வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 17 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 39. இறைமாட்சி

 


படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு. - 381

படை,குடி,உணவு,அமைச்சா்,நட்பு, அரண் கொண்டவன் மாமன்னன்

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

ஏஞ்சாமை வேந்தர்க் கியல்பு.  -  382

அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் நான்கும் வேந்தர்க்கு இயல்பு

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலனாள் பவர்க்கு. - 383

விரைவு, கல்வி, துணிவு மூன்றும் ஆளும் அரசனுக்கு வேண்டும்

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா

மானம் உடைய தரசு.- 384

அறத்திலும், வீரத்திலும் சிறந்தவனே அரசன்

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு.- 385

உருவாக்குதல், தொகுத்தல், காத்தல், செலவிடுதல் அரசியல் செயல்

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்.- 386

எளிமையும், இன்சொல்லும் கொண்ட அரசனை உலகம் புகழும்

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்

தான்கண் டனைத்திவ் வுலகு.- 387

இன்சொல்,ஈகை,காக்கும் பண்பும் கொண்ட அரசனுக்கு உலகம் வசப்படும் 

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு   

இறையென்று வைக்கப் படும். - 388

நடுநிலை அரசனை மக்கள் இறைவனாகப் போற்றி வணங்குவர்

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.- 389

குறைகூறுவோரின் சொற்களையும் தாங்குவது மன்னர் கடன்

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்

உடையானாம் வேந்தர்க் கொளி.- 390

ஈகை, அருள், நடுநிலை, காத்தல் பண்புடையவனே நல்லரசன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக