வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 25 ஜூன், 2012

சங்கஇலக்கியத்தில் பொன்மொழிகள்



கல்வி




(ம் ஆசிரியருக்கு ஒரு துன்பம் வந்தபோது உடன் சென்று அதனைத் தீர்ப்பதற்குத் துணைநிற்க வேண்டும். மிகுதியான பொருளை அவருக்குக் கொடுத்தாவது கல்விகற்றல் வேண்டும்.)
-----0oOo0---------0oOo0---------0oOo0----
மழலை

பயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே

(குறும்புகளால் பெற்றோரை மயக்கி இன்பம் கொடுக்கும்
புதல்வர்கள் இல்லாதவர்களது வாழ்நாள் பயனற்றதே)


-----0oOo0---------0oOo0---------0oOo0----


வரி


(அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி 


திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும்.)


-----0oOo0---------0oOo0---------0oOo0----


இளமை


(இவ்வுலகத்தில் நாள்தோறும் வில்லிலிருந்து புறப்படும் அம்பின் செல்லும் 


நிழல் எப்படி மறையுமோ“ அப்படி இன்பமும் இளமையும் விரைந்து கழியும்.)


-----0oOo0---------0oOo0---------0oOo0----


வாழ்க்கைப் புதிர்



(“ஒருகாலத்தில் முதுமையடைந்தோர் மறுபடியும் அழிந்த இளமையை 


எய்துவது இல்லை! அதே போல், “வாழ்நாளின் அளவு இவ்வளவு என்பதை 


அறிந்தவரும் இல்லை!“ )


-----0oOo0---------0oOo0---------0oOo0----

ஞாயிறு, 24 ஜூன், 2012

பேச்சுத்திறமை - தென்கச்சியார்.

 உங்க நண்பர் எப்படி இறந்தார் என்று ஒருவர் இன்னொருவரைப் பார்த்துக் கேட்கிறார். அதற்கு இவர்..

“அவன் வயித்துல எலி ஓடுற மாதிரி இருந்துச்சுன்னு சொன்னான் அதான் அவனுக்கு "எலி மருந்து" கொடுத்தேன். அதுக்குள்ள அவனை எலி கொன்னுடுச்சு என்று.



எனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.


எந்தஒரு சூழ்நிலையையும், பேச்சுத்திறமையால் ஒருவன் தனக்கு ஏற்றார்போல மாற்றிக்கொள்ளமுடியும்.என்பதற்கு இந்த நகைச்சுவை தக்கதொரு சான்று.

இந்த நகைச்சுவையைப் படித்தவுடன் நினைவுக்கு வந்த தென்கச்சியார் நகைச்சுவை...

                   அமெரிக்காவில் புகழ் பெற்ற வழக்கறிஞர் ஒருவர் இருந்தார்.     அவரை எதிர்த்து வாதாட ஆளில்லை எனும் அளவுக்கு, தனது வாதத் திறமையால் நீதிமன்றங்களைக் கலக்குவார். பத்திரிகைகளில் அவரை பேட்டியெடுக்க போட்டா போட்டி நடக்கும். ஒரு பத்திரிகையாளர் வித்தியாசமாக அந்த வழக்கறிஞரின் தாயாரை பேட்டியெடுத்தார்.

"உங்கள் பிள்ளை இந்தளவுக்கு புகழ் பெறுவார் என்று நினைத்தீர்களா?"
"அவன் சிறுவனாக இருந்த போதே, சில நிகழ்ச்சிகள் மூலம் அவனது சொல்லாற்றலைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவன் தனது வாய்த் திறமையால் பெரியாளாக வருவான் என யூகித்து விட்டேன்."

"என்ன அது... சொல்லுங்களேன்!"
"ஒரு நாள் சமையலறையில் வேலையாக இருந்தேன். இவன் அப்பா வெளியே செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவன் அறையில் பூனை அலறும் சத்தம் கேட்டது. எப்போதும் பூனையின் வாலை இழுத்து விளையாடுவது அவன் வழக்கம். உடனே நான் அவனை அதட்டினேன்"
"டேய்.. பூனை வாலை பிடிச்சி இழுக்காதே..அது பாவம்" என்றேன்.

அதற்கு அவன் "பூனை வாலை நான் இழுக்கலை. அதோட வாலை அதுவே இழுத்துகிட்டு கத்துது. நான் சும்மா நிக்கறேன்" என்றான்.

எனக்கு குழப்பமாகி விட்டது. உடனே அந்த அறையை எட்டிப் பார்த்தேன். அங்கு பூனை வாலை அவன் மிதித்துக் கொண்டிருந்தான். பூனை வலி தாங்காமல் தன் வாலை இழுத்துக் கொண்டிருந்தது. நடந்த நிகழ்ச்சியை அப்படியே மாற்றிச் சொல்லி ஏற்றுக் கொள்ள வைக்கும் திறமை அவனுக்கு அப்போதே இருந்தது. -இது அந்த தாயாரின் மலரும் நினைவுகள்.

வார்த்தைகளை தனக்கு சாதகமாக்கி, அடுத்தவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்வது ஒரு கலை. அது வழக்கின் திசையை மட்டுமல்ல, வாழ்க்கையின் திசையைக் கூட மாற்றவல்லது.
மனஇயல் நிபுணர்கள் என்ன சொல்வது என்ன தெரியுமா?
"எவன் ஒருவன் தன் மீது வீசப்படும் கற்களைக் கொண்டே வலிமையான அடித்தளம் அமைத்து முன்னேறுகிறானோ, அவனே சாதனையாளன் ஆகிறான்"

இக்கதைகளின் வழியே...


  • குழந்தைகளின் விருப்பத்துக்கும், திறனுக்கும் முன்னுரிமைதரும்போது அவர்கள் வாழ்வில் பெரிய வெற்றியை அடைகிறார்கள் என்னும் வாழ்வியல் நுட்பமும் உணர்த்தப்படுகிறது.

வியாழன், 21 ஜூன், 2012

நாளைய குடிநீர்











    என் சிறுவயதில் எங்க ஊரில், பல இடங்களிலும் குடிநீர் குளங்கள்” என்று பல இருந்தன. இன்று அந்த இடங்களெல்லாம் கட்டிடங்கள் வந்துவிட்டன.சில குளங்களில், சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று குடிநீரை விலைகொடுத்துத்தான் வாங்கிக்கொண்டிருக்கிறோம்.

    எதிர்காலத்தை நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இதன் அடுத்தநிலை என்ன?
    எதிர்காலத்தில் குடிநீருக்கு என்னசெய்யப்போகிறோம்..? என்று.


    சங்ககாலப் பாடல் ஒன்று நாளைய குடிநீர் இப்படிக்கூட இருக்கலாமோ என்ற அச்சத்தைத்தான் ஏற்படுத்துகிறது.

    தலைவனுடன் உடன்போக்கு சென்று மீண்ட தலைவியிடம்,
    நீ சென்ற தலைவனின் நாட்டுக் குடிநீர் நன்றாக இருக்காது என்று சொல்கிறாள் தோழி.
    இல்லைஇல்லை அது இனிமையான நீர் என்று
    பதில் சொல்கிறாள் தலைவி.
    இது தலைவி, தலைவன் மீது கொண்ட அன்பை
    வெளிக் கொணரத் தோழி கையாளும் உத்திகளுள் ஒன்றாகக் காணமுடிகிறது.

    பாடல் இதோ..

    அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பை
    தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
    உவலைக் கூவல் கீழ
    மான்உண்டு எஞ்சிய கலுழி நீரே
    ஐங்குறுநூறு -203


    என் தலைவன் நாட்டில் கிடைக்கும் நீர் “மான் உண்டு எஞ்சிய அழுகிய சிறிதளவு நீர்தான்” என்றாலும் அதன் சுவை, நம்முடைய வீட்டில் தோட்டத்தில் கிடைக்கும் இனிய தேனோடு கலந்த பசுவின் பாலைவிட இனிமையானது,  என்கிறாள் தலைவி.


     பாடல் வழியே..

  1. பிறந்தவீட்டுப் பெருமையைப் போலவே புகுந்தவீட்டுப் பெருமையையும் காக்கவேண்டியது பெண்களின் கடமை என்ற பண்பாட்டை நினைவுபடுத்துவதாக இப்பாடல் அமைகிறது. என்னதான் தலைவனின் நாட்டில் கிடைக்கும் நீர் சுத்தமற்றதாக, சுவையற்றதாக இருந்தாலும் அதைவிட்டுக்கொடுக்காமல் பேசும் தலைவியின் பண்பு அவள் தலைவன் மீது கொண்ட காதலை அறிவுறுத்துவதாக உள்ளது.

  2. என்னதான் தலைவி கலங்கிய நீரை தேனோடும் பாலோடும் கலந்த நீர் என்று சொன்னாலும், மான்உண்டு எஞ்சிக் கலங்கிய நீர் என்ற சிந்தனை நாளை நாம் குடிக்கும் நீருக்கும் இந்த நிலை வருமோ? என்ற கருத்தை முன்வைப்பதாக அமைகிறது.

தொடர்புடைய இடுகை

திங்கள், 18 ஜூன், 2012

இதுவல்லவா தாயுள்ளம்



  • கடவுள் எல்லோரிடமும் நேரிடையாக வரமுடியவில்ல என்பதால்தான் அம்மா என்ற கடவுளை நமக்குத் தந்தான் என்று கவிதைகள் சொல்வதுண்டு.


  • தலைகூட நிற்காமல் ஆடிக்கொண்டிருந்த வயதில் பார்த்துப்பார்த்து

வளர்த்த பெற்றோருக்குத் தெரியாதா?

தன் பிள்ளை வயதுக்கு வந்தபிறகு நல்ல துணையாகப் பார்த்துத்
திருமணம் செய்துவைக்கவேண்டுமென்று?

அவசரம்! அவசரம்!

எல்லாவற்றிலும் அவசரம்..

காதல் என்ற பெயரில், 
பார்த்துப் பார்த்து வளர்த்த பெற்றோரை மறந்து யாரோ ஒருவரோடு..

இருபது வயது வரை
என்பெற்றோரின் வசமிருந்தேன்
இருபது நிமிடத்திலே
நான் உன் வசமாகிவிட்டேன்

என்று பாடிக்கொண்டே சென்றுவிடுகின்றனர் பிள்ளைகள்.

இது நன்றி மறத்தல் அல்லவா?
இதற்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

இங்கு ஒரு தாய் தன்னைமதிக்காமல் தன்மகள், அவள் காதலனுடன் ஓடிச்சென்றமைக்குத் தண்டனை கொடுக்கிறாள்
என்ன தண்டனை கொடுக்கிறாள் என்று பாருங்கள்.


முதியோர் இல்லங்களும், தனிக்குடும்பங்களும் நிறையவே தோன்றிவரும் இக்காலத்தில் தாய்சேய் உறவுநிலை குறித்த புரிதலுக்காக இப்பாடலைத் தங்கள் முன்வைக்கிறேன்.


காதலனுடன் சென்று தன் கற்பைக் காத்துக்கொள்வதே 
அறநெறி என்று உணர்ந்த,
 பிறைபோலும் நெற்றியைக் கொண்ட எனதருமை மகள்
அவள் காதலித்தவனோடு சென்றுவிட்டாள்
அவள் சென்ற பாலை வழியோ
மள்ளர் தம் பறையை முழக்கினால் அதன் ஒலிக்கேற்ப மயில்கள் எழுந்து ஆடி மகிழும் உயர்ச்சியும், நெடுமையும் கொண்ட மலையில் ஆரவாரமிக்க மேகங்கள் மழை பொழிய அவள் சென்ற நிலம் குளிர்ச்சியையுடையனவாகுக என வேண்டிக்கொள்கிறாள் தலைவியைப் பெற்ற நற்றாய்.


மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்
உயர் நெடுங்குன்றம் படு மழை தலைஇச்
சுரம் நனி இனிய ஆகுகதில்ல
அறநெறி இதுஎனத தெளிந்த என்
பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே
ஐங்குறுநூறு -371

நகைச்சுவை

பாலை நிலத்தில் வாழும் மறவர்களான மள்ளர்கள் முழக்கிய பறையோசையை இடியோசை எனத் தவறாக உணர்ந்து, மயில்கள் நடனமாடும் என்ற கருத்து மயில்களின் அறியாமை காரணமாக நகையை ஏற்படுத்துவதாக உள்ளது.


தாயுள்ளம்.

தன்னை மதிக்காது தலைவனுடன் சென்றாள் தலைவி. என்றாலும், கொடிய வெப்பம் வீசக்கூடிய பாலைநிலம் மழை பொழிந்து இனிது குளிச்சியுடையனவாகவேண்டும் என்று எண்ணும் தாயின் உள்ளம் தாயுள்ளத்தின் தன்னிகரற்ற தன்மையை உணர்த்துவதாகவுள்ளது.

அறநெறி

தலைவனைக் காதலித்த தலைவி, தம் காதலைப் பெற்றோர் எதிர்த்தால் அஞ்சாது தலைவனுடன் உடன்போக்கிலாவது சென்று தம் கற்பைக் காத்துக்கொள்ளவேண்டும் அதுவே அறநெறி என்ற சங்ககாலக் கருத்து இப்பாடல் வழி சுட்டப்படுகிறது.

ஞாயிறு, 17 ஜூன், 2012

பே(பெய)ராசைபிடித்த பெண்கள்!



ஆண் - பெண் இருவரில் பேராசை பிடித்தவர்கள் யார்? என்றால் கண்களை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம் பெண்கள்தான் என்று..

ஏனென்று கேட்கிறீர்களா?
கீழே பாருங்கள் இவர்களுக்கு எத்தனை பெயர்கள் என்று..


பொருளாசை பிடித்தவர்கள் என்பதால் அல்ல
ஆண்களுக்குப் பிடித்தவர்கள் என்பதால்

ஆம் தமிழ் இலக்கியப்பரப்பில் ஆண்களால் அழைக்கப்பட்ட பெண்களின் பெயர்களைத்தான் இன்று காணப்போகிறோம்.





பேதை, பெதும்பை,மங்கை, மடந்தை,
அரிவை,தெரிவை, பேரிளம்பெண்,
அங்கனை, ஆடவள், ஆயிழை,ஆட்டி,
மாயோள், சுரிகுழல்
மகடூஉகாந்தை
சுந்தரி, வனிதை, மாது
மானினி, நல்லாள், சிறுமி,சேயிழை,
தையல், நங்கை,நாரி, பிரியை, காரிகை
அணங்கு, பிணா
பெண்டு,குறத்தி, இடைச்சி,உழத்தி,
 நுழைச்சி, எயிற்றி, மறத்தி,
தலைவி, தோழி, நற்றாய், 
செவிலி,விறலி

சனி, 16 ஜூன், 2012

பொய் சொல்லும் காதுகள்

                   நம்மிடமே இருந்தாலும் சிலநேரங்களில் நம் புலன்கள் நமக்கு எதிராகவே செயல்படுகின்றன. மெய், வாய், கண், செவி, மூக்கு என ஒவ்வொரு புலன்களும் நமக்கு எதிராக எப்போதெல்லாம் செயல்படுகின்றன என்பதைக் கொஞ்சம் உற்றுநோக்கிப் பார்த்தால்.

  • உடல்நிலை பாதித்தல்
  • மனநிலை பாதித்தல் 
என்னும் இருநிலைகளை நாம் அடையாளம் காணமுடியும். இன்று ஒரு அகப்பாடலைக் காண இருக்கிறோம். இதில் தலைவியின் காதுகள் அவளிடம் பொய் சொல்கின்றன. இது உடல்நிலை பாதிப்பா? மனநிலை பாதிப்பா? என்று பார்க்கலாம் வாங்க..


  • காது பேசுமா?
  • பேசினால் பொய்பேசுமா? 

என்று தோன்றுகிறதா? பாடலைப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.


                    திருமண நாள் குறிக்கப்பட்ட இடைப்பட்ட நாளில் தலைவனின் நினைவாகவே வாடியிருக்கிறாள் தலைவி. அவளிடம் உன்னால் அவன் நினைவைத் தாங்கிக்கொள்ளமுடியுமா? என்று கேட்கிறாள் தோழி. அதற்குத் தலைவி பதிலளிப்பதாக இப்பாடல் அமைகிறது.

                    நள்ளிரவுப் பொழுதில் பனைமரத்தில் கட்டப்பட்ட கூட்டில் தம் அருகில் ஆண்அன்றில்பறவை இருந்தாலும் பெண் அன்றில் ஆண்அன்றிலை எண்ணி ஒலி எழுப்பும். அப்போது ஊர்மன்றத்தைப் பிளந்து கொண்டு செல்வதுபோன்ற பேரொலியுடன் தலைவனின் நெடிய தேர் வரவில்லை என்றாலும் வருவதுபோலவே என் காதில் ஒலிக்கிறது அதனால் நான் தூக்கமின்றித் தவிக்கிறேன் என்கிறாள் தலைவி.

பாடல் இதுதான்.


முழவு முதல் அரைய தடவுநிலைப் பெண்ணைக்

கொழு மடல் இழைத்த சிறு கோல் குடம்பைக்
கருங்கால் அன்றில் காமர் கடுஞ்சூல்
வயவுப்பெடை யகவும் பானாட் கங்குல்
மன்றம் போழும் இனமணி நெடுந்தேர்
வாரா தாயினும் வருவது போலச்
செவி முதல் இசைக்கும் அரவமொடு
துயில் துறந்தனவால் தோழி என் கண்ணே.


குறுந்தொகை 301, 
குன்றியனார், 
இப்பாடலின் ஆங்கில வடிவம்...


My friend! In the middle of the night

my eyes have abandoned  sleep,
and even though I know that he isn’t coming
I feel I hear his tall chariots
with many bells, splitting the earth
and arriving in our town’s common grounds
as the black-legged anril bird
with her first set of eggs
in her nest woven
with small twigs from the luxuriant fronds
of the palm trees with drum-like trunks
calls out in pain for her loving mate.              

பாடலின் அழகுக்கு மேலும் அழகுதரும் கூறுகள்

  • ஒரே கூட்டில் வாழ்ந்தாலும் உடனிருக்கும் தம் துணையைப் பிரிந்ததாக எண்ணி அன்றில் பறவை வருந்தும் என்ற புலவரின் கூற்று அஃறிணை உயிரினங்களின் காதலுக்குத் தக்க சான்றாக அமைகிறது.
  • தலைவனின் தேர் வரவில்லை என்றாலும் பேரொலியுடன் விரைந்து வருவதுபோல ஓசை என்காதுகளில் ஒலிக்கும் என்ற தலைவியின் நினைவு தலைவன் மீது தலைவி கொண்ட பெருங்காதலுக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.
தொடர்புடைய இடுகைகள்

வெள்ளி, 8 ஜூன், 2012

உன்னை மட்டும் காட்டும் கண்கள்



  • காதல் என்பது ஒரு மாய உலகம்!

    இங்கு இருவர் மட்டுமே வாழ்கிறார்கள்!
    இவ்விருவருக்கும் இவ்விருவர் மட்டுமே தெரிகிறார்கள்.
    அதனால் தான் “காதலுக்குக் கண்களில்லை“ என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள் போலும்.



  • காதல் என்பது ஒரு சிறைச்சாலை!

    காதலர்களை யாரும் சிறைப்படுத்தத் தேவையில்லை. இவர்களே இவர்களைச் சிறைப்படுத்திக்கொள்வார்கள். இவர்களுக்கு தம்மைச் சுற்றி எத்தனைபேர் இருந்தாலும் கண்களுக்குத் தெரியாது. அதனால் பலநேரங்களில் இவர்கள் தனிமையில் வாழ்வதாகவே எண்ணிக்கொள்வார்கள்.


    இதோ சில காதல் கைதிகளைக் காண்போம்...
  •  திருமணத்துக்கு இடையிலான தலைவனின் பிரிவைத் தலைவியால்  

       தாங்கிக்கொள்ள இயலவில்லை.  தன் உடலில் உயிர் நீங்கிச் சென்றது  

       போல வருந்தினாள்மழை பொழிந்த மேகம் தெற்கே சென்றது போல  
        என் நெஞ்சம் தலைவனின் பின்னே சென்று விட்டது. பின் அங்கே  
       தங்கி என்னை மறந்துபோனதுஎன் உடலோ போருக்கும் பின்னர்  
       என்கிறாள் ஒரு தலைவி.


  •  காதலன் தன்னுடன் உள்ளபோது சீறூரில் வாழ்ந்தாலும், அதனையே விழா நடைபெறும் பேரூராக எண்ணிக்கொள்ளகிறாள் தலைவி
               அதே நேரம் அவன் தன்னைப் பிரிந்தபோது மக்கள் நீங்கிய அணில் விளையாடும் தனியான முற்றத்தைப் போலப் பொலிவிழந்து 

காணப்படுகிறேன் என உரைக்கிறாள்.

    இந்தத் தலைவியர் போல குறுந்தொகையில் ஒரு தலைவயின் தனிமைத் துயரைக் காண்போம் வாருங்கள்..


  •  குளிர்ச்சியை உடைய கடலில் தோன்றிய அலைகள், மீன்களை இடம்பெயர்த்துக் கொண்டுவந்து தருதலினால், வெண்மையான சிறகுகளையுடைய நாரைகள், அங்கு சென்று அயிரை மீன்களை விரும்பி உண்ணும். இத்தகைய தன்மையுடைய மரந்தை என்னும் கடற்துறைப் பட்டினத்தில்,

    தலைவன் என்னோடு உள்ளபோதெல்லாம் அவ்வூர் மிகவும் நன்மையுடையதாகவும்,
    தலைவன் என்னை நீங்கியபோதெல்லாம் ஒருவருமில்லாத தனிமையுடையதாகவும் தோன்றும் என்கிறாள் இந்தத் தலைவி..

    பாடல் இதோ..

    தண் கடல் படுதிரை பெயர்த்தலின், வெண்பறை
    நாரை நிரைபெயர்ந்து அயிரை ஆரும்
    ஊரோ நன்றுமன், மரந்தை
    ஒரு தனி வைகின், புலம்பு ஆகின்றே.


    குறுந்தொகை
    கூடலூர்க் கிழார்.
    காப்பு மிகுதிக்கண், தோழி தலைமகட்கு உரைத்தது


    தமிழ்ச்சொல் அறிவோம்

    படுதிரை - ஒலிக்கும் அலை
    பறை - சிறகு
    நாரை - கொக்கு
    காப்பு - காவல்
    புலம்பு - தனிமை

    தொடர்புடைய இடுகைகள்








செவ்வாய், 5 ஜூன், 2012

108ஐ அழைக்காதே......!


    இன்று மாலை சாலை வழியே நடந்து வந்துகொண்டிருந்தேன். என்னைக் கடந்து ஒரு ஆட்டோ சென்றது.
    வழக்கமாக ஆட்டோக்களின் பின்னால் எழுதப்பட்ட வாக்கிங்களைப் படிப்பது என் பழக்கம். இன்றும் இந்த ஆட்டோவில் என்ன எழுதியிருக்கிறார்கள் படிக்கலாம் என்று பார்த்தேன்..

    ........................108 ஐ அழைக்காதே..

    என்ற செய்தி தான் முதலில் என் கண்களுக்குப் பட்டது.

    வியப்புடன் ஏன் இப்படி எழுதியிருக்கிறார்கள்? 108 அவரசரகால மருத்துவஉதவி வாகனமல்லவா? அதை அழைக்காதே என்று ஏன் சொல்லவேண்டும் என்ற ஆர்வத்தில் முதலில் எழுதப்பட்ட செய்தியைப் பரபரப்பாகத் தேடின என் கண்கள்.

    100ல் போகாதே 108ஐ அழைக்காதே என்பதுதான் அதில் எழுதப்பட்டிருந்த முழுமையான வாக்கியம்.

    படித்து முடித்தவுடன் நல்லவொரு சாலை விழிப்புணர்வுதரும் செய்தியைப் படித்த மனநிறைவு ஏற்பட்டது.

    விரைவாகச் செல்லுதல் தானே நடைபெறும் சாலைவிபத்துகளில் குறிப்பித்தக்கதாகவுள்ளது..!

    என சிந்தித்துக்கொண்டே நடந்து வரும் போது உள்மனம் சொன்னது...
    இந்த விழிப்புணர்வுதரும் செய்தியை எழுதிவைத்திருந்த அந்த ஆட்டோ, இவ்வளவு விரைவாகச் சென்று கண்ணில் மறைந்துவிட்டதே என்று..

    அறிவுரைகள் அடுத்தவருக்குத்தான் என்பதே வாழ்வியல் உண்மை!
    அதனால் இந்த இடுகை உங்களுக்கு நான் சொல்லும் அறிவுரையல்ல.

    என் வாழ்வில் நான் ஏற்கும் உறுதிமொழி.(முடிந்தால் நீங்களும்...)

  1. 100ல் போகாதே 108ஐ அழைக்காதே என்ற  விழிப்புணர்வு வாக்கியத்தை வாகனம் ஓட்டும் போதெல்லாம் நான் நினைவில் கொள்வேன். 

      

ஞாயிறு, 3 ஜூன், 2012

தேடினால் கிடைக்கும் வா..


உன் நண்பனைக் காட்டு உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பார்கள்
நண்பனுக்காக உயிரையும் கொடுக்கலாம் ஆனால் உயிரைக் கொடுப்பதற்கு ஏற்ற நண்பன் கிடைப்பது தான் அரிது என்றும் பலர் புலம்புவதுண்டு.
இன்பம் வந்தபோது மட்டும் கலந்துறவாடி, துன்பம் வந்தபோது ஓடி மறைவதல்ல நட்பு..
அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச்செய்து,அழிவு வந்தபோதும் உடனிருந்து துன்பப்படுவதே நட்பு என்பார் வள்ளுவர். இதனை,
அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு (குறள்787)
என்ற குறள் விளக்கும்.
தன் தலைவனை நீங்கி வாடும் தலைவியின் மனம் மகிழ்ச்சியுறுமாறு தன்னம்பிக்கை மொழிகளைப் பேசுகிறாள் தோழி ஒருத்தி.
தலைவனை நீங்கிய தலைவி அவன் நினைவாகவே வருந்தியிருக்கிறாள். அவளை ஆற்றுப்படுத்துவதாகத் தோழி பேசுகிறாள்.
தோழி.. தலைவனைக் காணோம், தலைவனைக் காணோம் என்று ஏன் மயங்குகிறாய்,
  • நம் தலைவர் நிலத்திற்கு உள்ளே நுழையவில்லை. 
  • வானத்திற்கும் ஏறவில்லை. 
  • பெரியக் கடல் உள்ளும் நடந்துச் செல்லவில்லை. 
  • நாம் அவரை நாடுகள் தோறும், 
  • ஊர்கள் தோறும், 
  • குடிகள் தோறும் முறையாகத் தேடினால் 
  • அகப்படாமல் போய் விடுவாரா?


என்று தலைவியைத் தேற்றுகிறாள் தோழி..

பாடல் இதோ..
நிலந்தொட்டுப் புகார் வானம் ஏறார்
விலங்கு இரு முந்நீர் காலில் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்
கெடுநரும் உளரோ நம் காதலோரே.


குறுந்தொகை 130, வெள்ளி வீதியார்,

  • நிலத்திற்கு உள்ளே நாகஉலகத்துக் கன்னியரை விரும்பி நிலத்தை அகழ்ந்து அவ்வுலகிலே புகுந்திருப்பாரோ?
  • வானுலகில் வாழும் அரமகளிரை விரும்பிக் காலால் தேவ உலகிற்கு ஏறிச் சென்றிருப்பாரோ?
  • இம்மண்ணுலகில் நீரர மகளிரை விரும்பி அக்கரைக்கும் இக்கரைக்குமாகக் குறுக்கே கிடக்கின்ற பெருங்கடலில் காலால் நடந்து சென்றிருப்பாரோ? 
  • நம்நாட்டிலும், பிறநாடுகளிலும், நம் ஊரிலும் பிற ஊர்களிலும் ஒவ்வொரு குடியாக முறையாகத் தேடினால் அகப்படாமல் தப்பி வேறிடம் சென்றிடுவாரோ!!!
என தன்னம்பிக்கை மொழிகளைப் பேசுகிறாள் தோழி.

இப்படி நேர்மறையான எண்ணங்களையும், தன்னம்பிக்கை 
மொழிகளையும் பேசும் நண்பனோ, தோழியோ அருகே இருந்தால், பெரிய மலைகளும் சிறு கற்களாகவே நமக்குத் தோன்றும்.

தொடர்புடைய இடுகைகள்