Tuesday, November 22, 2011

!கடவுளை வேண்டிய கடவுள்!

கதை தெரியுமா..?
எதிர்த்த வீட்டுப்பொண்ணு அடுத்தவீட்க்காரப் பையனோட ஓடிட்டாளாம்...


சரியாகத் தெரிந்தோ, தெரியாமலோ,
குத்துமதிப்பாகவோ சொல்லப்படும் இதுபோன்ற செய்திகளைச் சாதாரணமாக இன்றும்கூட நம்மால் கேட்கமுடியும்...


இயல்பான இந்தப் பேச்சுக்கு உள்ளே எத்தனைபேரின் மனப்போராட்டங்களும், வலிகளும், துன்பங்களும் அடங்கியிருக்கின்றன என்பதை நாம் பாதிக்கப்பட்டவராக இருந்தால் மட்டுமே உணர்ந்துகொள்ளமுடியும்.இதோ வலியுடன் கூடிய பதிவு ஒன்று..

இதில் கொடிய பாலைநிலத்தில் தலைவனுடன் செல்லும் தலைவியின் வலி பெரியதா?

தலைவியைப் பிரிந்து அவளை எண்ணிப் புலம்பும் செவிலியின் வலி பெரியதா?
என்று கண்டறிவது அவ்வளவு எளிதானதாக இல்லை..

இதோ செவிலித்தாயின் புலம்பல்..

தலைவி தலைவனுடன் உடன்போக்கில் சென்றுவிட்டாள்.
தலைவனோ நெடிய வேல் வைத்திருப்பவன்.
வீரமும் வலிமையும் கொண்டவன்.
அவன் மீது கொண்ட காதல் மிகுதியால்.
பெற்றோரையும், உற்றாரையும், வளர்த்தாரையும் மறந்து அவனோடு சென்றுவிட்டாள் தலைவி!

தலைவியின் மீது அன்பைக் கொட்டி வளர்த்தவளல்லவா செவிலித்தாய்!
செவிலியின் மனம் கேட்கவில்லை.
தெய்வங்களிடம் மனம் கசிந்து வேண்டிக்கொள்கிறாள்.

தலைவியோ மென்மையுடையவள்.
அவள் சென்ற பாலைநிலமோ கொடிய வன்மைத்தன்மை கெண்டநிலம்!
கடவுளர்களே என் மகளை நீங்கள் தான் காக்கவேண்டும்..

“என் மகள் சென்ற பாலைநிலம் மரங்களால் நிறைந்து சூரியன் உட்புகாதவாறு நிழல் செறிந்து காணப்படட்டும்!

அவள் நடப்பதற்கு இதமாக மணல் நிறைந்து பாதை அமையட்டும்.

அப்பாதையும் நீண்ட பாதையாக இருக்காமல் மிக குறைவான தூரம் கொண்ட பாதையாக அமையட்டும்.

அவள் தாகத்திற்கு ஏற்ப மழைபொழிந்து அவளுக்குத் தண்ணீர் கிடைக்கட்டும்.!

என்றெல்லாம் வேண்டிக்கொள்கிறாள்.

பாடல் இதோ..

ஞாயிறு காணாத மாண்நிழற் படீஇய
மலைமுதல் சிறுநெறி மணல்மிகத் தாஅய்
தண்மழை தலைய வாகுக நம் நீத்துச்
சுடர்வாய் நெடுவேல் காளையோடு
மடமா அரிவை போகிய சுரனே

கயமனார்.
குறுந்தொகை -378

மகட் போக்கிய செவிலி தெய்வத்துக்குப் பராயது!

தமிழ்ச்சொல் அறிவோம்.

தாஅய் பரந்து
காளை தலைவன்
அரிவை தலைவி
சுரம்  - பாலைநிலம்
செவிலி- தலைவியை வளர்த்த தாய்
உடன்போக்கு- பெற்றோர் அறியாது தலைவி தலைவனுடன் வாழச் செல்லுதல்.

பாடல் வழியே...

 1. தலைவியை ஈன்ற நற்றாயைவிட வளர்த்த செவிலித்தாய்க்கே தலைவி மீது அன்பு மிகுதியாக இருந்தமை இதனால் புலனாகிறது.
 2. தலைவன் நெடுவேல் கொண்டவன் என்பதால் ஆறலைக் கள்வர்கள் குறித்த அச்சம் தன் மகளுக்கு இல்லை என்ற பெருமிதம் தோன்ற சொல்கிறார் செவிலி.
 3. பாலை நிலம் தன்னிலை மாறி தண்ணிய நிலமாக மாறுவது என்பது இயலாத ஒன்றுதான். இருந்தாலும் கடவுளிடம் செவிலி வேண்டுவதன் வழி தாயுள்ளத்தின் அன்பின் ஆழம் அறிவுறுத்தப்படுகிறது.
 4. தலைவிபடும் வழித்துன்பத்தைவிட அவள்மீதுகொண்ட அன்பால் செவிலிபடும் மனத்துன்பம் மிகவும் பெரியதாகவுள்ளது.
 5. இன்னொரு உயிருக்காக மனம் வாடும் செவிலியின் இந்த அன்புள்ளமே என் கண்ணுக்குக் கடவுளாகக் காட்சியளிக்கிறது.
 6. நற்றாயே தலைவியைப் பெற்றெடுத்தாலும் அன்பைக் கொட்டி வளர்ப்பது செவித்தாயே என்னும் சங்ககால வழக்கத்தைப் இப்பாடல் வழியே அறிந்கொள்ளமுடிகிறது.
தொடர்புடைய இடுகை

26 comments:

 1. பாலைதனையே சோலையாக்கித் தர
  வேண்டும் அதீத அன்பு குறித்த
  அரிய பாடலை பதிவாக்கித் தந்த்தமைக்கு
  மனமார்ந்த நன்றி தொடர வாழ்த்துக்கள்
  த.ம 2

  ReplyDelete
 2. படிக்கும் காலத்தில் புரியாமல் படித்து.இப்போது புரிகிறது.
  இதையெல்லாம் சுவைத்து படிக்காமல்
  விட்டு விட்டது வருத்தமளிக்கிறது.
  இப்போது உங்கள் பதிவு மூலமாக
  சுவைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
  நன்றிகள்!

  ReplyDelete
 3. செவிலித்தான் என்ற வழக்கம் அக்காலத்தில் பணம் படைத்தவர்களிடம் இருந்தது. இந்நாளில் ஆயாக்கள் என்றழைக்கப்படும் செவிலிகள் அக்காலம் போல் பாசம் காட்ட மறந்து பணத்துக்காய் மட்டும் வேலை செய்பவர்களாகி விட்டனர். நான் முன்பொரு முறை படித்து ரசித்திருந்த இந்தப் பாடலை உங்களின் அருமையான விளக்கத்தின் மூலம் கூடுதலாக ரசிக்க முடிந்தது. நன்றி முனைவரையா...

  ReplyDelete
 4. அன்புநிறை முனைவரே,
  உடன்போக்கு போன மகளை எண்ணி மதிமயங்கி பேசும்
  செவிலித்தாயின் உள்ள உணர்வுகளை அப்படியே காட்டிவிட்டீர்கள்.
  பெத்தமனம் பித்து பிள்ளைமனம் கல்லு
  அப்படின்னு சொல்வதுபோல உள்ளது..
  நற்றாய் பெற்றபின் தன் மகவை செவிலித்தாயிடம் விட்டு சென்று விடுகிறாள்..
  அம்மகவை வளர்த்து ஆளாக்கி பின்னர் அவள் மனம் கவர்ந்தவனுடன் செல்கையில்
  அவள் மனம் படும் பாடு எவ்வளவு அழகாக சங்கப்பாடல்
  விளக்கி நிற்கிறது..

  பெற்றவர்களை வில்லனாக்கி தாம் கதையின் நாயகர்கள் ஆகுபவர்கள் இதை படித்தால் போதும்..

  ReplyDelete
 5. பாலை நிலம் தமிழகத்தில் எங்குமே இல்லையே, ராஜஸ்தானில் தானே இருக்கு? எப்படி இந்த மாதிரி பாடல்கள் வந்தன?

  ReplyDelete
 6. இதுதான் அன்பின் உச்ச வெளிப்பாடு.அருமை முனைவரே!
  த.ம.9

  ReplyDelete
 7. ஒருவன் மீது கொண்ட மோகத்தினால் தன் பெற்றோரை உதரிவிட்டு அவனோடு சென்றாளும். தன் மகள் ராணிமாதிரி வளர்த்தோம், அங்கே என்ன கஷ்டப்படுகிறாளோ என்று அவளின் நலனுக்காகவே பிராத்தனை செய்வார்கள்...(அனுபவம்)
  -ஆனால் ஏனோ இளசுகளுக்கு மட்டும் இது புரிவதில்லை...

  தாயின் அன்பிற்கு நிகர் ஏதும்இல்லை...

  பாடலும் அதற்கான விளக்கமும் பகிர்ந்தமைக்கு நன்றி... நண்பரே...

  ReplyDelete
 8. தமிழ் இலக்கியத்தில் செவிலித் தாயிக்கு
  தனி இடம் உண்டு என்பதை அழகாக்க்
  காட்டியுள்ளீர்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 9. இக் குறுந்தொகைப் பாடல் விளக்கும் செய்தி,

  எதிர்காலத்தில் நம் பிள்ளைகளுக்காக தாதியர்கள் தான் கவலையடையப் போகிறார்கள்.

  ReplyDelete
 10. தாயின் அன்பிற்கு நிகர் ஏதும் இல்லை நண்பரே...பாடலும் விளக்கமும்...ரசித்தேன்...வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. செவிலித்தாயின் பாசம் உச்சம்தான்.பெற்றவளைவிட வளர்த்த்வள்தானே உணர்வுகளைப் பகிர்ந்துகொள்கிறாள் !

  ReplyDelete
 12. @மகேந்திரன்தங்கள் ஆழமான புரிதலுக்கு நன்றி அன்பரே..

  ReplyDelete
 13. @Jayadev Das நீர் வளம் குறைவான பகுதிகள் யாவுமே பாலைதான் அன்பரே..

  ஈரோடு பகுதியோடு ஒப்பிடும்போது
  சிவகங்கை மாவட்டம் பாலைப்பகுதிதான் அன்பரே..

  ReplyDelete
 14. @சத்ரியன்தொலைநோக்கு வாய்ந்த புரிதல்...!!

  உண்மைதான் நண்பா..

  ReplyDelete