வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 14 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 113. காதல் சிறப்புரைத்தல்
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயிறு ஊறிய நீர். - 1121

பாலும் தேனும் கலந்தது போன்றது மென்மொழி பேசும், அவள் உமிழ்நீர்

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன

மடந்தையொடு எம்மிடை நட்பு. - 1122

உடம்பும் உயிரும்போல, நானும் அவளும் உறவுடையோம்

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்

திருநுதற்கு இல்லை இடம். - 1123

என் கண்மணிப் பாவாய்! நீ நீங்கி என்னவளுக்கு இடம்கொடு

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்

அதற்கன்னள் நீங்கும் இடத்து. - 1124

அவள் வந்தால் வரும் என் உயிர்! அவள் நீங்கினால் நீங்கும் என் உயிர்

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்

ஒள்ளமர்க் கண்ணாள் குணம். - 1125

அவளை நினைப்பதேயில்லை! மறந்தால்தானே நினைப்பதற்கு

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்

நுண்ணியர்எம் காத லவர். - 1126

நான் இமைத்தாலும் என் கண்ணுள்ளே நிறைந்தவர் நீங்கார்   

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்

எழுதேம் கரப்பாக்கு அறிந்து. - 1127

கண்ணுள் அவர் இருப்பதால், மறைந்திடுவாரென மையிடுவதில்லை  

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

அஞ்சுதும் வேபாக் கறிந்து. - 1128

காதலர் என் நெஞ்சில் இருப்பதால் சூடாக ஏதும் உண்பதில்லை      

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே

ஏதிலர் என்னும் இவ் வூர். - 1129

காதலரை எண்ணித் தூங்காதிருப்பதால் அவரைத் திட்டும் இவ்வூர்   

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்

ஏதிலர் என்னும் இவ் வூர். - 1130

என் உள்ளத்தில் நிறைந்தார் அவர்! இதை அறியுமா இந்த ஊர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக