வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 4 ஜனவரி, 2021

திருக்குறள் - அதிகாரம் - 128. குறிப்பறிவுறுத்தல்

 


கரப்பினுங் கையிகந் தொல்லாதின் உண்கண்

உரைக்கல் உறுவதொன் றுண்டு. -1271

சொல்ல மறைத்தாலும் மையுண்ட உன்கண்கள் காட்டிவிடும்

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்

பெண்நிறைந்த நீர்மை பெரிது. - 1272

அழகிய இப்பெண்ணிற்கு பெண்மைத்தன்மை நிறைந்து விளங்குகிறது

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை

அணியில் திகழ்வதொன்று உண்டு. -1273

மாலையுள் நூலைப்போல, இவளின் அழகில் மயக்கும் குறிப்புள்ளது

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை

நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு. -1274

அரும்பில் நிறைந்த மணம்போல, அவள் சிரிப்பில் அவன் நினைவுள்ளது

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்

தீர்க்கும் மருந்தொன்று உடைத்து. -1275

வளையணிந்த என்னவளின் பார்வையில் துயா்தீர்க்கும் மருந்துள்ளது 

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி

அன்பின்மை சூழ்வ துடைத்து.- 1276

ஆரத்தழுவி, அன்புகாட்டும் அவரியல்பு பிரிவையே உணர்த்துகிறது

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்

முன்னம் உணர்ந்த வளை. -1277

அவர் பிரிவை என்னைவிட என் வளையல்களே முன் உணர்கின்றன

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்

எழுநாளேம் மேனி பசந்து.- 1278

ஒருநாள் பிரிந்தாலும் ஏழுநாள் பசலை தோன்றுகிறது    

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி

அஃதாண் டவள்செய் தது. -1279

தன் பசலைகாட்டி அழைத்துச் செல் என்று குறிப்பால் உணர்த்துகிறாள்

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்

காமநோய் சொல்லி இரவு.-1280

கண்களாலே காதல் சொல்லிப் பெண்மைக்குப் பெருமை சேர்க்கிறாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக