வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 16 நவம்பர், 2012

மாணவர்கள் காணவேண்டிய திரைப்படங்கள்

 மாணவர்கள் காணவேண்டிய திரைப்படங்களை தொடர் இடுகையாக வழங்கிவருகிறேன். கடந்த இடுகையைப் பார்வையிட்டு பல பதிவர்கள் நானும் அறியாத பல மொழி சார்ந்த படங்களை மாணவர்களுக்குப் பரிந்துரை செய்தார்கள். அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு இன்றைய பதிவுக்குச் செல்கிறேன்.

என் பார்வையில் இப்படங்களை மாணவர்கள் தவறவிடக்கூடாது என்று கருதுகிறேன் அதற்கான காரணங்களை படங்களுக்குக் கீழே ஒரு சில சொற்களில் சொல்லியிருக்கிறேன்.



நாட்டுப் பற்று
******************************************

தனிமனிதக் கோபம்
******************************************

நல்ல ஆசிரியர்
******************************************

தமிழர் பெருமை
******************************************

தன்னலமின்றி வாழ்.
******************************************
தவமாய் தவமிருந்து
பெற்றோரைப் போற்று
******************************************

முட்டாள்களின் புத்திசாலித்தனம்
******************************************


நல்ல நண்பன்
******************************************
                                        
                                                
                                                                             மரபு மாற்றம்
 ******************************************                        



     பாம்பின் விசத்தைவிடக் கொடியது சாதி
    ******************************************

வியாழன், 15 நவம்பர், 2012

திருமண அழைப்பிதழ் மாதிரி


தமிழ்  உறவுகளே..

இவ்வலையில் தமிழில் வடிவாக்கம் செய்யப்பட்ட திருமண அழைப்பிதழ்களைத் தொடர்ந்து பதிவேற்றம் செய்துவருகிறேன்.

இணையத்தில் தேடும்போது கண்ணில்பட்ட இம்மாதிரியை தங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இம்மாதிரிகளை உலகு பரவிவாழும் பலரும் பயன்படுத்திவருகின்றனர்.

பதிவேற்றம் செய்த நண்பருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழில் வடிவாக்கம் செய்யப்பட்ட இதுபோன்ற அழைப்பிதழ்கள் உங்களிடம் இருக்கிறதா? gunathamizh@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்க தமிழ் நம் அடையாளம் என்பதை உலகுக்கு உணர்த்துவோம்.

ஒரு எலியும் மூன்று காக்கைகளும்


இறந்த எலிக்கும் மூன்று காக்கைகளுக்கும் இடையே உள்ள தூரம் தான் 
நம் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே உள்ள தூரம்.

இதற்குள் எத்தனை எத்தனை ஆசைகள், கனவுகள்,ஏக்கங்கள், துக்கங்கள்....


சென் கதைகள் இரண்டு....

1. சென் குரு இகியு இளம் வயதிலேயே அறிவு முதிர்ச்சியுடன் 
காணப்பட்டார்.சிறுவனாய் இருக்கும்போது ஒரு நாள் தன் குரு வைத்திருந்த ஒரு அருமையான,மிகப் பழமையான , அபூர்வமான  தேநீர்க் கோப்பையை கை நழுவி உடைத்து விட்டார்.அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.அப்போது குருவின் குரல் கேட்டது.உடனே வேகமாக அவர் குருவிடம் சென்று,''அய்யா,பிறக்கும் உயிர்கள் ஏன் இறக்க வேண்டும்?''சின்ன வயதிலேயே இப்படிக் கேள்வி கேட்கிறானே என்று மகிழ்ந்து குரு சொன்னார்,''அது இயற்கை . தவிர்க்க முடியாதது..பிறந்த ஒவ்வொன்றும் அதற்குரிய காலம் முடிந்தவுடன் இறக்கத்தான் செய்யும்.''இகியு சொன்னார்,''அய்யா,நான் உங்களுக்கு ஒரு தகவல் சொல்ல வேண்டியிருக்கிறது.
உங்களின் தேநீர்க் கோப்பைக்கு 
காலம் முடிந்ததால் இறந்து விட்டது.''

2. சென் ஞானி ஒருவரின் மனைவி இறந்து விட்டார்.துக்கம் விசாரிக்க ஊரே திரண்டு வந்திருந்தது.எல்லோர் முகத்திலும் வருத்தம்,கண்ணீர்.ஆனால் ஞானியோ கைகளால் தாளம் போட்டபடி பாடிக் கொண்டிருந்தார்,சர்வசாதாரணமாக!வந்தவர்களுக்கு அதிர்ச்சி.ஒருவன் துணிந்து கேட்டான்,
''குருவே,நீங்களே இப்படி செய்யலாமா?
என்ன இருந்தாலும் இவ்வளவு காலம் உங்களுடன் வாழ்ந்த உங்கள் மனைவி இறந்திருக்கும்போது,
நீங்கள் கவலையின்றி பாடிக் கொண்டிருக்கிறீர்களே?
''ஞானி சொன்னார்,''பிறப்பில் சிரிக்கவோ.இறப்பில் அழுவதற்கோ என்ன இருக்கிறது?பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை.என் மனைவிக்கு முன்பு உடலோ,உயிரோ இல்லை.பிறகு உயிரும் உடலும் வந்தன.
இப்போது இரண்டும் போய்விட்டன.
இடையில் வந்தவை இடையில் போயின.
இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?''


தொடர்புடைய இடுகை..

ஞாயிறு, 4 நவம்பர், 2012

எழுச்சியுற்ற பெண்கள்







இன்று பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்னும் அளவுக்கு எல்லாத் துறைகளிலும் பெண்கள் காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள். 

எனக்கான சுதந்திரத்தைக் கொடுக்க நீயார்?
என ஆண்களைப் பார்த்துக்கேட்கும் பெண்கள், 

எனக்கான சுதந்திரத்தை நானே எடுத்துக் கொள்வேன் என்று சொல்லும் துனிச்சல் பெற்றிருக்கிறார்கள்.


இன்றைய தலைமுறைப் பெண்களில் பலருக்கு 

எது பெண்சுதந்திரம்?
பெண்கள் இந்த அளவுக்கு உயர எத்தனை ஆண்கள் போராடியிருக்கிறார்கள்?

என்பதெல்லாம் தெரியவில்லை.

சான்றாக சில நிழற்படங்கள்..




இதுவா பெண்சுதந்திரம்..?

தமிழ் உறவுகளே இன்றைய தலைமுறைக்கு...
  • பாரதி, பாரதிதாசன், இராசாராம் மோகன்ராய், பெரியார், திரு.வி.க, கவிமணிதேசிகவிநாயகம்பிள்ளை போன்ற சான்றோர்களின் பெரும்பணியை எடுத்துரைப்போம்.
  • பெண்ணியம் பேசும் பெண்கள் பலர் ஆண்களுக்கெதிரானது பெண்ணியம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். 
  • தந்தையாக, தம்பியாக, அண்ணனாக, கணவனாக, மாமனாக.. இப்படி எல்லா உறவுகளாகவும் இருந்து பெண்களுக்குப் பாதுகாப்பாக இருப்பவர்களும் ஆண்கள்தான். அதனால் ஆண்களை எதிர்பதல்ல பெண்ணியம் ஆண்களுக்கு இணையாக வாழ்வது என்பதை புரியவைப்போம்.

கடந்த சிலநாட்களுக்கு முன்னர்..
தொலைக்காட்சியில் செய்தி ஒன்று..

பத்துப்பெண்கள் கூட்டமாக இருந்தபோது மூன்று ஆண்கள் சென்று அவர்களிடம் கேலி (ஈவ்டீசிங்) செய்தார்களாம். அப்போது அந்தப் பெண்கள் எல்லோரும் சேர்ந்து அந்த மூன்று ஆண்களையும் ஓடஓட அடித்துவிரட்டினார்கள். அந்தக் காட்சியைப் பார்த்தபோது கவிஞர் பாரதிதாசன் இயற்றிய எழுச்சியுற்ற பெண்கள் என்னும் கவிதைதான் நினைவுக்குவந்தது..

கவிதை இதோ...


மேற்றிசையில் வானத்தில் பொன்னுருக்கு
வெள்ளத்தில் செம்பருதி மிதக்குநேரம்!
வேற்கண்ணி யாளொருத்தி சோலைதன்னில்
விளையாட நின்றிருந்தாள் மயிலைப்போலே!
காற்றடித்த சோலையிலே நேரம் பார்த்துக்
கனிய டித்துக் கொண்டு செலும் செல்வப்பிள்ளை
ஆற்றுவெள்ளம் போலாசை வெள்ளம் தூண்ட
அவளிடத்தே சில சொன்னான் பின்னுஞ் சொல்வான்;

விரிந்தஒரு வானத்தில் ஒளிவெள்ளத்தை
விரைந்துவந்து கருமேகம் விழுங்கக்கூடும்!
இருந்தவெயில் இருளாகும் ஒரு கணத்தில்
இது அதுவாய் மாறிவிடும் ஒரு கணத்தில்
தெரிந்ததுதான்; ஆனாலும் ஒன்றேயொன்று!
தெளிந்தஓர் உள்ளத்தில் எழுந்தகாதல்
பருந்துவந்து கொத்துமென்றும் தணிவதில்லை!
படைதிரண்டு வந்தாலும் சலிப்பதில்லை!

கன்னத்தில் ஒரு முத்தம் வைப்பாய் பெண்ணே,
கருதுவதிற் பயனில்லை தனியாய் நின்று.
மின்னிவிட்டாய் என்மனதில்! பொன்னாய்ப் பூவாய்.
விளைந்துவிட்டாய் கண்ணெதிரில்! என்று சொன்னாள்.
கன்னியொரு வார்த்தையென்றாள் என்னவென்றான்.
கல்வியற்ற மனிதனை நான் மதியேன் என்றாள்
பன்னூற் பண்டிதனென்று தன்னைச் சொன்னான்.
பழச்சுளையின் வாய்திறந்து சிரித்துச் சொல்வாள்.

பெருங்கல்விப் பண்டிதனே! உனக்கோர்கேள்வி;
பெண்களுக்குச் சுதந்தரந்தான் உண்டோ? என்றாள்.
தரும்போது கொள்வதுதான் தருமம் என்றான்.
தராவிடில்நான் மேற்கொண்டால் என்னவென்றாள்.
திருமணமா காதவள்தன் பெற்றோரின்றிச்
செயல்ஒன்று தான்செய்தல் அதர்மம் என்றான்.
மருவ அழைக் கின்றாயே, நானும் என்றன்
மாதா பிதாவின்றி விடைசொல்வேனோ?

என்றுரைத்தாள், இதுகேட்டுச் செல்வப்பிள்ளை
என்னேடி, இதுஉனக்குத் தெரியவில்லை.
மன்றல்செயும் விஷயத்தில் ஒன்றில்மட்டும்
மனம்போல நடக்கலாம் பெண்கள் என்றான்.
என்மனது வேறொருவன் இடத்திலென்றே
இவனிட்ட பீடிகையைப் பறக்கச் செய்தாள்.
உன்நலத்தை இழக்கின்றாய் வலியநானே
உனக்களிப்பேன் இன்பமென நெருங்கலானான்!

அருகவளும் நெருங்கி வந்தாள்; தன் மேல்வைத்த
ஆர்வந்தான் எனநினைத்தான்! இமைக்குமுன்னே
ஒருகையில் உடைவாளும் இடதுகையில்
ஓடிப்போ! என்னுமோரு குறிப்புமாகப்
புருவத்தை மேலேற்றி விழித்துச் சொல்வாள்;
புனிதத்தால் என்காதல் பிறன்மேலென்று
பரிந்துரைத்தேன்! மேற்சென்றாய்! தெளிந்த காதல்
படைதிரண்டு வந்தாலும் சலியாதென்றாள்.

ஓடினான் ஓடினான் செல்வப்பிள்ளை
ஓடிவந்து மூச்சுவிட்டான் என்னிடத்தில்
கூடிஇரு நூறுபுலி எதிர்த்ததுண்டோ?
கொலையாளி யிடமிருந்து மீண்டதுண்டோ?
ஓடிவந்த காரணத்தைக்கேட்டேன், அன்னோன்
உரைத்துவிட்டான்! நானவற்றைக் கேட்டுவிட்டேன்.
கோடிஉள்ளம் வேண்டுமிந்த மகிழ்ச்சிதாங்கக்
குலுங்கநகைத் தேயுரைத்தேன் அவனிடத்தில்;

செல்வப்பிள்ளாய் இன்றுபுவியின் பெண்கள்
சிறுநிலையில் இருக்கவில்லை; விழித்துக் கொண்டார்!
கொல்லவந்த வாளைநீ குறைசொல்லாதே!
கொடுவாள் போல் மற்றொருவாள் உன்மனைவி
மெல்லிடையில் நீகாணாக் காரணத்தால்,
விளையாட நினைத்துவிட்டாய் ஊர்ப் பெண்கள்மேல்!
பொல்லாத மானிடனே, மனச்சான்றுக்குள்
புகுந்துகொள்வாய்! நிற்காதே! என்றேன்; சென்றான்.


தொடர்புடைய இடுகைகள்

வியாழன், 1 நவம்பர், 2012

உங்களுக்கு எத்தனை கண்கள்?


“கண்ணுடையர் என்பவர்  கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லாதவர்” (திருக்குறள் 393)

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்”,

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு”

“உதடுகள் பொய்சொல்லும்.. கண்களுக்குப் பொய்சொல்லத்தெரியாது“

என்றெல்லாம் கண்கள் குறித்து சான்றோர்கள் சொல்லிச்சென்றுள்ளனர்.

“சாலையின் நடுவே கிடக்கும் கல்லைக் கண்தெரிந்தவர்கள் கண்டும் காணமல் செல்லும்போது..
கண்தெரியாத ஒருவர் தட்டித்தடுமாறி அந்தக் கல்லை தடவி எடுத்து ஓரமாகப் போட்டுச்செல்வதைக் காணும்போதும்..

சாலையில் அடிபட்டுக்கிடப்பவரைக் கண்டும்காணமல் நாம் செல்லும்போதும்..
குற்றம்செய்தவர் இவர்தான் என்று தெரிந்தும் வாய்திறக்காமல் இருக்கும்போதும்.

மனது கேட்கிறது உனக்கெல்லாம் கண்ணிருந்தால் என்ன?
இல்லாவிட்டால் என்ன? என்று..

கண்கள் குறித்த அனுபவமொழிகளுள் நீதி வெண்பாவில் சொல்லப்பட்ட செய்திகள் புதுமையானதாக இருந்தன. அதைப் எடுத்தியம்புவதே இவ்விடுகையின் நோக்கம்..

“எல்லோருக்கும் இருப்பன இரண்டுகண்கள்!
படித்த அறிவாளிக்கு இருப்பன மூன்றுகண்கள்!
உதவிசெய்யும் கொடையாளிக்கு இருப்பன ஏழுகண்கள்!
தவத்தால் அருள் அறிவைப் பெற்ற சான்றோருக்கு இருக்கும் கண்கள் பல!“

இவைதான் அந்தப் பாடல் தரும் கருத்து.

எல்லோருக்கும் இருப்பன இரண்டுகண்கள் தான்..

அவை சிலருக்குத் தெரிகின்றன!
சிலருக்குத் தெரிவதில்லை!

அறிவாளிகளுக்கு ஞானக்கண் என்ற
மூன்றாவது கண் இருப்பதை உணரமுடிகிறது!

உதவி செய்யும் வள்ளல்களுக்கு
ஏழுகண்கள் என்ற கருத்து அவர்கள் உயிர்களின்மீது
கொண்ட அன்புடைமையைக் காட்டுவனவாக உள்ளன!

தவத்தால் அருள் அறிவைப் பெற்றோருக்கு பலகண்கள்! உண்டென்கிறது இந்தப் பாடல்.

அன்று முனிவர்கள் காடுகளிலும், மலைகளிலும் சென்று தவம்செய்தார்களாம்.அதனால் வரம்கிடைததாம்.

இன்று பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், அலுவலகங்களிலும், கடைகளிலும்..

இன்னும்.. இன்னும்...

எங்கெங்கோ தவம் இருக்கிறோம்..
பணம் என்னும் வரத்துக்காக.

அதனால் நமக்கு இருக்கும் கண்கள் எத்தனை என்பதும், எதற்கு என்பதும் நமக்குத் தெரிவதில்லை.

இன்றைய சூழலில் நிறையவே கண்மருத்துவமனைகள் வந்துவிட்டன.

அவையெல்லாம் நமது கண்களின் உட்பிரிவுகளை ஆராய்ந்து பார்வைத்திறனைச் சரிசெய்கின்றன. ஆனால்..

இந்த இலக்கியங்கள் சுட்டுவதுபோல..

நமக்கு எத்தனை கண்கள் இருக்கின்றன..?
அவை எதற்குப் பயன்படுகின்றன?
அகஇருளைப் போக்கும் ஆற்றல் கண்களின் எந்தப்பகுதியில் உள்ளது?
என்பதெல்லாம் இன்றைய கண்மருத்துவர்கள் அறியாத புதிராகவே உள்ளது.

அதனால் இப்போதெல்லாம்..

எண்ணிக்கொண்டிருக்கிறேன் எனக்கு எத்தனை கண்கள்? என்று
எண்ணிக்கொண்டிருக்கிறேன் நாம் ஏன் கண்தானம் செய்யக்கூடாது? என்று