வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 8 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 84. பேதைமை

 


பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு

ஊதியம் போக விடல். - 831

பேதைமை என்பது தீயதை ஏற்று நல்லதைவிடுவதே 

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை

கையல்ல தன்கட் செயல். - 832

இயலாத செயல்களின் மேல் ஆசைகொள்ளுதல் பெரிய அறியாமை    

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்

பேணாமை பேதை தொழில். - 833

வெட்கம், ஆராய்ச்சி, அன்பு, பாதுகாப்பு இல்லாதவர்கள் பேதையர்      

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல். - 834

கற்றுணர்ந்தும், கற்பித்தும் அதைப் பின்பற்றாதவர்களே பேதையர் 

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

தான்புக் கழுந்தும் அளறு. - 835

ஏழு பிறப்பிற்கும் துன்பத்தைத் தேடுபவனே மூடன்

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்

பேதை வினைமேற் கொளின். - 836

அறிவில்லாதவன் செய்யும் செயலும் கெட்டு அவனும் கெடுவான்      

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பார் பேதை

பெருஞ்செல்வம் உற்றக் கடை.- 837

பேதையா் செல்வந்தரானால் பகைவர் உண்ண, உறவுகள் வறுமையாகும்

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்

கையொன்று உடைமை பெறின். - 838

கள்ளுண்டவன் நிலை போன்றதே பேதை பெற்ற பெருஞ்செல்வம்

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

பீழை தருவதொன் றில். - 839

பேதையாருடன் கொள்ளும் நட்பு, பிரிவில் வருத்தம் தராததால் இனியது

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்

குழாஅத்துப் பேதை புகல். - 840

அறிஞர் முன் முட்டாள் செல்வது, அழுக்கு காலுடன் படுத்தல் போன்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக