வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தேடுபொறி

திருக்குறள் தேடுபொறி


சனி, 8 டிசம்பர், 2012

பணம் சம்பாதிக்க சிறந்த வழி.


பணம் ஈட்டுவது மட்டும்தான் வாழ்க்கையா?

ஆம் என்று பலரும், 
இல்லை அதற்கும்மேலே கிடைக்கும் அனுபவத்தில் அடங்கியிருக்கிறது வாழ்க்கை என்று சிலரும் சொல்வதுண்டு.

இணையத்தில் சென்று பணம் சம்பாதிப்பது எப்படி என்று கேட்டால் பல்லாயிரம் வழிமுறைகளை இணையம் பரிந்துரை செய்கிறது.

எல்லா வழிமுறைகளையும் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

ஒன்று நேர்வழி, இரண்டாவது குறுக்குவழி.

பலருக்கும் பிடிப்பது என்னவோ குறுக்குவழிதான்.

ஒவ்வொருநாளும் நாளிதழிகளிலும், தொலைக்காட்சிகளிலும் புதிய புதிய மோசடிசெய்திகளைப் பார்க்கமுடிகிறது.

ஆசை ஆசை எல்லோருக்கும் ஆசை..

உழைக்காமலேயே உயரத்துக்கு வரவேண்டும் என்று. இதைப் பயன்படுத்திக்கொண்டு பலர் அவர்களை ஏமாற்றி உயரத்துக்கு வந்துவிடுகிறார்கள்.

கால காலமாகவே நடந்துவரும் நிதிநிறுவன மோசடி, நிலமோசடிகளின் வரிசையில் சமீபத்தில் நடந்த ஈமு கோழிமோசடி, நாட்டுக்கோழிமோசடி, தேங்காய் மோசடி என நாளுக்கு நாள் புதிது புதிதாக சிந்தித்து மோசடிகள் நடந்துவருகின்றன.



 அதனால் பணத்தை சம்பாதிப்பது ஒன்றும் சாதனையல்ல. நேர்வழியில் சம்பாதிப்பதே வாழ்நாள் சாதனையாகும்.

யாரை ஏமாற்றுகிறோமோ, ஏறி மிதிக்கிறோமோ அதைப்பற்றியெல்லாம் கவலைப்படக்கூடாது. எப்படியோ நிறைய பணம் சம்பாதிக்கவேண்டும்.
நாம் உயரத்துக்கு வந்துவிட்டபிறகு நாம் வந்துவிட்டதைப்பற்றித்தான் பேசுவார்கள், எப்படிவந்தோம் என்பதைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள் என்றே பலரும் நினைத்துவருகிறாரகள்.

இவ்வாறு பலரும் நினைத்ததால் தான் நம் முன்னோர் நமக்குச் சொல்லிச்சென்றார்கள்..

நமக்குமேலே ஒருவன் இருக்கிறான் அவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று.

ஆனால் இன்று கடவுளின் பெயராலேயே நடக்கும் மோசடிகளைக் (போலிசாமியார்கள்) காணும்போது மக்களுக்கு கடவுள் நம்பிக்கை எந்த அளவுக்கு இருக்கிறது? என்று சிந்திக்கவேண்டியதாக உள்ளது.

அடுத்தவரை ஏமாற்றி குறுக்குவழியில் ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதைவிட
நேர்வழியில் நாம் ஈட்டும் ஐநூறு ரூபாய் மதிப்புமிக்கது.


இதைத்தான் வள்ளுவர்,



பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் 
கழிநல் குரவே தலை. 
குறள் 657:


பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.

என்று சொல்கிறார்.

பணத்தை எப்படியும் சம்பாதிக்கலாம்..
இழிதொழில் செய்துகூட ஈட்டிவிடலாம்..
அதனால் விரைவில் நிறைய பணம் சம்பாதித்துவிடமுடியும்..

ஆனால்... இந்த செல்வநிலையைவிட..

நேர்வழியில் வாழ்ந்து வறுமையோடு வாழ்வதே சிறந்தது.

என்பது வள்ளுவர் வாக்கு.

இந்தக்குறளை வாழ்க்கையில் கடைபிடிக்க எல்லோராலும் முடியாது.

ஆனால் நினைத்தால் உங்களாலும் முடியும். 




தொடர்புடைய இடுகை

வெள்ளி, 7 டிசம்பர், 2012

அவனா? இவன்?


ஏதாவது ஒரு சூழலில் நாம் ஒருவரைப் பார்த்து அவரா? இவர்? என்று வியந்துபோயிருப்போம்.

நானும் அப்படித்தான் சங்கஇலக்கியங்களைப் படிக்கும்போது அந்தத்தமிழரா இன்று நாம் காணும் தமிழர் என்று வியந்துபோயிருக்கிறேன்.



அஞ்சுவது உயிர்களின் இயற்கை தான் என்றாலும் எதற்கு அஞ்சுவது என்ற வரையறையே இல்லாமல் எல்லாவற்றுக்கும் அஞ்சும் மனிதப்பிறவிகளைக் காணும்போது..
நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த
மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்
துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு)
மந்திர வாதி என்பார் - சொன்ன
மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்,
யந்திர சூனி யங்கள் - இன்னும்
எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டே - ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம
அந்த அரசியலை - இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார். (நெஞ்சு)
சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்,
துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார்,
அப்பால் எவனோ செல்வான் - அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார்,
எப்போதும் கைகட்டுவார் - இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார். (நெஞ்சு)
நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்,
கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு
கோடிஎன் றால் அது பெரிதா மோ?
ஐந்துதலைப் பாம்பென் பான் - அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால்
நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார். (நெஞ்சு)
சாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்,
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார,
ஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன்
அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார். (நெஞ்சு)
நெஞ்சு பொறுக்கு திலையே - இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே,
கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின் றாரே - இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே. (நெஞ்சு)
எண்ணிலா நோயுடையார் - இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தை கள்போல் - பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்,
நண்ணிய பெருங்கலைகள் - பத்து
நாலாயிரங் கோடி நயந்துநின்ற
புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற விலங்குகள்போல வாழ்வார். (நெஞ்சு)

என்ற மகாகவி பாரதியின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

சங்ககாலப் புறநானூற்றுப் பாடல் ஒன்று, ஒரு தாய் தன் மகனைப் பற்றிச் சொல்கிறாள்

அன்று,
என் மகன் குழந்தையாக இருக்கும்போது, அவன் குடிப்பதற்காகக் கிண்ணத்தில் பால் ஊற்றிக்கொடுப்பேன். அவனோ அதைக் குடிக்காமல் விளையாடுவான். அவனை அச்சுறுத்தியாவது பாலைக் குடிக்கச் செய்யவேண்டும் என்று சிறுகுச்சியைக் காட்டி மிரட்டுவேன். அந்த சிறு குச்சிக்கு அஞ்சியவனாக அவனும் பாலைக் குடிப்பான்.

இன்று,
பெரிய போர்க்களத்துக்குச் சென்று பெரிய பெரிய யானைகளையும் வீழ்த்தித் தன் கோபம் குறையாதவனாக உள்ளான். அவன் மார்பின் மீது அம்பு தைத்திருந்தது. நானோ பதறிக்கொண்டு “ஐயோ! உன் மார்பின் அம்பு தைத்துள்ளதே என்று கேட்டால்.. அவனோ பதறாமல் அம்பா தைத்திருக்கிறது?“ என்று கேட்கிறான்.

அன்று சிறு குச்சிக்குப் பயந்து பாலை உண்ட அவனா?
இன்று இவ்வளவு கூரிய அம்பு தன் மார்பின் மீது தைத்தும் அஞ்சாமல் இருக்கிறான்? என்று ஒரு தாய் வியப்பதாக இப்பாடல் அமைகிறது.இவனது வீரத்துக்குக் காரணம் அவன் பிறந்த மறக்குடி மரபுதான் என்று தெளிவடைகிறாள் இந்தத் தாய்.

இப்பாடலில் தமிழரின் வீரம், தாயின் அன்புள்ளம் ஆகியன சிறப்பித்து உரைக்கப்படுகின்றன.

பாடல் இதோ, 

பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்,
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சி,
உயவொடு வருந்தும் மன்னே! இனியே
புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்,
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே,
உன்னிலன் என்னும், புண்ஒன்று அம்பு_
மான்உளை அன்ன குடுமித்
தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே.
புறநானூறு 310 – பாடியவர்: பொன்முடியார் 


இன்று...
கவிஞர் காசியானந்தன்

எங்கே போனது தமிழர் வீரம்?
நாம் நம்மை எங்கே தொலைத்தோம்?


  
                                                                                                                                      தொடர்புடைய இடுகை

                                                                   குழவி இறப்பினும்

புதன், 5 டிசம்பர், 2012

விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்?

இலஞ்சம் கொடுப்பதோ, வாங்குவதோ குற்றம்!

ஆனால் இன்றைய சூழலில்,

கொடுக்கத்தெரிந்தவன் புத்திசாலி!
வாங்கத்தெரிந்தவன் பிழைக்கத்தெரிந்தவன்!
இயலாதவர்கள் இருந்தாலென்ன? இறந்தாலென்ன?

என்ற மனநிலைதான் எங்கும் காணப்படுகிறது.

இலஞ்சம் வாங்காதே பிச்சையெடு என்று கொடுத்தவர்கள் கோபப்படுகிறார்கள்!

சும்மாவா கிடைச்சது இந்த வேலை? பிச்சையெடுத்துத்தான்டா இந்த வேலையே வாங்கினேன் என்று வாங்குபவர்கள் சொல்கிறார்கள்.

கொடுப்பவர்களையும், வாங்குபவர்களையும் போலவே சராசரி வாழ்க்கை வாழப் பழகிக்கொண்டார்கள்  மக்கள்.

என்ன விதை போடுகிறோமோ அதைத்தானே அறுவடை செய்யமுடியும்.நம் முன்னோர் விதைத்துச் சென்ற இலஞ்சம் என்னும் விதையைத்தான் நாம் இப்போது அறுவடைசெய்கிறோம்.

நாமும் நம் குழந்தைகளுக்கு இலஞ்சம் என்னும் விதையை விதைத்தால் அவர்கள்
இலஞ்சம் என்னும் பயிரைத்தானே அறுவடை செய்வார்கள்.

குழந்தைகளிடம் இறைவனை வழிபடும் முறைபற்றிச்சொல்லும்போது..

இறைவனிடம் வேண்டினால் அவர் தருவார் என்றுதானே சொல்கிறோம்..

கொஞ்சம் சிந்திப்போம் இறைவனிடம் வேண்டினால் மட்டும் எல்லாம் கிடைத்துவிடாது.

உழைப்புதன் மெய்வருத்தக் கூலிதரும்.

ஆயிரம் கடவுள்களை வேண்டினாலும் 
உன் மீது நீ நம்பிக்கை வைக்காவிட்டால்
நீ தான் பெரிய நாத்திகவாதி என்ற சிந்தனைகள 
மனதில் வைத்து,

நாம் வாழும் உலகம் தான் இலஞ்சம் நிறைந்ததாக இருக்கிறது. இளம் தலைமுறையினரிடமாவது சொல்வோம்.

உழைக்காமல் எதுவும் கிடைக்காது! அப்படிக் கிடைத்தால் அது நிலைக்காது!
உழைக்காவிட்டால் சாமி எதுவும் கொடுக்காது!
உழைத்துக் கிடைத்த ஊதியம்தான் உடலில் ஒட்டும்.

உழைப்புக்கு ஊதியம் பெறு, கொடு என்ற பண்பை நம் குழந்தைகளுக்காவது சொல்லித்தருவோம்.


பணத்தை முட்டாள் கூட சம்பாதித்துவிடமுடியும்
அதை ஒரு அறிவாளியால் தான் பாதுகாக்கமுடியும்.

என்பதையும், இலஞ்சம் கொடுப்பதும், பெறுவதும் பாவம் என்பதையும் நம் குழந்தைகளுக்குச் சொல்லித்தருவோம்.




தொடர்புடைய இடுகை

தேடிவந்த உணவு

நீங்க தீவிரவாதியா?