வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 9 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 31. வெகுளாமை

 


செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்லிடத்துக்

காக்கின்என் காவாக்கால் என்.- 301

எளியோரிடமும் கோபப்படாதவனே சினமற்றவன்

செல்லா இடத்துச் சினம்தீது செல்லிடத்தும்

இல்அதனின் தீய பிற.- 302

எளியோர், வலியோர் என எவ்விடத்தும் கோபம் தீமை தரும்

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய

பிறத்தல் அதனான் வரும்.                       303

தீ விளைவுகளையே தருவதால் கோபத்தை மறக்கவேண்டும்

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற.- 304

சிரிப்பையும், மகிழ்ச்சியையும் கொல்வதால் சினமே பெரும்பகை

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம். - 305

உன்னைக் காக்க சினத்தை அடக்க வேண்டும்

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்

ஏமப் புணையைச் சுடும்.- 306

சினம் கொண்டவன் இனம் அவனுடன் அழியும்      

சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு

நிலத்துஅறைந்தான் கைபிழையா தற்று. - 307

நிலத்தை கையால் அடிப்பது போலக் கோபம் கொள்வது 

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்   

புணரின் வெகுளாமை நன்று.                     308

பெருந்தீயைப் போன்ற தீமை செய்தவரிடமும் சினம்கொள்ளாதே

உள்ளிய எல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்

உள்ளான் வெகுளி எனின்.                        309

சினத்தை மறந்தவன் எண்ணியதை உடனே அடைவான்

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்

துறந்தார் துறந்தார் துணை                       310

சினமற்றவரே துறவி, சினம்கொண்டவா் இறந்தவரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக