வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

தெரியுமா செய்தி..?


    ண்மை உலகை ஒரு முறை சுற்றிவருவதற்குள்
    பொய் உலகை மூன்று முறை சுற்றிவந்துவிடும் என்றொரு பொன்மொழி உண்டு.

  1. பிள்ளையார் பால் குடித்தார் என்றதும் நம்பி கையில் பாலோடு சென்றது ஒரு கூட்டம்.

  2. அனுமார் சிலையில் தண்ணீரை ஊற்றினால் பால் வடிகிறது என்றதும் கையில் தண்ணீர் பாட்டில்களைத் தூக்கிச் சென்றது ஒரு கூட்டம்.

  3. ரம்ஜானுக்கு முதல்நாள், கைகளில் மெகந்தி வைத்தவர்களுக்கு மரணம் வரும் என்றதும் மருத்துவமனை நோக்கி படையெடுத்தது ஒரு கூட்டம்.

  4. உடன்பிறந்த பெண்களுக்கு பச்சை, நீலம், மஞ்சள் நிறத்தில் சேலை எடுத்துக்கொடுக்கவேண்டும் என்றதும் துணிக்டையைநோக்கிப் படையெடுதத்து ஒரு கூட்டம்.

  5. ஒரு நாள் கடல்நீர் இனிக்கிறது என்று பெருங்கூட்டம் கூடியது. ஆளாளுக்கு தண்ணீரைப் பிடித்துக் குடித்தது போதாதென்று பாட்டில்களில் நிரப்பிக்கொண்டுவேறு சென்றார்கள். ஆய்வாளர்கள் வந்து ஆராய்ச்சி செய்துவிட்டு சொன்னார்கள். பிறகுதான் தெரிந்தது, கடலின் அருகே இருந்த தொழிற்சாலைக் கழிவுகள் கலந்ததால் அந்தப் பகுதி தண்ணீர் இனிக்க ஆரம்பித்தது என்று. அடுத்து என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்லவா வேண்டும்.

  6. திருப்பூரில் பிறந்த குழந்தை பேசியது. தான் அரைமணிநேரம் தான் உயிரோடு இருப்பேன் பிறகு இறந்துவிடுவேன். 4000 குழந்தைகளாவது இறந்துபோவார்கள். அதற்கு தேங்காய் உடைத்து நேத்திக்கடன் செய்யவேண்டும் என்று ஒரு வதந்தி... அதனால் தமிழகத்தில் பல ஊர்களிலும் தேங்காய் விலை உயர்ந்தது.

  7. என்ன சொன்னாலும் நம்புறாங்கப்பா..

    கேப்பையில நெய் வடியுதுன்னா
    கேப்பாருக்கு புத்தி எங்கே போகுது..?

    என்பார்கள் மூத்தவர்கள்.

    படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற எந்த பாகுபாடும் கிடையாது. எல்லோருமே இந்த வதந்திகளை நம்புகிறார்கள்..!

    அந்தக் காலத்திலெல்லாம் 25பைசா அஞ்சல் அட்டையில் ஏதாவது சாமி பெயரோடு கடிதம் வரும் 10 நாட்களுக்குள் இதை 10 பேருக்காவது கடிதவழியே அனுப்பவேண்டும் இல்லாவிட்டார் 10 நாட்களில் நீங்கள் இரத்தம் கக்கி செத்துப்போவீர்கள் என்று வரும். வேறு வழியில்லாமல் பலரும் அந்தக் காலத்தில் அஞ்சல் அலுவலகங்களுக்குப் படையெடுத்தார்கள்.

    இன்று இந்த வதந்தி அதிகமாக அலைபேசிகளில் குறுந்தகவல் வழியே பரவுகிறது.


  • அதனால் வதந்திகளை நம்பாதீர்கள்!
  • குறுந்தகவல் இலவசம் தானே என்று எல்லாவற்றையும் எல்லோருக்கும் முன்னனுப்பாதீர்கள்.


               காலம் மாறிப்போச்சு பாருங்க..


    அன்று
    இன்று..



    தொடர்புடைய இடுகைகள்


    பக்கம் பார்த்துப் பேசு
    பெரிய பொய்

    அதனால் தெரியுமா செய்தி..? என்று யாரும் கேட்டால் அவர்களிடம் நீங்கள் கேளுங்கள்..








    நீங்கள் சொல்லும் செய்தி உண்மைதானா என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேளுங்கள்

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

உணவுக்கு நீங்கள் தரும் மரியாதை!

 


என் நண்பர் ஒருவருடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். திடீரென அவர் பாதி சாப்பாட்டை வைத்துவிட்டு போதும் என்றார்.

ஏன் உடல்நிலை எதுவும் சரியில்லையா? ஏன் பாதி உணவை அப்படியே வைத்துவிட்டீர்கள் என்றேன். உடல் நிலை நன்றாகத்தான் இருக்கிறது, மனநிலை தான் சரியில்லை என்றார்.

சரி அதனால் உணவை வீணாக்கலாமா?

உலகில் ஒவ்வொரு 3.6 வினாடிகளுக்கும் ஒருவர் பசியால் இறக்கிறார்.என்றொரு புள்ளிவிவரம் சொல்கிறது நண்பரே என்றேன்.

அதற்கு அவர் என் மனக்கவலையைவிட இந்தப் புள்ளிவிவரம் பெரிய கவலையைத் தருகிறது நண்பரே என்றார் அவர்.

ஆமாம்..

“நீ உன்னால் முடியாது என்று எதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறாயோ..
அதை உலகின் ஏதோ ஓரிடத்தில் ஒருவர் முடித்துக்கொண்டிருக்கிறார்! என்றொரு பொன்மொழி உண்டு நண்பரே..

அவரும் சிரித்துக்கொண்டே ஆமாம் ஆமாம் பலர் சாப்பிடுவதற்காகவே பிறந்திருக்கிறோம் என்றுதான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லி்க்கொண்டே கொஞ்சம் முயற்சித்து சாப்பிட்டார். அப்போது நான் சொன்னேன்..

நண்பரே இதுதான் நீங்கள் உணவுக்குத் தரும் மரியாதை என்றேன்.



இனிமேல் உணவுப் பொருட்களை வீணாக்கும் முன் சிந்திப்போம்.

இதுகூட செய்வதற்கு அரிய செயல்தான்..

முயற்சித்தால் நாமும் பெரியோராகலாம்.

தொடர்புடைய இடுகைகள்


சனி, 25 ஆகஸ்ட், 2012

மலரினும் மெல்லியது காமம்



    சிறிய கூதளச்செடிகள் காற்றில் ஆடும் பெரிய மலை!
    அங்கு ஒரு பெரிய தேனடை!
    அதைக் கண்ட காலில்லாத முடவன், தன் உள்ளங்கையை சிறுகுடைபோல குவித்து தேனடையை நோக்கி சுட்டி கையினை நக்குவது போல...

    என் காதலர் என்னை நினைக்கவோ, விரும்பவோ இல்லை, எனினும் அவரை பலமுறை காண்பது கூட என் உள்ளத்துக்கு இனியதே!

    அவரைக் இப்போது காணாததால் அந்த இன்பமும் இப்போது எனக்கு இல்லாமல் போனது என்று தன் ஆற்றாமையைத் தோழியிடம் புலப்படுத்துகிறாள் தலைவி.

                         
    குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப் 
    பெருந்தேன் கண்ட விருக்கை முடவன் 
    உட்கைச் சிறுகுடைஐ கோலிக் கீழிருந்து 
    சுட்டுபு நக்கி யாங்குக் காதலர் 
    நல்கார் நயவா ராயினும்
    பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே

    குறுந்தொகை 60
    பரணர்

    (பிரிவிடை ற்றாமையால் லைவி தோழிக்குரைத்தது)

    பாடல் வழியே..

  1. முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டதுபோல என்று இன்றுவரை வழங்கப்பட்டுவரும் உவமை குறுந்தொகையிலேயே இடம்பெற்றுள்ளமை அறிந்துகொள்ளமுடிகிறது.
  2. தலைவன் தன்மீது பற்றில்லாமல் பரத்தையை நாடிச் செல்கிறான் என்பதைக் குறிப்பால் உணர்ந்த தலைவி, “பரத்தையர் என் காதலரைக் கூடினால் கூடக் கிடைக்காத இன்பம் நான் அவரைக் காண்பதாலேயே கிடைக்கிறது“ என்கிறாள். இது தலைவியின் இயலாமை தந்த வலியின் புலம்பல் என்று மட்டும் காணாது. மலரினும் மெல்லிது காதல் அது உடலைவிட, உள்ளத்தையே அதிகம் விரும்பக்கூடியது என்ற கருத்தை எடுத்தியம்புவதாகவே இப்பாடலைக் கொள்ளமுடிகிறது.

  3. இந்த சங்கஇலக்கியப்பாடல், நினைவுபடுத்தும் திருக்குறள்கள் இரண்டு.



    1.  மலரினும் மெல்லியது காமம் சிலரதன்
    செவ்வி தலைப்படு வார்

      (திருக்குறள்)                1289


    காமம் மலரை விட மென்மையானதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே

    அந்த சிலருள் குறுந்தொகைத் தலைவியும் ஒருத்தி என்று பாடல் வழியே உணரமுடிகிறது.

    2. பொருட் பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டறையில்
    ஏதில் பிணந்தழீஇ யற்று

      (திருக்குறள்)                913

    பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது என்ற வள்ளுவர் சுட்டும் பொருட்பெண்டிர், சங்ககாலப் பரத்தையரோடு ஒப்பிடத் தக்கவர்களாக உள்ளனர்.


    தொடர்புடைய இடுகைகள்




'அசுணமா'



இலக்கியங்கள் அவ்வக்கால செய்திகளைப் பிரதிபலிப்பன .இலக்கியங்கள் சுட்டும் செய்திகளில் சில காலப் பழமையால் மயக்கம் தருபவையாக அமைகின்றன .இத்தகைய இலக்கிய மயக்கங்களைத் தெளிவுபடுத்திக்கொள்வது தமிழ் உலகின் கடமையாகும்.

அசுணமா என்னும் உயிரினம் 'விலங்கு'என்றும் 'பறவை'என்றும் இரு வேறுபட்டகருத்துக்கள் உரையாசிரியர்களிடமும் ,ஆய்வாளர்களிடமும் உள்ளன .அசுணமா விலங்கு என்றோ பறவை என்றோ இதுவரை யாரும் வரையறை செய்து சொல்லவில்லை .அதனால் அசுணமா எந்த வகை உயிரினம் என்பதைத் தக்க சான்றுகளுடன் காண்பது சிறப்பாகும் .


அசுணமா தொடர்பான கருத்துக்கள்

அ.சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம் 'அசுணமா' ஒரு விலங்கு என்று சுட்டுகிறது நச்சினார்க்கினியரும்,பின்னத்தூராரும் விலங்கு என்றே உரைப்பர்

ஆ .அவ்வை துரைசாமிப்பிள்ளை ,மு.வ, சுகிசிவம் ஆகியோர் அசுணமா ஒரு பறவை என்று இயம்புவர் .

இ .உ.வே.சா, விலங்கு என்றும் பறவை என்றும் (கேகேயப்புள் ,பண்ணரிமா) இரு கருத்துக்களிக் கூறுவார்.அகராதிகளும் விலங்கு, பறவை என்று மயக்கமான கருத்துக்களையே கூறுகின்றன .


அசுணமா.

அசுணமா ஒரு மலைவாழ் உயிரியாகும் .இது யாழிசை கேட்பதாக சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன .இதனை

'மணநாறு சிலம்பின் அசுனம் ஓர்க்கும்'(நற்-௨௪௪)
'தொழுதி ஆர்ப்ப யாழ் செத்

திருங்கல்விடரளை அசுணம் ஓர்க்கும் '(அகம் -88-11)
என வரும் அடிகள் விளக்குகின்றன .
அசுணாமாவைக் கொல்வதை அசுணம் கொல்பவர் (நற்௩0௪.௮)
என்ற அடி சுட்டுகிறது .

'யாழ் கேட்ட மானை'என்ற கலித்தொகை( 143.10.)சொல்லாட்சி அசுணமாவைக் குறிப்பதாக உரையாசிரியர்கள் கருதுவர்.யாழோசையை யானை,குதிரை ஆகிய விலங்களும் கேட்பதால் இச்சொல் ஆய்வுகுறியதாகும்.
பிற்கால இலக்கியங்கள் அசுணமா குழலுக்கு மயங்கியதைச் சுட்டுகின்றன.இதனை,'இன்னிளிக்குரல் கேட்ட அசுணமா'(சீவக- 1402.2)
'கோவலர் கொன்றத் தீங்குழல்
உளவு நீள் அசுணமா உறங்கும் என்பவே '(சூளாமணி-௩௪.௩௪)
'கழைகளின் துளைதொறும்
கால் பரந்திசைக்கின்ற்ர்
ஏழிசைக்கு உளமுருகி மெய் புளகெழ
இசைகொளும் அசுணங்கள் (பெருங்-௧.௪௭.௨௪)
இன்னோசை கேட்ட
அசுணமா வல்லோசை கேட்டு
இன்னிசை கொள் சீரியாழ்
இன்னிசை கேட்டஅசுண நன்மா
கேட்டுத் தன் மடிந்ததுபோலெ(பெருங்௧.47.24.))
எனப் பெருங்கதை குறிப்பிடுகிறது .
கூர்மபுராணம் ,அசுணத்தை
'முரசொலி கேட்ட அசுணமென்
புள் மூச்சவிந்து (இராமன் வனம் புகு படலம்)
என்று பறவையாக உரைக்கிறது .
புராணத்தில் சுட்டப்பட்டிருப்பதால் அதில் கற்பனை கலந்திருக்க வாய்ப்புள்ளது.
எனவே பிற இலக்கிய சொல்லாட்சிகளை அடிப்படையாகக் கொண்டே அசுணமா எந்த வகை உயிரினம் என்பதை மீட்டுருவாக்கம் செய்வதே முறையாகும்.

அ.சங்க இலக்கியங்கள் 'அசுணமா யாழோசை கேட்கும் ஒரு மலை வாழ் உயிரி ' என்று சுட்டுகின்றன.

ஆ.பிற்கால இலக்கியங்கள் அசுணமா குழழோசை கேட்டதை புலப்படுத்துகின்றன.

இ.இலக்கியச் சொலாட்சிகளில் சூளாமணியில் மட்டுமே அசுணமாவின் உருவம் சுட்டப்படுகிறது.

'உலவு நீள் அசுணமா'(சூளா)என்ற சொல்லில் (உல்-வளைதற் பொருள்,நீள்-நீண்ட,மா-பெரிய)அசுணமா என்பது வளைந்து செல்லும் நீளமான அழகிய தேமலை உடைய பெரிய உயிரினம் என்ற கருத்துப் புலனாகிறது.

அசுண (மா)சுணம்

சங்க இல்க்கியத்தில் மலைப்பாம்பை 'மாசுணம்'என்று சங்கப்புலவர்கள் இயம்புகின்றனர்.இதனை"களிறகப்படுத்த பெருஞ்சின மாசுணம்(நற்- 261.6)துஞ்சு மரங்கடுக்கும் மாசுணம் (மலைபடு- 261.)எனவரும் அடிகள் சுட்டுகின்றன.அசுணமா தொடர்பான வடிவங்களூம்,செய்திகளும் 'மாசுணம்' என்னும் மலைப்பாம்பைக் குறிப்பதாகவெ உள்ளன.மலைப்பாம்பின் இயல்பு நீளமாக இருத்தல் ,வளைந்து செல்லுதல்,உடலில் அழகிய வடிவமிருத்தல் ,பெரிய வடிவில் இருத்தல் ஆகியனவாகும்.அசுணமாவை வளைந்து செல்லும் ,நீளமான அழகிய தேமலை உடைய பெரிய உயிரினமாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன .
அசுணமா ,மாசுணம் எனவரும் இரு சொற்களும் சொல்,பொருள் என இரு நிலைகளிலும் ஒன்றென்பது இக்கருத்துக்களால் புலனாகிறது

அசுணமாவின் ஒலிவுணர்வு

அசுணமா ,மாசுணம் என வழங்கப்பட்ட மலைப்பாம்பு யாழ் ,குழல் ஆகிய இன்னோசைகளை கேட்பதாகவும் பறை ,முரசு ஆகிய வல்லோசைகளை கேட்டு வருந்துவதாகவும் இலக்கியங்கள் இயம்புகின்றன.
புற செவிகளோ ,செவித் துளைகளோ இல்லாத மலைப்பாம்பு ,காற்றினால் ஒலி யைக் கேட்கும் திறன் இல்லாதது. தரையில் ஏற்படும் அதிர்வுகளாலேயே ஒலியை உணர்கிறது.பல ஊடகங்களால் எழும் ஒலி காற்றினால் தரையை அடைகிறது ஒலியை ஏற்கும் மரங்கள்கூட அவ்வொலியைத் தரையில் கடத்தும் இயல்புடையனவாக விளங்குகின்றன்.இடியால் பாம்பு அழிந்ததை (குறு- 391 .190)இலக்கியங்கள் சுட்டுகின்றன.இடியின் கடுமையான ஒலி காரணமாக பாம்பின் தலை நடுங்கியதை'அரவு தலை பனிப்ப'(நற்- 129.7.8-புற- 17.38)என்று சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.இதனால் பாம்பின் ஒலி உணர்வு புலனாகிறது.புன்னாகவராளி ராகம் கேட்டு பாம்பு வருமென்பதும்,'நுணலும் தன்வாயால் கெடும்'என வரும் நாட்டுப்புற வழக்குகளும் பாம்பின் ஒலி உணர்வோடு ஒப்புநோக்கிக் கருதத்தக்கனவாகும்.

யாழ் ,குழல் ஆகிய இனிய ஒலிகளை தரை வழி அறியும் மலைப்பாம்பு அவ்வொலிகளை இறை எனக்கருதி அவ்விடம் வருகிறது.அந்நேரத்தில் பறை ,முரசு ஆகிய வல்லோசைகளை முழக்கி அதனைச் திகைக்கச் செய்வர்.பின் கூரிய ஆயுதத்தால் அதனைக் கொல்வர்.மலைப்பாம்பின் தோல் அதிகமான விலை மதிப்புடையது.அதனால் மலைப்பாம்பை அக்காலத்தில் கொன்றுள்ளனர்.இன்றும் இவ்வழக்கம் வழக்கில் உள்ளமை சுட்டத்தக்கது.

அசுணமா ஊர்வன இனத்தைச் சேர்ந்த மலைப்பாம்பே ஆகும்.இதனை மாசுணம் என்ற பெயரிலும் அழைத்தனர்.இலக்கியச்சொல்லாட்சிகள் அசுணமாவே மாசுணம் என்பதைப் புலப்படுத்துகின்றன.'அசுணமா யாழ் குழல் ஆகிய இனிய இசையை கவனிப்பதாக இலக்கியங்கள் இயம்புகின்றான.இன்றும் மகுடி ஓசைக்கு பாம்புகள் மயங்கும் என்ற நம்பிக்கை உள்ளது .

புறச்செவிகளே இல்லாத அசுணமா,இனிய ஒலியால் எழும் ஒழுங்கான அதிர்வை இரை எனக்கருதி அவ்விடம் வருகிறது.அவ்வேளையில் ஒழுங்கற்ற வல்லொலிகளை எழுப்பி அதனைத் திகைக்கச்செய்து கொன்றுள்ளனர்.அசுணாமாவினுருவம் ,அதன் செயல்பாடுகள் குறித்த இலக்கியக் கருத்துக்கள் யாவும் 'மாசுணாம் என்றா மலைப் பாம்பை க் குறிப்பதாகவே வுள்ளான.எனவே அசுணமா என்பது மாசுணம் என்ற மலைப் பாம்பே என்ற கருத்து இதனால்ப் புலப்படுத்தப்படுகிறது.

சனி, 18 ஆகஸ்ட், 2012

அதனால் மரங்களை வெட்டாதீர்கள்!


நிலத்தின் பச்சை இதயங்கள் மரங்கள்!
இரும்பு இதயம் கொண்டவன் நான்!

மரங்கள் இன்றும் சலசல எனத் தன்
தாய்மொழிதான் பேசுகின்றன!
நான் தாய்மொழி பேசினால் கலகல
எனச் சிரிக்கின்றன வளர்ந்த குழந்தைகள்!!

கரியமில வாயுவை உண்டாலும்
உயிர்காற்றைத் தருகின்றன மரங்கள்!
நான் மரங்களை வெட்டினாலும்
கட்டிடங்கள் வளர்த்துத் தருகிறேன்!

வெயிலில் நின்றாலும் மரங்கள்
குளிர்க்காற்றைத் தருகின்றன!
குளிர்சாதன அறைக்குள் இருந்துகொண்டு
புவி வெப்பத்தை அள்ளி வழங்குகிறேன் நான்!

மரங்கள்..
மலர், காய், கனி, நிழல் தந்தாலும்
தன்னை விளம்பரம் செய்துகொள்வதில்லை!
அடையாளப்படுத்திக் கொள்ளாமல்
என்னால் வாழமுடிவதில்லை!

மரங்கள் எங்கும் சென்று கல்வி பயில்வதில்லை!
இருந்தாலும் இன்றும்
பறவைகளின் பல்கலைக்கழகமாக
மரங்களே திகழ்கின்றன!
கட்டிடக் கல்விச் சாலைக்குச் சென்றாலும்
எனக்கு அறிவு முதிர்ச்சியடைவில்லை!

நானும் மரமும் என்று
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு
நான் இன்னும் வளரவில்லை!
அதனால்தான் மரமும் நானும்
என்று சொல்லிக்கொள்கிறேன்..

அதனால் மரங்களை வெட்டாதீர்கள்..

கவிஞர் காசியானந்தன்.


தொடர்புடைய இடுகைகள்



வியாழன், 16 ஆகஸ்ட், 2012

யாருக்கும் வெட்கமில்லை!



  1. உனக்கு அந்த நாள் நினைவிருக்கா..?

  2. ஆகஸ்ட் 15 நாம இரண்டுபேரும் தேசியக் கொடி வாங்குவதற்காகக் கடைக்குப் போனோம்..

    கடைக்காரன் கொடி தந்தபோது நீ அவனைப் பார்த்துக் கேட்ட பாரு ஒரு கேள்வி..

    வேற கலர் இருக்கா?“ என்று..

    நினைவிருக்கா?

    வெட்கமா இல்லை... சிரிக்காத..

    சுதந்திரத்திருநாள் வாழ்த்துக்கள்.

    என்றொரு குறுந்தகவல் உலவி வருகிறது.


  3. ஒரு காலத்தில் அரசாங்கம் சொன்னது...

  4. குடிமக்களே வீட்டுக்கு வீடு மரம் வளருங்கள் என்று..

    மக்கள் அரசிடம் கேட்டார்கள்...

    மரம் வளர்க்கிறோம் வீடு தாருங்கள் என்று..


  5. இன்று அரசு சொல்கிறது வட்டியில்லாக் கடன் ஐந்து இலட்சம் ரூபாய் தருகிறோம் வீடு கட்டிக் கொள்ளுங்கள் என்று...

  6. இன்றும் மக்கள் அரசிடம் கேட்கிறார்கள்...

    நீங்கள் தரும் பணம் வீடு கட்டிக்கொள்வதற்கே சரியாக இருக்கும் நிலத்தை யார் தருவார்கள்...? 
    இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன மரங்களிலா வீடு கட்டிக் கொள்வோம் என்று...


  7. அரசும் கொடுப்பதை நிறுத்தப்போவதில்லை
  8. இந்த மக்களும் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை

  9. ஏனென்றால் யாருக்கும் வெட்கமில்லை.

    நல்ல கல்வியைத் தவிர வேறு எதையும் அரசு மக்களுக்குக் கொடுக்கவேண்டியதில்லை.
    அப்படிக் கொடுத்தால் அரசு அதற்குப் பதிலாக வேறு ஏதோ எதிர்பார்க்கிறது என்று தானே பொருள்...!

    கொஞ்சநேரம் இருங்க மக்கள் கூட்டமா எங்கேயோ ஓடுறாங்க.. எங்கே என்று  கேட்டுட்டு திரும்பி வருகிறேன்..


    ம்பா.......
    எங்கே எல்லோரும் கூட்டமா ஓடுறீங்க...

    என்னது....
    அரசாங்கம் இலவசமா.... அலைபேசி (செல்போன்) கொடுக்கறாங்களா...???

    தொடர்புடைய இடுகை



புதன், 15 ஆகஸ்ட், 2012

காலம் மாறிப்போச்சு பாருங்க..



யதாகிறதே என்று வருத்தப்படாதீர்கள் அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்றொரு பொன்மொழி உண்டு.



வயதான சிலரிடம் கேட்டிருக்கிறேன் உங்கள் வயது என்ன? என்று அதெல்லாம் யாருக்குத் தெரியும் நம்ம ஊரு ஆத்துல பெரிய வெள்ளம் வந்தபோது தான் நான் பிறந்தேன் என்று ஒருவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இன்றெல்லாம் பள்ளியில் சேர அடிப்படைத்தேவை, பிறந்தநாள் சான்றிதழ் என்று வழக்கமே வந்துவிட்டது. ஆனால் இன்றோ நம் வயதைக் கணக்கிட்டுக்கொள்ள எவ்வளவு வழிமுறைகள் வந்துவிட்டன.

          என்னைப் பள்ளியில் சேர்க்க அழைத்துச் சென்றபோது தலைமை ஆசிரியர் என் வலது கையால் உச்சந்தலைக்கு மேல் சுற்றி இடது காதைத் தொடு என்றார். எனக்கு காது எட்டவில்லை. தம்பி நீ அடுத்த ஆண்டு வாப்பா என்றார் தலைமை ஆசிரியர். மறுநாளே என் ஆயா (அம்மாவின் அம்மா) என்னை அழைத்துச் சென்று சார் இப்பபாருங்க அவனே அவன் காதைத் தொடுவான் என்றார். தலைமை ஆசிரியர் என்னடா ஒரே நாளில் உன் கை வளர்ந்திடுச்சா? இல்லை காது வளர்ந்திடுச்சா? என்றார். சரி தொடு பார்க்கலாம் என்றார்.

        நானும் வலது கையை உச்சந்தலையைச் சுற்றிக் காதைத் தொடுவதற்குப் பதிலாக, தலையின் பின்பக்க வழியாகக் காதைத் தொட்டேன். தலைமை ஆசிரியரும் சிரித்துக்கொண்டே சரி சரி என்று சேர்த்துக்கொண்டார். அப்போது எனக்கு வயது ஐந்து. இப்போதெல்லாம் ஐந்து வயதுவரை குழந்தைகளை வீட்டில் வைத்து வளர்ப்பதற்கு எந்தப் பெற்றோர் தயாராக இருக்கிறார்கள். இல்லை அந்தக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள முதியர்வகள் யார் வீட்டில் இருக்கிறார்கள்.

இது நாகரிகத்தின் வளர்ச்சியா? இல்லை பண்பாட்டின் வீழ்ச்சியா? என்று மனம் கேட்கிறது.


இணையத்தில் உலவும்போது வயதைக் கணிக்கும் இணையம் ஒன்று காணக்கிடைத்தது.

உங்கள் வயதைக் கணக்கிட்டுக்கொள்ள இங்கு அழுத்தவும். உங்கள் பிறந்த நாள், மாதம், ஆண்டு போன்ற விவரங்களை மட்டும் கொடுத்தால், நாம் எந்த கிழமை பிறந்தோம், இப்போதுவரை நாம் எத்தனை நாட்கள், எத்தனை மணிநேரம், நிமிடங்கள், மணித்துளிகள் வாழ்ந்திருக்கிறோம் எனத் துல்லியமான விவரங்களை இந்த இணையம் தருகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு கணக்கீட்டு முறைகளும் இதில் உண்டு. மேலும் இந்த இணையம் தரும் நிரல்களை வலைப்பதிவில் இணைத்துக்கொண்டால் அவரவர் வலைப்பதிவிலிருந்தே இந்த விவரங்களைப் பெறமுடியும். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.


1,021,184,643 இவ்வளவு துல்லியமான விவரங்களைப் பார்க்கும்போது..

நாம் எந்த அளவுக்கு இந்த வாழ்வைப் பயனுள்ளவாறு வாழ்ந்திருக்கிறோம் என்ற கேள்வி மனதில் எழுகிறது.
தொடர்புடைய இடுகை


ரூபாய் - 86400 (ஒருநாள் செலவு)

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

FB ஆசிரியர்களுக்கான முகநூல் FB

குழந்தைகளின் நுண்ணறிவு என்ற கடந்த இடுகையின் தொடர்ச்சியாக இந்த இடுகை அமைகிறது.
முகநூலிலேதான்(பேஸ்புக்) இன்றைய தலைமுறையினர் முகம் தொலைக்கின்றனர். காலை எழுந்தவுடன் கண்ணாடியில் தன் முகம் பார்க்கிறார்களோ இல்லையோ முகநூலில் என்ன நிலவரம் என்ன? என்பதைத்தான் முதலில் பார்க்கிறார்கள். இதில் லைக், கமென்ட்,ஷேர் என மூன்று கூறுகள் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன.
ஒருவர் பகிரும் கருத்து இன்னொருவருக்குப் பிடித்திருந்தால் லைக் என்றும்,அதில் எதுவும் குறை, நிறை இருந்தால் கமென்ட் பகுதியில் கருத்துரையளிக்கின்றனர். அந்தச் செய்தி நாலுபேருக்குத் தெரியவேண்டியதாக இருந்தால் அதனை ஷேர் செய்கின்றனர். இந்த முறை மக்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைப் பார்க்கும்போதெல்லாம் ஆசிரியர்களின் கடமை ஒன்று என் நினைவுக்கு வரும்..
நன்னூல் என்னும் இலக்கண நூல் மாணவர்களை மூன்று வகையாகப் பாகுபாடு செய்கிறது.

அன்ன மாவே மண்ணொடு கிளியே

இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.

நன்னூல் பொதுப்பாயிரம்
மாணாக்கனது வரலாறு


அன்னம் – அன்னம் பாலோடு தண்ணீர் கலந்திருந்தாலும் தண்ணீரிலிருந்து பாலை மட்டும் பிரித்து குடித்துவிடுமாம் அதுபோல ஆசிரியர் சொல்லும் கருத்துக்களில்,
நல்லது எது?
கெட்டது எது?
எடுத்துக்காட்டுக்காகச் சொல்வது எது?
மதிப்பெண்ணுக்காகச் சொல்வது எது?
நம் மதிப்பை உயர்த்தச் சொல்வது எது? என்ற பாகுபாடு தெரிந்து பகுத்து உணர்ந்து கொள்வதால் அன்னம் போல்வர் முதல்மாணாக்கர் என்பார் பவணந்தியார். அதேபோல...

பசு பசு மிகுந்த புல்லை உடைய இடத்தைக் கண்டால் அப்புல்லை வயிறு நிறைய மேய்ந்த பின்பு ஓரிடத்திற்கு போய் இருந்து சிறிது சிறிதாக வாயில் வருவித்துக்கொண்டு மென்று தின்றல் போல , முதன் மாணாக்கர், ஆசிரியரைக் கண்டால் அவர்தம் கல்வியறிவை தன்னுள்ளம் நிறையக் கேட்டுக்கொண்டு பின்பு ஓர் இடத்துப் போயிருந்து சிறிது சிறிதாக நினைவில் கொண்டு வந்து சிந்தித்தலாலும் தலைமாணாக்கரை பசுவோடும் ஒப்பிட்டு உரைப்பர்.






மண் – நிலத்தை நன்றாக உழுது, நீர்பாய்ச்சி, களைபறித்து உழவர் உழைத்தால் அதற்கேற்ப விளைச்சல் தரும் மண். அதுபோல இடைமாணாக்கர்கள் ஆசியரியரின் உழைப்புக்கேற்ப மதிப்பெண் எடுப்பார்கள்.

கிளி - தனக்குக் கற்பித்த சொல்லையன்றி வேறு ஒன்றையும் சொல்லாது அதுபோல, இடைமாணாக்கர் தமக்குக் கற்பித்த நூல் பொருளை அன்றி வேறொரு நூல் பொருளையும் சொல்லமாட்டார்கள் அதனால் இவர்களை இடைமாணாக்கர்கள் என்றனர்



ஓட்டைக் குடம் – எவ்வளவுதான் நீரை ஊற்றினால் குடம் ஓட்டையாக இருந்தால் அதில் நீர் தங்காது. அதுபோல இவ்வகை மாணவர்களுக்கு எவ்வளவு கற்பித்தாலும் அதனை இவர்கள் மறந்துவிடுவார்கள்.

ஆடு - ஒரு செடியிலே தழை நிறைந்திருந்தாலும் வயிறு நிறைய மேயாது செடிதோறும் போய் மேயும். அதுபோலக் கடைமாணாக்கர் ஓராசிரியரிடத்து மிகுந்த கல்வி இருந்தாலும் அவரிடம் நிறையக் கற்றுக்கொள்ளாது பலரிடத்தும் போய்ப் பாடங்கேட்பார்கள். அவ்வாறு கேட்டாலும் அவர்கள் மனதில் எதுவும் தங்குவதில்லை.

எருமை - குளத்து நீரைக் கலக்கிக் குடிக்கும் எருமை. அதுபோலக் கடைமாணாக்கர் ஆசிரியனை வருத்திப் பாடங்கேட்பார்கள் இருந்தாலும் அவர்கள் நினைவில் எதுவும் நிலைத்திருப்பதில்லை.

பன்னாடை - தேன் முதலியவற்றைக் கீழே விட்டு அவற்றில் உள்ள குப்பைகளைப் பற்றிக் கொள்ளுதல் போலக் கடைமாணாக்கர் நல்ல பொருளை மறந்து விட்டுத் , தீய பொருளைச் சிந்தித்துப் பற்றிக் கொள்வார்கள்.
மாணவர்கள் இவ்வாறு மூவகைப்பட்டவர்களாக இருந்தாலும் ஒரு ஆசிரியர் அவர்களை உற்றுநோக்கி...


  •       அவர்களின் தனித்திறனை உணர்ந்து அதனை அவர்களுக்கு அடையாளப்படுத்தி இது உன்னிடம் பிறர் விரும்பும் பண்பு (லைக்) என்று உணர்த்தவேண்டும்.


  •      அவர்கள் திருத்திக்கொள்ளவேண்டிய பண்புகளிருந்தால் அதனை அவர்களைத் தனியாக அழைத்து அவர்களுக்குப் புரியவைக்கலாம்.நல்ல பண்புகளாக இருந்தால் எல்லோர் முன்னிலையில் பாராட்டலாம் (கமென்ட்)        
  •      மாணவர்களின் சில பண்புகள் பலருக்கு முன்மாதிரியாக பெரிதும் பாராட்டப்படவேண்டியவையாக இருந்தால் அதனை பலர் முன்னிலையில் தெரியப்படுத்தலாம் (ஷேர்)

இன்றைய ஆசிரியர்களுக்கு முகநூலில் (பேஸ்புக்) கணக்கு இருந்தாலும், இல்லாவிட்டாலும் மாணவர்களின் முகம் என்னும் நூலை வாசிக்கத் தெரிந்திருக்கவேண்டும்.
வாசித்தால் மட்டும்போதாது மேற்சொன்னதுபோல லைக், கமென்ட், ஷேர் செய்தல் வேண்டும்.

இவ்வாறு செய்தால்,
     கடை மாணாக்கராக – இடைமாணாக்கராகவும்
     இடை மாணாக்கர் – தலைமாணாக்கராகவும்
தலை மாணாக்கர் – தலைசிறந்த மாணாக்கராகவும் உயர்வடைவார்கள் என்பது என் கருத்து.

தொடர்புடைய இடுகை

(IQ) குழந்தைகளின் நுண்ணறிவு (IQ)