வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 3. நீத்தார் பெருமை



ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு. - 21

ஒழுக்கமானவர் பற்றிய நூலே நல்ல நூல்

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. - 22

துறவிகளின் பெருமையை எண்ணிவிடமுடியாது

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு. - 23

இவ்வுலகம் துறவிகளையே போற்றும்

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. - 24

ஐம்புலன்களையும் அறிவால் அடக்கவேண்டும்

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி.- 25

ஐம்புலன்களை அடக்கியவர்களுக்கு இந்திரனே சான்று  

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.- 26

பண்பில் பெரியோரே செயற்கு அரிய செய்வர் 

சுவையொளி ஊறோசை நாற்றமென்று ஐந்தின்

வகைதெரி வான் கட்டே உலகு. - 27

ஐம்புலன்களை அடக்கியவரிடம், உலகம் அடங்கும்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும். - 28

துறவிகளின் பெருமையை அவர்களின் மொழியே காட்டிவிடும்

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயுங் காத்தல் அரிது.- 29

பக்குவப்பட்டவர்களின் கோபம் நெடுநேரம் நிற்காது

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான். - 30

அருள்தன்மை கொண்டவரே அந்தணர்   

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

திருக்குறள் அதிகாரம் - 2. வான் சிறப்பு

 


வானின்று உலகம் வழங்கி வருதலால்    
தானமிழ்தம் என்றுணரற் பாற்று. - 11

வானம், மண்ணுக்கு வழங்கும் அமுதமே மழை  

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. - 12

உணவாகவும், உணவிற்கு அடிப்படையாவதும் மழையே

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. -13

வான் மழை பொய்த்துவிட்டால், உயிர்கள் பசியால் வாடும்

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் 
வாரி வளங்குன்றிக் கால் - 14

மழை இல்லாவிட்டால் உழவும் இல்லை 

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. -15

வாழ்வுக்கும், தாழ்வுக்கும் மழையே முதன்மையாகிறது

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. -
16

மழையின்றி, மண்ணில் பசும்புல்லைக்கூட காணமுடியாது

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.-17

மழை இல்லையென்றால் நெடுங்கடலும் வற்றிவிடும்

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. - 18

மழை பொழியாவிட்டால், வானோர்க்கு பூசைகள் கிடையாது

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின். -19

தானம், தவம் இரண்டுக்கும் மழைவேண்டும்   

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. - 20

நீர் இன்றி இவ்வுலகமும், இவ்வுலகில் ஒழுக்கமும் இல்லை 

சனி, 8 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் -1. கடவுள் வாழ்த்து



அகர முதல எழுத்து எல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு- 1

எழுத்துக்களின் தொடக்கம் அகரம். உலகின் தொடக்கம் ஆதிபகவன்

கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன்

நல் தாள் தொழாஅர் எனின் - 2

கல்வியின் பயன் அறிவுடையவரை வணங்குவதே

மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்

நில மிசை நீடு வாழ்வார். - 3

மலர்தூவி வணக்கப்படுபவரைப் பணிந்தவர்  புகழுடன் வாழ்வர்

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல - 4

பற்றற்றவர்களைப் பின்தொடர்பவர்களுக்குத் துன்பங்கள் இல்லை

இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்

பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு- 5

பக்தர்களுக்கு அறியாமையின் இருவினைகளும் வராது.

பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க

நெறி நின்றார் நீடு வாழ்வார் - 6

புலனடக்கத்துடன் வாழ்பவரைப் பின்பற்றுவோர் நெடுநாள் வாழ்வர்

தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

மன கவலை மாற்றல் அரிது -7

மனக்கவலை நீங்க ஒப்பாரும் மிக்காருமில்லாதவரின் அடியைப் பற்று

அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

பிற ஆழி நீந்தல் அரிது - 8

சான்றோர் வழிவாழ்பவரின்றி பிறர் துன்பக் கடலை கடப்பது அரிது

கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான்

தாளை வணங்கா தலை- 9

ஈடில்லாத ஆற்றலுடையவரை வணங்கவே ஐம்புலன்களும் தலையும்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார். - 10

இறைவனை வணங்குவோரே மறுபிறவி அடையார் 

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

சொற்பொழிவுகளை நூலாக்க..


சொற்பொழிவுகளை நூலாக்குவதற்கான வழிமுறையை இப்பதிவு விளக்குகிறது. இப்பதிவில் கூகுள் ஆவணத்தில் உள்ள குரல் உள்ளீட்டு முறையைப் பயன்படுத்தி எழுத்துகளாக மாற்றிப் புத்தகங்களை உருவாக்கும் வழிமுறை விளக்கப்படுகிறது

புதன், 5 ஆகஸ்ட், 2020

திருநாளைப் போவர் புராணம்

கொள்ளிட நதியால் வளம்பெற்ற ஓர் ஊர் ஆதனூர். இவ்வூர்ச் சேரியிலே அப்புலைப்பாடியில் வாழ்ந்தவர்களின் தலைவராக ‘நந்தனார்’ வாழ்ந்து வந்தார். அவர் சிறுவயதிலிருந்தே சிவபிரானிடத்து மிகுந்த அன்புடையவரானார். திருவடி நினைவன்றி மறந்தும் மற்றைய நினைவு கொள்ளாதவர். கோயில் பேரிகைகளுக்காக போர்வைத்தோல், விசிவார் என்பன கொடுப்பார். அருச்சனைக்காக கோரோசனை என்ற வாசனைப் பொருள் கொடுப்பார். பேரன்புப் பெருக்கால் ஆடுதலும் பாடுதலும் செய்வார்.

ஒருநாள் அருகேயுள்ள திருப்புன்கூருக்குச் சென்று வழிபட விரும்பினார். விருப்பம் போன்று சென்று வாயால் இசைபாடி நின்றார். அப்பொழுது சிவனை நேரில் கும்பிடவேண்டுமென்ற ஆசை பெருகியது. அவரின்  ஆசை தீர்ப்பதற்குப் பெருமான் நந்தியை விலகுமாறு செய்து நேரே தரிசனம் அளித்தார். நேர்த்தரிசனம் பெற்றுப் பரவசத்தரான நந்தனார் பணிந்தெழுந்து வீதிவலம் வரும்போது பள்ளமான ஓரிடத்தைக் கண்டார். அவ்விடம் குளம் தோண்டுவதற்கு ஏற்ப இருப்பதைக் கண்டு குளம் அமைத்தார். பின் கோயிலை வலம் வந்து நடமாடி விடைபெற்று தம் ஊர் சேர்ந்தார். இவ்வாறு அயலூர்களிலேயுள்ள திருகோயில்கள் பலவற்றிற்கும் சென்று திருத்தொண்டு புரிந்துவந்த நந்தனாருக்கு ஒருநாள் தில்லை என்றழைக்கப்படும் சிதம்பரம் கோயிலைத் தரிசனம் செய்யும் ஆசை பெருகியது. அதனால் அன்றிரவு உறக்கமின்றிக் கழித்தார். விடிந்ததும் தில்லைபதியின் பெருமையையும் தம்குலப்பிறப்பையும் நினைத்து செல்லாமல் தவித்தார். மீண்டும் ஆசை அளவின்றிப் பெருகவே “நாளைப்போவேன்” என்று கூறி நாட்களைக்கழித்தார். இவ்வாறு செல்லவேண்டும் என்ற ஆசை ஒரு பக்கம், தமது பிறப்பு குறித்த எண்ணம் ஒரு பக்கம் என எண்ணி வருந்தினார். ஒருநாள் தில்லைத் திருத்தல எல்லையைச் சென்று சேர்ந்தார். சேர்ந்தவர் எல்லையில் வணங்கி நின்று அங்கு எழும்வேள்விப் புகையைக் கண்டார். வேதம் ஓதும் ஒலியைக் கேட்டார். தாம் பிறந்த குலத்தினை நினைத்து அதனுள்ளே புகுவதற்கு அஞ்சி நின்றார். ‘அந்தணர் மாளிகைகள் வேள்வி மண்டபங்கள் நிறைந்த இவ்விடத்தில் எனக்கு அடைதல் அரிது’ என்று கைதொழுது வலங்கொண்டு சென்றார். இவ்வாறு இரவு பகல் தில்லைத் திருப்பதியை வீதி வலம்வந்தவர் சிதம்பரம் நடராசரை எவ்வாறு காண்பது என்று எண்ணி ஏக்கத்துடன் உறங்கினார். ‘இன்னல்தரும் இழிபிறப்பாகிய இது இறைவன் ஆடல் புரியும் பொன்னம்பலத்தை வழிபடுவதற்குத் தடையாயுள்ளதே? என்று வருந்தித் துயில் கொள்பவராகிய நந்தனாரது வருத்தத்தை நீக்கியருளத் எண்ணம் கொண்ட  தில்லைக் கூத்தப் பெருமான், ‘என்று வந்தாய்’ என்னும் புன்முறுவற் குறிப்புடன் நாளைப்போவாரது கனவில் தோன்றினார். “இப்பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி, முப்புரிநூல் மார்புடன் முன்னணைவாய்” என மொழிந்து, அவ்வண்ணமே வேள்வித்தீ அமைக்கும்படி தில்லைவாழந்தணர்க்கும் கனவில் தோன்றி அருள் புரிந்தார்.