வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 28 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 123. பொழுது கண்டு இரங்கல்

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்

வேலைநீ வாழி பொழுது. - 1221

மாலைக் காலமே நீ பொழுதல்ல! பிரிந்தோர் உயிரை உண்ணும் வேல்!

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்

வன்கண்ண தோநின் துணை?    - 1222

மயங்கும் மாலையே? உன் துணையும் என் காதலர் போல் கொடியவரோ

பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்

துன்பம் வளர வரும். - 1223

பிரிவில் வாடும் என்னை மேலும் துன்பத்தால் வாட்டும் இந்த மாலைநேரம்

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து

ஏதிலர் போல வரும்.-1224

காதலர் இல்லாத போது கொலைக்களத்தில் எதிரிபோல வரும் மாலை!

காலைக்குச் செய்தநன்றுஎன்கொல்? எவன்கொல்யான்

மாலைக்குச் செய்த பகை? - 1225

காலைக்கு என்ன நன்மை செய்தேன்? மாலைக்கு என்ன தீங்கிழைத்தேன்?

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத

காலை அறிந்த திலேன். - 1226

மாலை நேரம் கொடியது என்பது,காதலரில்லாத போதே தெரிகிறது! 

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலரும்இந் நோய். - 1227

காலை அரும்பி, பகலில் பேரரும்பாகி, மாலையில் மலரும் காதல் நோய்

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்

குழல்போலும் கொல்லும் படை. - 1228

தீ போன்ற மாலைக்கு,ஆயனின் குழலும் கொல்லும் படையாகிவிடும் 

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு

மாலை படர்தரும் போழ்து. - 1229

என் அறிவை மயக்கும் மாலைப்பொழுது இந்த ஊரையும் மயக்குமோ!

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை

மாயும்என் மாயா உயிர். - 1230

பொருளுக்காகப் பிரிந்தவரையே எண்ணி என் அழியாத உயிர் அழிகிறது

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக