வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 9 ஜூன், 2011

காதலுக்குக் கண்களில்லை.


காதலுக்குக் கண்கள் இல்லை என்பார்கள். ஏனென்றால்..

காதல்
காலம் பார்க்காது!
நேரம் பார்க்காது!
சாதகம் பார்க்காது!
நிறம் பார்க்காது!
அழகைப் பார்க்காது!
சாதி பார்க்காது!
மதங்களைப் பார்க்காது!

இப்படி எதுவுமே பார்க்காத காதல் அன்பை மட்டுமே பார்க்கும் அதனால் காதலுக்குக் கண்களில்லை என்பார்கள்.


(எல்லாம் பார்க்காத இன்றைய காதல் பணத்தைப் பார்க்கும் என்று யாரோ சொல்வது காதில் கேட்கிறது.
இருக்கலாம். அப்படியிருந்தால் அதற்குப் பெயர் காதல் இல்லை. வியாபாரம்!
வரதட்சனை என்ற பெயரில் மணமகனை விற்கும் வியாபாரத்துக்கும் இதற்கும் எந்த வேறுபாடும் கிடையாது.)

இதோ சங்க இலக்கியம் சொல்லும் புதுவகை விளக்கம்.


பெயல் கால் மறைத்தலின் விசும்பு காணலரே
நீர் பரந்து ஒழுகலின் நிலம் காணலரே
எல்லை சேறலின் இருள் பெரிது பட்டன்று
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல்
யாங்கு வந்தனையோ ஓங்கள் வெற்ப
வேங்கை கமழும் எம்சிறுகுடி
யாங்கு அறிந்தனையோ? நோகோ யானே

குறுந்தொகை 355
கபிலர்
குறிஞ்சி.

இரவுக் குறி நேர்ந்த தலைமகற்குத் தோழி நொந்து கூறியது.

உயர்ந்த மலையின் தலைவனே!
பெய்யும் மேகங்கள் வானத்தை மறைத்தலால் ஆங்குள்ள விண்மீன்களைக் காணமுடியவில்லை.
நீர் எங்கும் பரவி ஓடுவதால் கீழே நிலத்தையும் காணமுடியவில்லை.
கதிரவன் மேற்திசையில் மறைந்தமையால் மேலும், கீழும் எங்கும் மிகுதியான இருள் தோன்றியது.

இந்நிலையில் எம்மையும், உன்னையும் தவிர யாவரும் உறங்கிவிட்டனர்.

இங்குள்ள வேங்கையின் மலர்கள் மனம் வீசுகின்ற ஆங்குள்ள சிறுகுடி உள்ள இடத்தை வருவதற்கு எவ்வாறு அறிந்துகொண்டாய்..?

நாங்கள் நீ வரும் வழியின் அருமை கண்டு வருந்துவோம்.

1. இரவுக்குறியில் இடையீடுகள் பல இருப்பினும் தலைவன் தன் வலிமையாலும், அறிவாலும் அவற்றைக் கடந்து தலைவியைக் குறியிடத்துக் கண்டான். அவள் அவன் வருகை குறித்து மகிழ்ந்தாள். ஆயினும் வழியருமை எண்ணி வருந்தினாள்.

2. விசும்பு காணாமை – திசையை அறிய முடியாது
நீர் நிறைந்த நிலம் – நிலத்தை அறிய முடியாது
கதிரவரன் மறைதல் – வழியறிய முடியாது
ஓசையின்றி ஊர் தூங்குவதால் – ஊரிடம் அறியமுடியாது. இவ்வளவு தடைகள் இருந்தாலும் தலைவன் தலைவியைச் சந்திக்கிறான்.இங்கு தலைவன் தலைவியைக் காண்பதற்கு கொடிய பாதையைக் கடக்கிறான் இருந்தாலும் அவனுக்குக் கண்கள், காது என்னும் உறுப்புகளின் துணை தேவைப்படவில்லை.
மனம் – மனதைத் தேடிச் செல்கிறது அதற்கு கால்கள் மட்டுமே போதுமானதாக இருக்கிறது இங்கு. இதனால் தானோ காதலுக்குக் கண்களில்லை என்றார்கள்.


3. இரவுக்குறியின் பயனின்மை காட்டிய தோழி தலைவனைத்
வரைவு கடாவுவதாக (திருமணத்துக்குத் தூண்டுவதாக இப்பாடல் அமைகிறது)

தமிழ்ச் சொல் அறிவோம்.

1. பெயல் – மேகம்
2. கால் – வான் வெளி
3. எல்லை – கதிரவன்
4. கங்குல் – இரவு.

14 கருத்துகள்:

  1. அருமை..நன்றி..ஆனால் அன்புக்கு மட்டுமே கண்கள் உண்டு என்று ஓஷோ சொல்வார்.

    பதிலளிநீக்கு
  2. @"என் ராஜபாட்டை"- ராஜா நன்றி நண்பா.
    தங்கள் தளத்தில் கருத்தளிப்பதில் சிக்கல் இருக்கிறதே நண்பா.

    பதிலளிநீக்கு
  3. @சமுத்ரா அட!!
    புதிதாக இருக்கிறதே..

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. சங்க இலக்கியம் பற்றிய பாடலும் விளக்கங்களும், இன்றைய அன்போ அல்லது வியாபாரமோ ஆன காதலும் பற்றிய அனைத்தும் அழகாக சொல்லியுள்ள தங்களுக்கு பாராட்டுக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. @வை.கோபாலகிருஷ்ணன் தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  6. காதலைப் பற்றிய நல்ல விளக்கம்.. எளிய நடையில் புரியும் வண்ணம் இருந்தது.. தொடருங்கள் முனைவர்கள்..நன்றி பாராட்டுகள் பல.

    பதிலளிநீக்கு
  7. மாப்ள தமிழ்காதலி விளையாடுகிறாள் உம்மிடம்!

    பதிலளிநீக்கு
  8. கண்ணில்லாக் காதலை அன்றே சொல்லி வைத்திருக்கிறார்களே !

    பதிலளிநீக்கு
  9. எளிய நடையில் அருமையான விளக்கங்கள்....
    நல்லாயிருக்குங்க...

    பதிலளிநீக்கு
  10. nanbare,

    kathalukku kannillai enbathu poi.

    kaathaliththu paarungal, ungalukku moonravathu kan onru kidaikkum . athilae neengal mattravarkal paarkkatha pala visyangalai paarkkalam.

    jaathiyaium, varathatchanaiyaium kaathalal mattumae olikkamudiyum

    பதிலளிநீக்கு