால் வெறியாடு களத்திற்குத் தலைவன் வருதலைத் தோழி விரும்பினாள்.

தன்னுடைய கைச் சேற்றிலே மறைந்து தோன்றும் கரிய நிறமுடைய பெண்யானை போல விளங்கும் கரிய நிறமுடைய செறிந்த பாறையையுடைய நாடன் நம் வீட்டில் உள்ளோர் நாணும் பொருட்டு வேலன் மேல் ஆவேசித்து முருகப் பெருமான் வருவதற்குச் சிறிது முன்பாகவே விரைந்து வருவானாகுக என்பதை உணர்த்துகிறது இப்பாடல்.


வெறியாட்டு பற்றி தமிழ்த்தோட்டம் இணையதளத்தில் வெளியான கட்டுரை..

• வெறியாட்டு பற்றிய விக்கிப்பீடியாவின் பதிவுகள்.

வெறியாட்டு என்பது சங்க கால வீட்டுவிழா.
தலைவியைத் துய்த்த தலைவன் தலைவியிட்ம் வராமல் 'ஒருவழித் தணந்து' நிற்பதும், தலைவி தலைவனை எண்ணி உடல் இளைப்பதும், இந்த இளைப்புக்கான காரணத்தை அவளது தாய் வேலனையோ, குறிசொல்லும் முதுவாய்ப் பெண்டையோ கேட்டறிவதும், அவர்கள் முருகன் அணங்கினான் என்பதும், வெறியாட்டு அயர முருகன் சினம் தணிந்து மகள் நலம் பெறுவாள் என்பதும், தாய் மகளுக்கு வெறியாட்டு விழா நடத்துவதும் வெறியாட்டு எனப்படும். இதனை முருகயர்தல் என்றும் கூறுவர்.
தலைவன் தலைவியைத் துய்த்தான். அவன் ஏக்கத்தால் தலைவி மெலிந்தாள். மெலிவுக்குக் காரணம் தாய் ஆராய்ந்தது பற்றியும், வெறியாட்டு விழாக் கொண்டாடியது பற்றியும், விழாவுக்குப் பின் நிகழ்ந்தது பற்றியும் பெண்புலவர் வெறிபாடிய காமக் கண்ணியார் தன் இரு பாடல்களிலும் கூறியுள்ள செய்திகளின் தொகுப்பு இது.
• தலைவன் தலைவி உறவு தாய்க்குத் தெரியாது.
• தலையளி செய்யாத தலைவனை நினைந்து ஏங்கும் தலைவி உடல் மெலிந்துபோகிறாள். அதனால் அவளது கைவளை கழல்கிறது.
• தலைவி மெலிவுக்குக் காரணம் என்னவென்று அவளது தாய் குறிசொல்லும் முதுவாய்ப் பெண்டைக் கேட்கிறாள். அவளும் அவளைச் சேர்ந்தவர்களும் 'பொய்வல் பெண்டிர்'. அவள் பிரம்பைத் தலைவியின் கையில் வைத்துப் பார்த்துக் குறி சொல்கிறாள்.
• குறிக்காரி நெடுவேளாகிய முருகனைப் பேணி விழாக் கொண்டாடினால் இவள் ஏக்கம் தணியும் என்கிறாள்.
• அதன்படி விழாக் கொண்டாடினர்.
• அந்த விழாவை முருகாற்றுப்படுத்தல் என்றும் கூறுவர்.
• மகளின் அழகு முன்பு இருந்ததைவிட மேலும் சிறக்கவேண்டும் எனத் தாய் வேண்டிக்கொள்வாள்.
• மனையில் இன்னிசை முழங்கப்படும்.
• விழாவுக்குக் களம் அமைப்பர். அகன்ற பந்தல் போடுவர்.
• முருகாற்றுப்படுத்தும் பெண்ணுக்கு வெள்ளெருக்கு மாலையும், கடம்பு மாலையும் அணிவிப்பர்.
• வேலன் வீடெங்கும் எதிரொலிக்கும்படி முருகன் பெயர் சொல்லிப் பாடிக்கொண்டு கைகளை உயர்த்தி ஆடுவான்.
• (மறி என்னும் ஆட்டுக்குட்டியைப்) பலி கொடுப்பான்.
• அதன் குருதியில் கலந்து தினையை மனையெங்கும் தூவுவான்.
• பொம்மலாட்டத்தில் பொம்மையை ஆட்டுவது போல வெறியாடு மகளைத் தன் விருப்பப்படி ஆட்டுவிப்பான்.
இதுதான் வெறியாட்டு.

2 கருத்துகள்: