வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 1 அக்டோபர், 2020

மழையின் பாடல் - கலில் ஜிப்ரான் ( புவியரசு மொழிபெயர்ப்பு)

 


கடவுள்கள் சுவர்க்கத்திலிருந்து தொங்கவிட்ட

வெள்ளிச் சரடு நான்

தனது தோட்டங்களையும்  பள்ளத்தாக்குகளையும்

அழகுபடுத்துவதற்காக

இயற்கை என்னை ஏற்றுக்கொண்டது.

 

இஸ்தாரின் மணிமுடியிலிருந்து

விடியலின் புதல்வி

தோட்டங்களை அழகுபடுத்துவதற்காக

பறித்து வீசிய அழகிய முத்துக்கள் நான்


நான் சிரிக்கும்போது மலைகள் அழும்

நான் அடங்கியிருக்கும்போது மலர்கள் மகிழும்

என் அமைதி மலர்களுக்கு மகிழ்ச்சி

நான் தலைவணங்கும்போது எல்லாமே உயரும்

நிலமும் மேகமும் காதலர்கள்

அவர்களுக்கிடையில் நான் கருணைத் தூதுவன்

அவர்களில் ஒருவரின் தாகத்தை தீர்க்கிறேன்

மற்றவரின்  வேதனையைப் போக்குகிறேன்.

 

இடியின் குரல் என் வரவுக்குக் கட்டியம் கூறுகிறது.

நான் புறப்பட்டுவிட்டதை

வானவில் முன்கூட்டியே சொல்லிவிடுகிறது.

 

பைத்தியக்கார பஞ்ச பூதங்களின்

காலடியில் பிறந்தேன்

மரணத்தின் விரிந்த சிறகுகளின் கீழ் மடியும்

பூமி வாழ்வு போன்றது  என் வாழ்வு

நான் கடலின் இதயத்திலிருந்து தோன்றி

தென்றலுடன் மேலெழுந்து பறந்தேன்

தனித்து நிற்கும் நிலம் கண்டால்

நான் இறங்கி வருவேன்.

மலர்களைத் தழுவிக்கொள்வேன்

மரங்களை இலட்சக்கணக்கான

விதங்களில் அரவணைத்துக்கொள்வேன்

 

சாளரங்களை என் மெத்தென்ற

விரல்களால் மெல்லத் தொடுவேன்

என் அறிவிப்பே ஒரு வரவேற்புப் பாடல்தான்

எல்லோரும் என் பாடலைக் கேட்க முடியும்

ஆனால் உணர்வு மிக்கவர்களால் மட்டுமே

அதை உணர்ந்துகொள்ள முடியும்

 

காற்றின் வெப்பம்தான் என்னைப் பெஙற்றது

ஆனால் நான் அதைக் கொன்றுவிட்டேன்

ஒரு பெண் ஆடவனிடத்திலிருந்தே

வலிமை பெற்று அவனையே வெல்வது போல

 

நான் கடலின் பெருமூச்சு

நிலத்தின் சிரிப்பு

வானத்தின் கண்ணீர்

 

இதே போலத்தான் நான் அன்பிலும்

ஆழமான பாசக் கடலின் பெருமூச்சு

உயிரின் வண்ண வயலின் சிரிப்பு

எல்லையற்ற ஞாபக வானத்தின் கண்ணீர்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக