வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 7 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 107. இரவச்சம்

 


கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்

இரவாமை கோடி உறும். -1061

வள்ளல்களிடமும் பெறாமல் வாழ்வது கோடிமடங்கு சிறப்புடையது   

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான். - 1062

பிச்சைக்காரர் வாழும் நாட்டைப் படைத்தவன், கெட்டு ஒழியட்டும்    

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்

வன்மையின் வன்பாட்ட தில். - 1063

வறுமையைப் போக்க பிச்சையெடுத்தல் முறையல்ல

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்

காலும் இரவொல்லாச் சால்பு. -1064

வறுமையிலும் கேட்காத பண்புக்கு இவ்வையகமே ஈடாகாது

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது

உண்ணிலின் ஊங்கினிய தில். -1065

தெளிந்த நீர்போன்ற கூழானாலும் உழைத்து உண்பதே இனியது

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு

இரவின் இளிவந்த தில். - 1066

பசுவிற்கு நீர்வேண்டும் என்று கேட்டாலும் அதுகூட நாவிற்கு இழிவே

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்

கரப்பார் இரவன்மின் என்று. -1067

கையேந்துகிறேன், கையேந்துவோரே கருமிகளிடம் கையேந்தாதீர்கள்

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்        

பார்தாக்கப் பக்கு விடும். - 1068

வறுமையில் கேட்கும்போது, கருமியின் மனமும் கரைந்துவிடும்     

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள

உள்ளதூஉம் இன்றிக் கெடும். - 1069

இல்லாதாரைக் கண்டு மனம்வாடும், இருப்பவரைக் கண்டு மனம் ஆடும்

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்   

சொல்லாடப் போஒம் உயிர். - 1070

கருமிகள் இல்லை என்னும்போது அவர்களின் உயிர் எங்கு மறையும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக