வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 30 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 125. நெஞ்சோடு கிளத்தல்

 


நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்

எவ்வநோய் தீர்க்கும் மருந்து. - 1241

நெஞ்சே! பிரிவுநோய் தீர நல்லதொரு மருந்தைச் சொல்லாயோ!

காதல் அவரிலர் ஆகநீ நோவது

பேதைமை வாழியென் நெஞ்சு. - 1242

அன்பில்லாத அவரிடம் நீமட்டும் அன்பைப் பொழிவது அறியாமையே 

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்

பைதல்நோய் செய்தார்கண் இல். - 1243

பிரிந்தவா் வருந்தாதிருக்க, நெஞ்சே நீ என்னுடன் வருந்திப் பயனென்ன

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்

தின்னும் அவர்க்காணல் உற்று. - 1244

நெஞ்சே!அவரைக் காண, கொல்லும் கண்களையும் அழைத்துச்செல்

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்

உற்றால் உறாஅ தவர். - 1245

நாம் விரும்பியும், நம்மை விரும்பாதவரை வெறுக்க இயலவில்லையே

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்

பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. - 1246

காதலரைக் கண்டால் கோபம் மறக்கும் நெஞ்சே உனக்கேன் ஊடல்!   

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே

யானோ பொறேன்இவ் விரண்டு.- 1247

நெஞ்சே! காமம், நாணம் இரண்டில் ஒன்றைவிடு! இரண்டும் கொல்லும்

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்

பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. - 1248

அன்பின்றிப் பிரிந்த காதலர் பின்செல்வது ஏன் பேதை நெஞ்சே

உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ

யாருழைச் சேறியென் நெஞ்சு. - 1249

மனதில் நீங்கா காதலரைத் தேடி நீ யார் பின்னே செல்கிறாய்? 

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா

இன்னும் இழத்தும் கவின். - 1250

பிரிந்தவரை நெஞ்சத்தில் நினைத்தால் மீதி  அழகையும் இழப்போம் 

 


1 கருத்து:

  1. வணக்கம்
    ஐயா

    சிறப்பான விளக்கத்துடன் எடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு