வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 14 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 90. பெரியாரைப் பிழையாமை

 

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

போற்றலுள் எல்லாம் தலை. -891

பெரியோர் செயலை இகழாதிருத்தலே நம்மைக் காக்கும் சிறந்த காவல்

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்

பேரா இடும்பை தரும். - 892

அறிவிற் பெரியாரை மதிக்காவிட்டால், அச்செயல் பெருந்துன்பம் தரும்

கெடல்வேண்டின் கேளது செய்க அடல்வேண்டின்

ஆற்று பவர்கண் இழுக்கு. -893

பெரியோர் சொல்கேட்டு, மதித்து நடந்தால் என்றும் கேடில்லை

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு

ஆற்றாதார் இன்னா செயல். - 894

அறிவுடையோருக்கு இன்னா செய்தல் எமனை அழைப்பது போன்றது

யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்

வேந்து செறப்பட் டவர்.-895

வேந்தனின் கோபத்துக்காளானவர்கள் எங்கும் சென்று வாழமுடியாது   

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்

பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.-896

தீயிலிருந்து கூட தப்பலாம், பெரியோருக்குப் பிழைசெய்து தப்பமுடியாது

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்

தகைமாண்ட தக்கார் செறின்.-897

நல்வாழ்க்கையும், பெருஞ்செல்வமும் பெரியோர் சொல்லுக்குத் தாங்காது

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு

நின்றன்னார் மாய்வர் நிலத்து.- 898

மலைபோல வலிமையுடையாரை மதிக்காதவர் குடியுடன் அழிவர்

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும். -899

நற்கொள்கையாளரின் சீற்றம் ஆட்சியையும் இடையில் கவிழ்த்துவிடும்

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்    

சிறந்தமைந்த சீரார் செறின். - 900

பெருந்துணையுடைய வலிமையாளரும் பெரியோர் சீற்றத்துக்கு தப்பார் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக