வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 30 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 101. நன்றியில் செல்வம்

 

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்

செத்தான் செயக்கிடந்தது இல். - 1001   

சேர்த்த பொருளை அனுபவிக்காதவனுக்கு அப்பொருளால் பயனில்லை

பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்

மருளானாம் மாணாப் பிறப்பு. - 1002

பொருள்தான் எல்லாம் என எண்ணி ஈயாதவர் இழிவானவர்

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்

தோற்றம் நிலக்குப் பொறை. - 1003

புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பவர்  நிலத்துக்கு சுமையாவர்    

எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்

நச்சப் படாஅ தவன். - 1004

பிறருக்கு உதவாத ஒருவனின் மறைவுக்குப் பின் ஏதும் எஞ்சி நிற்காது

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்க்கிய

கோடியுண் டாயினும் இல். - 1005

வழங்கி, அனுபவித்து வாழாதவர்களுக்கு பொருளால் பயனில்லை

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று

ஈதல் இயல்பிலா தான். - 1006

நுகராமல், வழங்காமல் வாழ்பவன், சேர்த்த செல்வத்தின் நோயாவான்

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்

பெற்றாள் தமியள்மூத் தற்று. - 1007

உதவாதவன் செல்வம், பேரழகி தனித்து முதுமையடைந்தது போன்றது

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்

நச்சு மரம்பழுத் தற்று. - 1008

கஞ்சனின் செல்வம், ஊர் நடுவே நச்சுமரம் பழுத்தது போன்றது

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய

ஒண்பொருள் கொள்வார் பிறர். - 1009

அன்பு, அறம் நீக்கிச் சேர்த்த செல்வத்தை பிறரே அனுபவிப்பர் 

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி

வறங்கூர்ந் தனையது உடைத்து. - 1010

வள்ளல் வறுமையடைதல் மேகம் வறண்டதைப் போன்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக