வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 14. ஒழுக்கமுடைமை

 

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.- 131

ஒழுக்கம் சிறப்பு தருவதால், அது உயிரைவிடப் பெரிது

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை. - 132

ஆராய்ந்து பார்த்தால் ஒழுக்கம் மட்டுமே நமக்குத் துணை

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும். - 133

ஒழுக்கமுடையவர்களே உயர்ந்த குடியினர்

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.- 134

வேதத்தை மறந்தாலும் ஒழுக்கத்தை மறக்கக்கூடாது

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை

ஒழுக்க மிலான்கண் உயர்வு.- 135

ஒழுக்கமே ஆக்கம் தரும், பொறாமை அழிவு தரும்  

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபாக் கறிந்து.- 136

இழிவை எண்ணியே அறிவுடையோர் ஒழுக்கமாக இருப்பர்

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி. - 137

ஒழுக்கம் புகழையும், ஒழுக்கமின்மை பழியையும் கொடுக்கும்

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்.- 138

நல்லொழுக்கம் நன்மையும், தீயொழுக்கம் துன்பமும் தரும்

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய

வழுக்கியும் வாயாற் சொலல்.-139

ஒழுக்கமுடையவர்கள் மறந்தும் தீய சொற்களைப் பேசார்

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்.                     140

ஒழுக்கமுடையவர்களுடன் சேர்ந்து வாழ்வதே அறிவு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக