வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 19 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 68. வினை செயல் வகை

 


 

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது.- 671

ஆராய்வது துணிவடையத்தான், துணிந்தபின் காலந்தாழ்த்தக்கூடாது   

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை.- 672

செயலின் தன்மைக்கேற்ப மெதுவாகவோ, விரைந்தோ, செயல்படு

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்

செல்லும்வாய் நோக்கிச் செயல்.- 673

இயன்றவரை செயல்படுக, இயலாவிட்டால் வழியறிந்து செயல்படுக   

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்

தீயெச்சம் போலத் தெறும். - 674

செயலும், பகையும் மிச்சம் வைத்தால் அவை வளர்ந்து கெடுக்கும்    

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்.- 675

பொருள், கருவி, காலம், செயல், இடவலிமை ஆராய்ந்து செய்க

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்

படுபயனும் பார்த்துச் செயல். - 676

முடிவையும் தடைகளையும் அதன் பயன்களையும் பார்த்து செய்

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை

உள்ளறிவான் உள்ளம் கொளல். - 677

செய்யும் செயலின் தன்மையை அனுபவசாலியிடம் கேட்டு பின் செய்

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று.- 678

ஒரு நேரத்தில்  இருசெயல், யானையால் யானை பிடிப்பது போன்றது 

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே

ஒட்டாரை ஒட்டிக் கொளல். - 679

நண்பருக்கு செய்யும் நல்லதைவிட, பகைவரை நண்பராக்குதல் சிறந்தது

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்

கொள்வர் பெரியார்ப் பணிந்து. -680

மக்கள் நலத்துக்காக, வலிமையானவரிடம் பணிந்து வாழ்

1 கருத்து:

  1. வணக்கம் முனைவர் அவர்களே. திருக்குறள் ஒரு வரி உரை சிறப்பாக இருக்கிறது. நானும் திருக்குறள் காணொலி தமிழ் மற்றும் ஆங்கில விளக்கத்துடன் பதிவிடுகிறேன். பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லக் கேட்டுக்கொள்கிறேன்.
    https://youtu.be/ZS6C_zb-wS8

    நன்றி

    பதிலளிநீக்கு